Published:Updated:

கைவிடாத கமலைப் பாசனம்...

கைவிடாத கமலைப் பாசனம்...
பிரீமியம் ஸ்டோரி
கைவிடாத கமலைப் பாசனம்...

கலக்கும் 78 வயது விவசாயி!த.வினோதா, படங்கள்: ம.தீட்ஷித்

கைவிடாத கமலைப் பாசனம்...

கலக்கும் 78 வயது விவசாயி!த.வினோதா, படங்கள்: ம.தீட்ஷித்

Published:Updated:
கைவிடாத கமலைப் பாசனம்...
பிரீமியம் ஸ்டோரி
கைவிடாத கமலைப் பாசனம்...

• மின்சாரம், மோட்டார் தேவையில்லை.

• தற்சார்பு விவசாயம்.

• மாடுகள் மூலம் தொழுவுரம்.

போ
க்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், அறிவியல் வளர்ச்சி அபார மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், விவசாயத்தைப் பொறுத்தவரை அறிவியல் வளர்ச்சி சில நன்மைகளைக் கொடுத்தாலும்... பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தி இருப்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைவிடாத கமலைப் பாசனம்...

பாரம்பர்ய அறிவை, ஓரங்கட்டியதன் விளைவாக, மிகச்சிறந்த எளிய தொழில்நுட்பங்கள் எல்லாம் மறைந்து விட்டன. 40 அடி ஆழத்தில் கிணறு தோண்டி, கமலை (இரண்டு மாடுகளைப் பூட்டி கிணற்றில் இருந்து  தண்ணீரை இறைக்கும் சாதனம்) வைத்து, மாடுகள் மூலமாக தண்ணீர் இறைத்து பாசனம் செய்தபோது... தண்ணீர்த் தட்டுப்பாடும் இல்லை. மின்சாரமும் தேவைப்படவில்லை. பசுமைப் புரட்சிக்கு பிறகு மின் மோட்டார்களின் வரவு, கிணறுகளை மேலும் மேலும் ஆழமாக்கியது. ஆழ்துளைக் கிணறுகள் என்ற பெயரில், பூமியின் உடலெங்கும் துளையிடப்பட்டதன் விளைவு... தற்போது ஆயிரம் அடிக்கும் கீழே, தண்ணீரைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

உடலை வளைக்காமல் தண்ணீர்ப் பாசனம் செய்ய எவ்வளவோ வசதிகள் வந்து விட்டாலும்... இன்னமும் ஒரு சில பகுதிகளில் பாரம்பர்யத்தை மறக்காமல்,  கமலை மூலம் பாசனம் செய்யும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், புதுக்கோட்டை மாவட்டம், மழவராயன்பட்டியைச் சேர்ந்த கருப்பன் என்ற கருப்பையா. 78 வயதிலும், கமலை மூலமாக நீர் இறைத்து பாசனம் செய்யும் இவர், தற்சார்பு விவசாயத்தின் அடையாளம்.

“இந்த கெணறு வெட்டி முப்பது வருஷமாச்சு. நாப்பது அடி ஆழத்துல இன்னமும் தண்ணி கிடைச்சுக்கிட்டிருக்கு. மழைக்காலத்துல, கிணறு நிரம்பிடும். கமலை வெச்சு இறைச்சுதான் விவசாயம் செய்றோம். வழக்கமா மழைக்காலத்துல ஐப்பசி மாதத்திலேயே கிணறு நிரம்பிடும். அதனால ஒரு ஏக்கர்ல நெல் சாகுபடி செய்வோம். ஆனா, இந்த வருஷம் தாமதமா நிரம்பியதால சோளம் விதைச்சிருக்கோம். இப்பத்தான் பயிர் ரெண்டு அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கு.

கருக்கல் பொழுதுல மாடுகளை பூட்டினோமுன்னா ஒரு மணி, இரண்டு மணி நேரத்துல தண்ணீர் இறைச்சிடுவோம். பத்து வருஷத்துக்கு முன்னாடி பதினாலு ஆயிரம் ரூபாய்க்கு வாங்கின ஒரு ஜோடி மாடு, இன்னைக்கும் உழைச்சுக்கிட்டிருக்கு. இந்த மாடுகளை வித்துப்புட்டு வேற மாடு வாங்கலாம்னா... கமலை இழுக்குறதுக்குப் பழகுன மாடுங்க கிடைக்குறது இல்ல. இப்பல்லாம் உழவு, வண்டி இழுக்குறதுக்கு மட்டும்தான் மாடுகளைப் பழக்கி வெச்சிருக்காங்க. மத்த வேலை மாதிரி ஏனோ தானோன்னெலாம் செஞ்சு தண்ணி இறைச்சிட முடியாது. கிணத்துக் கரையிலிருந்து ரெண்டு மாடும், ஒரேமாதிரி முன்னோக்கி போகணும். ஒரே மாதிரி பின்னோக்கி வரணும். கொஞ்சம் பிசகுனாலும் சிக்கல்தான். வருஷத்துக்கு ஆறுமாசம் இறவை விவசாயம் செய்வோம். அப்பறம் மானாவாரியா உளுந்து, பயறுகளை வீசி விட்டா விளைஞ்சு வந்துடும்” என்ற கருப்பையா கமலையை ஓட்டிக் காட்டினார்.

கைவிடாத கமலைப் பாசனம்...

நிறைவாகப் பேசிய கருப்பையா, “இறவை இல்லாத காலத்துல, ஏர் கலப்பையைத் தூக்கிட்டு, மாடுகளை ஓட்டிக்கிட்டு கூலிக்கு உழவுக்குப் போயிடுவேன். ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். வேலை இல்லாத நாள்ல தரிசுல கட்டிவிட்டா மாடுகள் மேஞ்சுடும். வயலுக்குத் தேவையான அளவு குப்பை சேர்ந்திடும். நம்மகிட்டயே சொந்தமா மாடு, கலப்பை இருக்கிறதால உழவுக் கூலி கிடையாது, தண்ணீருக்கு செலவழிக்கத் தேவையில்லை. அதனால, விவசாயத்துல பெருசா நட்டமில்லை. முழுசா போனாலுமே விதையும், உழைப்பும்தான் போகுமே தவிர குடும்பத்தை மோசமாக்கிடாது.

இந்தக் கெணறு, கமலையை வெச்சுத்தான் எங்க அப்பா காலத்துல இருந்தே குடும்பத்தை ஓட்டுறோம். எங்க ஊருல நிறைய பேரு மாடுகளை வெச்சு பராமரிக்க முடியாம கிணத்துல டீசல் மோட்டார் வெச்சுத் தண்ணீர் பாய்ச்சுறாங்க. போர் போட்டு விவசாயம் செய்றாங்க. விலை கொடுத்தெல்லாம் டீசல் வாங்கி ஊத்தி விவசாயம் செஞ்சா கட்டுப்படியாகாது. விவசாயத்துல நிதானம், அனுபவம் இல்லாம ரொம்பவும் ஆடம்பரத்தைக் காட்டினா, இருக்கிற நிலத்தையும் இழந்துட்டுப் போகவேண்டியதுதான்” என்று எதார்த்த உண்மையைச் சொன்னார்.

கமலை!

தா
மரை மலர் வடிவத்தில், தகரத்தில் ஆன பாத்திரத்தில் தோல் மூலம் செய்யப்பட்ட வால் போன்ற பையை இணைத்திருப்பார்கள். தகரப் பாத்திரத்தை, கயிறு வடங்கள் மூலமாக இணைத்திருப்பார்கள். கிணற்றுப் பகுதியில் மேடாக்கி, மரச்சட்டங்களைப் பொருத்தி, அதில் உருளையை இணைத்த அமைப்பு இருக்கும். கமலையின் கயிறு மாட்டின் நுகத்தடியோடு இணைந்திருக்கும்.

மாடுகள் முன்னே செல்லும் போது, கமலை தண்ணீருடன் மேலே வரும். வாய்க்கால் அருகில் வந்தவுடன் கயிற்றின் இறுக்கத்தைத் தளர்த்தினால், வாய்க்காலில் தண்ணீர் கொட்டும். மாடுகள் பின்பக்கமாக வரும்போது, கமலை கிணற்றுக்குள் போகும். இப்படி தொடர்ச்சியாக செய்வதன் மூலமாக பாசனம் செய்யப்படும்.