Published:Updated:

விலை வீழ்ச்சியில் உருண்டை வெல்லம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விலை வீழ்ச்சியில் உருண்டை வெல்லம்...
விலை வீழ்ச்சியில் உருண்டை வெல்லம்...

வேதனையில் விவசாயிகள்..!கே.பாலசுப்பிரமணி, படங்கள்: வீ.சக்தி அருணகிரி

பிரீமியம் ஸ்டோரி

*ஒரு டன் கரும்புக்கு 110 கிலோ உருண்டை வெல்லம் கிடைக்கும்.

*42 கிலோ உருண்டை வெல்லம் கொண்ட சிப்பம் 1,100 ரூபாய்

*வெல்லத்தில் செய்த பலகாரங்களை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

*ஆலைகளின் ஆதிக்கத்தைத் தடுக்க வெல்லப் பயன்பாடு அதிகரிக்க வேண்டும்!

ரும்பில் இருந்து தயாரிக்கப்படும் உருண்டை வெல்லம் அல்லது மண்டை வெல்லத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துகொண்டே இருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு உருண்டை வெல்லம் என்ன விலை விற்றதோ அந்த விலைதான் இப்போதும் இருக்கிறது. உருண்டை வெல்லத்துக்கான தயாரிப்புச் செலவுகள் அதிகரித்திருக்கும் நிலையில் அதன் விலை வீழ்ச்சி விவசாயிகளைக் கவலை அடைய வைத்துள்ளது.

தேனி மாவட்டம் லட்சுமிபுரம்தான் உருண்டை வெல்லத்தை சந்தைப்படுத்துவதில் முக்கிய இடமாக இருக்கிறது. எனவே, தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் கரும்பு விவசாயிகள், கரும்பை அறுவடை செய்து அதில் இருந்து உருண்டை வெல்லம் தயாரிக்கிறார்கள்.

விலை வீழ்ச்சியில் உருண்டை வெல்லம்...

ஆலைக்கு வழியில்லை..வெல்லத்துக்கு விலையில்லை!

லட்சுமிபுரம் கரும்பு விவசாயி பரசுராமனிடம் பேசினோம். “நான் பல வருஷமா கரும்பு சாகுபடி செய்றேன். இந்த தடவை பதினாலு ஏக்கர் நிலத்துல கரும்பு போட்டிருக்கேன். என்னோட தோட்டத்துக்கு சரியான பாதை இல்லை. சர்க்கரை ஆலைக்கு கரும்ப அனுப்பனும்னா, டிராக்டர்ல ஏத்தித்தான் அனுப்பணும். பாதை இல்லாததால, வண்டிவாசி வரத் தோதுப்படாது.  என்னைய மாதிரி, பாதை வசதி இல்லாத சம்சாரிக, ஆலைக்கு அனுப்பாம, வெல்லம் உருட்டிடுவோம். நான் பல வருஷசமா வெல்லம் தயாரிச்சுக்கிட்டு இருக்கேன். ஒரு டன் கரும்புக்கு 110 கிலோ உருண்டை வெல்லம் கிடைக்கும்.

42 கிலோ உருண்டை வெல்லம் கொண்ட சிப்பம் ஆயிரத்து 100 ரூபாய்க்குத்தான் கொடுக்கிறோம். போன

விலை வீழ்ச்சியில் உருண்டை வெல்லம்...

வருஷம் நவம்பர் மாசம், சிப்பம் ஆயிரத்து 800 ரூபாய்க்கு விலை போச்சு. இந்த நாலு மாசத்துல, படிப்படியாக குறைஞ்சு, இந்த விலைக்கு வந்திருக்கு. பொங்கல் பண்டிகைக்குக்கு கூட விலையேறலை. ஒரு கிலோ உருண்டை வெல்லம் உற்பத்தி செய்ய பத்து ரூபாய் வரை செலவாகுது. ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் கூட வருமானம் கிடைக்கிறதே உம்பாடு, எம்பாடுனு இருக்கு. அதிலும் எங்க வீட்டு ஆளுகளே வேலைகளைச் செய்றதால தான் இந்த வருமானம் கிடைக்குது. இந்தப் பகுதியில் இருக்கிற பெரும்பாலான விவசாயிகளோட நிலையும் இதுதான். முன்னயெல்லாம் லட்சுமிபுரத்தில் இருந்துதான் கேரளவுக்கு உருண்டை வெல்லம் போகும். ஆனால், இப்ப, அவங்க இங்க கொள்முதல் செய்றதில்லை. நம்ம ஊரு மாதிரியே கேரளாவிலும் ஜீனியை அதிகமா பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க.

எனவே, உருண்டை வெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வழி செய்யணும், சத்துணவு, அம்மா உணவகம், கோயில் பிரசாதம் ஆகியவற்றுக்கு உருண்டை வெல்லம் பயன்படுத்தணும். இதற்காக விவசாயிகளிடம் இருந்து உருண்டை வெல்லத்தை நேரடியாகக் கொள்முதல் செய்யணும். அரசு பள்ளிகளில், பண்டிகைகளின் போது சத்துணவு மையங்கன் மூலம் உருண்டை வெல்லம் பயன்படுத்தி பொங்கல் தயாரித்து வழங்குவதற்கு அரசு உத்தரவிடணும். சத்துணவில் வாரம் ஒரு முறை மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்கணும் ரேஷனில் வெள்ளைச் சர்க்கரைக்குப்பதில் உருண்டை வெல்லம் கொடுக்கணும்னு கோரிக்கை மனுவை அமைச்சர் ஓ.பன்னீர்செலவம்கிட்ட கொடுத்திருக்கோம். இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை’’ சோகம் பொங்க சொல்லி முடித்தார்.

விலை வீழ்ச்சியில் உருண்டை வெல்லம்...

வெள்ளைச் சர்க்கரை எனும் கெடுதியைத் தடுக்கும் ஆயுதம்!

“வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக உருண்டை வெல்லத்தைப் பயன்படுத்தலாமா?’’ என்ற கேள்வியை சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் கேட்டோம். “கரும்பில் இருந்து பாரம்பர்ய முறைப்படி கரும்புச்சாறு காய்ச்சி எடுத்து, அதில் இருந்து வெல்லம் தயாரிக்கும்போது, அது உதிரியாக இருந்தால் நாட்டுச் சர்க்கரை என்று அழைக்கப்படுகிறது. அதில் சுண்ணாம்பு சேர்த்து உருண்டையாகப் பிடித்தால் அதுதான் உருண்டை வெல்லம் எனப்படுகிறது. கரும்புச்சாற்றில் இயற்கையாகவே குளுக்கோஸ் இருக்கிறது. இது நாட்டுச்சர்க்கரை, உருண்டை வெல்லத்திலும் இருக்கிறது. இந்த இரண்டுமே காமாலையைக் குணப்படுத்தும், கல்லீரலைப் பலப்படுத்தும். செரிமான சக்தி நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட

விலை வீழ்ச்சியில் உருண்டை வெல்லம்...

உருண்டை வெல்லத்தில் செய்த இனிப்பு வகைகளைச் சாப்பிடலாம். உருண்டை வெல்லத்தில் தாது உப்புகள் நிறைய இருக்கின்றன. எனவே சர்க்கரை நோயாளிகள் பயப்பட வேண்டியதில்லை. அந்த காலத்தில் உணவுக்குப் பின்னர், ஒரு சிறு கட்டி வெல்லத்தைச் சாப்பிடும் பழக்கம் இருந்தது.

அதுதான் இப்போது மேற்கத்திய பாணியில் ஐஸ்கிரீம் சாப்பிடும் பழக்கமாக மாறியிருக்கிறது. விவசாயிகள் மற்றும், பொதுமக்களின் உடல் நலம் கருதி உருண்டை வெல்லத்தைப் பிரபலப்படுத்த வேண்டும். பாசிப்பருப்பை ஒரு காயகல்ப உணவு என்பார்கள். பாசிப்பருப்புடன் உருண்டை வெல்லம் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கப்படுகிறது. சிறுதானியங்களைப் பயன்படுத்தி இனிப்புகள் செய்வதற்கு உருண்டை வெல்லம், நாட்டுச்சர்க்கரையை அதிக அளவில் பயன்படுத்தலாம். இது இயற்கையோடு இணைந்த உணவாக இருக்கும். ஊடகங்கள், சமையல் கலைஞர்கள் எல்லோரும் நாட்டுச்சர்க்கரை, உருண்டை வெல்லத்தின் பயன்பாட்டைப் பிரபலப்படுத்த வேண்டும். வெள்ளைச் சர்க்கரை எனும் கெடுதியைத் தடுக்கும் ஆயுதமாக உருண்டை வெல்லத்தைப் பயன்படுத்தலாம்’’ என்றார்.
உருண்டை வெல்ல விஷயத்தில், இனிப்பான அறிவிப்பை அரசு அறிவிக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு