Published:Updated:

“வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!”

“வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!”
“வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!”

அனுபவசாலிகளின் அசத்தல் பாடம் த.ஜெயகுமார், துரை.நாகராஜன், படங்கள்: ரா.ராம்குமார், ரமேஷ் கந்தசாமி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

“வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!”

ஞ்சில்லாத காய்கறிகளை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில், தற்போது மாடித்தோட்டம் பரவலாகி வருகிறது. குறிப்பாக மாநகர, நகரப் பகுதிகளில் பரவலாகி வரும் மாடித்தோட்டங்கள் வீடுகளின் காய்கறித் தேவையை கணிசமாக நிறைவு செய்து வருகின்றன. இயற்கை ஆர்வலர்கள், இல்லத்தரசிகள், விவசாயம் சார்ந்த ஆர்வமுள்ளோர் எனப் பலரும் மாடித்தோட்டத்துக்கு மாறி வருகின்றனர். மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள், கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து வல்லுநர்கள் கூறிய விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

மாடித்தோட்டத்தில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த எக்ஸ்னோரா அமைப்பைச் சேர்ந்த பம்மல் இந்திரகுமார், “நடவு செய்யும்போது, மண்ணுடன் மாட்டுச் சாணத்தை கலந்து விதைத்தால், செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். காலையிலும், மாலையிலும் மாடித்தோட்டத்தைப் பராமரிப்பதே நமக்கு சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். குழாய் மூலம், தண்ணீர் விடும்போது அதிகம் வீணாகும். இப்படி அதிகமாக ஊற்றப்படும் தண்ணீரோடு உரச்சத்துக்களும் வெளியேறி விடும். இதனால், குறைவான அளவில் மண்ணை ஈரப்படுத்தும் அளவு மட்டுமே தண்ணீர் கொடுக்க வேண்டும். ஈரமான மண்ணோடு கூடிய மாடித்தோட்டப் பைகளை தரையில் நேரடியாக வைக்கும்போது, தளம் எப்போதும் ஈரமாகவே இருக்கும். இதனால் மாடியின் மேல்தளம் பழுதடைய வாய்ப்புண்டு. அதில் கவனம் தேவை.

செடிகளுக்கு பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தினால் செழிப்பாக வளரும்.  அறுவடை முடிந்த பிறகு ஒரு வாரம் தொட்டியைக் காய விட்டு மீண்டும் நடவு செய்ய வேண்டும். ரசாயன உரங்களைத் தவிர்க்க வேண்டும். நாட்டு விதைகளைப் பயன்படுத்துவது நல்லது. பஞ்சகவ்யா, சூடோமோனஸ்... போன்ற இயற்கை இடுபொருட்கள் தமிழ்நாட்டில், பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன.

“வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!”

வீட்டுத்தோட்டம் அமைப்பது என்பது, ஒவ்வொருவரின் அனுபவம், ஆர்வத்துக்கு தக்கப்படி மாறுபடும். விதைகளை மண்ணில் விதைத்த நாள் முதல் இயற்கையை உன்னிப்பாக கவனித்து வந்தால், நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். இப்படி கற்றுக் கொள்வதன் மூலம், மாடித்தோட்ட விவசாயத்தில் நீங்களே நிபுணராகி விடுவீர்கள். முயற்சியும், அதை சார்ந்த கற்றுக்கொள்ளும் பயிற்சியுமே நம்முடைய தேவை” என்றார்.

சென்னை, ஆழ்வார்திருநகரில் மாடித்தோட்டம் அமைத்திருக்கும் சுப, “தக்காளி, கத்திரி, மிளகாய் போன்றவற்றை குழித்தட்டில் நாற்று விடும்போது, ஒரு குழிக்கு ஒரு விதை வீதம்தான் விதைக்க வேண்டும். நாற்றுகளைத் தயார் செய்ய கொட்டாங்குச்சிகளையும் பயன்படுத்தலாம். குழிகள் 2 அங்குலத்தில் இருந்து 5 அங்குலம் வரை ஆழம் கொண்டவையாக இருக்க வேண்டும். நாற்று வளர்க்கும் குழித்தட்டு அல்லது கொட்டாங்குச்சியில் அதிகப்படியான நீர் வெளியேற துளை இருக்க வேண்டும். அதிகப்படியான நீர் இருந்தால், வேர்கள் அழுகி விடும். குழிகளில் மாட்டு எரு, செம்மண், தென்னை நார் ஆகிய மூன்றையும் கலந்து நிரப்பி விதைக்க வேண்டும்.

“வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!”

வளர்ந்த நாற்றுக்களை ஒரு தொட்டி அல்லது ஒரு பைக்கு இரண்டு நாற்றுகள் வீதம் நடலாம். பைகளில் மாட்டு எரு, செம்மண், தென்னை நார் ஆகிய மூன்றையும் கலந்து நிரப்பும்போது விளிம்பில் இருந்து ஒரு அங்குலம் இடைவெளி இருக்குமாறு நிரப்ப வேண்டும். இந்தப் பைகளின் அடியிலும் துளைகள் அவசியம்.

தேமோர்க்கரைசல், வேப்பம் பிண்ணாக்குக் கரைசல் ஆகியவற்றை வாரம் ஒரு முறை மாற்றி மாற்றி தெளித்து வந்தால், வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சிவிரட்டியாகவும் செயல்படும். நிலத்தில் விளையக்கூடிய காய்கறிகளை விட மாடித்தோட்டத்தில் விளையக்கூடிய காய்கறிகளுக்கு நோய்த்தொற்று குறைவாகத்தான் இருக்கும். ஒரு செடியில் ஒரு சுற்று அறுவடை முடிந்தவுடன்... மண்ணில் சிறிது வேப்பம் பிண்ணாக்கு இட்டு இரண்டு நாட்கள் காய வைத்து மீண்டும் பயன்படுத்தலாம். அறுவடை செய்யும்போது... தக்காளியை நன்கு பழுத்த நிலையிலும், அவரை, வெண்டை, கொத்தவரை, கத்திரி போன்றவற்றை இளம் காயாக இருக்கும் போதும் பறிக்க வேண்டும்” என்றார்.

தொடர்புக்கு,
இந்திரகுமார்,
செல்போன்: 994100-07057.
சுபஸ்ரீ,
செல்போன்: 96771-01627

மாடித்தோட்டம்...கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்கள் தவிர, அனைத்து மாதங்களிலும் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம்.

பாலிதீன் விரிப்பின் மேல் தொட்டிகளை வைத்தால், தரையில் ஈரக்கசிவு இருக்காது.

கொட்டாங்குச்சிகள், மண் மற்றும் சிமெண்ட் தொட்டிகள், பாலிதீன் பைகள், வீட்டைச் சுற்றியுள்ள நிலம் ஆகியவற்றில் செடிகளை வளர்க்கலாம்.

மாடித்தோட்டம் அமைக்க தேர்ந்தெடுக்கும் இடம்... தினமும் 6 மணி நேரம் சூரிய ஒளி படும் இடமாக இருக்க வேண்டும். மாடி, மாடிப்படிகள், ஜன்னல் ஓரங்கள் என எங்கு வேண்டுமானாலும் செடிகள் வளர்க்கலாம்.

தொட்டிகள், பைகளில் ஒரு பங்கு வளமான செம்மண் அல்லது வண்டல் மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு தொழுவுரம் ஆகிய மூன்றையும் நன்றாகக் கலந்து, தண்ணீர் தெளித்து நடவு செய்ய வேண்டும்.

தயார் நிலையில் கிடைக்கும் தேங்காய்நார்க்கட்டிகளோடு கூடிய செடி வளர்ப்புப் பைகளில்... 2 கிலோ தேங்காய்நார்க்கட்டிக்கு 10 லிட்டர் தண்ணீர்  என்ற விகிததத்தில் ஊற்ற வேண்டும். நன்கு ஊறிய பிறகு, 2 கிலோ தொழுவுரம், தலா 10 கிராம் பாஸ்போ-பாக்டீரியா, அஸோஸ்பைரில்லம்,  சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து நன்றாகக் கிளறி பிறகே நடவு செய்யவேண்டும்.

மாடித்தோட்டத்தில் நாட்டு விதைகள் பயன்படுத்துவது நல்லது. நாட்டு விதைகள் கிடைக்காத பட்சத்தில், கலப்பின வீரிய ஒட்டு ரக விதைகளையும் பலர் பயன்படுத்தி வருகிறார்கள். தோட்டக்கலை துறை மூலம் வீரிய ஒட்டு ரக விதைகள்தான் வழங்கப்படுகின்றன.

கத்திரிக்காய், மிளகாய், தக்காளி, காலிஃப்ளவர், முட்டைகோஸ், நூக்கல் உள்ளிட்ட பயிர்களை நாற்று விட்டுத்தான் நடவு செய்ய வேண்டும். அப்போதுதான் காய்ப்பு நன்றாக இருக்கும்.

வெண்டை, முள்ளங்கி, கொத்தவரை, செடி அவரை மற்றும் கீரை வகைகளுக்கு விதைகளை ஓர் அங்குல ஆழத்தில் நேரடியாக விதைக்கலாம்.

மாடித்தோட்டத்தில் பயிர்களின் ஊட்டத்துக்கு பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசல் இதில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற கணக்கில் பயன்படுத்தலாம்.

தேவையற்ற களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். செடிகளில் நோய் தொற்று ஏற்பட்ட பகுதிகளையும் அப்புறப்படுத்துவது நல்லது.

நோய் மற்றும் பூச்சித்தாக்குதலில் இருந்து பாதுகாக்க...வேப்பெண்ணெய், வேப்பங்கொட்டைக் கரைசல், இஞ்சி-பூண்டுக் கரைசல், புகையிலைக் கரைசல், இதில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற கணக்கில் பயன்படுத்தலாம்.

காலை, மாலை வேளைகளில், மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து லேசாக  தண்ணீர் தெளித்தாலே போதுமானது. தொட்டிகளில் தண்ணீர் தேங்கக்  கூடாது. மழைக் காலங்களில் போதுமான ஈரம் இருப்பதால், செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டியதில்லை.

இயற்கை அங்காடிகளில் விசாரித்தால், இயற்கை உரங்கள், நாட்டு விதைகள் கிடைக்கும். மாநகரப் பகுதியில் உள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்கள், தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் மாடித்தோட்ட உபகரணங்கள், இடுபொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தேமோர்க் கரைசல், மீன் அமிலத்தை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். வேப்பெண்ணெய் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

தொட்டி, பைகளில் ஒரே மாதிரியான பயிர்களை திரும்பத் திரும்ப வளர்க்காமல் சுழற்சி முறையில் மாற்றி மாற்றி வளர்ப்பது நல்லது. இதனால் மண்ணில் சத்துக்கள் நிலைநிறுத்தப்படும்.

அறுவடை முடிந்த பிறகு, செடியை வேரோடு பிடுங்கிவிட வேண்டும்.

சாணம், மாட்டுச் சிறுநீர் கிடைக்கும் வாய்ப்புள்ளவர்கள் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், இஞ்சி-பூண்டுக் கரைசலை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம். மாநகர பகுதிகளை ஒட்டி கோசாலைகள் செயல்படுகின்றன. அங்கே அணுகினால் இந்த சாணம், மாட்டுச் சிறுநீர் கிடைக்கும். சில கோசாலைகள் பஞ்சகவ்யா, மண்புழு உரம், தொழுவுரத்தை நேரடியாகவும் விற்பனை செய்து வருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு