Published:Updated:

இணையற்ற லாபம் தரும் இயற்கை மல்பெரி!

100 முட்டைகளில் 100 கிலோ பட்டுக்கூடுகள்... படங்கள்: எம். தமிழ்ச்செல்வன் எஸ்.ராஜாசெல்லம்

 ''ரசாயன உரம், பூச்சிக்கொல்லி... என பணத்தை வாரியிறைத்து, பக்குவமாகப் பார்த்துக் கொண்டாலும், பெரியளவில் லாபம் பார்க்க முடியவில்லை'' என்பதுதான் பட்டு உற்பத்தி செய்யும் பெரும்பாலான விவசாயிகளின் புலம்பலாக இருக்கிறது.

இத்தகைய விவசாயிகளைப் பார்த்து. ''ஏன் இந்த புலம்பல்..? ரசாயனங்களைத் தவிர்த்துவிட்டு, இயற்கை முறையில் மல்பெரி செடிகளை வளர்த்து, பட்டுப் புழுக்களை வளர்த்து, பட்டுக்கூடுகளை உருவாக்கினால்... அசத்தல் வருமானம் எடுக்கலாமே!'' என்று தெம்பாகக் கேட்கிறார்... தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ்.

இணையற்ற லாபம் தரும் இயற்கை மல்பெரி!
##~##

ஆம், இவர் இயற்கை முறையிலேயே மல்பெரி பயிரிட்டு, பட்டுப்புழுக்களை வளர்த்து, சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்!

இயற்கை மீது காதல் கொண்டவரான தேவராஜ், அரசுப் பள்ளி ஆசிரியர். கூடவே, பள்ளியின் 'தேசிய பசுமைப் பாதுகாப்புப் படை’யின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். அதன் மூலம் பள்ளிக்குழந்தைகளுக்கு இயற்கை விவசாயம் மற்றும் அதன் முக்கியத்துவங்களைப் பற்றியும் சொல்லிக் கொடுத்து வருகிறார். குடும்பத்துக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில், மல்பெரி சாகுபடியுடன் பட்டுக்கூடு உற்பத்தி செய்கிறார். 100 முட்டைகள் மூலம் 113 கிலோ பட்டுக்கூடு உற்பத்தி செய்து சாதனையும் செய்திருக்கிறார்.

இணையற்ற லாபம் தரும் இயற்கை மல்பெரி!

ஒரு மாலை நேரத்தில் தேவராஜை சந்தித்துப் பேசினோம். ''என்னை விவசாயத்துக்குள்ள இழுத்து வந்தவர் என் சித்தப்பா மாயவன்தான். ரொம்ப வருஷமா மல்பெரி சாகுபடி செய்றேன். ஆரம்பத்துல ரசாயனங்களைப் பயன்படுத்தினேன். அப்பறம் 'பசுமை விகடன்’ மூலமா இயற்கை விவசாயம் பத்தி தெரிஞ்சிக்கிட்டு என்னை அறியாமலேயே இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். 'பசுமை விகடன்’ புத்தகத்தை பூஜையறையில் வெச்சு வணங்குற அளவுக்கு நான் மதிக்கிறேன். கடந்த மூணு வருஷமா முழு இயற்கை விவசாயம்தான்.

26 நாளில் கூடு!

இயற்கை முறையில வளர்ற செடிகள் ருசியா இருக்கறதால மிச்சமே வைக்காம புழுக்கள் சாப்பிட்டுடுது. அதோட புழுக்கள் நல்ல ஆரோக்கியமாவும் வளருது. ஒரு ஏக்கர்ல செடி நட்டிருக்கேன். ஒரு தொகுப்புக்கு (பேட்ச்)

இணையற்ற லாபம் தரும் இயற்கை மல்பெரி!

100 வெண்பட்டு முட்டை வைப்போம் ( ஒரு அட்டையைத்தான் 'ஒரு முட்டை’ என்கிறார்கள். ஒரு அட்டையில் 500 சிறு சிறு முட்டைகள் இருக்கும். இப்படி 100 அட்டைகளை, அதாவது 100 முட்டைகளை வைக்கும்போது, பட்டுவளர்ப்புக் கூடத்தில் 50 ஆயிரம் புழுக்கள் உற்பத்தியாகும்). ஒரு தொகுப்பு வளர்ந்து கூடா மாறுறதுக்கு 26 நாள் தேவைப்படும். அரை ஏக்கர்ல கிடக்கிற செடி... ஒரு தொகுப்புக்கு சரியா இருக்கும். ஒரு ஏக்கர்ல வளர்க்கும்போது சுழற்சி முறையில அறுவடை செய்யலாம்.

இயற்கையில் கூடுதல் மகசூல்!

பொதுவா ரசாயனத்துல விளையுற மல்பெரியை கொடுத்து பட்டுப்புழுக்களை வளர்க்கும்போது... 100 முட்டைகள்ல இருந்து அறுபது முதல் எண்பது கிலோ வரைக்கும்தான் பட்டுக்கூடு கிடைக்கும். ஆனா, இயற்கை முறையில் வளரும் மல்பெரியை உணவாகக் கொடுத்து நல்லா பராமரிக்கும்போது 100 கிலோ வரைக்கும் கூடு கிடைக்குது.

இணையற்ற லாபம் தரும் இயற்கை மல்பெரி!

நான் ஆசிரியர் வேலையும் செய்துக்கிட்டு இருக்கறதால என்னால முழுசா கவனிக்க முடியல. அப்படியும் இந்தளவுக்கு மகசூல் கிடைக்குது. முழுநேரமும் நல்லா கவனிச்சா... இதைவிட, அதிகமாவே மகசூல் கிடைக்கும். போன கோடை விடுமுறை சமயத்துல முழுநேரமும் பராமரிச்சு 100 முட்டைகள்ல இருந்து 113 கிலோ கூடு எடுத்தேன். அந்த அனுபவத்தாலதான் இவ்வளவு உறுதியா சொல்றேன். ஒரு கிலோ கூட்டுக்கு... இப்போதைக்கு சராசரியா 240 ரூபாய் விலை கிடைக்குது. இயற்கை முறையில மல்பெரி உற்பத்தி செய்யுறப்போ 5,000 ரூபாய் வரை கூடுதல் லாபம் கிடைக்குது'' என்றார் தேவராஜ், மகிழ்ச்சியாக.

அமுதக்கரைசல் தயாரிப்பு முறை...

மாடு ஒரு தடவை போட்ட சாணம் (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்), ஒரு தடவை பெய்த சிறுநீர் இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கைப்பிடி வெல்லம், ஒரு குடம் தண்ணீர் ஆகியவற்றையும் சேர்க்கவேண்டும். 24 மணி நேரம் நிழல்பாங்கான இடத்தில் வைக்கவேண்டும். அதன்பிறகு, அமுதக்கரைசல் தயார். ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்துப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். தெளிப்பானில் (டேங்க்) ஒரு முறை தெளிப்பதற்கான அளவு இது. ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கவேண்டியிருக்கும். வாய்க்கால் நீரிலும் கலந்து விடலாம்.

இப்படித்தான் பட்டுப் புழுக்களை வளர்க்க வேண்டும்!

பட்டுக்கூடு உற்பத்தி பற்றிப் பேசிய தேவராஜ், ''புழு வளரும் கூடம் சுத்தமாக இருக்க வேண்டும். தரைப்பகுதி எலிகள் போன்றவை தோண்டி விடாத அளவுக்கு வலிமையாக இருக்க வேண்டும். கூடத்துக்குள் கை, கால்களைக் கழுவிய பிறகுதான்... பணியாளர்கள் செல்ல வேண்டும். இல்லையெனில், நோய்க் கிருமிகள் தாக்கி, புழுக்கள் இறந்துவிட வாய்ப்புகள் உண்டு. அதேபோல ஈக்கள் போன்றவை செல்லாமல் இருக்க, கூடத்தைச் சுற்றி வலைகள் அடிக்க வேண்டும். பொதுவாக, வெண்பட்டுக்கூட்டுக்கு கூடுதல் விலை கிடைக்கும். ஆனால், பராமரிப்பு அதிகமாகத் தேவைப்படும். மஞ்சள் பட்டுக்கூடு உற்பத்தியில் அதிகப் பராமரிப்பு தேவையில்லை. ஒரு முறை நடவு செய்த மல்பெரியை முறையாகப் பராமரித்தால் பத்து ஆண்டுகள் வரை அறுவடை செய்யலாம்.

முட்டையை அட்டையில் ஒட்டியதில் இருந்து 10 நாட்களில் பொரிந்து புழுக்கள் வந்து விடும். மிகச்சிறிய அளவில் இருக்கும் இந்தப் புழுக்கள் முட்டையில் இருந்து, வெளிவந்த உடனே இலைகளைச் சாப்பிடத் தொடங்கும். ஆறு நாட்கள் வரை இலைகளை மட்டும் பறித்து வந்து பொடியாக நறுக்கித் தூவிவிட வேண்டும். 7 முதல் 10-ம் நாள் வரை நுனிப்பகுதியில் இருந்து ஒரு அடி நீள தண்டோடு இலைகளை வெட்டி புழுக்களுக்குக் கொடுக்கலாம். 11 மற்றும் 12-ம் நாட்களில் இரண்டு அடி நீள தண்டு வரை இலைகளை வெட்டிக் கொடுக்கலாம். அதற்குப் பிறகு செடியின் அடிப்பகுதி வரை வெட்டிக் கொடுக்கலாம்.

22-ம் நாளுக்கு மேல் புழுக்கள் கூடு கட்டத் தொடங்கும். அந்த சமயத்தில் தீனி எடுக்காமல், தலையை உயர்த்தி ஆட்டியபடி இருக்கும். அப்போது கூடுகட்ட உதவும் வலைகளை புழுக்களின் மேல் வைக்க வேண்டும். 48 மணி நேரத்துக்குள் கூடு கட்டி முடித்து விடும். கூடுகளில் ஈரப்பதம் உலர்ந்த பிறகு விற்கலாம்.  

 அமுதக்கரைசல் மட்டுமே போதும்!

இயற்கை முறை சாகுபடி பற்றி பேசிய தேவராஜ், ''மல்பெரி செடிகளுக்கு தொழுவுரமும், அமுதக்கரைசல் மட்டும்தான் கொடுக்கிறேன். மத்தபடி புழுக்கள் சாப்பிடாமல் கழிக்கும் கழிவுக் குச்சிகளை செடிகளின் மத்தியில மூடாக்கா போட்டுடுவேன். ஈரம் குறையுறப்ப வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சும்போது அமுதக்கரைசலைக் கலந்து விட்டுடுவேன். இப்படி சாதாரணமா பராமரிச்சாலே மல்பெரி செடிகள், வெத்தலை இலை மாதிரி நல்லா செழிப்பா வளருது. இலைகள்ல செருக்கு குறைஞ்சு, எப்பவாச்சும் நோய்த்தாக்குதல் வந்தா... அமுதக்கரைசலை செடிக மேல தெளிச்சு விட்டுடுவேன். இதைத் தவிர எந்தப் பராமரிப்பும் தேவையில்ல'' என்கிறார்.

 தொடர்புக்கு: தேவராஜ்,
அலைபேசி ( செல்போன்): 94892-87550.

அடுத்த கட்டுரைக்கு