
புறா பாண்டி, படங்கள்: பா.காளிமுத்து, ரா.ராம்குமார்
‘‘எங்கள் தோட்டத்தில் உள்ள வாழை மரங்களில் கீழ்ப்பகுதியிலுள்ள இலைகள் பழுத்து விடுகின்றன.

இதைக் கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்?’’
பொ.கமலா ஓமலூர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி வாழை விவசாயி ‘பணிக்கம்பட்டி’ கோபாலகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.
‘‘இதற்கு ‘பனாமா’ வாடல் நோய் என்று பெயர். மரங்களின் அடி இலைகள் திடீரென முழுவதும் பழுத்து, குருத்துடன் சேரும் இடத்தில் முற்றிலுமாக ஒடிந்து, மடிந்து வாழைத் தண்டைச் சுற்றிலும் துணி கட்டியதுபோல் இருக்கும். பிறகு தண்டின் அடிபாகத்தில் மண்ணிலிருந்து மேல்நோக்கி நீளவாக்கில் வெடிப்பு ஏற்படும். கிழங்கைக் குறுக்கே வெட்டிப்பார்த்தால், செம்பழுப்பு நிறத்தில் வட்ட வட்டமாக இப்பூஞ்சணம் தாக்கி அழிந்துள்ள பகுதிகளைப் பார்க்க முடியும்.

செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி மற்றும் பல உள்ளூர் ரகங்களை இந்த நோய் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றது. நூற்புழு பாதிப்பு இருக்கும் தோட்டத்தில் வாடல் நோயின் அறிகுறிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. வாடல் நோயின் வித்துக்கள் மண்ணில் பல ஆண்டுகள் உயிருடன் இருக்கும் தன்மையுடைவை. பூஞ்சண வித்துக்கள் முளைத்து பக்க வேர்கள் மூலமாக கிழங்குப் பகுதியைத் தாக்கும். நோய் தாக்கிய கிழங்குகள் மூலமாகவும், பாசன நீர் மூலமாகவும் இந்நோய் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்துக்குப் பரவுகிறது.
வாடல் நோய் அதிக அளவில் காணப்படும் நிலங்களில் இந்த நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பூவன் (கதலி), ரொபஸ்டா போன்ற வாழை ரகங்களைப் பயிரிடலாம். வாழைக் கன்றுகளை நோய் தாக்காத

தோட்டங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். விதைக்கிழங்குகளைப் பரிசோதித்து செந்நிறப் பகுதிகள் இல்லாதவற்றைத் தேர்வு செய்ய வேண்டும். கிழங்குகளை நடுவதற்கு முன் களிமண் குழம்பில் நனைத்த கிழங்கின் மீது பத்து கிராம் சூடோமோனஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல் பூஞ்சணக்கொல்லியைச் சீராகத் தூவ வேண்டும். இத்துடன் ஓர் ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனஸ் புளூரசன்ஸ் 20 கிலோ உலர்ந்த சாண எரு அல்லது மணலுடன் கலந்து ஒவ்வொரு வாழையின் தூர்ப் பகுதியைச் சுற்றிலும் இடவேண்டும்.
துலுக்கன் சாமந்திப் பூவை ஊடுபயிராக சாகுபடி செய்தால், வாடல் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். வாடல் நோய் ஏற்பட்டுவிட்டால், அந்த நிலத்தில் மீண்டும் வாழை சாகுபடி செய்யக் கூடாது. பயிர் சுழற்சி முறையில் பயிர்களை மாற்றி சாகுபடி செய்த பிறகு, வாழையை சாகுபடி செய்யலாம். இதன் மூலம் வாடல் நோய் கட்டுக்குள் வந்துவிடும்.’’
தொடர்புக்கு, செல்போன்: 94431-48224.
‘‘பொன்னீம் பூச்சிவிரட்டி பற்றி கேள்விப்பட்டோம். இதைத் தயாரிப்பது எப்படி?’’
எஸ்.நாகராஜ், அரக்கோணம்.
சென்னை லயோலா கல்லூரியில் செயல்பட்டு வரும், பூச்சியியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர்

அருட்தந்தை முனைவர்.இன்னாசிமுத்து பதில் சொல்கிறார்.
‘‘எங்கள் பூச்சியியல் ஆய்வு நிறுவனம் மூலம் ‘ பொன்னீம்’ என்ற இந்த இயற்கைப் பூச்சிவிரட்டியை உருவாக்கினோம். இயற்கையின் பரிசான புங்கன் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறந்த பூச்சி விரட்டி இது. தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் புழுக்களைக் கொல்லுதல், பயிர்களில் முட்டையிடாமல் தடுத்தல், முட்டைகளைப் பொரிக்க இயலாமல் ஆக்குதல் மற்றும் இலைகளை உண்ணாமல் தடுத்தல் போன்ற தலைசிறந்த பண்புகளை இது கொண்டுள்ளது. அனைத்து வகையான பயிர்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
இந்த பொன்னீம் தயாரிப்பு மிகமிக எளிதானது. வேப்ப எண்ணெய் (450 மில்லி) 45%, புங்கன் எண்ணெய் (450 மில்லி) 45%, சோப்புக் கரைசல் (ஒட்டும் திரவம்- 100 மில்லி) 10% ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, நன்கு கலக்கினால், பொன்னீம் தயார்.
பத்து லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பொன்னீம் என்கிற விகிதத்தில், கலந்து தெளிக்கவேண்டும்.
10 லிட்டர் கொள்ளவுள்ள தெளிப்பானில் முதலில் 30 மில்லி பொன்னீமை ஊற்றிவிட்டு, பிறகு 10 லிட்டர் தண்ணீரை ஊற்றவேண்டும். இப்படி செய்தால் பொன்னீம் மருந்து தண்ணீரில் நன்றாகக் கலந்துவிடும். மீண்டும் ஒரு குச்சியைக் கொண்டு நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வைத்து கலக்கி, அதன் பிறகு கூட தெளிப்பானில் ஊற்றிக் கொள்ளலாம். அசுவிணி, தக்காளி, கத்திரி, வெண்டை மற்றும் மிளகாய்ச் செடிகளைத் தாக்கும் காய்த் துளைப்பான், படைப்புழு, நெல் தத்துப்பூச்சி, நெல் தண்டுத் துளைப்பான் ஆகியவற்றையும் பொன்னீம் கட்டுப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் பொன்னீம் பூச்சி விரட்டியை விவசாயிகள் பயன்படுத்தி பலன் பெற்று வருகிறார்கள். மேலும் தேயிலைத் தோட்டங்களுக்கும் தற்போது பொன்னீமைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தக் கண்டுப்பிடிப்புக்கு கொடுத்த ஊக்கத்தைத் தொடர்ந்து, கொசுக்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் இந்த ஆராய்ச்சி நிறைவு பெறவுள்ளது என்பதையும், உங்களுடன் பகிர்ந்து கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.’’
தொடர்புக்கு, பூச்சியியல் ஆய்வு நிறுவனம்
லயோலா கல்லூரி, சென்னை - 600034.
தொலைபேசி: 044-28174644,
செல்போன்: 94438-71871.
‘‘தேமோர்க் கரைசல் தயாரிப்பது எப்படி? இதன் பயன்பாடுகள் பற்றி விளக்கவும்.’’
சி.செந்தாமரை, செஞ்சிக்கோட்டை.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பச்சையப்பன் பதில் சொல்கிறார்.

‘‘தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாக பூக்கும். இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும். இதை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதைப் பயிர் வளர்ச்சி ஊக்கியாகத்தான் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், இது வைரஸ் கிருமிகளால் வருகின்ற நோய்களையும் கட்டுப்படுத்துகின்றது. 5 லிட்டர் புளித்த மோர், 5 லிட்டர் தேங்காய்ப் பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைத்து, தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும்.
ஏழு நாட்கள் இவ்வாறு செய்தால், தேமோர்க் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள் பத்து லிட்டர் தண்ணீரில் 500 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் பயிர்களுக்குத் தெளிக்கலாம்.’’

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.