Published:Updated:

மஞ்சளுடன் கூட்டணி போடும்

கோழிக்கொண்டை + கேந்தி + வெங்காயம்... உன்னத வருமானம் கொடுக்கும் ஊடுபயிர்கள்! காசி.வேம்பையன்

 பளிச்... பளிச்...

பூச்சி, நோய் தாக்குதல் இல்லை.
ஊடுபயிர் மூலம் கூடுதல் வருமானம்.

மஞ்சள் விவசாயத்தில் வருமானம் எடுக்க, குறைந்தபட்சம் ஓராண்டுக்குக் காத்திருக்க வேண்டும் என்பதால், ஊடுபயிர் மூலமாக இடையில் ஒரு வருவாயைப் பார்த்துவிடுவது... பலருடைய வழக்கமாக இருக்கிறது. வருவாய்க்கு வருவாய் என்பதோடு, மஞ்சள் சாகுபடிக்கான செலவுகளையும் இதிலேயே சமாளித்துவிட முடியும் என்பதுதான் இதிலிருக்கும் சூட்சமம்! திருவண்ணாமலை மாவட்டம், காந்தப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம், இந்த சூட்சமத்தைக் கடைபிடித்து, இயற்கை வழி விவசாயத்தில் போதுமான மகசூலைப் பார்த்து வருகிறார்.

மஞ்சளுடன் கூட்டணி போடும்
##~##

''இயற்கை வழி விவசாயம் மூலமா.. கேந்தி பூ (சாமந்திப் பூ), கோழிக்கொண்டை, வெங்காயம் இதையெல்லாம் மஞ்சளுக்கு இடையில ஊடுபயிரா சாகுபடி செய்றேன். லாபம், மஞ்சளுக்கான செலவுக்கு ஈடு... இதையெல்லாத்தையும் தாண்டி... இதன் மூலமா பூச்சி மற்றும் நோய்களையும் கட்டுப்படுத்த முடியுது தெரியுமோ!'' என்று ஆச்சரியம் பொங்கச் சொல்லும் ராஜாராம், கேந்தி பூக்களைப் பறித்தபடியே தொடர்ந்தார்.

வியாபாரத்திலிருந்து விவசாயத்துக்கு!

''பத்தாவது முடிச்சுட்டு, அப்பாவுக்கு உதவியா விவசாயத்துல இறங்கினேன். மூணு வருஷம் விவசாயத்தைப் பார்த்த பிறகு, அரிசி வியாபாரத்தைப் பாக்கறதுக்காக ஆரணிக்குப் போய்ட்டேன். பிறகு, குடும்பத்துல சொத்துப் பிரிச்சப்போ... எனக்கு நாலரை ஏக்கர் நிலம் கிடைச்சுது. அரிசி வியாபாரத்தோட... விவசாயத்தையும் கவனிக்க ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல திருவண்ணாமலையில 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரோட பயிற்சி நடக்க, அதுல கலந்துக்கற வாய்ப்பு கிடைச்சுது. அப்பறம்தான் இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்தது. அப்பறம் தமிழ்நாட்டுல இருக்குற நிறைய இயற்கை விவசாயிகளைப் பார்த்து, நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, முழுசா இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். இப்போ 'பசுமை விகடன்’ மூலமாவும் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிகிட்டிருக்கேன்.

திட்டம் போட்டு விவசாயம்!

மஞ்சளுடன் கூட்டணி போடும்

நாலரை ஏக்கர்லயும் பட்டத்துக்கேத்த மாதிரி பயிர்களை சாகுபடி செஞ்சிக்கிட்டிருக்கேன். இயற்கை விவசாயம் மூலமா... ஏக்கருக்கு 24 மூட்டை (75 கிலோ) வரைக்கும் நெல்லுல மகசூல் கிடைக்குது. இப்போ, 1 ஏக்கர் 30 சென்ட்ல கரும்பு; 1 ஏக்கர் 80 சென்ட்ல மக்காச்சோளம் கடலை; 38 சென்ட்ல மஞ்சள்; 35 சென்ட்ல சம்பங்கி; 30 சென்ட்ல வாழை; 15 சென்ட்ல மாட்டுக்குத் தேவையான தீவனம்; 7 சென்ட்ல வீட்டுக்கு தேவையான காய்கறிகள்னு நிலத்தைப் பிரிச்சு திட்டம் போட்டு விவசாயம் செய்றேன். மஞ்சளுக்கிடையில கோழிக்கொண்டை, கேந்தி பூ, வெங்காயம்னு போட்டிருந்தேன். வெங்காயம் அறுவடை ஆயிருச்சு. பூவெல்லாம் அறுவடையில இருக்கு'' என்று சொன்னவர், மஞ்சள் மற்றும் அதன் ஊடுபயிருக்கான சாகுபடித் தொழில்நுட்பங்கள் பற்றி பகிர்ந்தார். அவற்றைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

களைகளைக் கட்டுப்படுத்தும் மாட்டு உழவு!

'சின்ன வெங்காயத்தின் வயது 80 நாட்கள். கேந்தி பூ மற்றும் கோழிக்கொண்டைப் பூ ஆகியவற்றின் வயது 110 நாட்கள். மஞ்சளின் வயது 330 நாட்கள் (11 மாதங்கள்). இவற்றுக்கு வடிகால் வசதியுடைய அனைத்து மண் வகைகளும் ஏற்றது. வைகாசி மற்றும் ஆனி ஆகிய பட்டங்கள் ஏற்றவை. சாகுபடி நிலத்தில் 3 டன் தொழுவுரத்தைக் கொட்டி, மாடுகள் மூலமாக இரண்டு சால் உழவு செய்து, தண்ணீர் கட்ட வேண்டும். 10 நாட்கள் கழித்துப் பார்த்தால்... நிலத்தில் களைகள் முளைத்திருக்கும். அவற்றை குறுக்கு, நெடுக்காக இரண்டு சால் உழவு செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், களைகளைக் கட்டுப்படுத்த முடியும். ஒரு வாரம் கழித்து, மண் காய்ந்திருக்கும் நிலையில், மீண்டும் ஓர் உழவு செய்து மண்ணை பொலபொலப்பாக மாற்ற வேண்டும். பிறகு, இரண்டரை அடி இடைவெளியில் ஏர் கலப்பை மூலம் பார் ஓட்டி, மண்வெட்டி மூலமாக பாரை சரி செய்து கொள்ள வேண்டும்.

ஒன்றரையடி இடைவெளி!

பாரின் ஒரு பக்கத்தில், முக்கால் அடிக்கு ஒரு வெங்காயத்தை புழுதி நடவாக நடவு செய்ய வேண்டும். பொதுவாக வெங்காயத்தை ஈர நடவாகத்தான் நடுவார்கள். ஆனால், புழுதி நடவாக நட்டு... பிறகு, நீர் பாய்ச்சினால் முளைப்புத் திறன் நன்றாக இருக்கும். வெங்காயத்தை நடவு செய்த பிறகு தண்ணீர் கட்டி, விதைநேர்த்தி செய்த மஞ்சள் கிழங்குகளை பாத்தியின் மறுபக்கத்தில் ஒன்றரை அடிக்கு ஒன்று வீதம் நடவு செய்ய வேண்டும். பாரின் மையத்தில் ஒன்றரை அடிக்கு ஒரு கேந்தி அல்லது கோழிக்கொண்டை நாற்றை நடவு செய்ய வேண்டும் (இவர் 38 சென்ட் நிலத்தையும் இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியில் கேந்தியையும், மற்றொருப் பகுதியில் கோழிக்கொண்டையையும் ஊடுபயிராக சாகுபடி செய்திருக்கிறார்). நடவு செய்த 4-ம் நாள் தண்ணீர் கட்ட வேண்டும். இம்முறையில் நடுவதற்கு 38 சென்ட் நிலத்துக்கு 210 கிலோ விதைமஞ்சள், 90 கிலோ விதைவெங்காயம் மற்றும் கோழிக்கொண்டை, கேந்தி விதைகள் தலா 50 கிராம் வீதம் தேவைப்படும்.

மஞ்சளுடன் கூட்டணி போடும்

பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் கேந்தி!

7-ம் நாளில் வெங்காயமும், 30-ம் நாளில் மஞ்சளும் முளைத்து வரும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும். 30 மற்றும் 45-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும்.

இரண்டாவது களை எடுத்த பிறகு, 50 கிலோ மண்புழு உரம், 10 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ-பாக்டீரியா, 2 லிட்டர் பஞ்சகவ்யா ஆகியவற்றைக் கலந்து, 24 மணி நேரம் வைத்திருந்து, பிறகு நிலத்தில் தூவ வேண்டும். 20 நாட்களுக்கு ஒரு முறை 48 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும்.

மஞ்சளுடன் கூட்டணி போடும்

ஊடுபயிராக கேந்தி சாகுபடி செய்வதால் பெரும்பாலான பூச்சிகள் கட்டுப்படுகின்றன. தேவைப்பட்டால் மட்டும், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கொள்ளலாம். இயற்கை வழி விவசாயம் என்பதால், நோய்களும் பெரிதாக வருவதில்லை. ஊடுபயிர்களை அறுவடை செய்த பிறகு, அந்தச் செடிகளை, அப்படியே மஞ்சள் செடிகளைச் சுற்றி மூடாக்காகப் போட வேண்டும். கூடவே... 50 கிலோ மண்புழு உரம், 10 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ-பாக்டீரியா, 2 லிட்டர் பஞ்சகவ்யா ஆகியவற்றை கலந்து ஒவ்வொரு மஞ்சள் செடிக்கும் நிரந்து இட்டு, மண் அணைத்து விட வேண்டும்.’

சாகுபடிப் பாடத்தை முடித்த ராஜாராம், ''வெங்காயத்தை 80 நாள்ல அறுவடை செஞ்சதுல... 38 சென்ட்ல இருந்து 480 கிலோ வெங்காயம் கிடைச்சுது. சேதாரம், காய்ச்சல்னு போக... எப்படியும் 450 கிலோ கிடைச்சுடும். கிலோவுக்கு சராசரியா 30 ரூபாய்னு விலை கிடைச்சா... 13,500 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

கோழிக்கொண்டை 40 நாளில் பூவெடுக்க ஆரம்பிக்கும். 60-ம் நாளுக்கு மேல அஞ்சு நாளைக்கு ஒரு தடவை அறுவடை பண்ணலாம். 10 தடவை அறுக்கலாம். ஒரு அறுப்புக்கு சராசரியா 30 கிலோனு மொத்தம் 300 கிலோ வரைக்கும் பூ கிடைக்கும். கிலோவுக்கு சராசரி விலையா 15 ரூபா கிடைச்சாலும் 4,500 ரூபாய் கிடைக்கும். கேந்தி 50 நாள்ல பூவெடுக்க ஆரம்பிக்கும். 70-ம் நாள்ல இருந்து அறுவடை செய்யலாம். மொத்தம் எட்டு அறுவடைக்கும் சேர்த்து 200 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும். கிலோ, சராசரியா 30 ரூபாய்க்கு வித்தாலும் 6,000 ரூபாய் கிடைக்கும்.

11-ம் மாசத்துல மஞ்சளை அறுவடை செய்யலாம். 38 சென்ட்ல இருந்து 10 குவிண்டால் வரைக்கும் மகசூல் கிடைக்கும். இப்ப குவிண்டால் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகுது. இருப்பு வெச்சிருந்து விலை ஏறும்போதுதான் விப்பேன். மொத்தமா 38 சென்ட் நிலத்துல இருந்து 74,000 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். செலவு போக 34,000 ரூபாய் வரை லாபம்'' என்றார், உற்சாகமாக!

தொழுவுரம் தயாரிப்பு!

குப்பைக்குழியில் இருக்கும் மட்கிய எருவைக் களைத்து வெப்பம் வெளியேறும் அளவுக்கு தண்ணீர் விட்டு, 25 நாட்கள் இடைவெளியில் மீண்டும் களைத்து, அவற்றில் முளைத்திருக்கும் களைச் செடிகளை அகற்ற வேண்டும். 50-ம் நாள் அந்த எருவை எடுத்துப் பயன்படுத்தலாம்.

ஒரு பாத்தி... ஒரு கூடை எரு...

10 அடி நீளம், 5 அடி அகலத்தில் இரண்டு மேட்டுப்பாத்திகள் அமைத்து, ஒவ்வொரு மேட்டுப்பாத்திக்கும் ஒரு கூடை எருவை கொட்டி கிளறி சமப்படுத்தினால்... நாற்றங்கால் தயார். ஒரு பாத்தியில் கோழிக்கொண்டை விதையையும், மற்றொரு பாத்தியில் கேந்தி விதையும் தூவ வேண்டும். பின்னர் எரு அல்லது மணலை லேசாகத் தூவி தென்னை மட்டையால் மூடி வைத்து, தினம் தண்ணீர் தெளித்து வந்தால், 7-ம் நாளில் முளைப்பு எடுத்து விடும். 15-ம் நாளில் 5 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாளில் நாற்று தயாராகி விடும்.

இப்படித்தான் செய்யணும் விதைநேர்த்தி!

சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விர்டி, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை தலா ஒரு கிலோ எடுத்துக் கொண்டு, ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை அதில் சேர்த்துக் கலக்க வேண்டும். இதை 30 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். மஞ்சள் விதைக் கிழங்குகளை இந்தக் கரைசலில் நனைத்து எடுத்து, நிழலில் உலர்த்தி நடவு செய்ய வேண்டும்.

தொடர்புக்கு: ராஜாராம்,
அலைபேசி (செல்போன்): 97878-27898.

அடுத்த கட்டுரைக்கு