Published:Updated:

கோடைக்காலம்... கால்நடைகள் கவனம்!

கோடைக்காலம்... கால்நடைகள் கவனம்!

கால்நடைகு. ராமகிருஷ்ணன், துரை.நாகராஜன், படங்கள்: கா.முரளி

கோடைக்காலம்... கால்நடைகள் கவனம்!

கால்நடைகு. ராமகிருஷ்ணன், துரை.நாகராஜன், படங்கள்: கா.முரளி

Published:Updated:
கோடைக்காலம்... கால்நடைகள் கவனம்!
கோடைக்காலம்... கால்நடைகள் கவனம்!

*குளம், குட்டைகளில் தேங்கி இருக்கும் நீரை குடிக்க விடக்கூடாது.

*வெயில் நேரத்தில் மேய்ச்சல் கூடாது.

*நார்ச்சத்துள்ள பசுந்தீவனங்கள் ஏற்றவை.

*தொழுவத்தில் சுத்தமும் குளிர்ச்சியும் அவசியம்.

கோடைக்காலம்’ என்பது வெறுத்து ஒதுக்கக்கூடிய காலம் ஒன்றுமில்லை. வெயில, பூமியில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் அவசியமானதுதான். ஆனால், பருவநிலை மாறுதல்களால், ஒவ்வோர் ஆண்டும் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்லும் சூழ்நிலையில்... சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே கோடைக்காலத்தை எளிதாகக் கடக்க முடியும். இது நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கும் பொருந்தும்.

சுட்டெரிக்கும் வெயிலில் அவற்றைப் பராமரிக்கும் முறைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண்மை அறிவியல் மையத்தின் உதவிப் பேராசிரியர். தேவகி சொன்ன தகவல்கள் இங்கே...

தடுப்பூசி அவசியம்!

“கோடைக்காலத்தில் கால்நடைகளை மிகவும் பாதுகாப்பாக கவனித்துக்கொள்ள வேண்டும். மாடுகளுக்கு நோய்த்தடுப்பு முறைகளை சரியாகச் செய்ய வேண்டும். மாடுகளுக்கு கோடைக்காலத்தில் ஏற்படும் கோமாரி நோயைத் தடுக்க முன்னரே தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். கோடைக்காலத்தில் புல்லின் நுனியில் உள்ள பனித்துளிகள் காலையிலேயே ஆவியாகி விடும். அதனால், காலை ஆறு மணிக்கெல்லாம் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்று, 10 மணிக்கெல்லாம் மேய்ச்சலை முடித்து விட வேண்டும். மேய்ச்சல் முடிந்தவுடன் தண்ணீர் கொடுப்பது அவசியம். மேய்ச்சலில் இருக்கும்போது குளம், குட்டைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரைக் குடிக்கவிடுவது நல்லதல்ல. அந்தத் தண்ணீர் அசுத்தமானதாக இருக்கும்பட்சத்தில் குடற்புழுநோய் தாக்க வாய்ப்பு உண்டு. வற்றிய குளங்களில் இருந்து வெளியேறிய நத்தைகள் பக்கத்தில் உள்ள செடிகளிலும், பயிர்களிலும் நோய்க்கிருமிகளைப் பரப்பிவிடும். அந்தச் செடிகளை கால்நடைகள் சாப்பிடுவதாலும், குடற்புழு நோய் தாக்க வாய்ப்புகள் அதிகம். குளம், குட்டைகள் பக்கத்தில் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது.

தீவனம் கொடுக்கும் முறை!

மேய்ச்சலில் இருந்து திரும்பிய கால்நடைகளுக்கு நார்ச்சத்துக்கள் உள்ள தீவனங்கள் மற்றும்

கோடைக்காலம்... கால்நடைகள் கவனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பசுந்தீவனங்களை அதிகமாகக் கொடுக்கலாம். இத்தகைய நார்ச்சத்து உள்ள தீவனங்கள் கால்நடைகளின் உடல், கோடை காரணமாக அதிகப்படியாக இருக்கும் உஷ்ணத்தை வெளியேற்றி சமநிலையுடன் வைத்திருக்கும். சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை போன்றவற்றை தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம். சூரியகாந்திப் பிண்ணாக்கை 20 முதல் 30 சதவிகிதம் வரை தீவனத்தில் சேர்த்துக் கொள்ளலாம். கோதுமை தவிடு, அரிசி தவிடு, குருணை, உளுந்துப் பொட்டு, கடலைப் பொட்டு போன்றவற்றையும் தீவனமாகக் கொடுக்கலாம்.

நிலத்தில் காய்ந்து கிடக்கும் வேளாண் கழிவுப் பொருட்களையும், வைக்கோல்களையும் கூடத் தீவனமாகக் கொடுக்கலாம். அகத்தி, கொருக்காப்புளி போன்ற மரங்களின் இலைகளையும் கொடுக்கலாம். பசும்புல் கிடைக்காத சமயங்களில் இந்த உணவு முறையைப் பின்பற்றினால் ஆடு, மாடுகளை எடை குறையாமல் பராமரிக்க முடியும்.

கால்நடைகளிடம் வியர்வைச் சுரப்பிகள் குறைவாக இருப்பதால், வெப்பத்தை வெளியேற்றும் தன்மை குறைவு. பசுந்தீவனங்கள் கிடைக்காதபோது, புரதச்சத்து மிகுந்த அசோலாவை தீவனமாகக் கொடுக்கலாம். மாலையில் நான்கு மணிக்கு மேல் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லலாம்” என்ற தேவகி, கால்நடைகளின் இனப்பெருக்கப் பருவம் மற்றும் அவை தங்கும் கொட்டகைகள் குறித்தும் பேசினார்.

இனப்பெருக்கப் பருவம்!

“கோடைக்காலத்தில் கால்நடைகள் பருவத்துக்கு வரும் அறிகுறிகள் தெரியாது. தவிர, சினைப்பருவம் தள்ளிப்போவதற்கான வாய்ப்புகளும் அதிகம். எருமை மாடுகளில் பொதுவாகவே கண்டுபிடிப்பது சிரமம். அதிலும் கோடைக்காலத்தில் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். பருவம் தள்ளிப்போவதற்கு வெப்பஅழற்சிதான் காரணம். அதனால், நன்றாகக் கூர்ந்து கவனித்து, சினைப்பருவத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். காலையில் சினைப்பருவ அறிகுறி தென்பட்டால் மாலையிலேயோ, மாலையில் தென்பட்டால் அடுத்த நாள் காலையிலோ செயற்கைக் கருவூட்டல் மூலமாக கருவுறச்செய்ய வேண்டும். கோடையில் கருவூட்டலுக்கு அழைத்துச் செல்லும்போது உடனே கருவூட்டல் செய்யாமல், மரநிழலில் பத்து நிமிடங்கள் கட்டிப்போட்ட பிறகே கருவூட்டல் செய்ய வேண்டும். உடனே மாடுகளை அழைத்து வராமல் மர நிழலில் பத்து நிமிடங்கள் வரை கட்டிப்போட்ட பிறகுதான் அழைத்து வர வேண்டும். வீட்டுக்கு வந்தவுடன் மாட்டின் மேல் குளிர்ந்த நீரைத் தெளிக்க வேண்டும்.

கால்நடைகளுக்கான இட பராமரிப்பு!

கால்நடைகள் கட்டப்பட்டுள்ள கொட்டகையைச் சுற்றிலும் தாழ்வாக உள்ள இடங்களில் தென்னங்கீற்றுகளை வைத்து கட்டலாம். சணல்சாக்குப் பைகளை சுற்றிலும் கட்டித் தொங்கவிட்டு, அதன் மீது குளிர்ந்த நீரை ஊற்றலாம். அப்போது அந்தக் கொட்டகை முழுவதும் ஈரப்பதம் நிறைந்து காணப்படும். கொட்டகையின் மேற்புறம் ஆஸ்பெட்டாஸ் கூரை அமைத்திருந்தால் அதன் மீது தென்னங்கீற்றுகளைப் போட்டு தண்ணீரைத் தெளித்து விடலாம். கால்நடைகளுக்கு மின்விசிறி வசதியும் அமைத்துக் கொடுக்கலாம். நேரடியாக மாடுகளின் மேல் விழுமாறு தண்ணீர் தெளிக்கலாம்.

ஒட்டுண்ணித் தாக்குதலிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க தினமும் கால்நடை தொழுவத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். தொழுவத்தைச் சுற்றிலும் அதிக காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மாட்டுக் கொட்டகைகளை பனை மற்றும் தென்னை ஓலைகளால் வேய்வது இன்னும் சிறப்பாக இருக்கும்” என்ற தேவகி நிறைவாக கோழிகளுக்கான பராமரிப்பு முறைகளைச் சொன்னார்.

கோடைக்காலம்... கால்நடைகள் கவனம்!

தீவனம்... கவனம்!

“கோடைக்காலத்தில் கோழிகளுக்கு கழிச்சல் நோய் வர வாய்ப்புகள் அதிகம். அதனால், தடுப்பூசியை முன்னரே போட்டுக் கொள்ள வேண்டும். கோழிகளுக்குக் கொடுக்கும் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். வெயில் நேரத்தில் கோழிகள் அதிக தீவனம் எடுத்தால்... ஜீரணிக்க அதிக வெப்ப ஆற்றல் உடலுக்குள் ஏற்படுகிறது. வெப்பத்தைத் தவிர்க்க, எல்லா உணவுகளையும் காலையில் கொடுக்காமல், காலை, மாலை என இரு வேளைகளாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும். தண்ணீரையும் அதிகமான அளவு கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறையாவது கோழிகளுக்கு தண்ணீர் வைக்க  வேண்டும்”.

கோழிகள், சுணக்கமாகவோ அல்லது எப்போதும் உறங்கிய நிலையிலேயே காணப்பட்டால்... நோய் எதிர்ப்பு மருந்துகளை ஐந்து நாட்கள் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கோழிக் கொட்டகைகளை தென்னங்கீற்று கொண்டு நல்ல காற்றோட்டம் இருக்குமாறு அமைக்க வேண்டும்” என்ற தேவகி “இந்த நுட்பங்களைப் பயன்படுத்தி கால்நடைகளைக் காப்பதோடு, உங்கள் வருமானத்தையும் பெருக்குங்கள்” என்று சொன்னார்.

உஷ்ணத்தை விரட்டும் வெந்தயம்!

கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்து விளக்குகிறார், தஞ்சாவூரில் உள்ள கால்நடை மூலிகை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர்.புண்ணியமூர்த்தி.

“கோடைக்காலங்களில் வெப்பம் அதிகமாகத் தாக்கினால், மாடுகளுக்கு மூச்சு வாங்குதல், பால் உற்பத்தி குறைதல், கருவுறத் தடைபடுதல், உடல் எடை குறைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். திட உணவு உட்கொள்ளுதலும் குறையும். இதனால் புரதச்சத்து, நார்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். எனவே, கோடை வெப்பம் நேரடியாக கால்நடைகளைத் தாக்காதவாறு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது மிகவும் அவசியம். மாடுகளை நிழலில் கட்டி வைக்க வேண்டும். அடர்ந்த உயரமான நிழல் தரும் மரங்கள் கால்நடைகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். கால்நடைகளை சுற்றிலும் 10 மீட்டர் விட்டத்துக்கு நிழல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மாடுகள் குடிப்பதற்கு எல்லா நேரங்களிலும் தரமான குடிநீர் தயாராக இருக்க வேண்டும். வறட்சியான பகுதிகளில், உச்சிவெயில் நேரங்களில் மாடுகள் மீது நீர்த்திவலைகளைத் தெளிக்க வேண்டும்.

ஒரு மாட்டுக்கு தினமும் இரண்டு மொந்தன் வாழைப்பழங்கள் கொடுக்க வேண்டும். நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கக்கூடிய பெருநெல்லிக்காய் வற்றலை தண்ணீரில் ஊற வைத்து, அரைத்து, ஒரு மாட்டுக்கு 50 கிராம் வீதம் தீவனத்தோடு கலந்து கொடுக்க வேண்டும். வெந்தயத்தை தண்ணீரில் ஒருநாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து, ஒரு மாட்டுக்கு 50 கிராம் வீதம் கொடுக்க வேண்டும். தினமும் இதுபோல் ஒருவேளை கொடுக்க வேண்டும். மொந்தன் வாழைப்பழம், நெல்லி முல்லி, வெந்தயம் இவை மூன்றுமே மாடுகளின் உடல் உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய அற்புத மருந்துகள்” என்றார்.

தொடர்புக்கு, செல்போன்: 98424-55833

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism