Published:Updated:

தெம்பான வருமானம் கொடுக்கும் தென்னை...

தெம்பான வருமானம் கொடுக்கும் தென்னை...
தெம்பான வருமானம் கொடுக்கும் தென்னை...

ஏக்கருக்கு ரூ 1 லட்சத்து 40 ஆயிரம்...செலவைக் குறைத்த ஜீரோ பட்ஜெட்! கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

தெம்பான வருமானம் கொடுக்கும் தென்னை...

*மரத்துக்கு 250 காய்கள்

*திரட்சியான பெரிய காய்கள்

*தண்ணீர் தேவை குறைவு

*மண் வளம் அதிகரிப்பு

*பூச்சி, நோய் தாக்குதல் இல்லை

காவிரி டெல்டா பகுதிகளில் பெருமளவு நெல் சாகுபடியே அதிகமென்றாலும்... பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடியும் அதிகளவில் நடந்து வருகிறது. பெரும்பாலும் இப்பகுதியில் ரசாயன விவசாயமே மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில்... ‘ஜீரோ பட்ஜெட்’ முறையில் தென்னை சாகுபடியில் ஈடுபட்டு முன்னோடி விவசாயியாகத் திகழ்கிறார், இப்பகுதியைச் சேர்ந்த நாகராஜ்.

ஒரத்தநாட்டிலிருந்து வடசேரி செல்லும் சாலையில் உள்ள அருமுளை கிராமத்தில்தான் நாகராஜின் தென்னந்தோப்பு உள்ளது. மகன் பிரகாஷ் உடன் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த நாகராஜை சந்தித்தோம்.

பசுமை கொடுக்கும் ஜீவாமிர்தம்!

“இவ்வளவு கோடையிலும் எங்க தோப்புல இருக்கிற மரங்கள் செழிப்பா இருக்குறதுக்கு காரணம், ஜீவாமிர்தம்தான். இங்க ஒரு மாசம் மரங்களுக்கு தண்ணி விடலைனாலும் மரங்கள் அப்படியே பசுமையா இருக்கும். அந்தளவுக்கு மண்ணுல ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்குது. அதுதான் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தோட மகிமை. இது குறித்து விரிவா என் மகன் பிரகாஷ்கிட்ட கேட்டுக்கங்க” என்று சொல்லிவிட்டு தனது வேலைகளைத் தொடர்ந்தார், நாகராஜ். 

தெம்பான வருமானம் கொடுக்கும் தென்னை...

சோதனைக் களமான தென்னந்தோப்பு!

“நான் பி.பி.ஏ முடிச்சிட்டு அப்பாவோட முழுமையா விவசாயத்துல இறங்கிட்டேன். இது செம்மண்ணும் மணலும் கலந்த இருமண் பாடு. தென்னை சாகுபடிக்கு ஏத்த பூமி. இதனால்தான், இந்தப் பகுதியில தென்னந்தோப்புகள் அதிகம். எங்களுக்கு மொத்தம் 30 ஏக்கர் நிலம் இருக்கு. 20 ஏக்கர்ல தென்னை இருக்கு. 10 ஏக்கர்ல நெல் சாகுபடி செய்றோம். சோதனை அடிப்படையில தென்னையைத்தான் முதல்ல முழு இயற்கைக்கு மாத்தினோம். இந்த ரெண்டு வருஷத்துல நல்ல பலன் கிடைச்சிருக்கு. அதை கண்கூடா பார்த்ததால, நெல் விவசாயத்தையும் இயற்கைக்கு மாத்திக்கிட்டிருக்கோம்” என்று சொன்ன பிரகாஷ், தோப்பை சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார். 

களைகளை அகற்றும் நாட்டு மாடுகள்!

“ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்காக 6 உம்பளாச்சேரி நாட்டுப் பசுக்களை வளர்த்துட்டு இருக்கோம். மாடுகளுக்கு தீவனத்துக்குனு பெரிசா செலவில்லை. தோப்புக்குள்ளயே மேய்ச்சலுக்கு விட்டுடுவோம். மாடுகள் மேய்றதால களையெடுக்குற செலவு குறைஞ்சிடுச்சு. இல்லாட்டி வருஷத்துக்கு நாலு தடவை டிராக்டர் வெச்சு உழவு செய்யணும். இப்போ, வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும் உழவு ஓட்டி களைகளை வேரோடு பிடுங்கி மரத்தை சுத்தி போட்டுடுவோம். அது அப்படியே மட்கி உரமாகிடும். அதுபோக, தென்னை மட்டைகளையும் மிஷின்ல கொடுத்து தூளாக்கி, மரத்தை சுற்றிலும் மூடாக்கா போட்டுடுவோம்.

மட்டைகளை அப்படியே போட்டா மட்க தாமதமாகும். அதில்லாம பூச்சி, பட்டைகள் மண்டும். தூளாக்குறப்போ அந்த பிரச்னை கிடையாது. அதுவுமில்லாம, ஜீவாமிர்தம் கலந்த தண்ணீரை பாய்ச்சிறதுனால, தென்னை மட்டைத் தூள் சீக்கிரம் மட்கி, நுண்ணுயிரிகள் பெருகி மண் வளமாகிடுது. அதனால, மண்புழுக்கள் பெருகுது” என்ற பிரகாஷ், ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாறிய கதையைச் சொன்னார்.

தெம்பான வருமானம் கொடுக்கும் தென்னை...

ரசாயனத்தால் வரிசை கட்டிய பிரச்னைகள்!

“20 ஏக்கர் தோப்புல மொத்தம் 1,500 நெட்டை+குட்டை ரக தென்னை மரங்கள் இருக்கு. எல்லாமே பதினஞ்சு இருபது வயசு மரங்கள். பத்து வருஷத்துக்கு முன்னாடி வரை எரு மட்டும்தான் மரங்களுக்கு கொடுத்துக்கிட்டு இருந்தோம். அப்போ ஒரு மரத்துல வருஷத்துக்கு 200 காய்கள் வரை கிடைக்கும். அடுத்து மகசூலை அதிகரிக்கலாம்னு ரசாயன உரங்களைப் போட ஆரம்பிச்சோம். காய்களும் அதிகமா கிடைக்க ஆரம்பிச்சது. ஆனா, பிரச்னைகளும் வரிசை கட்டி வர ஆரம்பிச்சது. தண்ணீர் அதிகம் பாய்ச்ச வேண்டியிருந்தது. பத்து நாளைக்கு ஒரு முறை தண்ணி விடலேன்னா மரங்கள் வாடிடும். அந்த சமயத்துல மின்வெட்டுப் பிரச்னை அதிகமா இருந்ததால, சரியா தண்ணீர் கொடுக்க முடியலை. அதனால மரங்கள் வாடி, காய்கள் கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. மட்டைகள் விழ ஆரம்பிச்சது. அதனால, சரியா மகசூல் இல்லை. அது போக, தண்டு அழுகல் நோய் வேற வர ஆரம்பிச்சது. அதுல நிறைய மரங்கள் பட்டுப்போக ஆரம்பிச்சது. அடுத்து ஈரியோபைட் தாக்குதல், கூன்வண்டுத் தாக்குதல், குருத்து அழுகல்னு வரிசையா பிரச்னைகள். அதனால, ஏகப்பட்ட நஷ்டம். நிறைய ரசாயன மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தும் பிரயோஜனமில்லை. கிட்டத்தட்ட 200 மரங்கள் காலியாகிடுச்சு.

கைகொடுத்த பசுமை விகடன்!

அந்த சூழ்நிலையிலதான் ‘பசுமை விகடன்’ வாசகரான அப்பா, ‘ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்களை செஞ்சுப் பார்க்கலாம்’னு சொன்னார். ஆனா, எனக்கு ஆரம்பத்துல நம்பிக்கை ஏற்படலை. ஆனாலும், சோதனை முயற்சியா ஜீவாமிர்தம் கொடுக்க ஆரம்பிச்சோம். மாற்றத்தை கண்கூடா உணர்ந்து நெகிழ்ந்து போயிட்டோம். பாசனநீரோடு 15 நாட்களுக்கு ஒரு தடவை ஏக்கருக்கு 300 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து விடுறோம். இப்போ, மரங்கள் ஆரோக்கியமா இருக்குது. பூச்சி, நோய் தாக்குதல்கள் சுத்தமா இல்லை. வருஷத்துக்கு ஒரு மரத்துல இருந்து 250 காய்களுக்கு மேல கிடைக்குது. காய்கள் நல்ல தரமா இருக்குறதால ஒரு காய்க்கு சராசரியா 8 ரூபாய் விலை கிடைக்குது. ஆக ஒரு மரத்துக்கு ரூ 2,000 வருமானம் வருது. ஏக்கருக்கு 70 மரம் என்ற கணக்கில், ஏக்கருக்கு ரூ 1 லட்சத்து 40 ஆயிரம் வருமானம் கிடைக்குது” என்ற பிரகாஷ் நிறைவாக,  

தெம்பான வருமானம் கொடுக்கும் தென்னை...

இனி, நெல்லுக்கும் ஜீரோ பட்ஜெட்!

“ரசாயன முறையில சாகுபடி செஞ்சப்போ, வருஷத்துக்கு ரெண்டு தடவை ரசாயன உரங்கள் கொடுப்போம். நுண்ணூட்டச் சத்துக்கள், நோய் தடுப்பு மருந்துகள்னு எல்லாம் சேர்த்து 20 ஏக்கர் தோப்புக்கு வருஷத்துக்கு 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இப்போ அந்த செலவு ரொம்பவே குறைஞ்சிடுச்சு. ஜீரோ பட்ஜெட் முறைதான் அதுக்கு காரணம். இவ்வளவு நாளா இதைக் கடைபிடிக்காம விட்டுட்டோமேனு வருத்தமா இருக்கு. சீக்கிரம் ஜீரோ பட்ஜெட் முறையில வெற்றிகரமா நெல் சாகுபடியையும் பண்ணிடுவோம்” என்றார், நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு,
நாகராஜ்
செல்போன்: 97517-23062.
பிரகாஷ்
செல்போன்: 90479-08084

தென்னையில் ஊடுபயிராக மிளகு!

“மூணு வருஷத்துக்கு முன்னாடி 50 தென்னை மரங்கள்ல மட்டும் சோதனை முயற்சியா மிளகுக் கன்றுகளை நடவு செஞ்சோம். தென்னைக்கு கொடுத்த இடுபொருட்கள்லயே மிளகும் நல்லா வளருது. 50 கொடிகள் மூலமா கிடைக்கிற மிளகை காய வெச்சா... வருஷத்துக்கு 60 கிலோ வரை மிளகு கிடைக்குது. எங்க வீட்டுத் தேவைக்குப் போக, மீதியுள்ள மிளகை உறவினர்கள், நண்பர்களுக்குக் கொடுத்துடுவோம். அடுத்து, 20 ஏக்கர்லயும் மிளகு போடலாம்னு இருக்கோம்” என்றார், நாகராஜ்.

25 அடி இடைவெளி...

தெம்பான வருமானம் கொடுக்கும் தென்னை...

தென்னை சாகுபடி குறித்து நாகராஜ் சொன்ன விஷயங்கள் இங்கே...

“தென்னை நடவுக்கு மார்கழி மாதம் ஏற்ற மாதம். செம்மண் மற்றும் செம்மண், மணல் கலந்த மண் வகைகளில் தென்னை சிறப்பாக விளையும். களிமண்ணில் வளர்ச்சி குன்றும். தேர்வு செய்த நிலத்தில் 25 அடி இடைவெளியில் 2 அடிக்கு 2 அடி அளவில் குழி எடுக்க வேண்டும். குழிகளில் கால் பாகம் பொலபொலப்பான மண்ணை நிரப்பி... ஒவ்வொரு குழியிலும் தலா 10 கிலோ மாட்டு எரு, 200 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றை இட்டு மண்ணை நிரப்பி கன்றை நடவு செய்து தண்ணீர் விட வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 70 முதல் 75 கன்றுகள் வரை நடவு செய்யலாம். தொடர்ந்து மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த ஓர் ஆண்டு வரை இடுபொருட்கள் தேவையில்லை. அதற்குப் பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை, ஒவ்வொரு மரத்தின் தூர் அருகேயும் அரையடி ஆழத்துக்கு அரை வட்ட அளவில் குழி எடுத்து... மரத்துக்கு தலா 25 கிலோ மாட்டு எரு இட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனநீரோடு ஏக்கருக்கு 300 லிட்டர் வீதம் ஜீவாமிர்தம் கலந்து விட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை தோப்பில் ஆட்டுக்கிடை போட்டு... ஏக்கருக்கு 15 கிலோ வீதம் சணப்பு விதைகளை விதைக்க வேண்டும். 45-ம் நாள் அவற்றில் பூ பூக்கும் தருணத்தில் தண்ணீர் கட்டி, அவற்றை மடக்கி உழ வேண்டும்.”

தரமான கன்றுகள்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் வேப்பங்கன்றுகள் விலைக்குக் கிடைக்கின்றன. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையங்களிலும் கன்றுகள் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு