Published:Updated:

மோசடிக் கும்பல் + கூலிப்படை = டிராக்டர் கடன் நிறுவனங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோசடிக் கும்பல் + கூலிப்படை = டிராக்டர் கடன் நிறுவனங்கள்!
மோசடிக் கும்பல் + கூலிப்படை = டிராக்டர் கடன் நிறுவனங்கள்!

பலியாகும் விவசாயிகள்...கு.ராமகிருஷ்ணன், எம்.திலீபன், படங்கள்: கே.குணசீலன், ம.அரவிந்த்

பிரீமியம் ஸ்டோரி

*விவசாயிகளைத் தேடிவந்து கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள்.

*12 சதவிகிதத்துல தொடங்கி, வட்டிக்கு வட்டி, அபாரத வட்டினு 36 சதவிகிதம் வரைக்கும் வட்டியை ஏத்திக்கிட்டே போறாங்க.

*4 லட்சம் ரூபாய்க்கு வாங்கின கடன், அடுத்த சில ஆண்டுகள்லயே 10 லட்சம் ரூபாயைத் தொடுகிறது.

*தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் டிராக்டர்கள் விவசாயிகளிடமிருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளன.

‘பிடிச்ச மருமக உடைச்சா, பொன்பானையும் மண்பானை... ஆகாத மருமக உடைச்சா... மண்பானையும், பொன்பானை’ எனச் சொல்வார்களே, அந்த சொலவடை யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... விவசாயிகளுக்கு பத்துப் பொருத்தமும் பொருந்துவது போல் பக்காவாகப் பொருந்தும்.

பல்வேறு வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, உல்லாசமாக செலவு செய்து, தவணையைக்கூட செலுத்தாத மல்லையாக்களை மாலை மரியாதையோடு, வெளிநாட்டுக்கு விமானம் ஏற்றிவிடும், அதிகார வர்க்கம்... ஒரு லட்ச ரூபாய் தவணை நிலுவைக்காக, டிராக்டரை ஜப்தி செய்து விவசாயியை அடித்து அவமானப்படுத்தியுள்ளது. கோடிக்கணக்காக கடன் வாங்கும் பல்வேறு பெரும் நிறுவனங்கள், வியாபாரத்தில் நஷ்டம். அதனால் கடனைக் கட்ட கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டால் மறுப்பே சொல்லாமல், பயத்தில் உள்ள நாய், காலுக்கு இடையில் வாலை சுருட்டி வைத்துக் கொள்வதைப் போல் வைத்துக் கொள்ளும் வங்கி அதிகாரிகளும், நிதி நிறுவனங்களும், அப்பாவி விவசாயிகள் கால அவகாசம் கேட்டால் மட்டும் அடித்து அவமானப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

மோசடிக் கும்பல் + கூலிப்படை = டிராக்டர் கடன் நிறுவனங்கள்!

‘கடன் வாங்கினால் கட்டித்தானே ஆகவேண்டும். தவணை நிலுவையில் இருந்தால், கடனில் வாங்கிய பொருளை பறிமுதல் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?’ எனக் கேட்கும் சில ஒயிட் காலர்களுக்கு ஒரு கேள்வி. நிலுவையில் உள்ள வாராக் கடன் தொகை மட்டும் எத்தனை ஆயிரம் கோடி எனத் தெரியுமா உங்களுக்கு? அந்த கடன் வாங்கியவர்களின் பொருட்கள் ஏன் பறிமுதல் செய்யப்படுவதில்லை. யோசியுங்கள்... உண்மை விளங்கும்.

பணவெறி நிறுவனங்கள்!

மோசடிக் கும்பல் + கூலிப்படை = டிராக்டர் கடன் நிறுவனங்கள்!‘‘டிராக்டர் கடன் நிறுவனங்களின் உண்மை முகம், மிகவும் கோரமானது. சட்டத்தைக் குறுக்கு வழியில் பயன்படுத்தும் சமூக விரோதிகளுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சாதுர்யமாக கொள்ளையடிக்கும் நவநாகரிக கோடீஸ்வர மோசடிக் கும்பல்கள். கூலிப்படையினருக்கும் இவர்களுக்குமான உறவு வெளிப்படையானது. இவர்களின் பணவெறிக்கு இரையாகும் விவசாயிகளின் எண்ணிக்கை ஏராளம். இவர்களின் சூழ்ச்சிக்கு பலியான விவசாயிகளில் ஒரு சிலரின் அவலங்கள் மட்டுமே தற்போது வெளிச்சத்துக்்கு வந்துள்ளன’’ என்று வெடிக்கிறார்கள் விவசாய ஆர்வலர்களும், விவசாயிகளின் பிரதிநிதிகளும்!  

தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன், மகேந்திரா கோடக் நிறுவனத்தில் கடனில் டிராக்டர் வாங்கியுள்ளார். இதற்கான பெரும்பகுதி தொகையை வட்டியுடன் செலுத்தியுள்ளார். நிலுவைத் தொகையைச் செலுத்தவில்லை என்பதற்காக, கடன் நிறுவன ஊழியர், கூலிப்படை, காவல்துறையினர் சேர்ந்து விவசாயி பாலனை அடித்து உதைத்து, டிராக்டரைப் பறிமுதல் செய்த சம்பவம் விவசாயிகளைக் கொதிப்படையச் செய்துள்ளது. இது வீடியோவாக உலகம் முழுக்கப் பரவி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

உடம்பு முழுக்க உள்காயம்!

மோசடிக் கும்பல் + கூலிப்படை = டிராக்டர் கடன் நிறுவனங்கள்!

‘‘இனி எந்த ஒரு விவசாயிக்கும் இந்த நிலை வரக்கூடாது. எனக்கு நேர்ந்த அவமானம், இனி யாருக்கும் ஏற்படக்கூடாது. நிதி நிறுவன (மகேந்திரா கோடக்) ஊழியர்களும், காவல்துறையினரும் ரவுடிகள் மாதிரி ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாங்க. என்னோட கைகளைக் கட்டி, கடுமையா தாக்கினாங்க. பாப்பாநாடு போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சும் கடுமையா தாக்கினாங்க. உடம்பு முழுக்க உள்காயம். கொலைக் குற்றவாளி போல ஜட்டியோட உட்கார வெச்சு அடிச்சாங்க. இன்ஸ்பெக்டர் குமாரவேலும், ஏட்டு ராஜாவும் ரொம்ப கொடூரமா நடந்துக்கிட்டாங்க.

நான் வாங்கின டிராக்டருக்கான கடன் தொகை 3,80,434 ரூபாய். இதுவரைக்கும் வட்டியோடு சேர்த்து 4,11,108 ரூபாய் செலுத்தியிருக்கேன். இன்னும் 1,35,740 ரூபாய்தான் பாக்கி இருக்கு. கடந்த குறுவையில தண்ணீர் இல்லாததால நெல் சாகுபடி செய்ய முடியலை. அதனால கடந்த ஆறு மாதமா தவணை கட்ட முடியலை. இந்த சம்பா சாகுபடியில நெல் அறுவடையை முடிச்சி, பணத்தைக் கொடுத்துடுறேனு கம்பெனிக்காரங்கக்கிட்ட சொல்லியிருந்தேன். ஆனாலும், அத்துமீறி நடந்துக்கிட்டாங்க. என்னோட வயல்ல நெல் அறுவடை செஞ்சிக்கிட்டு இருந்தப்பதான், இந்தத் தாக்குதல் நடந்துச்சு. என்னோட வயலுக்கு வந்து தரக்குறைவா பேசி, டிராக்டரை எடுத்தாங்க. இது என் டிராக்டர். 4 லட்சம் ரூபாய்க்கு மேல பணம் கொடுத்திருக்கேன். மீதி தொகையையும் சீக்கிரத்துல கொடுத்துடுறேன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனாலும் அவங்க கேட்கலை. எனக்கு நேர்ந்த அவமானத்துக்கு நியாயம் கேட்டு, நீதிமன்றத்துல மானநஷ்ட வழக்கு தொடரப்போறேன்’’ என்றார் பாலன்.

உயிரை மாய்த்துக் கொண்ட அழகர்!

இச்சவம்பத்தினால் ஏற்பட்ட கொந்தளிப்பு அடங்குவதற்குள்ளாகவே அரியலூரில் ஓர் அவலம். இங்குள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகர், சோழ மண்டலம் பைனான்ஸ் மூலமாக கடனில் டிராக்டர் வாங்கியுள்ளார். வட்டியுடன் சேர்த்து மொத்தக் கடன் தொகை 7 லட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாய். இதில் 5 லட்சத்து 15 ஆயிரம் செலுத்தியுள்ளார். வறட்சியின் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் சரிவர நடைபெறாததால், டிராக்டர் மூலம் வருமானம் ஈட்ட முடியாமல் மிகவும் இக்கட்டான சூழலில் இருந்திருக்கிறார் அழகர். இதனால் கடந்த 3 மாதங்களாக தவணை செலுத்த முடியாமல் இருந்திருக்கிறார். மொத்த தவணை காலம் வரும் ஜூலை மாதம்தான் முடிவடைகிறது. ஆனாலும் கூட, மூன்று மாதம் தவணை தாமதம் என்பதால் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் அழகரை அவமானப்படுத்தி டிராக்டரை ஜப்தி செய்திருக்கிறார்கள். மனமுடைந்த அழகர் மார்ச் 11-ம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

மோசடிக் கும்பல் + கூலிப்படை = டிராக்டர் கடன் நிறுவனங்கள்!

நம்மிடம் பேசிய அழகரின் சகோதரர் சிலம்பரசன், ‘‘எங்க குடும்பத்துக்கு சொந்தமான ரெண்டு ஏக்கர் நிலத்தை நம்பித்தான் ஜீவனம் நடத்திக்கிட்டு இருந்தோம். இதுல வரக்கூடிய வருமானம் மட்டும் எப்படி உங்களுக்குப் போதுமானதா இருக்கும்னு சொல்லி, சோழ மண்டலம் பைனான்ஸ்காரங்க தானா தேடி வந்துதான் லோன்ல டிராக்டர் கொடுத்தாங்க. அதுல பெரும்பகுதியைக் கட்டிட்டோம். ஆனாலும், தவணை தாமதம்னு சொல்லி கடந்த மார்ச் 10-ம் தேதி டிராக்டரை ஜப்தி செய்ய வந்தாங்க. கடைத்தெருவுல ஊர் மக்கள் முன்னாடி எங்க அண்ணன் அழகரை அசிங்கமா பேசி அவமானப்படுத்தினாங்க. பைனான்ஸ்காரங்களோடு சேர்ந்து நாலஞ்சு ரவுடிகளும் அதுல இருந்தாங்க. அவமானம் தாங்க முடியாம மனஉளைச்சலோடு அண்ணன் புலம்பிக்கிட்டேதான் இருந்தார். மறுநாள் விஷத்தைக் குடிச்சி உயிரை மாய்ச்சிக்கிட்டார்’’ என கண்ணீர்விட்டு கதறினார்.

பொங்கிய விவசாயிகள்!

விவசாயி பாலன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் சாமி. நடராஜன் தலைமையில், பாப்பாநாடு காவல்நிலையம் அருகிலும், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சாவூரிலும், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் தலைவர் கோயம்புத்தூர் தெய்வசிகாமணி தலைமையில் ஒரத்தநாட்டிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

மோசடிக் கும்பல் + கூலிப்படை = டிராக்டர் கடன் நிறுவனங்கள்!

போராட்டங்கள் வெடிக்கவே... விவசாயி பாலனிடமிருந்து ஜப்தி செய்த டிராக்டர் மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. குண்டர்கள் போல செயல்பட்ட காக்கிகள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விவசாயி அழகரின் தற்கொலைக்குக் காரணமான கடன் நிறுவன ஊழியர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அரியலூரில் விவசாய சங்கங்கள் போராட்டங்கள் நடத்தின. கொலை முயற்சி, தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட இன்னும் பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது.

சோழ மண்டலம் பைனான்ஸ் மற்றும் மகேந்திரா கோடக் உள்ளிட்ட நிறுவனங்களின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்க பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனாலும், அவர்கள் நமது அழைப்பை ஏற்கவில்லை.

இந்நிலையில், விவசாயி பாலன் கடன் தவணைத் தொகையை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தி உதவியிருக்கிறார் நடிகர் கருணாகரன்.

தங்களின் போராட்டத்துக்கு உடனடி பலன் கிடைத்துவிட்டதாக விவசாயிகள் ஒரு பக்கம் சமாதானம் ஆகிவிட்டாலும், பாலன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அழகரின் தற்கொலை இரண்டும் ஒட்டுமொத்த விவசாயிகளின் மனங்களையும் ரணமாக்கியிருப்பது என்னவோ உண்மை!  

வலை விரிக்கும் நிதி நிறுவனங்கள்!

டிராக்டர் கடன் நிறுவனங்களின் சூழ்ச்சி வலை மிகவும் அபாயகரமானது. இவர்களிடம் சிக்கினால் விவசாயிகள் மீளவே முடியாது என அதிர்ச்சிகரமான தகவல்களை அடுக்குகிறார், தேசிய தென்னக நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவரும், விவசாயிகளின் டிராக்டர்கள் ஜப்தி செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி நீண்டகாலமாக போராடி வருபவருமான திருச்சி அய்யாக்கண்ணு.

மோசடிக் கும்பல் + கூலிப்படை = டிராக்டர் கடன் நிறுவனங்கள்!

‘‘டிராக்டர் கடன் நிறுவனங்களின் விற்பனைப் பிரதிநிதிகள், புரோக்கர்கள் விவசாயிகளின் வீட்டுக்கே தேடி வந்து ஆசை வார்த்தை காட்டுறாங்க. வட்டி விவரங்களைத் தெளிவா சொல்றதில்லை. 12 சதவிகிதத்துல தொடங்கி, வட்டிக்கு வட்டி, அபாரத வட்டினு 36 சதவிகிதம் வரைக்கும் வட்டியை ஏத்திக்கிட்டே போறாங்க. நாலு லட்சம் ரூபாய்க்கு வாங்கின கடன், அடுத்த சில ஆண்டுகள்லயே பத்து லட்சம் ரூபாயைத் தொடுது. டிராக்டர் கடன் கொடுக்கிறப்ப, சட்டரீதியா விவசாயிகளின் கழுத்தை இறுக்க, ஆவணங்கள்ல ஏகப்பட்ட கையெழுத்து வாங்கிடுறாங்க. ஆவணங்கள்ல உள்ள தகவல்கள் எல்லாமே ஆங்கிலத்துலதான் இருக்கும். விவசாயிகளுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இசைவுத் தீர்ப்பாய சட்ட ஒப்பந்தத்துல விவசாயிகள் கையெழுத்துப் போட்டு, வசமா சிக்கிடுவாங்க. தவணை தவறும் போது, விவசாயியை மிரட்டி டிராக்டரைப் பறிக்க, கூலிப்படைக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் பைனான்ஸ்காரர்கள். காவல்துறையினருக்கும் இதுபோல் பணம் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் டிராக்டர்கள் விவசாயிகளிடமிருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது’’ என்கிறார் அய்யாக்கண்ணு.

கொள்ளையனே வெளியேறு!

இச்சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் கக்கரை சுகுமாறன், ‘‘டிராக்டர் கடன் நிறுவனங்கள், அப்பாவி விவசாயிகளைத் தேடி வந்து கடன் கொடுத்து, வட்டிங்கற பேர்ல விவசாயிகளோட உழைப்பைக் கொள்ளையடிக்கிறாங்க. இதுமாதிரியான நிறுவனங்களை உடனடியா தமிழ்நாட்டுல இருந்து வெளியேற்றணும்’’ என்றார்.

மோசடிக் கும்பல் + கூலிப்படை = டிராக்டர் கடன் நிறுவனங்கள்!

குண்டர்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதம்!

‘‘விவசாயம் தொடர்பான பொருட்கள், நிலம், விவசாயிகளின் வீடு உள்ளிட்டவற்றை ஏலத்துக்கு உட்படுத்தக்கூடாது என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் டிராக்டர்களைப் பறிமுதல் செய்து ஏலம் விடுவது என்பது உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. 2008-ம் ஆண்டு இயற்றப்பட்ட விவசாயக் கடன் நிவாரண சட்டத்துக்கும் எதிரான செயல். நிதி நிறுவனங்கள் குண்டர்களைப் பயன்படுத்தி கடன்களை வசூலிப்பதை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. விவசாயி பாலனிடமிருந்து டிராக்டரைப் பறிமுதல் செய்ய, குண்டர்களோடு காவல்துறையினர் சென்றது சட்டவிரோதம். இது காவல்துறையினருக்கு மிகப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜீவக்குமார்.

எவ்வித அத்துமீறலும் நடக்கவில்லை!

பாலன் தாக்கப்பட்ட சம்பவம் வீடியோவாக உலகம் முழுக்க வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், சம்பவம் நடந்த தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் கவனத்துக்கு மட்டும் அந்த வீடியோ போய் சேரவில்லை. பாவம், அந்த அளவுக்கு காவல்துறைப் பணியைக் கண்ணும் கருத்துமாகச் செய்து கொண்டிருக்கிறார்.

‘‘உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் இந்தப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காவல்துறையினர் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் சொன்னதால்தான் காவல்துறையினர் இதில் ஈடுபட்டார்கள். இதில் எந்தவித அத்துமீறல்களும் நடைபெறவில்லை’’ என்று கொஞ்சம்கூட கூசாமல் சொல்கிறார் மயில்வாகனன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு