Published:Updated:

‘அதிக விளைச்சல்’ எனும் மாயப் பேய்!

‘அதிக விளைச்சல்’ எனும் மாயப் பேய்!
பிரீமியம் ஸ்டோரி
‘அதிக விளைச்சல்’ எனும் மாயப் பேய்!

பஞ்சாப் மாநில விவசாயியின் எச்சரிக்கை! ‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்! ‘பசுமைப் புரட்சி’ பூமியில் ஒரு பரிதாபப் பயணம்த.ஜெயகுமார்

‘அதிக விளைச்சல்’ எனும் மாயப் பேய்!

பஞ்சாப் மாநில விவசாயியின் எச்சரிக்கை! ‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்! ‘பசுமைப் புரட்சி’ பூமியில் ஒரு பரிதாபப் பயணம்த.ஜெயகுமார்

Published:Updated:
‘அதிக விளைச்சல்’ எனும் மாயப் பேய்!
பிரீமியம் ஸ்டோரி
‘அதிக விளைச்சல்’ எனும் மாயப் பேய்!

*பஞ்சாபின் சுற்றுச்சூழல் நஞ்சாகி விட்டது.

*கனமான ரசாயனங்கள் அதிகம் கலந்துள்ளன.

*இந்திய நிலப்பரப்பில் பஞ்சாப் 2 %. ஆனால், இந்திய விவசாய ரசாயனப் பயன்பாட்டில் 18 %

ஞ்சாப் மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த துயரச் செய்தியை கடந்த இதழில்

‘அதிக விளைச்சல்’ எனும் மாயப் பேய்!

பார்த்தோம். பூச்சிக்கொல்லிகளும், ரசாயன உரங்களும்... மண்ணுக்கும் மனிதர்களுக்கும் விளைவித்து வரும் தீங்குகளுக்கு கண்முன் சாட்சியாக நிற்கிறார்கள், பஞ்சாப் மாநில மக்கள். அவற்றின் தீங்கை உணர்ந்த அம்மக்கள், தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பி வருகிறார்கள். அப்படி மாறி வருபவர்களில் ஒருவர்தான் பர்னாலா மாவட்டம், பரவாஹாய் கிராமத்தைச் சேர்ந்த ரவ்தீப் சிங். இவர், பசுமைப் புரட்சிக்காக தன் தாயைப் பறிகொடுத்தவர். இயற்கை விவசாயம்தான் இனி விவசாயிகளை காப்பாற்றும் என்பதை உறுதியாக நம்புவதோடு... தனக்குத் தெரிந்த இயற்கை விவசாய முறைகளை மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் தனது சொந்த செலவில் கற்றுக் கொடுத்து வருகிறார், ரவ்தீப் சிங்.

“எம்.ஏ பாதுகாப்புத் துறை படிப்பைப் படித்து விட்டு ‘வேலைக்குப் போக வேண்டும்’ என்கிற கனவோடு இருந்தேன். 2009-ம் ஆண்டு, எனது தாய்க்கு உடலில் கல் போன்று புற்றுநோய் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். இதைக் கேட்டதும் ஆடிப் போய் விட்டேன். ‘எங்கள் பரம்பரையில் யாருக்கும் புற்றுநோய் கிடையாது. பிறகெப்படி வந்தது?’ என்று டாக்டரிடம் கேட்டோம். ‘உணவு, தண்ணீர், சுற்றுச்சூழல் முழுவதும் கெட்டுப் போய் கிடக்கிறது. இதில் ஏதாவது ஒன்று காரணமாக இருக்கலாம்’ என்றார். அதன் பிறகு சில ஆண்டுகளிலேயே எனது தாய் இறந்து விட்டார். அதன்பிறகுதான், ‘குறைந்தபட்சம் நமக்குத் தேவையான உணவையாவது நல்ல முறையில் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்’ என்று முடிவெடுத்தேன். வீட்டுக்குத் தேவையான கோதுமை, நெல், காய்கறிகளை இயற்கை முறையில் விளைவிக்க ஆரம்பித்தேன். வேலை பற்றிய கனவை விட்டுவிட்டு கடந்த 3 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். மொத்தமுள்ள 12 ஏக்கர் நிலத்தில் கோதுமை, பாசுமதி நெல், கடுகு, காய்கறிகள், மலர்கள் என சாகுபடி செய்து வருகிறேன். ஜீவாமிர்தம், ராக் சால்ட், பயோ பூச்சிவிரட்டிகளைத்தான் பயன்படுத்துகிறேன். சாணத்துக்காகத் தனியாக நாட்டு மாட்டையும் வளர்த்து வருகிறேன். காரிஃப் பருவத்தில் நெல்லும், அடுத்து வருகிற ரபி பருவத்தில் கோதுமையும் பயிர் செய்வேன். எனது பண்ணையில் நெல், கோதுமை இரண்டுக்கும் சேர்த்து... இயற்கை இடுபொருட்களுக்காக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 4 ஆயிரம் ரூபாய்தான் செலவு செய்கிறேன். ஆனால், ரசாயனம் பயன்படுத்தினால், ஒரு ஏக்கர் நிலத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். இயற்கை விவசாயத்தில் குறைந்த செலவுதான் ஆகும் என பல விவசாயிகளுக்குச் சொல்லியும் வருகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘அதிக விளைச்சல்’ எனும் மாயப் பேய்!

குறைவான செலவில் விவசாயம் செய்யும் முறைகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக எனது பண்ணைக்கு நிறைய பேர் வருகிறார்கள். ஆனால், இயற்கை முறையில் சற்று மகசூல் குறைவதால், இயற்கை விவசாயத்துக்குத் திரும்ப யோசிக்கிறார்கள். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளால் இவ்வளவு பிரச்னைகளைச் சந்தித்த பிறகும், பஞ்சாப் விவசாயிகள் ‘அதிக விளைச்சல்’ என்கிற மாயையில்தான் இருக்கிறார்கள். பசுமைப் புரட்சி மாதிரி இங்கே ஓர்  இயற்கைப் புரட்சி நடந்தால்தான், விவசாயிகளை அந்த மாயையிலிருந்து மீட்க முடியும்” என்ற ரவ்தீப் சிங் நிறைவாக, “பஞ்சாபில் உற்பத்தி செய்யப்படும் நெல், கோதுமையை சாப்பிடாதீர்கள். அவற்றில் அதிகளவு ரசாயனங்கள் கலந்திருக்கின்றன” என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் நோய்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் பாட்டியாலாவைச் சேர்ந்த டாக்டர் அமர்சிங் ஆஸாத்திடம் பேசினோம். இவர் மக்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து கடந்த 15 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார். விவசாயிகளை நேரடியாக சந்தித்து நோய்களின் தீவிரத்தைச் சொல்லி, அவர்களை இயற்கை விவசாயம் செய்யுமாறு ஆலோசனையும் வழங்கி வருகிறார். அவரைச் சந்திக்க சென்றபோது, பாட்டியாலா மாவட்டம், பகவல்பூரில் உள்ள குர்மித் சிங் என்ற விவசாயியின் பண்ணையில் ஆலோசனை சொல்லிக் கொண்டு இருந்தார்.

“பஞ்சாப் மாநிலம், முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பூமி. இங்கு தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்களின் எண்ணிக்கை குறைவு. அப்படியிருந்தும் கேன்சர், தோல் வியாதி, நீரிழிவு, கரு நில்லாமை (மனிதர்கள், கால்நடைகள்), பலவிதமான வைரஸ் காய்ச்சல்கள்... உள்ளிட்ட நோய்கள் மக்களை அதிகம் பாதித்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகளையும் இந்நோய்கள் அதிகம் பாதிக்கின்றன. மாநிலத்தின் சுற்றுச்சூழலே நஞ்சாகி விட்டது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட மோசமான ரசாயன நச்சுக்கள்... மண், நீர், காற்று, உணவு என ஊடுருவியுள்ளன. சுதந்திரத்துக்குப் பிறகு, மாறி மாறி வந்த அரசுகளின் தவறான ‘விவசாயம் மற்றும் தொழில் கொள்கை’களால் ரசாயன நச்சுக்களின் எண்ணிக்கை இந்திய சுற்றுச்சூழலில் அதிகரித்துவிட்டது. இந்த பாதிப்பில் பஞ்சாப் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. தற்போது பி.டி என்ற ஒருவித பருத்தி ரகத்தை அறிமுகப்படுத்தி இந்த பூமியை மேலும் நஞ்சாக்குகிறார்கள்.

கண்மூடித்தனமாகவும், அறிவியல் ஆதாரம் இல்லாமலும் பயன்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகளும், ரசாயன உரங்களும் இன்று மிகப் பெரிய நஞ்சாகி வளர்ந்து விட்டன. பன்னாட்டு கம்பெனிகள் உற்பத்தி செய்த ரசாயனங்களை, நம்முடைய அரசுகள் வெற்றிகரமாக விவசாயிகளிடத்தில் விற்பனை செய்கின்றன. பெரும்பான்மையான நச்சுக்கள் இயற்கையோடு கலந்து போகாமலும், மண்ணில் கரையாமலும் இருந்து வருகின்றன. இந்த ரசாயனங்கள் எல்லாம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தடை செய்யப்பட்டவை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

‘அதிக விளைச்சல்’ எனும் மாயப் பேய்!

இந்தியாவின் நிலப்பரப்பில் 2 சதவிகிதம்தான் பஞ்சாப். ஆனால், இங்கு விவசாயத்தில் ரசாயன உரங்களின் பயன்பாடு 18 சதவிகிதம். இங்கிருக்கும் வேளாண் விஞ்ஞானிகள் கண்மூடித்தனமாகத்தான் இந்த ரசாயன முறை விவசாயத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் பாரம்பர்ய முறை விவசாயத்தில் வெற்றி காணுவதை விரும்புவதில்லை. 50-90 சதவிகித அளவு பூச்சிக்கொல்லிகளின் மூலக்கூறுகள், நாம் உண்ணும் உணவில் இருப்பதாக ஆய்வு சொல்கிறது. காரீயம், பாதரசம், அலுமினியம், காட்மியம், ஆர்சனிக் உள்ளிட்ட கனமான ரசாயனங்கள் பஞ்சாபின் சுற்றுச்சூழலில் அதிகமாக கலந்திருக்கின்றன. இவை, உடலின் மெதுவான சதைப் பகுதிகளை பாதிக்கின்றன. கேன்சர், நரம்பு ஒழுங்கின்மை, சோர்வுத்தன்மை, வாந்தி, அல்சைமர், ரத்த சிவப்பு வெள்ளையணுக்கள் மற்றும் திசுக்கள் பாதிப்பு, சீரற்ற இதயத் துடிப்பு ஆகிய நோய்களை உண்டாக்குகின்றன. இந்த ரசாயனங்கள் குடிநீர், மீன், தடுப்பூசிகள், பூச்சிக்கொல்லிகள், மரங்களைப் பாதுகாக்கப் பயன்படும் பூச்சு, கட்டடக் கழிவுகள் உள்ளிட்டவற்றின் வழியாக உள்ளே வருகின்றன.

இவற்றைத் தவிர மிக அதிக சக்தி வாய்ந்த யுரேனிய ரசாயனமும் கண்டறியப்பட்டுள்ளது. இது, நோய்களுக்கு மூலக்காரணமாக இருந்து வருகிறது’’ என்று கவலை பொங்க சொன்ன அமர்சிங் ஆஸாத்`, நிறைவாக சொன்னது-

‘’எல்லோரும் ஒருநாள் இறக்கத்தான் போகிறோம். ஆனால், இந்த வகை கொடூர மரணங்களை நமது அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தக் கூடாது. பஞ்சாபின் தற்போதைய சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. பரிணாம அடிப்படையில் பூச்சிகள் நம்மைவிட வலிமையானவை. அது தனக்கு எதிரான எத்தகைய நச்சுக்களிலிருந்தும் தன்னைக் காத்து கொள்ளும். ஆனால், மனிதர்களால் அப்படி வாழ்ந்து விட முடியாது. சுற்றுச்சூழலில் நடைபெற்று வரும் இந்த இனப்படுகொலைக்கு எதிராக அனைவரும் இயற்கையோடு, ஒத்திசைந்த நேர்மறையான பார்வையைப் பார்க்க முன் வர வேண்டும்.”

-பயணம் தொடரும்