Published:Updated:

90 நாள்... 800 கிலோ... ரூ.15,000...

தில்லான லாபம் கொடுக்கும் தினை...!காசி.வேம்பையன் படங்கள்: எஸ். தேவராஜன்

உடல் நலத்தை ஊக்கப்படுத்தும் கம்பு, தினை, வரகு போன்ற சிறுதானிய உணவுகளை 'வேஸ்ட் ஃபுட்’ என புறந்தள்ளிவிட்டு... அதீத நெய் பயன்பாடுள்ள, அளவுக்கு அதிகமான எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ள, கொழுப்புச் சத்து கொழுத்துக் கிடக்கக்கூடிய 'ஃபாஸ்ட் ஃபுட்’ உணவுகளில் உலகமே புதைந்து கொண்டிருக்கிறது. தெருவுக்கு இரண்டு ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் முளைக்கும் அதேவேகத்தில்... மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருக்கிறது என்பதை இந்தச் சமூகம் சற்றும்கூட சந்தேகப்பட்டு பார்க்காமல் இருப்பதுதான் வேதனை!  

90 நாள்... 800 கிலோ... ரூ.15,000...
##~##

பயன்பாடு குறைந்ததால், மானாவாரியாக விளைந்து உழவர்களையும், உண்பவர்களையும் சிறப்பாக வாழ வைத்துக் கொண்டிருந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு மத்தியிலும் பல விவசாயிகள் விடாப்பிடியாக சிறுதானியங்களை விளைவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்... புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள பி.எஸ். பாளையம் (புராணசிங்கு பாளையம்) பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன். இவர் இயற்கை முறையில் தினை சாகுபடி செய்து வருகிறார்.

காலைப் பொழுதொன்றில் ரவிச்சந்திரனை, அவரது தோட்டத்தில் சந்தித்தோம். ''பாரம்பரியமான விவசாயக் குடும்பம் எங்களுது. சொந்தமா 55 ஏக்கர் நிலமிருக்கு. பி.எஸ்சி. படிப்பை முடிச்சுட்டு, அப்பாவுக்கு உதவியா விவசாயத்துல இறங்கினேன். தொடர்ந்து 20 வருஷமா ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தித்தான் விவசாயம் பார்த்துக்கிட்டிருந்தோம். ஒருகட்டத்துல மகசூல் படிப்படியா குறைய ஆரம்பிச்சுது. 'இனி விவசாயம் சரிப்பட்டு வராது. இதை நம்பிப் புண்ணியமில்லை’னு ரைஸ் மில் ஆரம்பிச்சோம். நான்தான் மில்ல கவனிச்சுட்டுருந்தேன்.

அப்பா இறந்ததுக்கப்பறம்... திரும்பவும் 25 ஏக்கர்ல விவசாயத்தைப் பார்க்க ஆரம்பிச்சேன். என் தம்பி 30 ஏக்கர்ல விவசாயம் செஞ்சுட்டுருக்கான். அவன்தான், இயற்கை விவசாயத்தை எனக்கு அறிமுகப்படுத்தினான். ஆரம்பத்துல சாம்பல், மாட்டுச் சாணம் ரெண்டையும்தான் பயன்படுத்தினேன். அதுல செலவு கம்மியா இருந்ததால, ஓரளவுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிச்சுது. அப்பறம் விழுப்புரத்துல நடந்த 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சிக்குப் போய் கலந்துக்கிட்டேன். அதுல இருந்து 'ஜீரோ பட்ஜெட்’ முறையிலதான் விவசாயம் பார்த்துக்கிட்டிருக்கேன்.

10 ஏக்கர்ல நெல்லி; 2 ஏக்கர்ல வாழை மற்றும் பழ மரங்கள்; 2 ஏக்கர்ல தேக்கு; 7 ஏக்கர்ல மரவள்ளி; 1 ஏக்கரில் சாமை; 1 ஏக்கர்ல தினைனு சாகுபடி செஞ்சுக்கிட்டிருக்கேன். 2 ஏக்கர்ல கேழ்வரகு போட்டு அறுவடை பண்ணிட்டேன். எந்த விவசாயம் பாத்தாலும்... கேழ்வரகு, தினை, சாமைனு சிறுதானியங்களையும் விடாம எங்கப்பா சாகுபடி செய்வார். அதனால, நானும் சிறுதானியங்கள விடறதேயில்ல'' என்று முன்னுரை கொடுத்த ரவிச்சந்திரன், ஒரு ஏக்கருக்கான தினை சாகுபடிப் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

ஏக்கருக்கு 2 கிலோ விதை!

90 நாள்... 800 கிலோ... ரூ.15,000...

'தினை சாகுபடி செய்ய, வடிகால் வசதியுள்ள மணல்பாங்கான மண்வகை ஏற்றது. இதன் சாகுபடி காலம் 3 மாதங்கள். ஆடி, ஆவணி ஆகிய பட்டங்கள் ஏற்றவை. முதலில் இரண்டு சால் சட்டிக் கலப்பையிலும், அடுத்து இரண்டு சால் கொக்கிக் கலப்பையிலும் குறுக்கு-நெடுக்காக உழவு செய்ய வேண்டும். இரண்டு கிலோ விதையை 5 கிலோ மணலுடன் கலந்து, 2 லிட்டர் பீஜாமிர்தத்தில் முக்கி எடுத்து நிழலில் உலர்த்தி விதைநேர்த்தி செய்த பிறகு, விதைத்து கொக்கிக் கலப்பை மூலம் ஒரு உழவு செய்ய வேண்டும்.

பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை.!

90 நாள்... 800 கிலோ... ரூ.15,000...

சாகுபடி செய்யும் காலம் மழைக்காலம் என்பதால், மண்ணில் இருக்கும் ஈரப்பதத்திலேயே 7-ம் நாளில் முளைப்பு எடுத்து விடும். மழை இல்லாத நேரங்களில் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து

15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டினாலே போதுமானது. 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். அதற்கு மேல் பயிர் வளர்ந்து மூடிக் கொள்ளும். 20, 40 மற்றும் 60-ம் நாட்களில்... 60 லிட்டர் தண்ணீரில்,

6 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து, வயல் முழுவதும் தெளிக்க வேண்டும். இதற்கு மேல் எந்த இடுபொருட்களும் கொடுக்கத் தேவையில்லை.

தினையைப் பொறுத்தவரை பூச்சி, நோய் தாக்குதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. 70-ம் நாளில் கதிர் பிடித்து, 90-ம் நாளில் முற்றி, அறுவடைக்குத் தயாராகி விடும். தினைக் கதிர்களை மட்டும் அறுவடை செய்து, சிமெண்ட் களத்தில் காய வைத்து, அதன் மேல் டிராக்டர் மூலம் கதிரடித்தால்... தூசும், மணிகளுமாக பிரிந்துவிடும்'  

3 மாதங்களில்... 800 கிலோ!

சாகுபடிப் பாடத்தை முடித்த ரவிச்சந்திரன், ''சுத்தப்படுத்தின பின்னாடி ஏக்கருக்கு சராசரியா 800 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்கும். கிலோ 25 ரூபாய்னு வித்தா, 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் செலவு போக, கிட்டத்தட்ட 14 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். நான் மதிப்புக் கூட்டி விக்கலாம்னு இருக்கேன். அப்படி வித்தா இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும்'' என்றார் திட்டம் போட்டவராக.

உயர வைத்த ஊட்டச்சத்து மாவு...

 ராகி, சோளம், கம்பு போன்ற பாரம்பரியம் மிக்க சிறுதானியங்களில் இருந்து மதிப்புக்கூட்டிய பொருட்களைத் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார், திருப்பூர் மாவட்டம், முத்தூர் பகுதியைச் சேர்ந்த செண்பகம். மாற்றுத் திறனாளியான செண்பகம் தயாரிக்கும் பொருட்களை விற்பதற்கு அவருடைய கணவர் சிவசுப்பிரமணியன் உதவி செய்து வருகிறார்.

 ஆரோக்கியத்துக்கு சிறுதானியங்கள்!

செண்பகத்தைச் சந்தித்துப் பேசினோம். ''ஈரோடுதான் நான் பொறந்து வளர்ந்த ஊரு. சின்ன வயசுல போலியோவால வலதுகால் ஊனமாயிடுச்சு. நாங்க மாவு மில் வெச்சிருக்கோம். அங்க வர்ற பெண்கள்... தினை, வரகு மாதிரியான பொருட்கள்லாம் கிடைக்கிறதில்லைனு சொல்வாங்க. அதையெல்லாம் வாங்கி அரைச்சு வித்தா என்னனு எனக்கு ஒரு எண்ணம் தோணுச்சு. அதில்லாம பிறக்குற குழந்தைகள்லாம் ஆரோக்கியமா பிறக்கணும்கிறதுக்காக நாம ஏதாவது செய்யணும்னு எனக்கு ஒரு எண்ணம் அடிக்கடி தோணும். அந்த அடிப்படையிலதான் சிறுதானியங்களைப் பயன்படுத்தி ஊட்டச்சத்து மாவு தயாரிச்சுட்டு இருக்கேன்.

மதிப்புக் கூட்டினால் விற்பனைக்குப் பயமில்லை!

தமிழ்நாடு சமூகநலத்துறை சார்பில் நடந்த ஊட்டச்சத்து தயாரிப்புப் பயிற்சியில பயிற்சி எடுத்துட்டு சிறுதானியங்கள், முளைகட்டிய பயிர்களை வெச்சு ஊட்டச்சத்து மாவு தயாரிக்க ஆரம்பிச்சேன். குடிசைத் தொழிலுக்கான அனுமதியும் வாங்கியிருக்கோம்.

90 நாள்... 800 கிலோ... ரூ.15,000...

ராகி, கோதுமை, கம்பு, தினை, பாசிப்பயறு, அரிசி, பொட்டுக்கடலை, சோயா, முந்திரி, பாதாம், பார்லி, ஏலக்காய் எல்லாத்தையும் அரைச்சு 25 கிலோ அளவுக்கு மாவு தயாரிச்சு பாலிதீன் பாக்கெட்ல போட்டு கடைகள்ல கொடுத்தோம். மக்கள் நிறைய வாங்க ஆரம்பிச்சவுடனே எங்களுக்கு ஆர்டரும் அதிகமா கிடைச்சுது. கொஞ்சம் கொஞ்சமா தயாரிப்பு அளவைக்கூட்டி இப்ப டப்பாக்கள்ல அடைச்சு விக்கிற அளவுக்கு வளந்துட்டோம்.

இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா, சிறுதானியங்களை விரும்பிச் சாப்பிட மக்கள் தயாராத்தான் இருக்காங்க. ஆனா, அதை ஃபாஸ்ட் ஃபுட் காலத்துக்கு ஏத்த மாதிரி நாம மாத்திக் கொடுத்தா... விற்பனைக்கு பங்கமே இருக்காது. தேவை அதிகமாச்சுனா விவசாயிகளும் அதிகளவுல உற்பத்தி பண்ண ஆரம்பிச்சுடுவாங்க'' என்றார் மதிப்புக்கூட்டிய 'திறனாளி’ செண்பகம்.

- ஜி. பழனிச்சாமி.
படங்கள்: தி. விஜய்

 சிறுதானியங்களை ஒதுக்கினோம்... பெருவியாதிகளில் சிக்கினோம்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே இருக்கும் ஆன்டரபட்டியைச் சேர்ந்த 'சிறுதானிய சமையல்’ வல்லுநர் ராஜமுருகன் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

90 நாள்... 800 கிலோ... ரூ.15,000...

''முன்னயெல்லாம் தீபாவளி, பொங்கல் மாதிரி பண்டிகை அன்னிக்கு மட்டும்தான் நெல் அரிசி சமையல் இருக்கும். மத்த நாட்கள்ல சோளம், சாமை, தினை, கேழ்வரகு, குதிரைவாலி மாதிரியான தானியங்களைத்தான் சாப்பிடுவாங்க. அதனாலதான் அந்தக் காலத்துல ஆரோக்கியமா இருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா அதையெல்லாம் ஒதுக்க ஆரம்பிச்ச பிறகுதான் சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு...னு ஏகப்பட்ட வியாதிகள்ல சிக்கிட்டிருக்கோம்.

நான் அஞ்சு வருஷமா சிறுதானியங்களை வெச்சு செய்யுற நூத்துக்கு மேற்பட்ட பாரம்பரிய சமையல் முறைகளை சேகரிச்சு வெச்சுருக்கேன். இப்போ இருக்குற இளைய தலைமுறைக்குத்தான் சிறுதானியங்களை சுத்தமா தெரியலை. அரிசி மட்டும்தான் அவங்களுக்குத் தெரிஞ்ச தானியமா இருக்கு. ஆனா, தினை அரிசியில கூட பாயாசம், பொங்கல், புலாவ், சீடை, தட்டு வடை, கலவை சாதம், மூலிகை சாதம், பருப்பு சாதம், தேங்காய்-தினை இனிப்பு சாதம், தினை-தேன் மாவுனு... ஏகப்பட்ட சுவையான, சத்தான பலகாரங்களைச் செஞ்சு சாப்பிடலாம்'' என்றார் ராஜமுருகன்.  

தொடர்புக்கு, ராஜமுருகன்,
அலைபேசி (செல்போன்):  98426-72439.
தொடர்புக்கு, செண்பகம், அலைபேசி (செல்போன்): 94421-23235.

தொடர்புக்கு
ரவிச்சந்திரன்,
அலைபேசி (செல்போன்): 94432-36983.

அடுத்த கட்டுரைக்கு