Published:Updated:

அலட்சியப்படுத்தும் அரசு... வெகுண்டெழுந்த விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அலட்சியப்படுத்தும் அரசு...  வெகுண்டெழுந்த விவசாயிகள்!
அலட்சியப்படுத்தும் அரசு... வெகுண்டெழுந்த விவசாயிகள்!

தூரன்நம்பி

பிரீமியம் ஸ்டோரி

த்தியில் பி.ஜே.பி அரசு பதவியேற்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையிலும்...  மத்திய அரசின் கவனம், விவசாயிகள் பக்கம் இன்னமும் முழுமையாகத் திரும்பவில்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையிலாவது, ‘ஒரு வழி பிறக்கும்’ என்று விவசாயிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால், எந்த வழியும் பிறக்கவில்லை.

பாதையைச் சீரமைக்க, நாட்டின் உள்கட்டமைப்பை ஒழுங்குபடுத்த என 2.21 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். ஆனால், ஆதரவின்றி தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலையில் உள்ள விவசாயிகளின் நலனுக்கு மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை. முற்றிலுமாக விவசாயிகளைப் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்தப் புறக்கணிப்பை எதிர்த்து, மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக... மார்ச் 17-ம் தேதி, டெல்லியில் ஜந்தர்மந்தர் பாதையில் நாடாளுமன்ற முற்றுகைப் போரட்டம் நடத்துவதற்காக இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுத்வீர் சிங் தலைமையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கூடினார்கள்.

அலட்சியப்படுத்தும் அரசு...  வெகுண்டெழுந்த விவசாயிகள்!

உக்கிரமான போராட்டம்.!

காலையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றிய விவாதம் நடந்தது. அந்தப் பிரச்னைகளுக்கு முடிவு தெரியும் வரை, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு, போராட்டம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. திடீரென்று, மாலை 4 மணிக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு விவசாயி என்ற முறையில் 17 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் யுத்வீர் சிங் தலைமையில் அமைச்சர் அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு இரண்டு மணி நேரம் விவசாயிகள் பிரச்னை விரிவாக விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, ‘தடையற்ற வணிக ஒப்பந்தம் தொடர்பாக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. மேற்கண்ட நாடுகளோடு ஒப்பந்தம் நிறைவேறினால், அந்த நாடுகளில் மானியத்தில் விளையும் விளைபொருட்கள், இந்திய சந்தையை ஆக்கிரமிக்கும். அதனால், இந்திய விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். இதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்தும் தடையற்ற வணிகத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடரக்கூடாது.

தடையற்ற வணிக ஒப்பந்தம் மூலமாக, இந்திய விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் நடவடிக்கையாகத்தான் விவசாயிகள் இதைப் பார்க்கிறார்கள்’ என்று வலுவாக எடுத்து வைத்தபோது, ‘உங்கள் பிரச்னையில் நியாயம் இருக்கிறது. ஆனால், இந்தப் பிரச்னையில் நான் மட்டும் தனியொருவனாக முடிவு எடுக்க முடியாது. இது குறித்து வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பேசி, ஒரு நல்ல முடிவைச் சொல்கிறேன்’ என்றார், அமைச்சர் ராதாமோகன் சிங்.

‘உலக வர்த்தக அமைப்பில், இதற்கு முன்பு விவசாயிகளுக்கு ஒரு சிறப்புப் பாதுகாப்பு இருந்தது. கடைசியாக நைரோபியில் நடைபெற்ற மாநாட்டில் அதையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு, ‘வர்த்தக எளிமைப்படுத்துதல்’ என்ற முறையில் புதிய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. அந்த ஒப்பந்தத்துக்கும் இந்தியா தலையாட்டி விட்டு வந்திருக்கிறது.

அலட்சியப்படுத்தும் அரசு...  வெகுண்டெழுந்த விவசாயிகள்!

ஒருவேளை விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தையெல்லாம் கூட ஒதுக்கி நவீன சாலைகளை அமைப்பதன் நோக்கம், அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள், இந்தியாவின் கிராமங்கள் வரை தடையின்றி சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தானோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது’ என்று நாங்கள் சொன்னபோது, ‘அப்படியெல்லாம் இல்லை... நாங்கள் விவசாயத்துக்காகத்தான் பாடுபடுகிறோம். இந்த அரசு முழுக்க முழுக்க விவசாயிகளைப் பாதுகாக்கும் அரசுதான். உங்கள் பிரச்னைகளை முழுமையாக நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். பிரச்னைகளை சரிபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என வாக்குறுதி அளித்தார், ராதாமோகன் சிங்.

கிட்டத்தட்ட வட இந்தியாவில் பெருவாரியான மாநிலங்களில் கடுமையான வறட்சி. குடிநீருக்குக் கூட மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டிய நிலை. அந்த விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காக இந்த பட்ஜெட்டில் எந்த நடவடிக்கையும் இல்லை.

‘கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 5.51 லட்சம் கோடி ரூபாய் சலுகையாக வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வருவான வரி, கலால் வரி உள்ளிட்ட சில வரிகள் மூலமாக இந்தச் சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், விவசாயிகளுக்கு எந்த சலுகையும் கிடையாது. இது போன்ற விவசாய விரோதப் போக்கை உடனடியாகக் கைவிட்டு, ஏற்கெனவே இருக்கும் கடனை தள்ளுபடி செய்துவிட்டு, புதிதாக, விவசாயிகளுக்கு 0% வட்டியில் கடன் கொடுக்க வேண்டும். மேலும், விவசாய விளைபொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிவித்தபடி, உற்பத்திச் செலவில் 50% கூட்டி விலை நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றினால் மட்டும்தான், இந்த மண்ணில் விவசாயிகள் மானத்தோடும், மரியாதையோடும் வாழ முடியும். இல்லையென்றால், இன்றைக்கு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் அவர்கள் தற்கொலையை நோக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படும். மேலும் பேரிடர் நிதி ஒன்றை உருவாக்கி இயற்கைப் பேரிடரின் போது நிவாரணம் அளிக்க வேண்டும். இந்தாண்டு கரும்பு விவசாயிகளுக்கு, ஆலைகள் பணம் பட்டுவாடா செய்யாமல் இருக்கின்றன. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு, அந்தப் பணத்தை விவசாயிகளுக்கு நேரடியாக கொடுத்து விட்டு, ஆலைகள் கொடுக்க வேண்டிய பணத்தை அவர்களிடம் இருந்து பெற்று, சுழல்நிதியில் சேர்த்துக் கொள்ளலாம்’ என்ற யோசனையும் அமைச்சர் முன் வைக்கப்பட்டது.

புதிய காப்பீட்டைத் திருத்த வேண்டும்!

மேலும், ‘புதிய காப்பீடு திட்டம் என்பது ஒரு முகப்பூச்சாகத்தான் இருக்கிறதே தவிர, முழுமையாக விவசாயிகளைப் பாதுகாப்பதாக இல்லை. ஃபிர்கா முழுக்க பாதிக்கப்பட்டால்தான் நிவாரணம் கிடைக்கும் என்ற வரையறை சரியானதல்ல. கார் முதலான ஆடம்பர பொருட்களுக்கு தனியொரு பொருளை யூனிட்டாக கணக்கெடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், தனியொரு விவசாயிக்கான பாதிப்பை யூனிட்டாக கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஒவ்வொரு விவசாயியின் பயிரையும் தனி யூனிட்டாக மாற்றி வடிவமைக்க வேண்டும்.

மரபணு மாற்றுப் பருத்தி இந்தாண்டு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் பி.டி பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. தமிழகத்தின் விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில், கெயில் குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டத்தைத் திருத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் குழாய் பதித்துக் கொண்டு செல்ல ஆவண செய்ய வேண்டும்’ போன்ற கோரிக்கைகளையும் அமைச்சரிடம் சொன்னோம்.

இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, ‘சில கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என ஒப்புதல் அளித்த அமைச்சர், ஒரு கமிட்டி அமைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார். அந்தக் கமிட்டியில் விவசாயப் பிரதிநிதிகள், மற்றும் தலைமைச் செயலக அதிகாரிகள் இடம் பெறுவார்கள். ‘கமிட்டியில், விவசாயிகளின் பிரச்னைகள் இன்னும் ஆழமாக, தெளிவாக விவாதிக்கப்பட்டு, அரசுக்கு ஒரு அறிக்கை கொடுக்கும்’ என்றும் ‘அதனடிப்படையில் விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார் அமைச்சர். அவரின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு அன்று இரவே போராட்டம் முடிவுக்கு வந்தது.

உறுதிமொழிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு