Published:Updated:

நிச்சய லாபம் கொடுக்கும் நிலக்கடலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிச்சய லாபம் கொடுக்கும் நிலக்கடலை!
நிச்சய லாபம் கொடுக்கும் நிலக்கடலை!

ரகங்கள் தேர்வில் இருக்கிற... விளைச்சல் ரகசியம்!சந்தை சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!துரை.நாகராஜன், படங்கள்: தே.சிலம்பரசன்

பிரீமியம் ஸ்டோரி

*வயது 90 நாட்கள்

*ஆடி, தைப் பட்டங்களில் சாகுபடி செய்யலாம்.

*தைப்பட்டத்தில் விளையும் நிலக்கடலைக்கு அதிக விலை கிடைக்கும்.

யல் விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும்... சந்தையில் விலைகிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன? என்பது போன்ற அடிப்படைத் தகவல்களைக் தெரிந்துக்கொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது, இத்தொடர். இந்த இதழில் நிலக்கடலைக்கான சந்தை வாய்ப்புகள் இடம் பிடிக்கின்றன.

நிச்சய லாபம் கொடுக்கும் நிலக்கடலை!

நிலக்கடலை அல்லது வேர்க்கடலை என்பது மக்கள் விரும்பி உண்ணக்கூடிய உணவுப்பொருளாக உள்ளது. இதன் பூர்விகம் தென்அமெரிக்கா. சீனா, இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகள் நிலக்கடலையை அதிகம் உற்பத்தி செய்கின்றன. தமிழ்நாட்டில் வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நிலக்கடலையைப் பெரும்பாலும் அவித்தோ அல்லது வறுத்தோ பயன்படுத்துவதுடன், பொடித்து இனிப்பு உருண்டைகளாகவும், வெல்லப்பாகு கலந்து கடலை மிட்டாய் தயாரித்தும் உண்கிறார்கள்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு மையம் நமக்கு அளித்த தகவலின்படி, நிலக்கடலைக்கு கிடைக்கும் விலை மற்றும் விற்பனை அளவு ஆகியவற்றின் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, தமிழ்நாட்டில் உள்ள சந்தைகளில் திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முக்கியமானதாக விளங்குகிறது.

உலகளவில் நிலக்கடலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில், ‘போல்டு’ அல்லது ‘ரன்னர்’, ‘ஜாவா’ அல்லது ‘ஸ்பானிஷ்’ மற்றும் ‘ரெட் நட்டால்’ போன்ற பல ரகங்கள் பயிரிடப்படுகின்றன. நிலக்கடலை 2014- 15 ம் ஆண்டில், 45.68 லட்சம் ஹெக்டேரில் 48.45 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. குஜராத், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

நிச்சய லாபம் கொடுக்கும் நிலக்கடலை!

ஆடி மற்றும் தைப் பட்டம்!

தமிழ்நாட்டில் நிலக்கடலை 2.89 லட்சம் ஹெக்டேரில் 9.31 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. டி.எம்.வி 10 (பட்டாணி) ரக நிலக்கடலை எண்ணெய் தேவைக்காகவும், டி.எம்.வி-7, டி.எம்.வி-2, வி.ஆர்.ஐ-2, ஜே.எல்-24 ஆகிய நிலக்கடலை ரகங்கள் மிட்டாய் போன்ற இனிப்பு தயாரிக்கவும் அதிக அளவில் பயன்படுகிறது. திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நிலக்கடலை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் நிலக்கடலை பயிரிடும் முக்கிய பருவங்கள், ஆடிப் பட்டம் (ஜூலை-ஆகஸ்ட்) மற்றும் தைப் பட்டம் (ஜனவரி-பிப்ரவரி) ஆகும்.

விலையைத் தீர்மானிக்கும் திண்டிவனம்!

விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் விளையும் நிலக்கடலை

நிச்சய லாபம் கொடுக்கும் நிலக்கடலை!

திண்டிவனம் ஒழுங்குமுறைச் சந்தைக்கு வரும். மார்ச் முதல் ஜூன் வரை வரத்து அதிகமாக இருக்கும். டிசம்பர்-ஜனவரி மாதங்களில் வரத்து குறைவாக இருக்கும். அறுவடை மாதங்களில் வரத்தைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. மானாவாரியாக சாகுபடி செய்யப்படும் ஆடிப் பட்ட அறுவடை நிலக்கடலையைவிட, தைப் பட்டத்தில் நீர்ப் பாசனமுறையில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்படும் நிலக்கடலைக்கு நல்ல விலை கிடைக்கும். ஏனெனில், தைப் பட்டத்தில் விளையும் நிலக்கடலை திரட்சியாகவும், தெளிவாகவும் இருக்கும். திரட்சியாக உள்ள நிலக்கடலை முதல் தரமாக கருதப்பட்டு ஏற்றுமதிக்காக அனுப்பப்படுகிறது. இப்பகுதியில் விளையும் நிலக்கடலை நம் மாநிலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இருக்கிறது.

சிவப்பு ரகக்கடலை அதிக அளவில் எண்ணெய் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சிறிய மற்றும் உடைந்த விதைகளும் எண்ணெய் உற்பத்திக்குப் பயன்படுகிறது. பெரிய விதை நிலக்கடலை, மிட்டாய் போன்ற இனிப்புப் பண்டங்கள் செய்ய பயன்படுகின்றன. திரட்சியாக, குறைந்த ஈரப்பதம் மற்றும் எண்ணெய் சதவிகிதம் அதிகம் உள்ள நிலக்கடலை நல்ல தரமானதாக நுகர்வோர்களால் விரும்பப்படுகிறது.

திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் சரவணன் நிலக்கடலை குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். “மரக்காணம், செங்கல்பட்டுப் பகுதிகளில் மணல் கலந்த செம்மண் நிலங்கள் இருப்பதால், மணிலா (நிலக்கடலை) அதிகமாக மானாவாரியிலும் விளைகிறது. இங்கிருந்து அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. ஏற்றுமதித் தரத்துக்குத் தேவையான திரட்சி இப்பகுதியில் விளையும் மணிலாவில் இருக்கிறது. மணிலாவைப் பொறுத்தவரை முதல் தரம் ஏற்றுமதிக்காகவும், இரண்டாம் தரம் விதை மற்றும் கடலை மிட்டாய் பயன்பாட்டுக்கும், மூன்றாம் தரம் எண்ணெய்க்காகவும் பயன்படுகிறது. விற்பனையான அன்றே விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும். விவசாயிகள் 15 நாட்கள் வரை விற்பனைக்கூடத்தில் இலவசமாக வைத்து பிறகு விற்பனை செய்துகொள்ளலாம். மூன்று வாரம் வரை வைத்திருந்தால், அவர்களுக்கு பொருளீட்டுக்கடன் கொடுக்கிறோம். அவருடைய பொருட்களை அடமானமாக எடுத்துக்கொண்டு மொத்த மதிப்பில் 75 சதவிகிதத் தொகையை, 5 சதவிகித வட்டியில் விவசாயிகள் கடனாக பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.

நிச்சய லாபம் கொடுக்கும் நிலக்கடலை!

நிலக்கடலை விற்பனை பற்றிப் பேசிய விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி குமார், “நான் 15 வருஷமா மணிலா வியாபாரம் செய்துகிட்டு வர்றேன். பொதுவா பயிர் தரம் பார்த்துத்தான் வாங்குவோம். மணிலா திரட்சியாவும் சுத்தமாவும் இருந்தால், ஏற்றுமதியாளர்கள்கிட்ட விற்பனை செய்ய வசதியா இருக்கும். நாங்க ஏற்றுமதிக்குக் கொடுத்தா, அவங்களும் தரம் பார்த்துத்தான் வாங்குவாங்க. தரம் சரியா இல்லைனா, பொருளுக்கான விலையைக் குறைச்சிடுவாங்க. சில சமயங்கள்ல பொருட்களையும் திருப்பி அனுப்பிடுவாங்க. மானாவாரியோ, தைப்பட்டமோ பொதுவா கிலோ சராசரியா 75 ரூபாய்னு வாங்குவோம். விலை சீசனுக்கு ஏத்த மாதிரி மாறும். இந்த தடவை அதிகமான மழையால மணிலாவோட உற்பத்தி குறைஞ்சிருக்கு” என்றார்.

-லாபம் பெருகும்

டி.எம்.வி-7 ரகம் எல்லா பருவத்துக்கும் ஏற்றது!

நிலக்கடலை சாகுபடி பற்றி கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூரைச் சேர்ந்த எண்ணெய்வித்து விவசாயி

நிச்சய லாபம் கொடுக்கும் நிலக்கடலை!

சுப்பிரமணியத்திடம் பேசினோம்.

‘‘நிலக்கடலை, செம்மண் பாங்கான நிலத்துல நல்லா வளரும். களிமண் பகுதிகள்ல சாகுபடி செய்றது ரொம்ப கஷ்டம். மானாவாரியில் சாகுபடி செய்தால் டி.எம்.வி-7, டி.எம்.வி-13, வி.ஆர்.ஐ-2, வி.ஆர்.ஐ-3 ஆகிய ரகங்களை தேர்வு செய்றது நல்லது. இந்த ரகங்கள் மொத்தம் 100 முதல் 110 நாட்களிலேயே அறுவடை செய்கிற மாதிரி இருக்கும். இறவையில பயிரிட்டா 100 நாளுக்கு மேல பதம் பார்த்து அறுவடை செய்யலாம்.

மானாவாரியில ஏக்கருக்கு 1,500 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நிலக்கடலைப் பருப்பை காயவைச்சு, பதர் நீக்கி எடுத்தா 1,000 கிலோ கிடைக்கும். மொத்தமா இப்போ சந்தையில் கிலோ 55 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை கிடைக்குது. குவிண்டால் 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விலை போகுது. மொத்தமா 10 குவிண்டாலுக்கு 55 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். எப்படியும் 4 மாசத்துல 30 ஆயிரம் ரூபாய் லாபம் நிச்சயமா எடுக்கலாம். இறவையில ஹெக்டேருக்கு சுமார் 3 ஆயிரம் கிலோ முதல் 3 ஆயிரத்து 500 கிலோ வரை மகசூல் கிடைக்கும், அப்போ லாபம் இன்னும் அதிகமாகும்.

நிலக்கடலையில டி.எம்.வி-7 ரகம் எல்லா பருவத்துக்கும் ஏற்றது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிர் என்பதால், விவசாயிகள் மத்தியில பிரபலமா இருக்கு’’ என்றார்.

பருவத்துக்கேற்ற ரகங்கள்!

திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர்,

நிச்சய லாபம் கொடுக்கும் நிலக்கடலை!

வைத்தியநாதனிடம் பேசினோம்.

‘‘நிலக்கடலையை 90 நாட்களுக்கு மேல் வளர்ச்சியைப் பொறுத்து அறுவடை செய்யலாம். நல்ல விளைச்சல் எடுக்க வேண்டுமானால் அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற ரகங்களைத்தான் தேர்வு செய்து விதைக்க வேண்டும். கோ-7, திண்டிவனம்-7, திண்டிவனம்-13, விருத்தாசலம்-2, விருத்தாசலம்-8 ஆகிய ரகங்கள் மானாவாரிக்கு ஏற்றவை. திண்டிவனம்-7, திண்டிவனம்-13, வி.ஆர்.ஐ-2, வி.ஆர்.ஐ-6, கோ-6 ஆகிய ரகங்கள் இறவைக்கு ஏற்றவை. மழைப்பொழிவு அதிகமான இடங்களில் வி.ஆர்.ஐ-2, கோ-6, வி.ஆர்.ஐ-8 ஆகிய ரகங்களைத் தேர்வு செய்வது சிறந்தது. திண்டிவனம்-13, திண்டிவனம்-7, விருதாச்சலம்-8 ஆகிய ரகங்கள் அனைத்து பருவத்துக்கும் ஏற்றவை. விருதாச்சலம்-2 ஏற்றுமதிக்கு ஏற்ற ரகம், பருப்பு திரட்சியாக இருக்கும். திண்டிவனம்-13 ரகத்தில் சிவப்பு வண்ணப் பருப்பு இருக்கும். இது அதிக எண்ணெய்ச் சத்து கொண்டது. ஏற்றுமதிக்கு தரம் மிகவும் அவசியம். உடைப்புத் திறன் 80% இருக்க வேண்டும், உடைப்புத் திறனை வைத்தே தரம் பிரிக்கப்படுகிறது. அதிக இனிப்புச் சுவையும், குறைவான காரல் தன்மையும் இருக்க வேண்டும். முக்கியமாக ஈரப்பதம் 8% இருப்பது மிகவும் அவசியம். மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்புக்கு நிலக்கடலை அதிகமாக விற்பனையாகிறது.

சந்தை வாய்ப்பு!

நிலக்கடலை அதிகபட்சமாக சந்தையில் ஒரு கிலோ விதை (பருப்பு) 120 ரூபாய்க்கு விற்பனையாகும். பறித்தவுடன் மேல் தோலோடு விற்றால் கிலோ குறைந்தபட்சமாக 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. விதை, குறைந்தபட்சமாக 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. சந்தை வாய்ப்புகள் இன்னும் குறையாமல் இருக்கிறது. இந்த ஆண்டு உற்பத்தி குறைவு, அதனால் தேவையும் அதிகமாக இருக்கும். நிலக்கடலை சாகுபடி தொடர்பான சந்தேகங்களுக்கு எங்கள் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்’’ என்றார் வைத்தியநாதன்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04147-250293.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு