Published:Updated:

விவசாயிக்கு மரியாதை...!

பெருமைப்படுத்திய பிரதமர்! கு.ராமகிருஷ்ணன், த.ஜெயகுமார், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

மார்ச் 19-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற வேளாண் வளர்ச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி, பெண் விவசாயி பூங்கோதைக்கு ‘க்ருஷி கர்மண்’ விருது வழங்கியதோடு... அவரிடம் ஆசி பெற வணங்கியது, பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் பயிர் அறுவடை பரிசோதனைத் திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் என்.கே.-6240 என்ற மக்காச்சோள ரகத்தில் ஹெக்டேருக்கு 14,256 கிலோ (14.2 டன்) மகசூல் இவர் எடுத்துள்ளார். வழக்கமாக 8 லிருந்து 10 டன் விளைச்சல்தான் எடுப்பார்கள். இவர் அதைத் தாண்டி 4 டன் மகசூல் கூடுதலாக எடுத்ததற்காக இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூரிலிருந்து சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குக்கிராமமான இனாம் அகரம்தான்  பூங்கோதையின் சொந்த ஊர். இக்கிராமத்துக்கு நாம் சென்ற போது ஒட்டுமொத்த ஊரும் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தது. 2014-15-ம் ஆண்டு மத்திய அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் பரிந்துரையின் பேரில் பெரம்பலூர், வேப்பந்தட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தின் ஆலோசனையின்படி சாகுபடி பணிகளை மேற்கொண்டு விருது பெற்றுள்ளார், பூங்கோதை. ஆனாலும், பூங்கோதை மற்றும் அவரது குடும்பத்தினரின் கடும் உழைப்பும் இதற்கு காரணமாக இருந்துள்ளது.

விவசாயிக்கு மரியாதை...!

சொன்னதைச் செஞ்சேன்... கிடைச்சது விருது!

பூங்கோதைக்கு ‘பசுமை விகடன்’ சார்பாக நாம் வாழ்த்துக்களைச் சொன்னோம். புன்னகை படர்ந்த முகத்தோடு பேச ஆரம்பித்தார், பூங்கோதை.

“எங்க குடும்பத்துக்கு மூணு ஏக்கர் நிலம் இருக்கு. இது வானம் பார்த்த பூமி. எங்களுக்குச் சொந்தமா இருக்கிற  கிணத்துல தண்ணீர் போதுமான அளவுக்கு இல்லை. அதனால், மானாவாரியாதான் மக்காச்சோளம் பயிர் பண்றோம். ஆவணியில விதைச்சு, தை மாசம் அறுவடை  பண்ணுவோம். போன வருஷம் ரெண்டரை ஏக்கர்ல மக்காச்சோளம் போட்டோம். வேப்பந்தட்டை விவசாய அதிகாரிகளோட ஆலோசனையின்படி சாகுபடி செஞ்சோம். ஏக்கருக்கு அடியுரமா 5 டன் மாட்டு எருவும் உயிர் உரங்களும் போட்டோம். அவர்கள் சொல்லியபடி ரசாயன உரங்களையும் போட்டோம். வரிசைக்கு வரிசை ஒன்றரையடி, செடிக்குச் செடி ஒரு அடி இடைவெளியில விதைச்சிருந்தோம். தொடர்ந்து அவர்கள் பரிந்துரை செய்த அளவுல உரங்களைக் கொடுத்தோம்.

விவசாயிக்கு மரியாதை...!

130-ம் நாள் அறுவடை செய்தப்போ, ஏக்கருக்கு 51 மூட்டை கிடைச்சிது. அதிக மகசூல் எடுத்த பெண் விவசாயிங்கிறதால எனக்கு இந்த விருது கிடைச்சிருக்கு. எங்க வயக்காட்டுல விதைப்பு, களையெடுப்பு, உரம்போடுறது, அறுவடை எல்லாம்... நான், என் மகன், மருமகளே பார்த்துடுவோம். எப்போவாவதுதான் வெளியில ஆள் கூப்பிடுவோம். எங்க குடும்பத்தோட உழைப்பாலும், வேளாண்மைத்துறை அதிகாரிகளோட ஒத்துழைப்பாலும்தான் இந்த விருது, புகழ், 2 லட்சம் ரூபாய் பரிசு எல்லாம் கிடைச்சிருக்கு” என்றார்.

மகிழ்ச்சியில் திளைத்த இனாம் அகரம்!

இப்பகுதியின் வேளாண் உதவி அலுவலர் வெங்கடேசன், “இந்த அம்மா வெளியுலகமே தெரியாதவங்க. வயல், வயலை விட்டா வீடுனு இருக்கிறவங்க. உங்களுக்கு விருது கிடைச்சிருக்கு. நீங்க விமானத்து்ல டெல்லி போகப்போறீங்கனு நான் சொன்னப்ப, பூங்கோதை அம்மா நம்பவே இல்லை. ‘சும்மா விளையாடாதீங்க சார்’னு வெட்கப்பட்டாங்க. அவங்க குடும்பத்துல உள்ளவங்க மட்டுமல்ல. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு ஊர் மக்கள் எல்லாரும் ஆச்சரியத்தோட சந்தோஷப்பட்டாங்க. இந்த அம்மாவால இந்த ஊர், இந்திய அளவுல புகழ் அடைஞ்சிடுச்சு’’ என்றார்.

விவசாயிக்கு மரியாதை...!

வேப்பந்தட்டை துணை வேளாண் அலுவலர் பெரியசாமி, “என்னதான் நாங்க தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுத்து, இடுபொருட்கள் எல்லாம் கொடுத்தாலும் கூட, இந்த அம்மாவோட கடுமையான உழைப்புனாலதான் இந்த விருதும், மரியாதையும் கிடைச்சிருக்கு. ஜிங்க் சல்பேட், நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள் எல்லாம் இதுக்கு முன்னாடி இவங்களுக்குத் தெரியாது.

யூரியாவை முறையா இரண்டு தடவையா பிரிச்சி போடணுங்கிறது கூட தெரியாமதான் இருந்தாங்க. ஆனா, நாங்க சொன்னபிறகு முறையா கடைப்பிடிச்சாங்க. தன்னோட அர்ப்பணிப்புனாலதான் இந்த விவசாயத்தையும் நிலத்தையும் காப்பாத்திக்கிட்டு இருக்காங்க. இப்ப  இவ்வளவு பெரிய விருதையும் வாங்கியிருக்காங்க” என்றார்.

மீண்டும் ஒரு முறை பூங்கோதைக்கு வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்.

விவசாயிக்கு மரியாதை...!

‘‘இரண்டு விவசாயிகளால் தமிழ்நாட்டுக்குப் பெருமை!’’

இந்த விருதுகள் குறித்து தமிழ்நாடு வேளாண்துறை இயக்குநர் மு.ராஜேந்திரன் பேசியபோது, “ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு மத்திய அரசின் க்ருஷி கர்மண் விருது வழங்கப்படுவது வழக்கம். 2014-15ம் ஆண்டில் அதிக மகசூல் எடுத்த இரண்டு விவசாயிகள் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரம் இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கோதை என்ற பெண் விவசாயி மக்காச்சோளத்தில் அதிக மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதேபோன்று தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டாரத்தைச் சேர்ந்த பி.மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெத்தண்ணன் என்பவர் வீரிய ரக சோளத்தில் அதிக விளைச்சல் எடுத்தமைக்காக இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஹெக்டேருக்கு 8,333 கிலோ(8.3 டன்) விளைச்சலை எடுத்துள்ளார். வழக்கமாக 6 டன் தான் எடுப்பார்கள். இவர் 2 டன் கூடுதலாக விளைச்சல் எடுத்தமைக்காக இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த விருதுகளை பெற்ற பூங்கோதை, பெத்தண்ணன் இரண்டு பேரும் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். தலா 2 லட்ச ரூபாய் விருதுக்கான தொகையாக இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளை கௌரவிக்கும் விதமாக பிரதமர் இந்த விழாவில் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். பல மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். தமிழகத்திலிருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

விவசாயிக்கு மரியாதை...!

சிறுவிவசாயிகளான இவர்கள் இரண்டு பேருக்குமே திடீரென்று இந்த விருதுகள் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே சிறு சிறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும், தோல்வியும் சந்தித்த பிறகே இந்த போட்டியில் வென்றுள்ளனர். பயிர் செய்ய தொடங்கும்போதே நிலத்தை நன்றாக உழுது, ஆறப்போட்டு எரு இட்டு, தரமான விதைகளை பயன்படுத்தியே மகசூல் எடுத்துள்ளனர். இந்த போட்டியின்போது, ரசாயன உரங்களின் அளவைக் குறைத்து உயிர் உரங்களை இடுபொருட்களாகப் பயன்படுத்தி அதிக மகசூல் எடுத்துள்ளனர் என்பது இவர்களின் சிறப்பம்சம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட, மாநில, தேசிய அளவில் விவசாயிகளுக்கு மகசூல் போட்டிகளை நடத்தி வருகிறோம். போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 50 சென்ட் நிலமாவது இருக்க வேண்டும். பதிவுக் கட்டணம் 150 ரூபாயை செலுத்தி, மாவட்ட வேளாண்துறை அலுவலகத்தில் பெயரைப் பதிவு செய்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம். இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்ள விவசாயிகள் ஆர்வமுடன் முன்வரவேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

விவசாயிக்கு மரியாதை...!

வீடியோ பதிவைப் பார்க்க... www.bit.ly/mzagripoong

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு