Published:Updated:

மணத்தக்காளி... தினம்தோறும் தருமே வரும்படி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மணத்தக்காளி... தினம்தோறும் தருமே வரும்படி!
மணத்தக்காளி... தினம்தோறும் தருமே வரும்படி!

கீரை வாங்கலையோ கீரை! ஆரோக்கியம்+அற்புத லாபம் தரும் ஆச்சர்யத் தொடர்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

ண்பவர்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கீரைகள், தன்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் வருமானத்தை வாரி வழங்கத் தயங்குவதே இல்லை. இன்றைய நிலையில், மற்ற பயிர்களை விட, குறைந்த செலவு, குறைந்த நாளில் அதிக வருமானம் தரும் பயிர் கீரைதான். அதிலும் ஒரே ஒரு முறை விதைத்து ஆண்டுதோறும் அறுவடை மட்டும் செய்யக்கூடிய கீரைகள், விவசாயிகளின் அட்சயப் பாத்திரமாகவே திகழ்கின்றன. அந்த வரிசையில் மணத்தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு.

‘காய்க்கு கபந்தீருங் காரிகையே! அவ்விலைக்கு வாய்கிரந்தி வேக்காடு மாறுங்கண்’ என்கிறது பதார்த்த குணசிந்தாமணி.

மணத்தக்காளி கீரையின் காயைச் சமைத்து உண்டால் மலச்சிக்கல் தீரும், நாள்பட்ட கபநோய்கள், வாத நோய்கள் தீரும் என்பது பாடலின் பொருள். கோழையை அகற்றி, உடலைத் தேற்றும் மணத்தக்காளி, குடல் புண்களை ஆற்றுவதற்கான மிகச் சிறந்த மருந்து. இந்தக் கீரையில் புரதம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதை தொடர்ந்து 48 நாட்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், ‘சொரியாசிஸ்’ என்ற தோல்நோய் குணமாகும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

மணத்தக்காளி... தினம்தோறும் தருமே வரும்படி!

விதை மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படும் மணத்தக்காளி, சில இடங்களில் இயற்கையாகவே முளைத்து இருக்கும். இதன் பழம் கறுப்பு நிறத்தில் மிளகு அளவுக்கு இருப்பதால், இதை மிளகுத் தக்காளி எனவும் அழைக்கிறார்கள். இந்தப் பழம் உண்பதற்கு சுவையாக இருக்கும். சந்தையில் அதிகம் விற்பனையாகும் கீரைகளில், மணத்தக்காளிக்கும் முக்கிய இடமுண்டு. இதை ஒரு முறை விதைத்து விட்டால் போதும், தொடர்ச்சியாக அறுவடை செய்துகொண்டே இருக்கலாம் என்பதால், விவசாயிகள் மணத்தக்காளியை விரும்பி சாகுபடி செய்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் சீலையம்பட்டியைப் போலவே சிந்தலச்சேரி சுற்றுப்பகுதியும் கீரை சாகுபடி அதிகம் நடக்கும் பகுதி. குச்சனூர் அருகேயுள்ள புலிகுத்தி கிராமத்தில், 80 சென்ட் நிலத்தில் மணத்தக்காளி சாகுபடி செய்து, தினசரி வருமானம் பார்த்து வருகிறார் கோட்டைமணி.

பாடு இல்லாத வெள்ளாமை..!

‘‘எங்க ஊர்ல பொரியல் தட்டை அதிகமா நடுவாங்க. அதோட கைச்செலவுக்காக கொஞ்சம் கீரையையும் போடுவாங்க. நான் போர்வெல் பாசனத்துல ஒண்ணே கால் ஏக்கர்ல தக்காளி, ரெண்டரை ஏக்கர்ல பொரியல்தட்டை, 60 சென்ட் நிலத்துல கத்திரி நட்டிருக்கேன். அதோட 80 சென்ட் இடத்துல மணத்தக்காளிக் கீரை போட்டிருக்கேன். மணத்தக்காளி பாடு இல்லாத வெள்ளாமை. அரை ஏக்கர் இடத்துல, 50 மணத்தக்காளிச் செடிக இருந்தாப் போதும், அடுத்த ஆறே மாசத்துல அரை ஏக்கர் முழுக்க நாத்து பாவுனதுப் போல விளைஞ்சிடும். இந்த 80 சென்ட் இடத்துல இருக்கிற கீரையை நான் தனியா நடலை. கொஞ்சம் போல மணத்தக்காளிச் செடிக இருந்து, அதுவே பெருகிடுச்சு. தானா வர்ற சீதேவியை போன்னு சொல்ல முடியுமா? இருக்கட்டும்னு சொட்டுநீர்க் குழாயைப் போட்டு விட்டுட்டேன். இப்ப, அறுப்பு மட்டும்தான். இதுக்கு தண்ணி மட்டும் குறையாம பாய்ச்சினாப் போதும்... அறுக்க முடியாத அளவுக்கு விளைஞ்சு தள்ளிடும்.

மணத்தக்காளி... தினம்தோறும் தருமே வரும்படி!

நட்ட ஒரு மாசத்துலயே கீரை அறுப்புக்கு வந்திடும். நான், கீரையை அறுத்துக் கொண்டு போய் விக்கிறது இல்லை... ஏவாரிங்க தோட்டத்துக்கே வந்திடுவாங்க. அன்னன்னிக்கு வந்து கீரை ஒடைச்சிட்டு, கட்டுப் போட்டு கையில் காசு கொடுத்துட்டுப் போயிடுவாங்க. ஒடிக்கிற வேலைகூட நமக்கு இல்ல. சராசரியா தினமும் 200 கட்டு ஒடிப்பாங்க. ஒரு கட்டு 5 ரூபாய்னு கொடுக்கிறேன். அதை அவங்க கொண்டுபோய் ரெண்டு கட்டா கட்டி, ஒரு கட்டு பத்து ரூபாய்னு விப்பாங்க.

இதுக்கு பராமரிப்புனு பாத்தா, மாசம் ஒரு தடவை ஊட்டம் கொடுக்கணும். ரசாயனத்துல செய்றவங்க காம்ப்ளக்ஸ் உரம் வெப்பாங்க, இயற்கை விவசாயம் செய்றவங்க பிண்ணாக்கு கரைச்சு விடுவாங்க. நான் அந்த நேரத்துக்கு எது கிடைக்குதோ, அதை பயன்படுத்துவேன். பெரும்பாலும் காம்ப்ளக்ஸ் (ரசாயனம்) உரம்தான் வைப்பேன். மற்றபடி பூச்சி தொந்தரவோ, நோய் தொந்தரவோ ஒண்ணும் இருக்காது. இதுக்கு ஒரே பராமரிப்பு... பாசனம் மட்டும்தான்.

80 சென்ட் இடத்துல இருக்கிற கீரைக மூலமா தினமும் ஆயிரம் ரூபாய் கணக்குல மாசம் முப்பதாயிரம் கிடைக்கும். இதுல, 5 ஆயிரம் ரூபாய் செலவானாலும், 25 ஆயிரம் லாபம்தான்’’ என்று சொன்னார் கோட்டைமணி.

-தழைக்கும்

எப்படி சாகுபடி செய்வது?

மணத்தக்காளி, களர்நிலம் தவிர மற்ற அனைத்து வகை மண்ணிலும் வளரும். செம்மண் மற்றும் மணல் கலந்த செம்மண் நிலங்களில் சிறப்பாக வளரும். சாகுபடிக்கு தனியாக பட்டம் இல்லை. ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். நிலத்தை புழுதியாக உழவு செய்து, 8 அடிக்கு 8 அடி இடைவெளியில் பாத்தி அமைத்துக்கொள்ள வேண்டும். பாத்தியில் விதையைப் பரவலாகத் தூவி விட்டு, பாசனம் செய்யவேண்டும். 80 சென்ட் நிலத்துக்கு அதிகபட்சம் 3 கிலோ விதைகள் தேவைப்படும். 7 நாட்களுக்குள் முளைப்பு தெரியும். தொடர்ந்து செடிகளை வாடவிடாமல் பாசனம் கொடுத்து வரவேண்டும். 15-ம் நாள் தேவையைப் பொறுத்து ஒரு களை எடுக்கவேண்டும். பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இருக்காது. 30-ம் நாள் முதல் சுழற்சி முறையில் தினமும் அறுவடை செய்யலாம். செடியை வேரோடு பறிக்காமல், தரையில் இருந்து நான்கு விரல்கிடை அளவு, அறுக்க வேண்டும். 80 சென்ட் நிலத்தில் இருந்து சராசரியாக 200 கட்டுகள் கிடைக்கும். மாதம் ஒரு முறை வளர்ச்சி ஊக்கி கொடுக்க வேண்டும்.

சொட்டு நீர்ப் பாசனத்தில் சாகுபடி செய்பவர்கள், பாத்தி அமைக்கத் தேவையில்லை. உழவு செய்தவுடன் வரிசைக்கு வரிசை 2 அடிக்கு 2 அடி இடைவெளியில் சொட்டு நீர்க் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும். குழாய்களில் 2 அடி இடைவெளியில் தண்ணீர் சொட்டுவதுப் போன்ற லேட்ரல்களை (குழாய்) அமைத்துக்கொள்ள வேண்டும். நடுவதற்கு முன்பாக, தண்ணீர் பாய்ச்சி, நிலத்தில் ஈரமுள்ள இடங்களில் விதைகளைத் தூவி விடவேண்டும்.

‘இயற்கை வழி’ விவசாயம் செய்பவர்கள், 10 நாட்களுக்கு ஒருமுறை பாசன நீருடன் அமுதகரைசலைக் கலந்து விடலாம். பூச்சி மற்றும் நோய் தாக்காவிட்டாலும் 15 நாட்களுக்கு ஒரு முறை மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். மாதம் ஒருமுறை ஏக்கருக்கு 80 கிலோ கடலைப் பிண்ணாக்கை பாசன தண்ணீரில் கலந்து விட வேண்டும். இதை மட்டும் செய்தால் போதும். வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை.

விலையில்லா விதை!

மணத்தக்காளி... தினம்தோறும் தருமே வரும்படி!

மணத்தக்காளி விதைக்காக அலையத் தேவையில்லை. சில செடிகளை அறுக்காமல் விட்டால், காய் பிடித்து, பழம் வைக்கும். அந்தப் பழங்களைப் பறித்து, விதைகளை எடுத்து, சாம்பலில் புரட்டி காய வைத்து, பயன்படுத்தலாம்.

மருத்துவ பயன்கள்!

மணத்தக்காளி... தினம்தோறும் தருமே வரும்படி!

மணத்தக்காளி, சோல்நம் நைக்ரம் (Solanum Nigrum) என்ற தாவரவியல் பெயர் கொண்டது. இந்தக் கீரையில் இருந்து சாறு எடுத்து தினமும் மூன்று வேளையும் 30 மில்லி அளவு குடித்து வந்தால், சிறுநீர் தராளமாகப் பிரியும். வாய்ப்புண், உடல்சூடு போன்றவை குணமாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு