Published:Updated:

முள்ளு கத்திரி... குண்டு கத்திரி... கலக்கல் லாபம் கொடுக்கும் கத்திரி!

முள்ளு கத்திரி... குண்டு கத்திரி... கலக்கல் லாபம் கொடுக்கும் கத்திரி!

ஒரு ஏக்கர்... ரூ 1,80,000 லாபம்!துரை.நாகராஜன், படங்கள்: தே.அசோக்குமார்

முள்ளு கத்திரி... குண்டு கத்திரி... கலக்கல் லாபம் கொடுக்கும் கத்திரி!

ஒரு ஏக்கர்... ரூ 1,80,000 லாபம்!துரை.நாகராஜன், படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
முள்ளு கத்திரி... குண்டு கத்திரி... கலக்கல் லாபம் கொடுக்கும் கத்திரி!
முள்ளு கத்திரி... குண்டு கத்திரி... கலக்கல் லாபம் கொடுக்கும் கத்திரி!

*ஏக்கருக்கு 200 கிராம் விதை

*45-ம் நாளில் இருந்து அறுவடை

*6 மாதங்கள் தொடர்ந்து அறுவடை

*பண்டிகை காலங்களில் கூடுதல் விலை

ன்றாட உணவில் அதிகம் சேர்க்கப்படும் காய்களில் கத்திரிக்காயும் ஒன்று. சாம்பார், புளிக்குழம்பு, கூட்டு, பொரியல், வதக்கல், வற்றல்... எனப் பல வகையில் உணவாகப் பயன்படுவதால், கத்திரிக்காய்க்கு எப்போதும் சந்தையில் தேவை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், கத்திரியில் பூச்சிகள், புழுக்கள் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் அதை சாகுபடி செய்ய தயக்கம் காட்டுவார்கள். அத்தகைய சூழ்நிலையிலும் இயற்கை முறையில் வெற்றிகரமாக கத்திரி சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார்.

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேருர் செல்லும் சாலையில் உள்ளது, குருவிமலை கிராமம். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, அசோக்குமாரின் பண்ணை. விடிந்தும் விடியாத ஓர் அதிகாலை வேளையில் அவரின் தோட்டத்துக்குச் சென்றோம். சந்தைக்கு விரைவாக அனுப்பும் மும்முரத்தில் காய் பறித்துக் கொண்டிருந்த அசோக்குமாரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டதும், சற்றுநேரம் காத்திருக்கச் சொன்னார். பறித்த காய்களை ஓரிடத்தில் கொட்டிவிட்டு வந்த அசோக்குமார், வேலை செய்த களைப்பை மறந்து உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

முள்ளு கத்திரி... குண்டு கத்திரி... கலக்கல் லாபம் கொடுக்கும் கத்திரி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போ நெசவாளி... இப்போ விவசாயி!

‘‘தாத்தா காலத்துல இருந்தே விவசாயம் செய்றோம். எனக்கு படிப்பு வரலைங்கிறதால ஸ்கூலுக்குப் போறதை நிறுத்திட்டேன். சின்ன வயசுல இருந்தே, விவசாயத்துல அப்பாவுக்கு உதவி செய்ய ஆரம்பிச்சேன். ஆனா அப்பா, ‘படிக்கப் போகலைனா வேலைக்குப் போ. விவசாயம் உனக்கு சரிப்பட்டு வராது’னு சொல்லி நெசவு வேலைக்கு அனுப்பிட்டார். அந்த வேலை எனக்குப் பிடிச்சுப்போகவும், முழுநேர நெசவாளனா மாறி பட்டு நெசவுத் தொழில் செய்ய ஆரம்பிச்சுட்டேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லா போயிகிட்டு இருந்தது. அப்புறம் பல காரணங்களால நெசவுத்தொழில் படுக்க ஆரம்பிச்சுடுச்சு. பிறகுதான் அப்பா விட்டுட்டு போன நிலத்தில் விவசாயம் செய்ய வந்தேன். முழு ஈடுபாடோட செய்றதால பத்து வருஷமா வெற்றிகரமா விவசாயம் செய்றேன். ஆரம்பத்துல, நானும் ரசாயன உரத்தைப் போட்டுதான் விவசாயம் செஞ்சேன். இப்போ மூணு வருஷமாதான் இயற்கை விவசாயம் செய்றேன். காட்டுப்பாக்கம் கே.வி.கே-வில்தான் இயற்கை விவசாயம் குறித்து ஆலோசனை கொடுத்தாங்க. அதுக்கப்பறம்தான் இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன்” முன்கதை சொன்ன அசோக்குமார், கத்திரிக்காய்களை மூட்டை பிடித்து விட்டு வந்து தொடர்ந்தார்.

கத்திரியில் நிலையான வருமானம்!

“மொத்தம் 4 ஏக்கர் நிலமிருக்கு. களிமண் நிலம். போர்வெல் முலமாதான் பாசனம் செய்றேன். அரை  ஏக்கர்ல ‘காஞ்சி குண்டு கத்திரிக்காய்’ (வீரிய ரகம்) இருக்கு. அரை ஏக்கர்ல முள்ளு கத்திரிக்காய் (நாட்டு ரகம்)இருக்கு. மீதி நிலத்துல மல்லி, முள்ளங்கி, புடலை, வெண்டைக்காய்னு போட்டிருந்தேன். மல்லி, முள்ளங்கி ரெண்டுலயும் அறுவடை முடிஞ்சுடுச்சு. புடலை, மழையால ரொம்ப சேதமாகி, விளைச்சல் சொல்லிக்கிற மாதிரி இல்லை. வெண்டையில் மட்டும்தான் ஓரளவுக்கு வருமானம் எடுக்க முடிஞ்சது. அதுவும் இப்போ முடியுற நிலையில இருக்கு. கத்திரிதான் நிலையான வருமானம் கொடுத்திட்டு இருக்கு.

முள்ளு கத்திரிக்கு நல்ல விலை!

காஞ்சி குண்டு ரகம் அதிகமா விளையும், விலை குறைவாதான் கிடைக்கும். முள்ளு கத்திரிக்காய்க்கு நல்ல விலை கிடைக்கும். ஆனா, மத்த காய்கறிங்க மாதிரிதான் கத்திரிக்காயும். நிலையான விலை இருக்காது. சந்தையில ஏறி இறங்கிட்டே இருக்கும். திடீர்னு கிலோ பத்து ரூபாய்க்கு விற்பனையாகும்.  திடீர்னு கிலோ நாப்பது ரூபாய்க்கு விற்பனையாகும். பொதுவா கத்திரிக்காய்க்கு பண்டிகை காலங்கள்ல விலை ஏறும். சில நேரங்கள்ல நாமளே எதிர்பார்க்காத அளவுக்கு கூட அதிக விலை கிடைக்கும். இந்த ரகங்களுக்கு பட்டம் கிடையாது. எப்போ வேணாலும் நடவு செய்யலாம். கத்திரிக்காய் விவசாயத்துல புழு விழாம பார்த்துக்கிறதுதான் முக்கியமான விஷயம்” என்ற அசோக்குமார், வருமானம் குறித்துச் சொன்னார்.

முள்ளு கத்திரி... குண்டு கத்திரி... கலக்கல் லாபம் கொடுக்கும் கத்திரி!

தினம் 100 கிலோ!

“நடவு செஞ்ச 45-ம் நாள்ல இருந்து தொடர்ந்து ஆறு மாசம் காய் பறிக்கலாம். நல்லா பராமரிச்சா 10 மாசம் வரை கூட காய் கிடைக்கும். நான் இப்போ 4 மாசமாதான் காய் பறிச்சிகிட்டு இருக்கேன். காய்க்க ஆரம்பிக்கிறப்போ குறைவாத்தான் மகசூல் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்கும். இப்போதைக்கு தினமும் 100 கிலோ அளவுக்கு காய் கிடைச்சுகிட்டு இருக்கு.

4 மாதத்தில் ரூ 1 லட்சம் லாபம்!

இந்த 4 மாசத்துல மொத்தம் 10 டன் காய் எடுத்திருக்கேன். முதல் மாசம் 2 ஆயிரம் கிலோ காய் கிடைச்சது. 2-ம் மாசம் 2 ஆயிரத்து 400 கிலோ காய் கிடைச்சது. 3-ம் மாசம் 2 ஆயிரத்து 700 கிலோ காய் கிடைச்சது. நாலாம் மாசம் 2 ஆயிரத்து 900 கிலோ காய் கிடைச்சது. இதுல 7 ஆயிரத்து 100 கிலோ கத்திரிக்காயை ஒரு கிலோ பத்து ரூபாய்னு விற்பனை செய்தேன். மீதி 2 ஆயிரத்து 900 கிலோ கத்திரிக்காயை கிலோ 30 ரூபாய்னு விற்பனை செய்திருக்கேன். இதன் மூலமா மொத்தம் ஒரு லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு.

உழவுல இருந்து அறுவடை, போக்குவரத்துனு இதுவரை 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியிருக்கு. இப்பவே எனக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சிருச்சு” என்ற அசோக்குமார் நிறைவாக,

“இன்னும் ரெண்டு மாசம் காய் பறிக்கலாம். ரெண்டு மாசத்துல 5 ஆயிரம் கிலோ அளவு காய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அதுக்கு சராசரியா கிலோவுக்கு 20 ரூபாய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அந்த வகையில ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். அதுல களை எடுக்க, அறுவடை, பஞ்சகவ்யா, போக்குவரத்து...னு 28 ஆயிரம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதைக் கழிச்சா 72 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்னு எதிர்பார்க்கிறேன். மொத்தத்துல ஒரு ஏக்கர் நிலத்துல கத்திரி மூலமா ஒரு லட்சத்து  80 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சுடும்” என்று சொல்லிவிட்டு கத்திரிக்காய் மூட்டையை சந்தைக்குக் கொண்டு செல்ல ஆயத்தமானார். 

தொடர்புக்கு,
அசோக்குமார்,
செல்போன்: 94440-86960.

மூலிகைப் பூச்சிவிரட்டி!

ஊமத்தை, வேம்பு, துளசி, எருக்கு, நொச்சி, தும்பை ஆகிய தாவரங்களின் இலைகளில்... தலா 6 கிலோ எடுத்து, 6 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் ஒரு வாரம் ஊறவைத்து வடிகட்டினால், பூச்சிவிரட்டி தயார்.  இதை 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் பூச்சிவிரட்டி எனக் கலந்து பயன்படுத்த வேண்டும்.

கத்திரிக்கு நாற்று நடவு நல்லது!

ஒரு ஏக்கர் நிலத்தில் கத்திரிக்காய் சாகுபடி செய்வது குறித்து அசோக்குமார் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

8 அடிக்கு 8 அடி நாற்றங்கால்!

கத்திரிக்காயைப் பொறுத்தவரை, நாற்று நடவு செய்வது நல்ல பலன் கொடுக்கும். செம்மண் நிலம் கத்திரி சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. களிமண் நிலத்திலும் கத்திரி விளையும். கார்த்திகை மாதம் நாற்றங்காலில் விதைத்து, மார்கழியில் நாற்று நடவு செய்யும்போது விளைச்சல் நன்றாக இருக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்ய... 8 அடி நீளம் 8 அடி அகலம் கொண்ட நாற்றங்கால் தேவை. நாற்றங்காலில் 500 கிலோ தொழுவுரம், ஒரு கிலோ அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து தூவ வேண்டும். பிறகு 200 கிராம் விதையைத் தூவி பூவாளியால் தண்ணீர் தெளித்து வர வேண்டும். 25 நாட்களில் நாற்று தயாராகி விடும். நாற்று வளர்வதற்குள் நடவு நிலத்தை தயார் செய்து விட வேண்டும்.

முள்ளு கத்திரி... குண்டு கத்திரி... கலக்கல் லாபம் கொடுக்கும் கத்திரி!

பூச்சிக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி...

ஊட்டத்துக்கு பஞ்சகவ்யா!


தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு, 3 டன் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி நன்கு உழவு செய்து...  நான்கரை அடி நீளம், இரண்டு அடி  அகலத்தில் பாத்திகள், வாய்க்கால்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி இரண்டு அடி. திடமான நாற்றுகளை பிரித்து எடுத்து பாத்திகளில் ஒரு அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. கத்திரியில் காய்ப்புழு தாக்கும் வாய்ப்பு அதிகம் என்பதால், நடவு செய்தது முதல், வாரம் ஒரு முறை மூலிகைப் பூச்சிவிரட்டியைத் தெளித்து வர வேண்டும். மூன்று மாதங்களுக்குப் பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை பூச்சிவிரட்டி தெளித்தால் போதுமானது. நடவில் இருந்து, 20 நாட்களுக்கு ஒரு முறை 12 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும்.

90-ம் நாள் தொழுவுரம்!


நடவு செய்த 20-ம் நாள் களை எடுக்க வேண்டும். களை எடுத்த பிறகு, 20 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 20 கிலோ எள்ளு பிண்ணாக்கு, 15 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு செடியின் வேர்ப் பகுதியிலும் 75 கிராம் அளவு வைத்து மண் அணைக்க வேண்டும். 45-ம் நாளுக்கு மேல் அறுவடைக்கு வந்து விடும். தொடர்ந்து ஆறு மாதங்கள் காய் பறிக்கலாம். பிறகு தேவைப்பட்டால், களை எடுக்க வேண்டும். நடவு செய்த 90-ம் நாள் ஒவ்வொரு செடியின் தூரிலும் கைப்பிடியளவு தொழுவுரம் வைக்க வேண்டும். பயிரில், வாடல் நோய் தென்பட்டால், 80 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியைக் கலந்து தெளிக்கலாம். தொடர்ந்து அறுவடை முடியும் வரை... பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சி விரட்டி, ஆகியவற்றை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கும் கால இடைவெளியில் தெளித்து வந்தால், பெரும்பாலும் நோய்கள், பூச்சிகள் வராது. செடிகளும் ஊட்டமாக வளரும்.”

விதை எங்கு கிடைக்கும்?

காஞ்சி குண்டு கத்திரி என்பது, காஞ்சிபுரம் பகுதியில் பிரபலமான ரகம். இது அப்பகுதியில் இருந்த நாட்டுரகத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட  வீரியரகம். இதன் விதை காஞ்சிபுரம் பகுதியில் பரவலாகக் கிடைக்கும். இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய் வேலூர் மாவட்ட பகுதிகளில் பிரபலமான நாட்டுரகம். இதன் விதைகள், வேலூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism