Published:Updated:

தனியார் மயமாகிறதா நொய்யல்?

தனியார் மயமாகிறதா நொய்யல்?
பிரீமியம் ஸ்டோரி
தனியார் மயமாகிறதா நொய்யல்?

கொதித்து எழும் விவசாயிகள்!ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய், ஜி.கே.தினேஷ்

தனியார் மயமாகிறதா நொய்யல்?

கொதித்து எழும் விவசாயிகள்!ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய், ஜி.கே.தினேஷ்

Published:Updated:
தனியார் மயமாகிறதா நொய்யல்?
பிரீமியம் ஸ்டோரி
தனியார் மயமாகிறதா நொய்யல்?
தனியார் மயமாகிறதா நொய்யல்?

மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி 160 கிலோ மீட்டர் கிழக்கு நோக்கி ஓடி... கரூர் அருகில் காவிரியில் கலக்கும் நதி நொய்யல். ‘காஞ்சி மாநதி’ என்கிற பெயரும் இதற்கு உண்டு. ஆண்டு முழுவதும் ஜீவநதியாய் ஓடிக்கொண்டிருந்த நொய்யல், நகரமயம் மற்றும் தொழில்மயமாக்கலில் நாசமாகிப் போனது, ஊரறிந்த செய்தி. அதுவும் குறிப்பாக திருப்பூரில் இயங்கி வரும் பல நூறு சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நொய்யலை ரணகளப்படுத்திய வேதனை வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ‘சிறுதுளி’ என்ற அமைப்பு, பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து... நொய்யல் நதியைச் சீரமைக்கும் விதமாக ‘நொய்யலை நோக்கி’ என்கிற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதற்கான துவக்க விழா, கடந்த மார்ச் 26-ம் தேதி, கோயம்புத்தூர், ஆலாந்துறை அடுத்துள்ள நொய்யல் கூடுதுறை என்கிற இடத்தில் நடைபெற்றது. சமூக சேவகர் அண்ணா ஹஜாரே, திரைப்பட நடிகர் சூர்யா, குறும்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர். சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் வனிதா மோகன் முன்னிலை வகித்தார்.

விழாவில் பேசிய அண்ணா ஹஜாரே, “நதிகள் வாழ்ந்தால் மட்டுமே நாம் வாழ முடியும். ஜீவநதியாக ஓடிக்கொண்டிருந்த இந்த நொய்யல் நதியை இன்று குப்பைக் கூளங்கள் அடைத்துக் கொண்டிருக்கின்றன. சாக்கடைகள், சாயக்கழிவுகள் கலந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் சிதைந்து விட்டது. இந்த நதியை புனரமைப்புச் செய்யும் புனிதப் பணி தொடங்கப்படவுள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும், விவசாயம் செழிக்கும். அனைவரும் கைகோத்தால், நொய்யலில் வெள்ளம் கரை புரண்டோடும். அதைப் பார்க்க மீண்டும் வருவேன்” என்றார்.

தனியார் மயமாகிறதா நொய்யல்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவசாயிகள் எதிர்ப்பு!

இவ்விழா நடைபெறுவதற்கு முன்னதாக... ‘நொய்யல் நதி புனரைமைப்பு என்கிற இந்தத் திட்டத்தில் பல பெரிய நிறுவனங்களின் சுயநலம் இருக்கிறது. மக்களால் மதிக்கப்படும் அண்ணா ஹஜாரே இதில் பங்கேற்கக்கூடாது’ என எதிர்ப்பு தெரிவித்து... கோயம்புத்தூர், பேரூர் நொய்யல் கரையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர், விவசாயிகள்.

இது குறித்து நம்மிடம் பேசிய விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பொன்.கந்தசாமி, “ஏரி, குளங்களைத்தான் தூர் வாருவார்கள். உலகத்தில் எங்குமே நதிகள் தூர் வாரப்படுவதில்லை. தங்களைத் தாங்களே தூர் வாரிக்கொள்ளும் தன்மை கொண்டவை நதிகள்.  நதிகளில் வளரும் நாணல், மண் அரிப்பைத் தடுத்து ஆற்றின் போக்கை ஒழுங்குபடுத்தும் வேலையை செய்கிறது. ஆற்றில் படியும் மணல், தண்ணீரை தேக்கிவைத்து வறட்சிக்காலங்களில் ஊற்றுத்தண்ணீரைக் கொடுக்கிறது. இதுதான் இயல்பு. ஆனால், சிறுதுளி அமைப்பு சார்பில் ஐநூறு ஐநூறு  மீட்டர்களாக நொய்யல் ஆறு பிரிக்கப்பட்டு புனரமைக்கப்பட இருப்பதாகக் கூறுகிறார்கள். சில இடங்களில் வேலைகளை ஆரம்பித்துள்ளார்கள். ஆற்றுக்கு அரணாக விளங்கும் நாணல் புற்களை வெட்டி எறிந்து விட்டு, இயந்திரங்களை விட்டு ஆற்றை சுரண்டி எடுத்து அந்த மணலை ஏரிபோல் குவித்து கரை அமைத்துள்ளார்கள். இயற்கையான நதி, செயற்கை வாய்க்கால்போல ஆகிக்கொண்டிருக்கிறது.

‘நொய்யலை நோக்கி’ அமைப்பில் திருப்பூர் பின்னாலடை நிறுவன அதிபர்களால் தொடங்கப்பட்டுள்ள ‘ஜீவநதி’ அமைப்பும் இணைந்துள்ளது. நொய்யலை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி, அதில் ரசாயனக்கழிவுகளைக் கலந்து விட்டவர்கள் அவர்கள்.

‘ஒரத்துப்பாளையம் அணையைத் திறக்க வேண்டாம். திறந்தால் ரசாயனக்கழிவுகள் கலக்கும்’ என்று விவசாயிகளையே சொல்ல வைத்தவர்கள் அந்த ஆலை அதிபர்கள். நொய்யல் வழியாக காவிரியிலும் ரசாயன கழிவுகளைக் கலந்து ஏழு மாவட்ட மக்களின் குடிநீரிலும் மாசு கலந்த பெருமைக்கு உரியவர்கள். அப்படிப்பட்ட திருப்பூர் தொழில் அதிபர்கள் நொய்யலை ஜீவநதியாக மாற்றப்போகிறார்கள் என்பது ‘பால் சட்டிக்கு பூனைக் காவல்’ என்கிற கதைதான். அதனால்தான், சுயநலக் கும்பல் நடத்தும் இந்த விழாவுக்கு வர வேண்டாம் என்று அண்ணா ஹஜாரேவுக்கு கடிதம் அனுப்பினோம். அதையும் மீறி அவர் வந்ததால், ஆர்பாட்டம் செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்” என்றார்.

தனியார் மயமாகிறதா நொய்யல்?

இந்நிலையில் ‘தனியார் தொண்டு அமைப்புக்கு நொய்யல் நதியை தூர்வாரும் உரிமையை வழங்கியது யார்?” என்று விளக்கம் கேட்டு... கோயம்புத்தூர் மாவட்ட பொதுப்பணித்துறை முதன்மைப் பொறியாளர் இ.தமிழரசனிடம் மனு கொடுத்துள்ளார்கள், பல்வேறு விவசாய சங்கத்தினர்.

மனுதாரர்களில் ஒருவரான கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் கோயம்புத்தூர்ர் மாவட்டத் தலைவர் டாக்டர் தங்கராசு, “நொய்யலைத் தூர் வாரி புதிதாக 20 தடுப்பணைகள் கட்டப்போவதாக ‘சிறுதுளி’ அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை முதன்மைப் பொறியாளர் தமிழரசனிடம் விளக்கம் கேட்டோம். அவர், ‘நொய்யலை தூர் வாரவும் அதில் தடுப்பணைகள் கட்டவும் எந்த அமைப்புக்கும் பொதுப்பணித்துறை அனுமதி வழங்கவில்லை. இது போன்ற சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ளுவதுதான் வழக்கம். இந்த விஷயத்தை உயரதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம்’ என பதில் அளித்துள்ளார். அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

‘மேற்குதொடர்ச்சி மலையைப் பாதுகாக்க வேண்டும்’ என்கிற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வரும் சமூக சேவகர் மேக் மோகன் என்கிற மோகன்ராஜ், “விவசாயிகள் மற்றும் நொய்யல் முகத்துவாரத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களின் நேரடி நுகர்வு நீராதாரமாக விளங்கும் நதிதான் நொய்யல். இந்த நதியின் தண்ணீரை வைத்துதான் அவர்களின் வாழ்வியல் இருக்கிறது. நொய்யல் கரையில் சாலை அமைக்க இந்த தனியார் தொண்டு நிறுவனங்கள் திட்டம் வைத்துள்ளன. ஆற்றின் கரையில் சாலை அமைத்தால் ரியல் எஸ்டேட்காரர்களுக்குத்தான் லாபம். நொய்யல் கரையில் தார்சாலை அமைத்தால் உங்கள் நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் உயர்ந்து விடும் என்று அப்பகுதி விவசாயிகள் சிலருக்கு ஆசை வார்த்தை காட்டி அவர்கள் நிலத்தைப் பிடுங்க நினைப்பதுதான் சமூக சேவையா?” என்று கேள்வி எழுப்பிய மோகன்ராஜ், 

“இவர்கள் தடுப்பணைகள் கட்டப்போவது, ஆற்றின் கரையில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், சொகுசு விடுதிகள், கார்ப்பரேட் ஆசிரமங்களின் தண்ணீர் தேவையினைப் பூர்த்தி செய்யத்தான். ஏற்கெனவே நொய்யலின் முகத்துவாரப்பகுதியில் 7 மினரல் வாட்டர் கம்பெனிகள் செயல்படுகின்றன. இந்த கம்பெனிகள், நொய்யலில் இருந்துதான்  தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி விற்பனை செய்கிறார்கள். அதனால், சமூக சேவை என்ற பெயரில் நொய்யல் நதி தனியார் மயமாகுவதை அரசு உடனடியாக தடுத்தாக வேண்டும்” என்றார்.

தனியார் மயமாகிறதா நொய்யல்?

‘‘காய்த்த மரத்தில் கல்லடி படும்!’’

நொய்யலை நோக்கி திட்டத்துக்கு எதிராக சில விவசாய அமைப்புக்கள் புகார் மனு, ஆர்ப்பாட்டம் என்று களமிறங்கிப் போராடி வருகின்றன. இதுகுறித்து விளக்கம் கேட்கும் விதமாக ‘சிறுதுளி’ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி மயில்சாமியிடம் பேசினோம்,

‘‘திருப்பூர் பின்னலாடைத் தொழில்துறையினர் ‘ஜீவநதி’ என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் தொடங்கி உள்ளார்கள். இந்த அமைப்பும் நொய்யல் பணியில் பங்கேற்றுள்ளது. ‘சீரழிந்து கிடக்கும் நொய்யல் நதி, அதன் குளங்களை சீரமைப்பு செய்வதுதான் எங்கள் நோக்கம். எனவே நொய்யலை நோக்கி திட்டத்தில் எங்களையும் இணைத்துகொள்ளுங்கள் என்று கேட்டார்கள். நல்ல விஷயம் செய்யத்தானே கேட்கிறார்கள் என்று ஜீவநதி அமைப்பையும் இணைத்துக்கொண்டோம். இதில் என்ன தவறு இருக்கிறது. இதை எல்லா விவசாயிகளும் எதிர்க்கவில்லை. நொய்யல் நதிக்கரையில் இருக்கும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஆனால், நொய்யல் பகுதிக்கு சம்பந்தமில்லாத சில விவசாயிகள் எதிர்க்குரல் கொடுக்கிறார்கள். இவர்கள்தான் அண்ணா ஹஜாரே வருவதை எதிர்த்தார்கள். இதற்கு விழா மேடையில் ஆணி அடித்தாற்போல பதிலும் சொல்லிவிட்டார், அண்ணா ஹஜாரே. அதாவது, ‘காய்த்த மரம்தான் கல்லடிபடும், எதிர்ப்புகளைப் பொருட்படுத்த வேண்டாம்’ என்று சூசகமாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். எல்லாமே ஊரறிந்துதான் நடக்கிறது. இந்த அமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் செயல்படுகிறது. நாங்கள் விதிகளை  மீறி ஆற்றில் எந்தப்பணியும் தொடங்கவில்லை. அனுமதி பெற்றுத்தான் செய்வோம்” என்று சொன்னார் மயில்சாமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism