Published:Updated:

நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை!

நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை!
நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை!

50 சென்ட் நிலத்தில், ஒரு ஏக்கர் விளைச்சல்! இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை!

*ஆடிப் பட்டம் சிறந்தது.

*மணல் கலந்த செம்மண், வண்டல் மண்,

*மணல் கலந்த வண்டல் மண் ஆகிய நிலங்களுக்கு ஏற்றது.

*வறட்சியைத் தாங்கி வளரும்.

*அதிக நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது.

ண்ணெய் எடுப்பதற்காகவும், உணவுப் பண்டமாகவும் நிலக்கடலை அதிகம் பயன்படுகிறது. இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால்தான் இறவையிலும், மானாவாரியிலும் அதிகளவில் பயிரிடுகிறார்கள். தென்மாவட்டங்களில் இறவையை விட மானாவாரியில்தான் அதிக பரப்பில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. இந்நிலையில் வறட்சியைத் தாங்கி வளரும் புதிய நிலக்கடலை ரகத்தை வெளியிட்டுள்ளது பாபா அணு ஆராய்ச்சி நிலையம்.

ஒரு ஏக்கர் பரப்பில் ஒட்டு ரகம் தரும் மகசூலை 50 சென்ட் நிலத்தில் இந்த ரகம் தருகிறது என்கிறார், விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் தாலூகா, வத்திராயிருப்பில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, டபிள்யூ. புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுகேந்திரன். 

கடந்த ஆண்டு ஆடிப்பட்டத்தில் விதைத்து அறுவடை செய்திருந்த கடலை  வயலில், சில தப்புச் செடிகள் வளர்ந்திருந்தன. அவற்றிலிருந்து கடலைகளைப் பறித்தபடி நம்மிடம் பேசிய சுகேந்திரன்,

நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை!

‘‘இதுதான் என்னோட பூர்வீக கிராமம். பாரம்பர்யமாவே விவசாயக் குடும்பம்தான். வழக்கமா நெல், பருத்தி, தென்னை விவசாயம் செய்வோம். காலேஜ்ல படிக்கும்போது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில கலந்துகிட்டேன். அதனால, காலேஜில டி.சியைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அந்த நேரத்துல போலீஸ் வேலைக்கு ஆள் எடுத்தாங்க. நானும் அதுல கலந்துகிட்டு செலக்ட் ஆகிட்டேன். ஆனா, அந்த வேலை அப்பாவுக்குப் பிடிக்கலை. ‘போலீஸ் வேலையெல்லாம் வேண்டாம், ஒழுங்கா விவசாயத்தைப் பாரு...’னு சொல்லிட்டாரு. அப்பா பேச்சைத் தட்ட முடியாம, விவசாயத்துல இறங்கிட்டேன்.

அப்பா காலத்துல சாணம் போட்டு செய்யுற இயற்கை முறை விவசாயம்தான் நடந்துச்சு. பசுமைப் புரட்சிக்குப் பிறகுதான் எங்க நிலத்துலயும் ரசாயனத்தைக் கொட்டி மண்ணைப் பாழாக்கினோம்.

2003-ம் வருஷத்துக்குப் பிறகுதான் இயற்கை விவசாயம், நஞ்சில்லா விவசாயம்ங்கிற வார்த்தையையே கேள்விப்பட்டேன். நம்மாழ்வார் ஐயாவின் கருத்துக்களையும், அவர் வலியுறுத்திய இயற்கை விவசாயத்தைப் பற்றியும் தினசரிகளில் படிச்சேன். தொடர்ந்து, ‘பசுமை விகடன்’ இதழ் வெளிவரவும், இயற்கை விவசாயம் பற்றிய தெளிவான புரிதல் கிடைச்சது.

‘ரசாயனம் உரம் போட்ட இடத்துல ஒரு மண்புழுவைக்கூடப் பார்க்க முடியாது’னு ஒரு கட்டுரையில் நம்மாழ்வார் அய்யா சொல்லியிருப்பார். என் தோட்டத்துலயும் மண்புழுவை நான் பார்த்ததே இல்லை. அப்போதான் அவர் சொன்னதை உணர்ந்தேன். அதுல இருந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். இயற்கை விவசாயத்துக்கு மாறி பத்து வருசம் ஆகுது’’ என்று முன்கதை சொன்னவர், தனது இயற்கை விவசாய அனுபவங்களைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை!

வழக்கத்தை விட கூடுதல் மகசூல்!

‘‘அப்பாவோட மறைவுக்குப் பிறகு அண்ணன் தம்பிகளுக்கு பாகம் பிரிச்சது போக எனக்கு ஆறு ஏக்கர் நிலம் கிடைச்சுது. அதுல, ரெண்டு ஏக்கர் நிலத்துல லக்னோ-49 ரக கொய்யாவை நட்டு இருக்கேன். அதுக்கு ரெண்டு வயசாகுது. மீதமுள்ள நாலு ஏக்கர் மானாவாரி நிலம். இதுல மொச்சை, உளுந்து, தட்டாம்பயறு (தட்டைப்பயறு)னு சீசனுக்கு ஏத்தமாதிரி போடுவேன். ஆனா, எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது. அதனால இப்போ நாலு வருசமா நிலக்கடலையை சாகுபடி செய்றேன்.

இது, மணல் கலந்த செம்மண் நிலம். ரெண்டு வருசத்துக்கு முன்னால ஒரு ஆங்கில செய்தித்தாள்ல, மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ‘டி.ஜி-37-ஏ’ ரக நிலக்கடலை வறட்சியைத் தாங்கி வளர்றதோட, அதிகமான மகசூலையும் தரும். மானாவாரி நிலத்துக்கு மிகவும் ஏற்ற ரகம். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சோதனைக்காக நடவு செய்யப்பட்டுள்ளதுனு ஒரு செய்தியைப் படிச்சேன். உடனே காந்திகிராம பல்கலைக்கழகத்துக்குப் போயி பத்து கிலோ விதைக்கடலை வாங்கிட்டு வந்து, பத்து சென்ட் நிலத்துல மானாவாரியாக விதைச்சேன். 110 கிலோ வரை மகசூல் கிடைச்சுது. அந்தக் கடலையை விதைக்காக சேமிச்சுவச்சு ஆடிப்பட்டத்துல விதைச்சேன். வழக்கமான ஒட்டு ரகத்தை விட கூடுதல் மகசூல் கிடைச்சது. மூணு ஏக்கர் இடத்துல ஒட்டு ரக கடலையும், 50 சென்ட் நிலத்துல அணு ஆராய்ச்சி மையத்தின் கடலையும் போட்டு அறுவடை செய்திருக்கேன்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்ன சுகேந்திரன், வருமானம் பற்றி சொல்லத் தொடங்கினார்.

நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை!

ஒரு ஏக்கர் மகசூல் அரை ஏக்கரில் கிடைக்கும்!

‘‘ஒரு ஏக்கர் பரப்புல ஒட்டு ரக நிலக்கடலை சாகுபடி செஞ்சதுல 1,150 கிலோ கிடைச்சுது, ஆனா, அணு ஆராய்ச்சி மைய கடலை 50 சென்ட் பரப்புலயே 1,100 கிலோ மகசூல் கிடைச்சுது. ரெண்டு ரக கடலைக்குமே ஒரே விலைதான். கிலோ 30 ரூபாய்னு வியாபாரிகிட்டயே விற்பனை செய்திட்டேன். பருப்பா உடைச்சு வித்தா கூடுதலா லாபம் கிடைச்சிருக்கும். கிடைச்சது போதும்னு கடலையாவே வித்துட்டேன். கடலைச்செடிகளை நிலத்தில் அப்படியே காய விட்டு அடுத்த முறை விதைக்கும் போது அடியுரமாக மடக்கி உழுறதுக்காக போட்டிருக்கேன்.

ஒரு ஏக்கர், ஒட்டு ரக கடலை மூலமா 34,500 ரூபாய் வருமானம் கிடைச்சுது. இதுல செலவு போக, 14,900 ரூபாய் லாபமா கிடைச்சுது. அணு ஆராய்ச்சி மைய ரகத்துல, 50 சென்ட்ல 33,000 ரூபாய் வருமானமா கிடைச்சுது. இதுல செலவு போக 24,450 ரூபாய் லாபமா கிடைச்சுது. தண்ணீர் செலவே இல்லாம மானாவாரியா வெறும் 50 சென்ட் இடத்துல இது, நல்ல லாபம்தான்’’என்றவர் சந்தோஷத்தில் கை நிறைய கடலைகளை அள்ளிக் காட்டினார்.     

தொடர்புக்கு,
சுகேந்திரன்,
செல்போன்: 99940-65759.

இப்படித்தான் செய்யணும் சாகுபடி!

50 சென்ட் நிலத்தில் அணு ஆராய்ச்சி மைய ரகமான ‘டி.ஜி.37-ஏ‘ ரக நிலக்கடலையை மானாவாரியில் சாகுபடி செய்யும்விதம் குறித்து சுகேந்திரன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் பாடமாக இங்கே...

ஆடிப்பட்டம் ஏற்றது..!

சித்திரை மாதம் கோடை உழவு செய்ய வேண்டும். அக்னி நட்சத்திர வெயிலில் உழவு செய்தால், மண்ணில் உள்ள பூச்சிகள், புழுக்கள், கூடுகள் வெயிலில் பட்டு சுருண்டு சாகும். உழவு செய்த பிறகு, ஆறு நாள் இடைவெளி விட்டு மீண்டும் உழவு செய்ய வேண்டும். இதேபோல, 6 நாள் இடைவெளியில் மொத்தம் நான்கு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, ஆனி மாதம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு நான்கு டிராக்டர் மட்கிய குப்பையை சிதறி விட்டு ஓர் உழவு ஓட்டவேண்டும். அப்போதுதான் மண் பொலபொலப்பாக இருக்கும். அப்படி இருந்தால்தான் முளைப்புத் திறன் அதிகரிக்கும். ஆடி மாத தொடக்கத்தில் ஒரு மழை பெய்ததும் புல், களைகள் முளைத்து நிற்கும். களையை அழிப்பதற்காக, ஆடி மாதக் கடைசியில் ஓர் உழவு உழுதுவிட்டு, மீண்டும் ஒரு மழை பெய்ததும் ஒரு சால் ஓட்டி சாலில் விதைக் கடலையைப் போட வேண்டும். 50 சென்ட் நிலத்துக்கு 25 கிலோ (அணு ஆராய்ச்சி மைய ரகம்) விதைக் கடலை தேவைப்படும். ஆடி மாதக் கடைசியில் வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதால், முளைப்புத்திறன் நன்றாக இருக்கும்.

இரண்டு முறை களையெடுப்பு..!

விதைத்த 8 முதல் 10 ம் நாளில் முளைப்பு தெரியும். 25 மற்றும் 35 ம் நாட்களில் களையெடுக்க வேண்டும். முதல் களை எடுக்கும் போது லேசாக மணலைச் சுரண்டி களை எடுக்க வேண்டும். இரண்டாவது களை எடுக்கும் போது நிலத்தை சற்று ஆழமாகக் கொத்தி மண்ணை பொலபொலப்பாக்கி வைக்க வேண்டும். 35 முதல் 40 நாளில் பூ பூத்து விடும். 40-ம் நாள், ஏற்கெனவே களை எடுக்கும் போது பொலபொலப்பாக்கி வைத்திருக்கும் மண்ணை செடியோடு அணைத்து விட வேண்டும். மண் அணைத்த பகுதியில்தான் கடலைச்செடி வேர்பிடித்து மண்ணில் இறங்கி வளரும்.

இரண்டு முறை இ.எம்..!

மண் அணைத்தவுடன் 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி இ.எம் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். அதேபோல, 55-ம் நாளும் இ.எம் தெளிக்க வேண்டும். இயற்கை முறை விவசாயத்தில் நோய்த்தாக்குதல் ஏற்பட வாய்ப்பு குறைவு. இதைத் தவிர வேறெந்த பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. 100 முதல் 105 நாட்களுக்கு மேல்மட்ட இலைகளில் கரும்புள்ளி மற்றும் மஞ்சள் நிறம் தென்படும். அந்த நேரத்தில் சில செடிகளைப் பறித்து கடலைக் காய்களை உரித்தால், ஓட்டின் உட்புறம் பழுப்பு கலந்த கறுப்பு நிறத்தில் இருந்தால், அறுவடைக்கு தயார் ஆகிவிட்டது எனத் தெரிந்துகொள்ளலாம். 110 முதல் 120 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம்.’’

திரட்சியான காய்கள்!

‘டி.ஜி.-37-ஏ‘ ரக கடலைச்செடியின் வேர் மற்றும் தண்டு மிக தடிமனாகவும், நீளமாகவும் உள்ளது. தடிமனான தண்டுகளில் நீரைத் தேக்கி வைத்து வறட்சியைத் தாங்கி வளர்கிறது. இதன் அடிப்பரப்பில் கடலைகளும் திரட்சியாக கொத்தாக முளைத்துள்ளன. குறைவான மழைநீரில் நல்ல மகசூலை இந்த ரகம் தந்துள்ளதோடு அதிக நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொண்டதாக இருக்கிறது என்பது சுகேந்திரனின் அனுபவம்.

‘‘விதை நிலக்கடலை விற்பனைக்கு’’

நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை!பாபா அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள டி.ஜி.,37  நிலக்கடலை ரகத்தை  தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த திண்டுக்கல் காந்திகிராம வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது,

‘‘நீர் பற்றாக்குறையால் பணப்பயிராக இருந்த நிலக்கடலை நஷ்டபயிராக மாறியுள்ளது. புதிய ரகத்துக்கு நீர் தேவை குறைவு. மற்ற ரகங்களை போல், புதிய ரகத்தையும் 105 நாட்களில் அறுவடை செய்யலாம். நிலக்கடலை திரட்சியாக இருக்கும். எண்ணெய் தன்மை அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் ஆடி மற்றும் கார்த்திகைப் பட்டங்களில் சாகுபடி செய்யலாம். இதன் விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தோம். இப்போது விலைக்கு விற்பனை செய்கிறோம்’’ என்றார்.

தொடர்புக்கு, செல்போன்:  94425-42915.

“பாதிப்பு இல்லை!”

‘கதிரியக்க முறையில் உருவாக்கப்படும் விதைகளில் ஏதேனும் ஆபத்து உண்டா?’ என்று திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். வைத்தியநாதனிடம் கேட்டோம், அதற்கு “கதிரியக்க முறையில் உருவாக்கப்பட்ட ரகத்தால் பாதிப்பு ஏதும் இல்லை. விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்க வேண்டுமென்பதற்காக  பாபா அணு ஆராய்ச்சி மையம் கதிரியக்க முறையில் சில வீரிய ஒட்டு ரகங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

எண்ணெய் வித்துக்களான நிலக்கடலையிலும் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையது என தமிழ்நாட்டில் பரவலாக விவசாயிகள் இதைப் பயிரிடுகின்றனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கோ-6 மானாவாரி நிலத்துக்கும், கோ-7 மானாவாரி இறவையிலும் வரும். அதேபோல திண்டிவனம் TMV-6 மற்றும் 7 ஆகியவை மானாவாரிக்கும் இறவைக்கும் வரும். விருத்தாச்சலம் VRI-7 மானாவாரிக்கும், விருத்தாச்சலம்-6  மற்றும்  விருத்தாச்சலம்-8 மானாவாரி, இறவைக்கும் வரும். விருத்தாச்சலம்-8 வீரிய ஒட்டு ரக நிலக்கடலை. இந்த ரகம்தான் புதிதாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விருத்தாச்சலம்-8 ரகமும் வறட்சியைத் தாங்கி வளர்ந்து நல்ல மகசூலைத் தரக்கூடியது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தபட்ட ரகங்கள் அனைத்தும் ஆடி, கார்த்திகை ஆகிய இரண்டு பட்டத்துக்கும் வரும். வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகத் செய்த தேர்வு செய்யப்பட்ட ரகங்கள், கலப்பு செய்து உருவாக்கப்பட்ட ரகங்கள். இவற்றின் விளைச்சலோடு கதிரியக்க முறையில் உருவாக்கப்பட்ட ரகங்களின் விளைச்சலையும் ஒப்பிடக்கூடாது’ என்றார்.

தொடர்புக்கு, வைத்தியநாதன், செல்போன்: 94424-72103.

மருத்துவ பயன்கள்!

நிலக்கடலை, வேர்க்கடலை, கடலை, மணிலாகொட்டை (மல்லாட்டை ), மல்லாங்கொட்டை, கடலைக்காய் என இதற்கு பல பெயர்கள் உண்டு. பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புத்துளை நோய் வராது. தினமும் 30 கிராம் அளவுக்கு நிலக்கடலை சாப்பிட்டு வந்தால், பித்தப்பைக் கல் உருவாவதைத் தடுக்கலாம்.

நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இருப்பதால், இதய வால்வுகளைப் பாதுகாத்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. பெண்களின் இயல்பான ‘ஹார்மோன்‘ வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன், மார்பகக்கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பாதாம், பிஸ்தா, முந்திரியை விடவும் நிலக்கடலையில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.    ஆனால், நிலக்கடலையை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடக்கூடாது.

கடலை சாகுபடியில் கவனிக்க வேண்டியவை!

உலக அளவில் இந்தியா எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதல் இடத்திலும் உள்ளது.    நிலக்கடலைக்கு ஊடுபயிராக தட்டைப்பயறு, கம்பு, உளுந்து, துவரை, சூரியகாந்தி ஏற்றது. இதனால் நோய்த்தாக்குதல் குறைவதுடன் உபரி வருமானமும் பெறலாம். அறுவடை நேரத்தில் தண்ணீர் தெளித்தால், கடலைச் செடியைப் பறிக்க சுலபமாக இருக்கும். மண்ணில் ஈரப்பதம் இருந்தால், தண்ணீர் தேவையில்லை.

பறித்த செடிகளைக் குவியலாகப் போட்டு வைக்கக் கூடாது. ஈரமாக இருக்கும்போது செடி வளரத் தொடங்கும். அறுவடை செய்த கடலைக் காய்களை 4 முதல் 5 நாட்கள் வெயிலில் காய வைத்துத் தான் சேமித்து வைக்க வேண்டும். கடலை மீது ஈரப்பதம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இறவை சாகுபடியை விட மானாவாரி சாகுபடியில் அடியுரம் கூடுதலாகப் போட்டால்தான் வறட்சியைத் தாங்கி வளரும். செம்மண் நிலத்தைப் பொறுத்தவரையில் மண் இறுக்கம்தான் கடலையின் மகசூலைப் பாதிக்கிறது. எனவே, மண் இறுக்கம் போக்க, ஆழமான உழவு மற்றும் குறுக்கு உழவு அவசியம். மானாவாரியைப் பொறுத்தவரை மழை தாமதமாக பெய்தால்கூட கவலையில்லை. முளைத்து, பூத்த பிறகு மழை கிடைத்தால் போதும். காய்ச்சலுக்குப் பிறகான தண்ணீர் பாய்ச்சலும் நல்ல மகசூலைத் தரும்.

அடுத்த கட்டுரைக்கு