Published:Updated:

மானாவாரியில் பனிவரகு...

மானாவாரியில் பனிவரகு...

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் சிறப்பான மகசூல்!ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.சத்தியமூர்த்தி

மானாவாரியில் பனிவரகு...

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் சிறப்பான மகசூல்!ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.சத்தியமூர்த்தி

Published:Updated:
மானாவாரியில் பனிவரகு...
மானாவாரியில் பனிவரகு...

*வயது 75 நாட்கள்

*மானாவாரி நிலத்துக்கு ஏற்றது

*கோடையில் உழவு

*மார்கழியில் விதைப்பு

மானாவாரியாக விளைவிக்கப்படும் சிறுதானியங்களில் பனிவரகுக்கு முக்கிய இடமுண்டு. குளிர்காலங்களில் அதிகாலையில் பெய்யும் பனியிலேயே இது வளர்ந்து விடும். அதனால்தான், இதற்கு பனிவரகு என்று பெயர். இந்தப் பயிரை ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்திருக்கிறார், திருப்பூர் மாவட்டம், பெதப்பம்பட்டி அடுத்துள்ள கொங்கல்நகரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.சின்னச்சாமி.

தொழுவத்தில் கட்டியிருந்த நாட்டு மாட்டுக்கு தீவனம் வைத்துக்கொண்டிருந்த சின்னச்சாமியைச் சந்தித்தோம். “இந்த ஊர்தான் பூர்விகம். இங்க மொத்தம் 12 ஏக்கர் நிலம் இருக்கு. தென்னை, வாழை, மா, நெல்னு சாகுபடி பண்றேன். எல்லாமே ரசாயன விவசாயம்தான். இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னு ஆசை இருந்தாலும்... வேலைக்குப் போய்க்கிட்டே விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்ததால் அதுக்கான சூழல் அமையலை. ஆனாலும், பசுமை விகடனைத் தொடர்ந்து படிச்சு, அதுல வர்ற இயற்கை விவசாயம் குறித்த  விஷயங்களை எழுதி வெச்சுக்குவேன். இப்ப, பணி ஓய்வு கிடைச்சிட்டதால இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன்.

மொத வேலையா ஒரு  நாட்டு மாட்டை வாங்கினேன். இப்போதான் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம், அமுதக்கரைசல்னு தயார் செய்துகிட்டு இருக்கேன்” என்ற சின்னச்சாமி தொடர்ந்தார்.

மானாவாரியில் பனிவரகு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரை ஏக்கரில் ஆரம்பம்!

“சோதனை அடிப்படையில அரை ஏக்கர்ல மட்டும் முழு இயற்கை விவசாய முறையில பனிவரகு சாகுபடி செய்திருக்கேன். இது மானாவாரி நிலம். இதுவரை இந்த நிலத்துல கையளவு கூட ரசாயன உரம் போட்டதில்லை. அதனாலதான் இந்த நிலத்தைத் தேர்வு செய்தேன்.

வழக்கமா மானாவாரி வெள்ளாமைன்னா, ஆடி மாசத்துல விதைப்பாங்க. ஆவணி மாசத்துல பெய்ற தூறல்ல பயிர் முளைக்கும். புரட்டாசி மாசம் களையெடுத்தா ஐப்பசி மழையில நல்லா வளர்ந்து வரும். தை மாசம் அறுவடைக்கு வந்துடும். ஆனா, இந்தப் பகுதியில கரிசல் மண் அதிகமா இருக்குறதால அடைமழை காலத்துல விவசாயம் செய்ய முடியாது. மழை நேரத்துல மண் புதைகுழி மாதிரி ஆயிடும். அதனால, மார்கழிப் பட்டத்துல பனிக்கடலை, பனி மல்லி, பனிவரகுனு மட்டும்தான் சாகுபடி செய்ய முடியும். இந்தப் பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படாது. அதிகாலையில பெய்ற பனியிலேயே வளந்துடும். நான் சாகுபடி செய்ற பனிவரகு சிறுதானிய வகைப் பயிர். இதோட வயசு 75 நாள்தான். ஆனா, இறவையில பண்ணும்போதுதான் சரியான நாள்ல அறுவடைக்கு வரும். மானாவாரியா சாகுபடி செய்யும்போது 85 நாள் ஆயிடும். முன்னாடி இந்தப் பகுதியில அதிகமா பனிவரகு சாகுபடி நடக்கும். இப்போ அருகிப்போச்சு. நானே தேடிப்பிடிச்சுதான் விதைச்சிருக்கேன்.

மானாவாரியில் பனிவரகு...

விதை 4 கிலோ... விளைச்சல் 400 கிலோ!

ஒரு கிலோ 65 ரூபாய்னு 4 கிலோ விதை வாங்கிட்டு வந்து மார்கழி மாசம் ரெண்டாம் வாரத்துல விதைச்சேன். பொதுவா, பனிவரகு சாகுபடிக்கு கோடையில ஒரு உழவு போடணும். அடுத்து மார்கழி மாசம் தொழுவுரம் போட்டு ஒரு உழவு ஓட்டி விதைச்சு விட்டா போதும். தேவைப்பட்டா களையெடுக்கணும். அவ்வளவுதான்... தானா முளைச்சு வந்துடும்.

நான், கூடுதலா ஜீவாமிர்தம் மட்டும் கொடுத்தேன். அதனால விளைச்சல் அதிகமா கிடைச்சிருக்கு. வழக்கமா மானாவாரி சாகுபடியில் அரை ஏக்கர் நிலத்துல 250 கிலோ அளவுதான் மகசூல் கிடைக்கும். நான், 400 கிலோ அறுவடை செய்தேன். மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்திருக்கேன். இப்போதைக்கு ஒரு கிலோ 40 ரூபாய்னு விற்பனையாகுது. நான், வீட்டு உபயோகத்துக்கு 200 கிலோ வெச்சுக்கிட்டு 200 கிலோவை மட்டும் விற்பனை செய்யலாம்னு இருக்கேன்” என்ற சின்னச்சாமி நிறைவாக,

“சோதனை அடிப்படையில செய்து பார்த்ததுல நல்ல பலன் கிடைச்சிருக்கு. அடுத்து 12 ஏக்கர் நிலத்தையும் படிப்படியா ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாத்திடுவேன். அதில்லாம இந்தப் பகுதியில அழிஞ்சு போயிருக்கிற பனிவரகு சாகுபடியையும் மீட்டு எடுக்கப் போறேன். இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள குறைஞ்சது நூறு ஏக்கர்லயாவது பனிவரகு சாகுபடியைச் செழிக்க வெச்சிடுவேன்” என்றார் நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு,
எஸ்.சின்னச்சாமி,
செல்போன்: 99651-65963.

இப்படித்தான் பனிவரகு சாகுபடி!

பனி வரகு, அனைத்து மண்ணிலும் வளரும். சாகுபடி நிலத்தை, புழுதி பறக்க மூன்று முறை கோடை உழவு செய்ய வேண்டும். கார்த்திகைப் பட்டத்தில் கிடைக்கும் மழையில் மண் ஈரத்தன்மையோடு இருக்கும். தொடர்ந்து மீண்டும் ஒரு முறை உழவு செய்து மண்ணைப் புரட்டிப் போட வேண்டும். அரை ஏக்கர் நிலத்துக்கு 4 கிலோ விதையை விதைத்து உழவு செய்ய வேண்டும்.வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. தேவையைப் பொறுத்து ஒரு களை எடுக்கலாம். மார்கழிப் பனியில் நன்றாக வளர்ந்து வந்து விடும்.

பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இருக்காது. இறவையில பனி வரகு சாகுபடி செய்யும் போது, இரண்டு அல்லது மூன்று முறை பாசனம் செய்யலாம். ஒவ்வொரு பாசனத்தின் போதும், 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். கதிர் முற்றியதும் கதிரை மட்டும் அறுத்து களத்தில் கொட்டி காய வைத்து, குச்சியை வைத்து தட்டி, வரகை தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.

நெல்லுக்கு சொட்டுநீர்!

தக்காளி, கத்திரி, மிளகாய் என்று 3 ஏக்கர் அளவில் காய்கறி சாகுபடியை சொட்டுநீர்ப் பாசனத்தில் மேற்கொண்டு வருகிறார், சின்னச்சாமி. காய்கறி அறுவடை முடிந்ததும் காய்ந்த செடிகளை அப்புறப்படுத்தி விட்டு, அந்த மேட்டுப்பாத்திகளில் நெல் விதைத்து சொட்டுநீர்ப் பாசனம் மூலமே விளைச்சல் எடுத்துள்ளார்.

மானாவாரியில் பனிவரகு...

இது குறித்துப் பேசிய சின்னச்சாமி, “தாராபுரம் பக்கத்துல கோவிந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்தசாரதிங்கிறவர், தன்னோட வயல்ல சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சு நெல் விவசாயம் செஞ்சுக்கிட்டு வர்றார்னு தகவல் தெரிஞ்சுது. அவரோட வயலைப்போய் பார்த்து விவரம் தெரிஞ்சுக்கிட்டு வந்தேன். ஆறு, குளம், அணைப்பாசனம் கிடைக்கிறவங்கதான் நெல்லை விதைக்க முடியும்ங்கிறதை சொட்டுநீர்க் கருவிகள் வந்து மாத்திடுச்சு. என்னைப்போல கிணத்துப் பாசன விவசாயிங்களும் நெல் விதைக்கலாம்னு நிரூபணமாச்சு. விஞ்ஞானிகளும், முன்னோடி விவசாயிகளும், வேளாண் கல்லூரியில படிக்கிறவங்களும், டி.வி காரங்களும் வந்து பார்த்து பாராட்டிட்டுப் போறாங்க. 75 அடி நீள குழாயில் 45 சென்டி மீட்டருக்கு ஒரு துவாரம், 4 அடிக்கு 4 அடி அளவுல மேட்டுப்பாத்தி, அதுல அரை அடிக்கு ஒண்ணு வீதம் நேரடி நெல் விதைப்பு.

இந்த முறையில நெல்லுக்கு, வரப்பு, வாய்க்கால் எதுவும் தேவையில்லை. ஒரு நாளைக்கு ஒரு ஏக்கர் நெல்லுக்கு ஒரு மணிநேரம் மட்டும் பாசனம் செஞ்சா போதும். வழக்கமான நெல்லுக்கு பாயுற தண்ணியைக் கணக்குப் பண்ணினா  3 மடங்கு தண்ணீர் மிச்சமாகும். வழக்கமான முறையில ஏக்கருக்கு 30 கிலோ விதைநெல் தேவைப்படும். ஆனா, சொட்டுநீர்ப் பாசன நேரடி நெல் விதைப்புக்கு 2 கிலோ விதைநெல்லே போதுமானது.

இந்த போகம் முழுக்க முழுக்க ரசாயனத்துலதான் நெல் விவசாயம் செஞ்சிருந்தேன். கோ-51 ரகம், 110 நாள் வயசுல, ஏக்கருக்கு 3 ஆயிரத்து 180 கிலோ மகசூல் எடுத்திருக்கேன். இது மகிழ்ச்சிதான். இருந்தாலும், இயற்கை முறையில செய்யலையேனு ஒரு சிறு வருத்தம் மனசில இருக்கு. அடுத்த போக நெல் சாகுபடியை முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட்ல செய்யப்போறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism