Published:Updated:

கீரை வாங்கலையோ கீரை!

கீரை வாங்கலையோ கீரை!
பிரீமியம் ஸ்டோரி
கீரை வாங்கலையோ கீரை!

ஆரோக்கியம்+அற்புத லாபம் தரும் ஆச்சர்யத் தொடர்ஒரு ஏக்கர்... மாதம் 20 ஆயிரம்... அள்ளிக்கொடுக்கும் அரைக்கீரை! ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

கீரை வாங்கலையோ கீரை!

ஆரோக்கியம்+அற்புத லாபம் தரும் ஆச்சர்யத் தொடர்ஒரு ஏக்கர்... மாதம் 20 ஆயிரம்... அள்ளிக்கொடுக்கும் அரைக்கீரை! ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:
கீரை வாங்கலையோ கீரை!
பிரீமியம் ஸ்டோரி
கீரை வாங்கலையோ கீரை!
கீரை வாங்கலையோ கீரை!

*25 நாட்களில் முதல் அறுவடை

*அனைத்து மண் வகைகளும் ஏற்றவை

*தண்ணீர் வசதி அவசியம்

*12 நாளில் மறு அறுவடை

னித உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துக்களும் கீரைகளில் அடங்கியுள்ளன. வந்த நோயை விரட்டி, வரும் நோயைத் தடுத்து, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் கீரைகளை நாம் கொண்டாடத் தவறியதன் விளைவுதான்... இன்று மருத்துவமனை வாசலில் நாம் வரிசை கட்டி சிகிச்சைக்காக நிற்பது. கீரைகளில் இருப்பது இலைகள் அல்ல... மனித ஆரோக்கியத்துக்கான அருமருந்து.

இலை மற்றும் தண்டு பாகங்களுக்காகப் பயிரிடப்படும் கீரைக் குடும்பத்தை ‘ஆம்ராந்தஸ் குடும்பம்’ என்றும், ‘இந்த வகைக்கீரைகள் இந்தியாவில் தோன்றியவை’ என்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ‘’இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 27 கீரை ரகங்களில் 10 ரகங்கள் மட்டுமே சாகுபடி செய்யப்படுகின்றன. மற்றவை தான்தோன்றியாக வளர்கின்றன’’ என்கிறார்கள், தாவரவியல் அறிஞர்களான கே.பாலசுப்பிரமணியன் மற்றும் கே. நீலகண்டன் ஆகியோர்.

ஆம்ராந்தஸ் குடும்ப வகைகளில் முக்கியமானவை தண்டுக்கீரை, சிவப்புக்கீரை மற்றும் அரைக்கீரை ஆகியவையாகும். இவற்றில் குறைந்த விலையில், எளிதில் கிடைக்கும் கீரை அரைக்கீரை. பெயர்தான் அரைக்கீரையே தவிர, இதில் முழுமையான ஆரோக்கியம் அடங்கி இருக்கிறது. அதோடு, சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குக் குறுகிய நாட்களில் நிறைவான வருமானம் கொடுக்கிறது, அரைக்கீரை. இதில் உள்ள மருத்துவக் குணங்களைக் கொண்டாடுகிறார்கள், சித்த மருத்துவர்கள்.

“காய்ச்சல் குளிர்சன்னி கபநோய் பலபிணிக்கும் வாய்ச்ச கறியாய் வழங்குங்கான்-வீச்சாய்க் கறுவுமோ வாயுவிணங் காமமிக வுண்டாம் அறுகீரை யைத்தின் றநி” என்கிறது, அகத்தியர் குணபாடம்.

‘காய்ச்சல், குளிர் சன்னி, கப நோய்கள், வாயு நோய்களைத் தீர்க்கும் அரைக்கீரைக்கு காம உணர்வைத் தூண்டும் ஆற்றலும் உண்டு’என்பது பாடலின் சுருக்கமான பொருள். அரைக்கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து... தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான கப நோய்கள் குணமாகும். இந்தக் கீரையுடன் சிறுபருப்புச் சேர்த்து தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து ரத்தசோகை  மறையும். அரைக்கீரை சாற்றில் மிளகை ஊற வைத்து உலர்த்தித் தூளாக்கி, தினமும் 5 சிட்டிகை அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்... கை,கால் நடுக்கம், நரம்புத்தளர்ச்சி போன்றவை சரியாகும்’ என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

விதை மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படும் அரைக்கீரை, குறைந்த நாளில் பலனுக்கு வரும் கீரைகளில் முக்கியமானது. 

தேனி மாவட்டம் சிந்தலச்சேரியைச் சேர்ந்த விவசாயி அமலதாஸ், ஒன்றரை ஏக்கர் நிலத்தில் அரைக்கீரை சாகுபடி செய்து வருகிறார்.

கைவிட்ட தானியங்கள்... கைகொடுத்த கீரை!

“எங்களோட பரம்பரைத் தொழிலே விவசாயம்தான். ஆரம்பத்துல பீட்ரூட், தானிய வகைகள்னு விவசாயம் பாத்தோம். அதுல வருமானம் குறைச்சலா இருந்துச்சு. வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப, கீரை விவசாயம் அறிமுகமாச்சு. ஒரு ஏக்கர் நிலத்துல அரைக்கீரையும், ஒரு ஏக்கர் நிலத்துல பருப்புக்கீரையும், 50 சென்ட் நிலத்துல சிறுகீரையும், 50 சென்ட் இடத்துல தண்டுக்கீரையும் போட்டிருக்கேன். இதெல்லாம் ரசாயன உரம் போட்டுத்தான் சாகுபடி செய்றேன்” என்ற அமலதாஸ் தொடர்ந்தார்.

கீரை வாங்கலையோ கீரை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மணலில் கலந்து விதைப்பு!

“நிலத்துக்கு அடியுரமா ஏக்கருக்கு 12 டன் எருவைக் (தொழுவுரம்) கொட்டி, மூணு நாலு உழவு போட்டு மூணு மாசம் நிலத்தைக் காய விடணும். அடுத்து பத்து அடிக்கு ஆறு அடி அளவுக்கு பாத்திகட்டி கீரை விதையை விதைக்கணும். அரைக்கீரை விதை சின்னதா இருக்கிறதால, ஒரு கிலோ விதைக்கு ரெண்டு கிலோ வீதம் குறு மணலைக் கலந்த தூவி விடணும். அப்பத்தான் விதை பரவலா விழும். விதைச்சு கையினால கிளறி விடணும். அப்பத்தான் விதைகள் நிலத்துக்குள்ள போகும். இல்லைன்னா மேலயே நின்னு தண்ணி கட்டும்போது விதைகள் மிதக்க ஆரம்பிச்சுடும்.

முக்கால் அடி வளர்ந்த பிறகு அறுவடை!

விதைச்ச பிறகு முதல் தண்ணியை செழும்பா கட்டணும். கரம்பை மண்ணா இருந்தா வாரத்துக்கு ஒரு தண்ணி கட்டுனா போதும். செம்மண்ணுக்கு ரெண்டு நாளைக்கு ஒரு தண்ணி கட்டணும். முத தண்ணி கொடுக்கிறப்பவே... ஏக்கருக்கு 15 கிலோங்கிற கணக்குல வேப்பம் புண்ணாக்கை மூட்டையில கட்டி  வாய்க்கால்ல வச்சுடுவேன். தண்ணி போறப்ப புண்ணாக்கும் கரைஞ்சு நிலத்துக்கு போயிடும். அரைக் கீரையில பூச்சித்தாக்குதல் இருக்கும். அதுக்கு தகுந்த பக்குவம் பண்ணணும். அதே போல வளர்ச்சிக்கான உரங்களையும் கொடுக்கணும்.

அரைக்கீரை, விதைச்ச 25 நாள்ல அறுவடைக்கு வந்திடும். நிலத்துல இருந்து முக்கால் அடி வளந்த பிறகுதான் கீரை அறுக்கணும். அறுவடைக்குப் பிறகு, பரிந்துரைக்கப்படுகிற உரத்தைக் கொடுத்தா சீக்கிரமா வளரும். அடுத்த அறுவடை பன்னிரெண்டு நாள்லயே வந்துடும். அறுவடை செய்றப்ப  பூ இருந்தா அதைப் பறிச்சுப் போட்டுட்டு அறுக்கணும்.

ஒரு கிலோ 7 ரூபாய்!

வியாபாரிங்க தோட்டத்துல வந்து வாங்குறதுனால எல்லா கீரைகளையும் கிலோ 7 ரூபாய்க்குதான் போடுறோம். சுழற்சி முறையில அறுவடை செய்றதால, வாரம் ஆயிரம் கிலோ அளவுக்கு அரைக்கீரை அறுப்போம். எல்லா செலவும் போக மாசம் தோராயமா 20 ஆயிரம் ரூபாய் அரைக்கீரை மூலமா மட்டும் கிடைக்குது. மத்த கீரைகள்ல கிடைக்குற வருமானம் தனி” என்ற அமலதாஸ்,  நிறைவாக,

“மூணு மாசத்துக்குப் பிறகு, தண்ணி கட்டுறதைக் குறைச்சுக்கிட்டா, பூ பிடிச்சு, காய்கள் வரும். அதை காயப்போட்டு தட்டி விதைகளை எடுத்துப் பயன்டுத்தலாம். தானிய வகைகள் விவசாயம் செஞ்சதை விட கீரை விவசாயத்துல வருமானம் பரவாயில்ல” என்றுபடி அறுவடையில் மும்முரமானார்.

-தழைக்கும்

வீட்டுத்தோட்டத்தில் அரைக்கீரை!

ஆம்ராந்தஸ் அரிடிஸ் (Amaranthus aritis) என்ற தாவரவியல் பெயர் கொண்டது அரைக்கீரை. வீட்டுத்தோட்ட விவசாயிகள், சிறிய பாத்திகளில் இந்தக் கீரையின் விதையைத் தூவி விட்டால், தொடர்ந்து 12 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்துகொண்டே இருக்கலாம்.

இயற்கை முறையில் கீரை சாகுபடி!

கீரை வாங்கலையோ கீரை!இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்வது குறித்து, இயற்கை விவசாயி ‘முசிறி’ யோகநாதன் சொல்லும் விஷயங்கள் இங்கே...

அரைக்கீரைக்கு அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. இதற்குப் பருவம் தேவையில்லை. கீரைக்கு எந்த ரசாயனமும் தேவையில்லை. பூச்சி, நோய் தாக்குதல் இருந்தால்... மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். ஓர் அறுவடை முடிந்தவுடன் ஏக்கருக்கு 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீருடன் கலந்து விட வேண்டும். பஞ்சகவ்யா தெளிப்பதாக இருந்தால் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கலந்து தெளித்தால் போதுமானது. இதைத் தவிர வேறு எந்த வளர்ச்சி ஊக்கியும், உரமும் தேவையில்லை.

ஒரு ஏக்கர் நிலத்தில் அரைக்கீரை சாகுபடி செய்ய ஏழு கிலோ விதை தேவைப்படும். ஓர் அறுவடை முடிந்து, அடுத்த அறுவடைக்கு 12 நாட்கள் ஆகும். இயற்கை விவசாயத்தில் விளைந்த கீரை செழிப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.