Published:Updated:

விடிஞ்சா பணம்... விவசாயச் சித்தரின் வெற்றிச் சூத்திரம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விடிஞ்சா பணம்... விவசாயச் சித்தரின் வெற்றிச் சூத்திரம்...
விடிஞ்சா பணம்... விவசாயச் சித்தரின் வெற்றிச் சூத்திரம்...

ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 2 லட்சம்... உயர்வு கொடுத்த உழவர் சந்தை!ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.சத்தியமூர்த்தி

*ஒரு ஏக்கரில் பலவிதமான காய்கறிகள்...

*உழவர் சந்தையில் விற்பனை

*தினமும் 700 ரூபாய் வருமானம்...

ண்டு வருமானம், மாத வருமானம், வார வருமானம்னு விவசாயத்துல பலவித வருமானங்கள் உண்டு. ஆனா, தின வருமானம் உண்டா? இந்த ஐயப்பாடு பலரின் மனதிலும் இருக்கத்தான் செய்யுது. இந்த சந்தேகம் யாருக்கும் எழத்தேவையில்லை. இதுக்கான விடை, என்கிட்ட  இருக்கு. 365 நாட்களும் எங்க நிலத்துல விளையுற காய்கறி, கீரைகள் மூலமா வருமானம் பார்த்து வர்றோம்’’ என்கிறார் ‘விவசாயச் சித்தர்’ என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் தங்கவேல்சாமி.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து 14 கிலோமீட்டர் தெற்கு நோக்கி பயணித்தால் அழகிய மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில் அமைந்திருக்கிறது கிளுவன்காட்டூர் கிராமம். போட்டது விளையும் செம்மண் பூமி. குளுமை வீசும் மலைக்காற்று. அழகான அமைதி நிலவும் நிசப்த வெளி.  இயற்கைத் தாண்டவமாடும் அந்த இடத்தில், சிறு குடில் அமைத்து, குடும்பத்துடன் தங்கி, இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார் தங்கவேல்சாமி. மெல்லிய தேகம், உச்சிக்குடுமி, கருகருவென நீண்ட தாடி, காவி உடை, சாந்தமான குரல், இளம்புன்னகை என காட்சி தரும் தங்கவேல்சாமி, தன் மனைவி கவிதா, தாயார் மாரியம்மாள் சகிதம் காய்கறி வயலில் நம்மை வரவேற்றார்.

விடிஞ்சா பணம்... விவசாயச் சித்தரின் வெற்றிச் சூத்திரம்...

இயற்கை விவசாய ஏகலைவன்!

‘‘அய்யா நம்மாழ்வாரை மானசீக குருவாக ஏற்றுகொண்ட ஏகலைவன் நான். அவர் நாடு முழுக்க பலருக்கும் கத்துக்கொடுத்த விவசாய வித்தைகளை, தூர இருந்தே கத்துக்கிட்டு, என் நிலத்தில் நடைமுறைப்படுத்துறேன். ஆனா, அவரை நேரில் சந்திச்சது, பேசினது கிடையாது. அந்த வாய்ப்பும் கடைசிவரை அமையல. ஆனா, தொடர்ந்து பசுமை விகடன்ல அய்யா எழுதின கட்டுரைகள், அய்யா கைகாட்டின விவசாயிகளோட கட்டுரைகள்னு இயற்கை விவசாய கட்டுரைகளைப் படிச்சு செயல்முறைப்படுத்தி பார்க்கிறேன். அய்யா பக்கத்துல இருந்து சொல்லிக்கொடுக்கிறது மாதிரியேதான் எனக்கு பசுமை விகடன்ல வர்ற ஒவ்வொரு செய்தியும் இருக்கு. இந்த திருப்தியே போதும்.

‘நம்மாழ்வாரை சந்திச்சு இருக்கீங்களா?’னு நான் சந்திக்கிற பலரும் கேட்கிறாங்க. அவங்களுக்கெல்லாம், ‘காந்தியை பார்க்கணும்னு இல்ல... அவரது கொள்கையைக் கடைப்பிடிக்கிறதுதான் அவசியம். அதேபோலத்தான் நம்மாழ்வார் விஷயத்திலேயும் என்னுடைய அணுகுமுறை. அவர் நடத்தின பயிற்சி தொடர்பான செய்திகள், புத்தகங்கள், அனுபவ விவசாயிகள் வழிகாட்டல்கள்னு ஏதாவது ஒருவழியில சங்கிலித்தொடர்போல அவரோட இயற்கை விவசாய நுட்பம் கடைக்கோடி விவசாயிகளுக்கும் போய் சேர்ந்துக்கிட்டுத்தான் இருக்கு. அந்தக் கோடி விவசாயிகள்ல நானும் ஒருவன்.

அவரைப் பார்க்காமலே அவர் வழியில இயற்கைப் பயணத்தைத் தொடங்கியிருக்கேன்’ங்கிறதைத்தான் பதிலா சொல்லிட்டிருக்கேன்’’ என்று சொன்ன தங்கவேல்சாமி, தொழுவத்தில் கட்டியிருந்த நாட்டு மாடுகளை ஓட்டிச்சென்று மேய்ச்சல் நிலத்தில் விட்டுட்டு வந்து, மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

ஆடு... காடு... ஆன்மிகம்!

‘‘எனக்கு இருப்பது வெறும் 120 சென்ட் நெலம் மட்டும்தான் (1 ஏக்கர் 20 சென்ட்) மழை பெய்து கிணத்துல தண்ணீர் ஊறினா மட்டும்தான் ஏதாவது வெள்ளாமை வைப்போம். அதுவரை ஜீவனத்துக்கு என்ன வழி? 30 வெள்ளாடு வெச்சு காடு மேடு மலைனு மேய்க்கிறதுதான் என்னோட முழுநேர வேலை. குடும்பம் நடத்த அதுதான் வருமானம்.

இப்படியாக நானுண்டு என்வேலையுண்டுனு வெள்ளாடு மேய்ச்சிக்கிட்டிருந்தப்போதான் அந்த பெருஞ்சோதனை. எந்த நோய்நொடியும் இல்லாமல் இருந்த வெள்ளாடுங்க திடீர்னு ஒவ்வொண்ணா செத்துப்போச்சு. ஒருகட்டத்துல முப்பது வெள்ளாடும் செத்துப்போச்சு.

விடிஞ்சா பணம்... விவசாயச் சித்தரின் வெற்றிச் சூத்திரம்...

எனக்கு பேரதிர்ச்சி. ஒண்ணுமே புரியல. பக்கத்து ஊர்ல இருக்கிற மாட்டு டாக்டர்கிட்ட, தூக்கிக்கிட்டுப்போய் காட்டினேன். பூச்சிக்கொல்லி தெளிச்ச புல்லை சாப்பிட்டதுதான் ஆடுகள் செத்துபோனதுக்கு காரணம்னு சொன்னார். அப்பதான் உண்மை தெரிஞ்சுது. மலையடிவார மேய்ச்சல் நிலங்களை சமன்படுத்தி சிலர் விவசாய நிலமா மாத்துனாங்க. அப்போ அங்கு தன்னால வௌஞ்சு கிடக்கும் அருகம்புல், கோரை உள்ளிட்ட புல், பூண்டுகளை அழிக்கும் விதமா லிட்டர் கணக்கில களைக்கொல்லி விஷத்தை காடு முழுசும் தெளிச்சிருக்காங்க. அது தெரியாமல் வழக்கம் போல மேயப்போன ஆடுகள், களைக்கொல்லி தெளிச்ச புல், பூண்டுகளைத் தின்னு மாண்டுபோச்சு.

என்னோட வாழ்வாதாரம் ஜீரோவாகவே வெறுத்துப்போயி, வீட்ல சொல்லாம கொள்ளாம பரதேசம் போயிட்டேன். திருவண்ணாமலை, சதுரகிரி, கொல்லிமலைனு பித்தனைப்போல பலவருஷம் சுத்தி திரிஞ்சேன். அந்த சமயத்துலதான் சாமியார்கள், சித்தர்கள், மூலிகை ஆராய்ச்சியாளர்கள்னு பலரை சந்திச்சு பேசும் வாய்ப்பு கிடைச்சுது. பலநாள் அவங்க கூட காடு, மலை, வனாந்திரம்னு சுத்தி வந்து, பல மூலிகைகளோட மகத்துவத்தை நேரில் பார்த்து அதுகளோட மருத்துவ குணம், அதை வைத்து மருந்து தயாரிப்புனு எல்லா விஷயத்தையும் கத்துக்கிட்டேன்.

முதலில் மூலிகை அடுத்து காய்கறி!

திடீர்னு ஒருநாள் வீட்ல வந்து நின்னேன். என்னோட சாமியார் வேஷத்தைப் பார்த்து அதிர்ச்சி ஆயிட்டாங்க. இந்த கோலத்தை எல்லாம் கலைச்சிட்டு வீட்டுக்குள்ள வா! அப்படீனாங்க. ‘முடியாது இப்படித்தான் இருப்பேன்’னு கறாரா சொன்னேன். வற்புறுத்தினா மறுபடியும் வனவாசம் போயிடுவேனு பயம் காட்டினேன். எப்படியோ இரு... ஆனா எங்க கூடவே இருனு சொல்லிட்டாங்க. தோட்டத்துல ஒரு மூலையில குடில் அமைச்சு மூலிகை விவசாயம் செய்ய முடிவு எடுத்து 15 வகை மூலிகைகளையும் பயிர்செஞ்சேன். என்னோட மூலிகை ஞானத்தைப் பயன்படுத்தி சில மருந்துகள் தயாரிப்பிலும் ஈடுபட்டேன்.

கீரை கிராமம்;

என் கிராமம் முழுக்க கீரை விவசாயம்தான் பிரதானம். இதை கீரை கிராமம்னு பெருமையா சொல்லுவாங்க. களைக்கொல்லி தெளிக்கிறதும் புல்லு, பூண்டுகள அழிப்பதும், அந்த நெலத்துல கீரை விதைப்பதும் தொடர்ச்சியா நடக்கிற ஒண்ணு. களைக்கொல்லியோட கீரைச் செடிகளுக்கு பூச்சிக்கொல்லி விஷத்தையும் தொடர்ந்து தெளிச்சு வந்தாங்க.

இதுக்கு மாற்றுவழியே கிடையாதானு? யோசனை செஞ்சிக்கிட்டிருப்பேன். அந்த சமயத்துலதான், ‘இனியெல்லாம் இயற்கையே’ விவசாயக் கருத்தரங்கு  உடுமலைப்பேட்டையில் நடந்திச்சு. அதுல கலந்துக்கிற வாய்ப்பு கிடைச்சுது. முன்னோடி அனுபவ விவசாயிகள் பலர் அங்கு பேசினாங்க. பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமிலோ அமிலம், இ.எம்.கரைசல், மூடாக்கு, இருமடிப்பாத்தினு பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். இயற்கை விவசாயம் சம்பந்தமான புத்தகங்கள் நிறைய வாங்கி படிச்சேன். அடுத்தடுத்து நடந்த இயற்கைக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டேன். பசுமை விகடன் வாசகர்களை நேரில்போய் சந்திச்சு அவங்க விவசாய அனுபவங்களைத் தெரிஞ்சிக்கிட்டேன். இப்ப, அவரை 5 சென்ட், தக்காளி 15 சென்ட், கத்திரி 10 சென்ட், கீரைகள் 30 சென்ட், வெண்டை 5 சென்ட், தட்டை, சுண்டை, துவரை, முள்ளங்கி, பப்பாளி எல்லாம் 35 சென்ட்ல இருக்கு. எல்லாமே சுழற்சி முறை விவசாயம்தான்.

விடிஞ்சா பணம்... விவசாயச் சித்தரின் வெற்றிச் சூத்திரம்...

கூட்டுக்கிணறு... சொட்டுநீர்ப் பாசனம்!

என்னோட நெலத்துக்கு தினமும் ரெண்டு மணி நேரம்தான் பாசனம் கிடைக்கும். எங்க குடும்பத்துக்கான கூட்டுக்கிணறு ஒண்ணுதான் இருக்கு. வாய்க்கால் வழி பாசனம் செஞ்சா ஒரு ஏக்கர் காய்கறிக்கு முழுமையா தண்ணீர் கொடுக்க முடியாது. அதனால, சொட்டுநீர்க் கருவிகளை என்னோட ஒரு ஏக்கர் நெலத்துக்கும் பொருத்திட்டேன். இப்ப கிடைக்கிற ரெண்டு மணி நேர பாசனத்தண்ணீரே போதும் போதும்ங்கிற அளவுக்கு இருக்கு.

நாட்டு மாடு... நஞ்சில்லா மண்!

அடியரமா கொடுக்கும் தொழுவுரம் போக, எல்லா பயிர்களுக்கும் பஞ்சகவ்யா கரைசலை இலைவழி உரமா 15 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி விகிதம் கலந்து தவறாமல் தெளிக்கிறோம். நாட்டு மாடு ரெண்டு வெச்சிருக்கேன். வீரியம் மிகுந்த இதுங்களோட சாணம், மூத்திரம், பால், தயிர், நெய் பயன்படுத்தி சுத்தமான பஞ்சகவ்யா தயாரிக்கிறேன். தொடர்ந்து அமுதக்கரைசல், மீன் அமிலம், இ.எம். திறமி நுண்ணுயிரி மாதிரியான இயற்கை கரைசல்களையும் தேவையான நேரத்தில் செடிகளுக்குக் கொடுத்துக்கிட்டு வர்றேன்’’ என்றவர், பீப்பாய்களில் நிரம்பி இருந்த அனைத்து இடுபொருட்களையும் திறந்து காட்டிவிட்டு, பறித்தக் காய்கறிகளை, களத்து வாசலுக்கு எடுத்துவரச் சென்றார்.

அந்த இடைவெளியில் நம்முடன் பேசினார் கவிதா, ‘‘சுழற்சி முறையில வெளையுற காய்கறிகளை தினம்தோறும் சாயங்காலம் பறிச்சு ரகம் வாரியா பிரிச்சு கட்டி வெச்சிடுவோம். தக்காளி, கத்திரி, வெண்டை, கீரைகள், அவரை, சுண்டக்காய்னு குறைஞ்சபட்சம் 10 அயிட்டங்களை, உடுமலைப்பேட்டை உழவர் சந்தையில் விற்பனை செய்யுற வேலை என்னோடது. நாள் ஒண்ணுக்கு சராசரி 50 கிலோ காய்கறி விற்பனை செஞ்சுக்கிட்டு வர்றேன். வருஷம் 365 நாளும் இந்த வியாபாரம் இருக்குங்க. அதிகாலை 5.30 மணி தொடங்கி காலை 7 மணிக்குள்ளாற எல்லா காய்கறியும் காலி ஆகிடும். நாள் ஒண்ணுக்கு 700 முதல் 1,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. சராசரியா ஒரு ஏக்கர்ல ஆண்டுக்கு ரெண்டு லட்சம் ரூபாய் வருமானம் இருக்கும்.

இப்படியொரு வருமானத்தைப் பார்க்கிறதுக்கு குடும்பத்துல இருக்கிறவங்க ஆதரவு முக்கியம். சொந்த ஆட்களே வேலை பார்க்கிறதால மாசம் 18,000 ரூபாய் அளவுல கூலித் தொகை சேமிப்புல சேருது. சிறு விவசாயிங்க வெற்றியே அவங்க சொந்த உழைப்புலதான் இருக்குங்க’’ என்று கணக்குப் போட்டுச் சொன்னவர்,

விடிஞ்சா பணம்... விவசாயச் சித்தரின் வெற்றிச் சூத்திரம்...

இயற்கைக் காய்கறி கிலோவுக்கு 2 ரூபாய் அதிகம்!

‘‘உழவர் சந்தையில, என் கடைக்கு வர்றவங்ககிட்ட இது இயற்கை விவசாயத்துல வெளைஞ்ச காய்கறி, கீரைனு சொல்லுவேன். அட, அப்படியானு சந்தோஷப்பட்டு கிலோவுக்கு 2 ரூபாய் கூடுதல் விலை கொடுத்து வாங்கிட்டுப் போவாங்க சிலர். சாப்பிட்டு பாத்திட்டு தொடர்ந்து என்னோட கடைக்கே வருவாங்க. இன்னும் சிலர் இருக்காங்க. இயற்கை விவசாய காய்கறினு சொன்னதுமே, ‘சான்றிதழைக்காட்டு’னு கேட்பாங்க. ‘நம்பிக்கை ஒண்ணுதாங்க எங்கிட்ட இருக்கிற சான்றிதழ். சந்தேகம்னா எங்க வயலுக்கு வாங்க எங்க விவசாய முறைகளை பாருங்க. அக்கம் பக்கத்துல விசாரிங்க’னு பதில் சொல்லுவேன். இப்ப எங்க தோட்டம் தேடிவந்து கூட சிலர் காய்கறி வாங்கிட்டுப் போறாங்க. தெரிஞ்சவங்க, தெரியாதவங்க எல்லோருக்கும் இயற்கைக் காய்கறி கொடுக்கிற திருப்தியே எங்களுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்குது. எங்க குடும்பத்தின் ஆரோக்கியம் வருமானம் ரெண்டுமே மனநிறைவா இருக்குங்க’’ என்றபடியே காய்கறிகளை தன் மாமியார் மாரியம்மாவுடன் சேர்ந்து தரம் பிரிக்கத் தொடங்கினார்.

நிறைவாகப் பேசிய தங்கவேல்சாமி, ‘‘நம்மாழ்வார் அய்யாவின் வழியில் இயற்கை விவசாயம் செய்து நல்ல வருமானம் எடுத்துக்கிட்டிருக்கேன். என்னை மாதிரி லட்சோப லட்சம் விவசாயிகள் இன்னும் இயற்கை விவசாயத்தை நோக்கி வந்துக்கிட்டிருக்காங்க.

அய்யா மறைந்தாலும் அவர் கற்றுக்கொடுத்த பாடங்கள் எப்பவும் மறையாது. ‘நம்மாழ்வார்தாசன்’னு என்னைச் சொல்லிக்க ஆசைப்படுறேன்’’ என்றுச் சொன்ன தங்கவேல்சாமி, சுவற்றில் தொங்கிய நம்மாழ்வாரின் படத்தை வணங்கியபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
மு.தங்கவேல்சாமி,
செல்போன்: 99421-63871.

மூலிகை மருத்துவம்!

விடிஞ்சா பணம்... விவசாயச் சித்தரின் வெற்றிச் சூத்திரம்...

ஆடாதொடா இலை, தழுதாழை, சர்வகாந்தம், தொழுகன்னி, தூதுவளை, கோவை, கருடன் கிழங்கு, அமுக்காரா கிழங்கு உள்ளிட்ட மூலிகைப் பயிர்களையும் தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார் தங்கவேல்சாமி. விவசாயம், கால்நடைகளுக்குத் தேவையான மூலிகை ஆராய்ச்சியையும் மேற்கொண்டு வருகிறார். தொழுகன்னி என்கிற அபூர்வ மூலிகை, ஆளைப்பார்த்தால் வணங்குகிறது. வெட்டுண்ட காயத்தை ஒட்டவைக்கும் தன்மையும் கொண்ட மூலிகையான கருடன் கிழங்கும், தாது விருத்தி கொடுக்கும் அமுக்காரா கிழங்கும் இவர் தோட்டத்தில் உண்டு.

‘பசுமை வாழ்வியல்!’

விடிஞ்சா பணம்... விவசாயச் சித்தரின் வெற்றிச் சூத்திரம்...உடுமலைப்பேட்டையில் வசித்துவரும் சமூக ஆர்வலர் ஆர்.வி.எஸ்.ஆறுமுகம், நஞ்சில்லா நல் உணவு குறித்த விழிப்பு உணர்வுப் பிரசாரத்தை முழுக்க முழுக்க நகரவாசிகள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார். கோழித்துவரை என்கிற நாட்டுரக துவரம் பருப்பு வாங்கிச்செல்ல தங்கவேல்சாமியின் தோட்டத்துக்கு வந்திருந்தவரிடம் பேசினோம்.

‘‘நான் நகரவாசி. விவசாயத்துக்கு துளியும் சம்பந்தமில்லாத வியாபாரக் குடும்பம். எதேச்சையாக படிச்ச பசுமை விகடன் என்னை மாத்திடுச்சு. பல கருத்தரங்குகளில் கலந்துக்கிட்டேன். இப்படி கலந்துகொண்டதுல ஒரு விஷயம் புலப்பட்டது.

விவசாயிகள் மத்தியில இயற்கை விவசாயம், நல் உணவு இதுபத்தின விழிப்பு உணர்வு அதிகரிச்சு இருக்கு. ஆனா, என்னை மாதிரி நகரவாசிகள் மத்தியில குறைவாத்தான் இருக்கு. அதனால நுகர்வோர் மத்தியில் இதை ஏன் கொண்டு போய் சேர்க்கக் கூடாதுனு ஒரு எண்ணம் தோணுச்சு. தம்பி கையில மளிகைக் கடைய கொடுத்திட்டு, ‘கிரீன் லைப்’ (பசுமை வாழ்வியல்) அப்படிங்கிற அமைப்பை ஆரம்பிச்சு 2 வருஷமா, வாரம் 10 வீடுகளுக்கு போய் இயற்கை விவசாயம், நல் உணவு மற்றும் அதன் நன்மைகள் குறித்த பிரசாரத்தைச் செய்துக்கிட்டு வர்றேன். கூடவே பசுமை விகடனின் பழைய இதழ்களையும் இலவசமா படிக்கக் கொடுத்துட்டு வர்றேன். படிச்சு முடிச்சதும் பக்கத்து வீட்டுக்குக் கொடுங்கனு பரிந்துரை செய்றேன்.

இப்ப ‘கிரீன் லைப்’ அமைப்புல 120 குடும்பங்கள் இணைஞ்சிருக்கு. விவசாயிகளோட தோழன் மட்டுமில்ல, வியாபாரிகளோட நண்பனாகவும் ‘பசுமை விகடன்’ இருக்குனு சொல்றதுக்கு நானே நல்ல உதாரணம்’’ உள்ளம் உருகிப் பேசினார் ஆறுமுகம்.

பூண்டுக் கரைசல்!

விடிஞ்சா பணம்... விவசாயச் சித்தரின் வெற்றிச் சூத்திரம்...

கத்திரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி அதிமுக்கியம். புகையிலை, பூண்டு, பச்சை மிளகாய், வேப்பிலை, நொச்சி இலை இவை ஐந்தையும் சம அளவில் எடுத்து உரலில் போட்டு இடித்து, மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரில் (கோஜலம்) ஊறவைத்து, நன்றாகக் கொதிக்கவைத்து, பிறகு ஆறவைக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வீதம் கலந்து பிஞ்சுப்பருவம் மற்றும் காய்ப்பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் செடிகள் நனையும்படி தெளிக்கலாம். செடிகளைத் தாக்கும் பூச்சிகளை விரட்டியடிக்கும் ஆற்றல், இந்த புகையிலை+பூண்டுக் கரைசலுக்கு உண்டு.

நொச்சி, வேம்பு, ஆடுதொடாஇலை (ஆடாதோடை), நிலவேம்பு, பப்பாளி இலை என கிள்ளினால், பால் வடியும் ஐந்து இலைகளையும் சம அளவில் சேகரித்து 2 லிட்டர் மாட்டுச்சிறுநீரில் (கோஜலம்) ஒரு நாள் முழுக்க ஊறவைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி விகிதம் கலந்து, அதிகாலை அல்லது இளமாலை வேளைகளில் செடிகள் மீது தெளிக்கவேண்டும். தொடர்ந்து பிஞ்சுப்பருவம், காய்ப்பருவம் ஆகிய நாட்களில் தெளித்துவர, காய்ப்புழு, அசுவணி, இலைப்பூஞ்சணம் உள்ளிட்ட நோய்கள் அகன்று சீரான மகசூலைப் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு