Published:Updated:

‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..!’’

‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..!’’

பசுமைக் குழு, படங்கள்: என்.ஜி.மணிகண்டன், வீ.சிவக்குமார், தே.தீட்ஷித்

‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..!’’

பசுமைக் குழு, படங்கள்: என்.ஜி.மணிகண்டன், வீ.சிவக்குமார், தே.தீட்ஷித்

Published:Updated:
‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..!’’

சென்ற இதழ் தொடர்ச்சி...

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மஞ்சள் மாநகரான ஈரோட்டில் முதல்முறையாக ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2015’ மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. அதன் அமோக வெற்றியைத் தொடர்ந்து, மலைக்கோட்டை மாநகரான திருச்சியில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நான்கு நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெற்றது, ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. தினமும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. நாள்தோறும் திருவிழா போல கூட்டம் கூட்டமாக விவசாயிகளும், பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கானோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

கண்காட்சித் தொடக்க விழா குறித்த கட்டுரை கடந்த இதழில் இடம்பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சி இதோ...

‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..!’’

தொடக்க விழா மேடையில் தைவான் நாட்டில் உள்ள உலக காய்கறி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பூச்சியியல் ஆராய்ச்சிக்குழுத் தலைவர் முனைவர் சீனிவாசன் ஆற்றிய உரையிலிருந்து...

“ரசாயன உரங்களை நிலத்தில் அதிகமாகப் போட்டதால் விளைநிலங்கள் அனைத்தும் விஷம் நிறைந்த நிலமாக மாறி விட்டன. இத்தகைய நிலத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் விஷக்காய்கறிகளாகவே இருக்கின்றன. 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான், கொரியா, தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ்... போன்ற நாடுகள் இணைந்து தைவானை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கியதுதான், ‘உலக காய்கறி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்’. ஆசியாவிலுள்ள பொதுத்துறை விதை வங்கிகளில் பெரிய விதை வங்கி, தைவானில் உள்ள எங்கள் மையத்திலுள்ள விதை வங்கிதான். குறைவான பரப்பில் பயிரிட்டாலும் நிறைவான லாபம் கொடுப்பவை, காய்கறிகள்தான். வளரும் நாடுகள் பலவற்றில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் நுண்ணூட்டச் சத்துக்கள் இல்லை. பொருளாதாரத்தில் வளர்ந்த, தன்னிறைவு பெற்ற நாடுகளில் கூட நுண்ணூட்ட தன்னிறைவு இல்லை. அந்த நுண்ணூட்டத்தைக் கொடுப்பது, காய்கறிகள்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..!’’

குறைவான தண்ணீரில் அதிக மகசூல் கொடுக்கும் காய்கறிகள், வறட்சியைத் தாங்கி வளரும் காய்கறிகள், சந்தையில் அதிகதேவை உள்ள காய்கறிகள்... என தனித்தனி வகைகளாகப் பிரித்து அவற்றின் விதைகளைச் சேமித்து வைக்கிறோம். அதோடு, உலகில் உள்ள அனைத்து வகை காய்கறி ரகங்களைச் சேகரித்து, சேமித்து வைப்பதோடு ஒவ்வொரு ஆண்டும் விதையின் அளவைப் பெருக்கி, விவசாயிகளுக்கு இலவசமாகவே கொடுத்து வருகிறோம். இதில் அதிக மகசூலைத் தருபவை என நான் குறிப்பிட்டது, மரபணு மாற்றப்பட்ட விதைகளை அல்ல. ஒவ்வொரு நாட்டுக்கும், மாநிலத்துக்கும், ஒவ்வொரு பகுதிக்குமுள்ள பாரம்பர்யமான காய்கறி ரகங்களின் விதைகளைத்தான் சேகரித்துப் பெருக்குகிறோம். இதுவரை, 440 விதமான காய்கறிகளில் 62 ஆயிரம் ரகங்களைத் தேடிக் கண்டுபிடித்து வைத்துள்ளோம்” என்றார், சீனிவாசன்.

இனி, திரைப்படங்களிலும் இயற்கை விவசாயம் படர வேண்டும்!

மலேசியா நாட்டில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விவசாயக் கல்வி அதிகாரி சுப்பாராவ் பேசும்போது, “மலேசியாவில் 27 மில்லியன் மக்கள் வாழும் இடத்தில் 7 சதவிகித அளவு இந்தியர்கள் இருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு, ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் மலேசியாவுக்கு வந்து இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தினார். பிறகுதான், மலேசியாவில் இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்பு உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்தது. அவரைத் தொடர்ந்து ‘மண்புழு’ முகமது இஸ்மாயில், ‘பணிக்கம்பட்டி’ கோபாலகிருஷ்ணன், ‘பூச்சி’ செல்வம்... போன்றவர்கள் ஏற்படுத்திய விழிப்பு உணர்வாலும் இயற்கை விவசாயம் மலேசிய நாட்டில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு பசுமைவிகடன் இதழும் பக்கபலமாக உள்ளது.

எங்கள் தலைவர். முகமது இத்ரீஸ், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். பசுமை விகடன் இதழின் தீவிர வாசகர். ‘உலகில் விவசாயம் பற்றி, அருமையான தகவல் வரும் ஒரே பத்திரிகை பசுமை விகடன் தான்...’’ என்று, வெளிநாட்டினர் யார் வந்தாலும் ‘பசுமை’ புகழ்பாடுவார். இதழில் வெளியாகும் முக்கிய செய்திகளை சீன மொழியில் மொழிபெயர்த்து கொடுக்கிறோம். சீன விவசாயிகள், இயற்கை விவசாய நுட்பங்களை விரைவாக கற்றுக் கொண்டு நல்ல மகசூல் எடுத்து வருகிறார்கள். தமிழ் விவசாயிகளும் இவர்களுடன் போட்டிப் போடும் அளவுக்கு இயற்கை விவசாயத்தில் சாதனை செய்யத் தொடங்கி விட்டார்கள்.

‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..!’’

திரைப்படம் வலிமையான ஊடகம், அதில் மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம், மற்றும் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி கடந்தாண்டு வெளிவந்த ‘36 வயதினிலே’ படம் இல்லத்தரசிகள் மத்தியில் வீட்டுத் தோட்டம் குறித்து நல்லவிதமான புரிதலை ஏற்ப்படுத்தியுள்ளது. எவ்வளவு விளம்பரப்படுத்தி ஒரு விஷயத்தை, கருத்தைச் சொன்னாலும் குறிப்பிட்ட சதவிகிதம்தான் அது எல்லோரையும் சென்றடையும். ஆனால், சினிமாவும், சினிமாக்காரர்கள் சொல்வதும் பெரிய அளவில் எல்லோரையும் விரைவாகப் போய் சேர்ந்து விடுகிறது. எனவே, இங்கு சிறப்பு அழைப்பாளராக வந்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் மட்டுமல்ல ஜீரோ பட்ஜெட் விவசாயியாகவும் உள்ளார். எனவே, கதை, வசனம் என அனைத்துமே இயற்கை விவசாயம் குறித்து இருப்பது போல விரைவில் ஒரு படம் நடித்து வெளியிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

சாணம், சிறுநீர்தான் முதலீடு!


கர்நாடகாவைச் சேர்ந்த ஜீரோ பட்ஜெட் விவசாயி கிருஷ்ணப்பா தன்னுடைய பேச்சில், “இன்று விவசாயிகள் தற்கொலை என்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த 2003-ம் ஆண்டில் கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை பத்தாயிரத்துக்கும் அதிகமாகவே இருந்தது. நெல், வாழை என எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும் விளைச்சல் இல்லாமல் நஷ்டமே மிஞ்சியது. நான், பன்னூர் என்ற பகுதியில் வாழை, நெல், கரும்பு ஆகியவற்றை சாகுபடி செய்திருந்தேன். வரவை விட செலவுதான் அதிகமாக இருந்தது. விவசாயத்துக்காக நான் வாங்கியிருந்த கடனும் என் கழுத்தை நெறிக்கத் தொடங்கியது. ‘விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்’ என்ற செய்தியை ஒவ்வொரு முறை காதில் கேட்கும் போதும், தினசரிகளில் படிக்கும் போதும் இதே மாதிரி சூழ்நிலையில் நானும் தற்கொலைக்குப் போவேனோ என்ற பயத்தில் இருந்தேன்.

‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..!’’

அந்த நேரத்தில்தான், கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் பேராசிரியர். நஞ்சுண்டசாமியைச் சந்தித்து விவசாயிகள் தற்கொலை குறித்தும் என் நிலைமையையும் எடுத்துச் சொன்னேன். அப்போது, அவர்தான் பாலேக்கர் பற்றி எனக்குச் சொன்னார். அவருடன், நான்கைந்து பேர் ஒன்றாகச் சேர்ந்து மகாராஷ்டிராவுக்குப் போனோம்.

‘30 ஏக்கர் விவசாயம் செய்ய ஒரே ஒரு நாட்டுப் பசுமாடு இருந்தால் போதும், நல்ல வருமானம் எடுக்க முடியும். சாணமும், மாட்டுச்சிறுநீரும்தான் விவசாயத்துக்குத் தேவைப்படும் முதலீடு’ என்று சுபாஷ் பாலேக்கர் முதலில் சொன்னவுடனேயே, ‘ஒரு ஏக்கருக்கு 40 வண்டி எரு, ரசாயன உரம் போட்டாலே சரியான விளைச்சல் வரலை. ஒரு நாட்டு பசு மட்டும் எப்படி போதும், இவருக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு’ என்று சொல்லிவிட்டு என்னுடன் வந்தவர்கள் உடனே கிளம்பி விட்டார்கள்.

‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..!’’

ஆனால், என்னால் அன்றைக்கு அவர்களுடன் சேர்ந்து பாலேக்கரை விமர்சனம் செய்ய முடியவில்லை. எனக்கு அதிகமான கடன் இருந்ததாலும், கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாலும் வேறு வழி தெரியாமல் இரண்டு நாட்கள் பாலேக்கரிடம் மண்வளப்படுத்துதல், ஜீவாமிர்தம் தயாரிப்பு முதல் ஜீரோ பட்ஜெட் சம்பந்தமாக அனைத்தையும் கற்றுக்கொண்டேன். பாலேக்கர் சொன்னது போல 8 அடிக்கு 4 அடி இடைவெளியில் வாழை, ஊடுபயிராக வெங்காயம், தக்காளி, பூ வகைகள், கரும்பு ஆகியவற்றைப் போட்டு 3 மாதங்கள் தொடர்ந்து ஜீவாமிர்தம் கொடுத்தேன்.

‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..!’’

3 மாதங்களில் வெங்காயம், பூ, தக்காளி ஆகிய ஊடுபயிர்கள் மூலம் மட்டும் 24 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. ஒரு ஏக்கரில் நடவு செய்திருந்த 800 வாழைகளில் சராசரியாக 20 கிலோ எடையுள்ள வாழை கிடைத்தது. ஒரு ஏக்கர் நிலத்தில் வாழை மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், ஊடுபயிர் மூலம் 24 ஆயிரம் ரூபாயும்... வெறும் சாணம், மாட்டுச் சிறுநீரால் மட்டும் கிடைத்திருக்கிறதென்றால் இது சாதாரண விஷயமல்ல. பாலேக்கரை விமர்சனம் செய்தவர்கள், நான் ஒரு ஏக்கர் நிலத்தில் செலவே இல்லாமல் எடுத்த மகசூலைப் பார்த்து ஆச்சர்யப்பட்டனர். இதுதான் ஜீரோ பட்ஜெட்டின் சிறப்பு.

மேலும், தென்னை, பாக்கு, கோகோ, கரும்பு, வாழை என ஐந்து அடுக்கு முறையில் விவசாயம் செய்யச் சொன்னார், பாலேக்கர். அதையும் செய்துகொண்டு இருக்கிறேன். ஒரு கட்டத்துக்கு மேல் என் பண்ணையே வன விவசாய நிலமாக மாறி விட்டது. பாக்கு, மிளகு, இஞ்சி, தென்னை, பூக்கள், வாழை, கரும்பு எனப் பல வகை பயிர்களைக் கலந்து விதைக்கும் போது நோய் தாக்குதல் குறைவாக இருக்கிறது.

‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..!’’

சொன்னால் நம்ப மாட்டீர்கள்... எந்தச் செலவும் இல்லாமல், ஒரு ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு சராசரியாக இரண்டரை லட்ச ரூபாய் தற்போது எனக்கு வருமானமாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் பல விவசாயிகள் இந்த முறையைத்தான் பின்பற்றி வருகிறார்கள்” என்று ஆச்சர்யப்படுத்தினார்.

தெலங்கானா முன்னோடி விவசாயி நாகரத்தின நாயுடு உள்ளிட்ட பல்வேறு கருத்துரையாளர்களின் உரை வீச்சுக்கள் அடுத்த இதழில்...

எல்லா சந்தேகங்களுக்கும் தீர்வு கிடைச்சுது!

‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..!’’

தமிழரசு-சுகன்யா, புதுக்கோட்டை: “நான் காளான் பண்ணை ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆகுது. காளான் வளர்ப்பு சம்பந்தமா கூடுதல் தகவல் தெரிஞ்சுக்கத்தான் கண்காட்சிக்குக் கிளம்பினேன். மாடித்தோட்டம் சம்பந்தமா நானும் தெரிஞ்சுக்கணும்னு என் மனைவியும் ஆர்வமா கிளம்பி வந்துட்டாங்க. காளான் வளர்ப்பு சம்பந்தமா கவிதா மோகன்தாஸ், ரொம்பத் தெளிவா விளக்கினாங்க. அவர்கள் ஒவ்வொரு படிநிலையும் சொல்லச் சொல்ல அவரது கணவர் நேரடியா செய்து காட்டினது, மனசுல ரொம்ப தெளிவா பதிஞ்சிடுச்சு. காளான் வளர்ப்பு சம்பந்தமான என்னோட எல்லா சந்தேகங்களுக்கும் தீர்வு கிடைச்சுது. காலியான பிளாஸ்டிக் பொருட்கள், தேவையில்லைனு நினைக்கிற எல்லா பொருட்களிலயும் எப்படியெல்லாம் செடிகள் வளர்க்கலாம், காய்கறிச்செடிகளுக்கு எவ்வளவு இடம் வேணும், குறுகிய இடத்துல எப்படி கொடி வகைகள் நட்டு வளர்க்கிறதுனு மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் சம்பந்தமாவும் தெரிஞ்சுக்கிட்டோம். அடுத்த எக்ஸ்போவை, தென் மாவட்டங்கள்ல நடத்தணும்னு பசுமைவிகடனுக்கு என்னோட கோரிக்கையைத் தெரிவிச்சுக்கிறேன்.”
 
‘‘அரசு செய்ய வேண்டியதை ‘பசுமை விகடன்’ செய்யுது!’’

‘‘நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம்..!’’

வெங்கடேஷ், ஈரோடு: “நிறைய எதிர்பார்ப்புகளோட வந்தேன். நான் நினைச்ச மாதிரியே எல்லா ஸ்டால்களும் இருந்தது. எல்லாத்தையும் விட கருத்தரங்கில் விவசாயிகளுக்கு ரொம்ப அவசியமான, பயனுள்ள எல்லா தலைப்புகளுமே இடம் பெற்றிருந்துச்சு. வல்லுநர்களும், அனுபவ விவசாயிகளும் பேசுறதைக் கேட்கும் போது எவ்வளவு எளிமையான வழிகளெல்லாம் இயற்கை விவசாயத்துல இருக்குனு ரொம்ப ஆச்சர்யப்பட வைக்குது. இத்தனை தலைப்புகள்ல கருத்தரங்கு கேட்கணும்னா அதுக்கு எவ்வளவு சிரமப்படணும்? ஆனா, எல்லாரையும் ஒரே இடத்துக்குக் கொண்டு வந்தது ரொம்ப உபயோகமா இருந்தது. ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை ‘பசுமை விகடன்’ செய்துட்டு வர்றதை நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு.”