Published:Updated:

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

‘பசுமைப் புரட்சி’ பூமியில் ஒரு பரிதாபப் பயணம்வளமான மண்... மலடான சோகம்!த.ஜெயகுமார்

பிரீமியம் ஸ்டோரி

*நெல், கோதுமை, பருத்தி போன்ற பயிர்களில் களைக்கொல்லிகள் அதிகமாகப் பயன்படுத்தும்போது, அந்தப் பயிரின் வலிமை கெடுகிறது. அதோடு அந்தப் பயிர்களின் சிறப்பான மருத்துவத் தன்மையும் அழிந்து வருகிறது.

*25 சதவிகித கால்நடைகள் சினைக்கே வருவதில்லை. சினையானவைகளில், 25 சதவிகிதம் கரு கலைந்து விடுகிறது.

*பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

*கழுகு, பருந்து, காகங்கள், சிட்டுக் குருவிகள், தவளைகள், பாம்புகள், தேரைகள் போன்றவை வெகுவாக குறைந்து வருகின்றன.

சுமைப் புரட்சி பஞ்சாபில் ஏற்படுத்திய விளைவால், மண், காற்று, நீர் அனைத்தும் நஞ்சாகிக் கிடப்பதைப் பற்றி கடந்த இதழில் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்ட மருத்துவர் அமர்சிங் ஆஸாத், தொடர்ந்து, கால்நடைகள் பாதிப்பு குறித்து பகிர்ந்தவை அதிர்ச்சி ரகம்.

“பஞ்சாபில், சுற்றுச்சூழல் பாதிப்பினால் மனிதர்கள் மட்டுமல்ல, பல்வேறு உயிரினங்களும், கால்நடைகளும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அதிக எண்ணிக்கையில் கழுகு, பருந்து, காகங்கள், சிட்டுக்குருவிகள், தவளைகள், பாம்புகள், தேரைகள் போன்றவற்றைப் பார்க்க முடிந்தது. இன்று அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. தொடர்ந்து மண்ணில் ரசாயன உரங்களைக் கொட்டியதன் விளைவு வயல்களே சூடாகிக் கிடக்கின்றன. அதனால் மண்புழுக்கள், கரையான்கள் போன்ற சின்னச்சின்ன உயிரினங்கள் மண்ணில் இல்லாமல் போய்விட்டன. விவசாயத்துக்கு மிகவும் உதவுகின்ற தேனீக்கள் மிகவும் அருகி வருகின்றன. அதனால் இதைச் சார்ந்த மற்ற உயிரினங்களும் அழிந்தே போய்விட்டன. மனிதர்களைப் பற்றியே கவலைப்படாத அரசுகள், மற்ற உயிரினங்களைப் பற்றியா கவலைப்பட போகின்றன?

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

கலைந்து போகும் கரு!

கால்நடைகளைப் பொறுத்தவரை, கடந்த 30 ஆண்டுகளில் மாடுகளின் பால் உற்பத்தித்திறன் குறைந்துள்ளது. கால்நடைகள் சினைக்கு வருவது குறைந்துவிட்டது. முன்பெல்லாம் எருமைகள் தன் வாழ்நாளில் 15 முறையாவது சினைக்கு வரும். இப்போது 10 முறை வருவதே பெரிய விஷயமாக இருக்கிறது. சமீபகாலமாக, கால்நடைகளில் மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. 25 சதவிகிதம் சினைக்கே வருவதில்லை. 25 சதவிகிதம் கரு கலைந்து போகிறது. இதற்காக ஊசிகள் போடப்பட்டு சினையாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

நெல், கோதுமை, பருத்தி போன்ற பயிர்களில் களைக்கொல்லிகள் அதிகமாக பயன்படுத்தும்போது, அந்தப் பயிரின் வலிமை கெடுகிறது. அதோடு அந்தப் பயிர்களின் சிறப்பான மருத்துவத் தன்மையும் அழிந்து வருகிறது. பயிர்களின் நலம் கெடுவதால், செயற்கையாக அந்தப் பயிர்களை வாழ வைக்க வேண்டிய கட்டாயத்தில், மீண்டும் அதிகப்படியான ரசாயன உரங்களைப் பயன்படுத்தும் நிலைக்கு பஞ்சாப் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

வளமிழந்த மண்ணில் விளைபவை சத்துள்ளவையாக எப்படி இருக்கும்?

ஒரு பயிர் வளர்வதற்கு 32 வகையான சத்துக்கள் தேவை. செயற்கை முறை ரசாயன விவசாயத்தில் என்.பி.கே. என்று மூன்று வகையான சத்துக்களைக் கொடுக்கிறோம். கார்பனை காற்றிலிருந்து எடுத்துக் கொள்கிறது. மீதி 28 சத்துக்கள் என்ன ஆனது? எப்படி கிடைக்கும்? தொடர்ந்து ரசாயன உரங்களைக் கொட்டியதால் மண்ணிலிருந்து அங்ககச்சத்தை அழித்துவிட்டோம். அதிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிற உணவு மட்டும் சத்துள்ளவையாக எப்படி இருக்கும். அந்த மண் வளமுள்ளதாக எப்படி இருக்கும்?’’ அமர்சிங் ஆஸாத்தின் குரலில் பொங்கி வழிகிறது வேதனை.

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

பஞ்சாபின் இயற்கை வளம்!

ஆனால், ஒரு காலத்தில் இயற்கையோடு மட்டுமே கைகோத்து, இந்தியாவுக்கான நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னுடைய பங்கை சிறப்பாக ஆற்றிக் கொண்டிருந்த மாநிலம்தான் பஞ்சாப். இதைப் பற்றியும் அதன் இயற்கை வளம், தண்ணீர் வளம் பற்றியும் ஆர்வமுடன் பேசினார், கேத்தி விர்ஷாத் மிஷன் அமைப்பின் இணை இயக்குநர் குர்பிரீத் சிங்.

“பஞ்சாப் மாநிலம், அடிப்படையில் சிறுதானியங்களை முக்கிய பயிராகக் கொண்டது. கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை இங்கு அதிகளவில் பயிர் செய்யப்பட்டிருக்கிறது. 500 வருடங்களுக்கு முன்பு சீக்கிய மதத் துறவிகள் ஊர் ஊராகச் சென்று பிச்சையெடுத்து சாப்பிட்டு, மக்களுக்கு உபதேசம் செய்து வருவார்கள். அப்போது, சிறுதானியங்களை மக்கள் பிச்சையாக இட்டுள்ளனர். இது சமய நூல்களிலும், மக்கள் வாய்மொழி வரலாற்றுகளிலும் சொல்லப்படுவதுண்டு. சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட 49 வகையான பயிர்கள், பயிரிடப்பட்ட ஒரு மிகப்பெரிய பயோ-டைவர்சிட்டி (பல்லுயிரினப் பெருக்கம்) பூமியாக இருந்தது பஞ்சாப். பசுமைப் புரட்சிக்கு பிறகு, கோதுமை, நெல் மட்டுமே முதன்மைப் பயிராக மாறியது. தென்னிந்தியாவில் நெல் எப்படி முக்கியத்துவம் பெற்றதோ, அதுபோன்றுதான் இதுவும்’’ என்றவர், பஞ்சாபின் நில அமைப்பு பற்றி பேசினார்.

வற்றாத நீர்வளம்!

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!“பஞ்சாப் (பாஞ்ச்+ஆப்) என்றால் ஐந்து ஆறுகளைக் கொண்ட பகுதி என்று பொருள். பியாஸ், செனப், ஜீலம், ரவி, சட்லஜ் ஆகிய ஐந்து ஆறுகள்தான் அவை. தண்ணீர் வளம் மிகுந்த மாநிலம். தற்போது சட்லஜ், பியாஸ், ரவி ஆகிய ஆறுகள் தண்ணீர் வழங்குவதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. கூடவே கக்கர் எனும் நதியும் தண்ணீரை வழங்கி வருகிறது. இமயமலை அடிவாரப் பகுதிகளில் பெய்யும் மழை, ஆறுகளாக உருவெடுத்து பஞ்சாப்பை வளமாக்குகின்றது. இந்த ஆறுகள் மூலம் கிடைக்கும் குறைவில்லாத தண்ணீரால்தான் பஞ்சாபின் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இந்த ஆறுகளின் தண்ணீர், ஒவ்வொரு பகுதிக்கும் கால்வாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பாசனம் செய்யப்படுகிறது. பஞ்சாபின் நாடி நரம்புகளாக 14,500 கி.மீ. நீளம் செல்கின்ற, இந்தக் கால்வாய்கள்தான் பஞ்சாப் விவசாயத்தின் பலம். இந்தக் கால்வாய்கள் பல பகுதிகளுக்குச் செல்வதால், நிலத்தடி நீர்மட்டம் காக்கப்படுகிறது. இதனால், ஆழ்துளைக் கிணறுகளின் வழியாகவும் தண்ணீர்ப் பாசனம் நடைபெற்று வருகிறது.

அன்று வளமான மண்...

இன்று மரணமடைந்த மண்!


பஞ்சாபின் பெரும்பான்மையான பகுதிகள் வண்டல் கலந்த மணற்பாங்கான பகுதிகள். இந்த வகையான மண் வகை மத்திய பிரதேசத்தில் தொடங்கி உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் உண்டு. இந்தியாவின் சிறிய பரப்பளவில் இருந்துகொண்டு, ஆண்டுக்கு 28.57 மில்லியன் டன் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இது, மத்திய அரசின் உணவுக் கிட்டங்கி கொள்முதல் செய்யும் விளைபொருட்களில் 50 சதவிகிதம் அளவுக்கானது. வேறு எந்த மாநிலத்திலாவது இவ்வளவு வளமான மண் இருக்கிறதா என்பது தெரியவில்லை. அந்தளவுக்குக் குறைவில்லாத விளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்த நிலம், இன்று மண்ணின் ஸ்திரத்தன்மை கெட்டு மலடாகிக் கிடக்கின்றது’’ என்று சொன்ன குர்பிரீத் சிங்கின் கண்களில் ஆயிரமாயிரம் கேள்விகள்!

-பயணம் தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு