Published:Updated:

ஏற்றுமதிக்கு ஏற்ற கொண்டைக்கடலை!

ஏற்றுமதிக்கு ஏற்ற கொண்டைக்கடலை!
பிரீமியம் ஸ்டோரி
ஏற்றுமதிக்கு ஏற்ற கொண்டைக்கடலை!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!துரை.நாகராஜன், படங்கள்: வீ.சிவக்குமார்

ஏற்றுமதிக்கு ஏற்ற கொண்டைக்கடலை!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!துரை.நாகராஜன், படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
ஏற்றுமதிக்கு ஏற்ற கொண்டைக்கடலை!
பிரீமியம் ஸ்டோரி
ஏற்றுமதிக்கு ஏற்ற கொண்டைக்கடலை!
ஏற்றுமதிக்கு ஏற்ற கொண்டைக்கடலை!

*குளிர் பருவப்பயிர்...

*குறைந்தபட்சம் ஹெக்டேருக்கு 650 கிலோ மகசூல்...

*அதிக புரதம் கொண்டது...

*ஒரு குவிண்டால் 4,800 ரூபாய்...

யல் விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும்... சந்தையில் விலைகிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன? என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்துகொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது, இத்தொடர். இந்த இதழில், கொண்டைக்கடலை பற்றிய தகவல்கள் இடம்பிடிக்கின்றன.

கொண்டைக்கடலை (சுண்டல்) என்பது ‘பேபேசி’ குடும்பத்தைச் சார்ந்தது. இது இந்தியாவிலும் இதர ஆசிய நாடுகளிலும் பெரிதும் பயிரிடப்படுகிறது. கொண்டைக்கடலையை அவித்து, சுண்டி, அல்லது கறியாக்கி உண்ணலாம். உலக அளவில் கொண்டைக்கடலை உற்பத்தியில், இந்தியாவே முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வட இந்தியரும் அதிகம் உபயோகிக்கும் முழுப் பயறுகளில் முக்கியமானது, கொண்டைக்கடலை.

கொண்டைக்கடலை ஹிந்தியில் ‘சன்னா’ என்றும், சென்னா என்றும் ஆங்கிலத்தில் ‘பெங்கால் கிராம்’ என்றும் அழைக்கப்படுகிறது. வங்காளத்தில் அதிகம் விளைவதால் இந்தப் பெயராக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. தோல் நீக்கி வறுத்து உடைக்கப்பட்ட கொண்டைக்கடலை, பொட்டுக்கடலை, உடைத்தகடலை, வறுகடலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது, சட்னி தயாரிக்க பிரதானமாகப் பயன்படுகிறது. முறுக்கு, தட்டை என பலகாரகங்கள் தயாரிப்பில் அதிகமாக எண்ணெய் குடிக்காமல் இருக்க, பொட்டுக்கடலை மாவு சேர்க்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில், பொட்டுக்கடலையில் செய்யப்படும் ‘பருப்புப் பொடி’ மிக பிரபலம். சாதத்தில் பிசைந்து உண்ணப்படும் இப்பொடி, காரமாக, சுவையாக இருப்பதால் ‘கன் பவுடர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

கொண்டைக்கடலை, ஒரு குளிர் பருவப்பயிர். கொண்டைக்கடலையில் ‘தேசி கடலை’ (நாட்டுக்கடலை) மற்றும் ‘காபூலி கடலை’ என்னும் இரு வகைகள் உள்ளன. ‘காபூலி’ கடலை வெள்ளையாகவும், அளவில் பெரியதாகவும் இருக்கும். தமிழ்நாட்டில் ‘தேசி கடலை’ வகை பிரசித்திபெற்றது. இதுதான், தமிழ்நாட்டில் அதிகம் பயிரிடப்படுகிறது. கரிசல் மண்ணில் விளையும் இப்பயிர், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பரவலாகவும்; ஈரோடு, சேலம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. தோராயமாக, தமிழ்நாட்டில் 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கொண்டைக் கடலை பயிரிடப்படுகிறது. ஹெக்டேருக்கு சராசரியாக 650 கிலோ மகசூல் கிடைக்கும். குளிர்கால பயிர் என்றாலும், மிக அதிக குளிரும், உறைபனியும் பயிரை பாதிக்கும். 

ஏற்றுமதிக்கு ஏற்ற கொண்டைக்கடலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தேசி கடலையில் இதுவரை கோ-1, கோ-2, கோ-3 மற்றும் கோ-4 ஆகிய ரகங்களை வெளியிட்டுள்ளது. இவை வேலுார், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலுார், கரூர், தர்மபுரி, புதுக்கோட்டை, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மானாவாரியாக பயிரிட ஏற்றவை.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு மைய அலுவலர்களிடம் பேசியபோது, “தமிழ்நாட்டில் உள்ள சந்தைகளில் உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கொண்டைக்கடலைக்கு முக்கியமான சந்தையாகும்.

கொண்டக்கடலை உற்பத்தியில் இந்தியா முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்தியாவில் தேசி மற்றும் காபூலி என்ற இரு ரக கொண்டைக்கடலைகளும் 3:1 என்ற விகிதத்தில் பயிரிடப்படுகின்றன. இவை உலகின் மொத்த உற்பத்தியில் 75% பங்காகும். நாட்டில் விளையும் பருப்பு வகைகளில் கொண்டைக்கடலை 45% பங்களிக்கிறது. இது, மத்தியபிரதேச மாநிலத்தில் அதிகளவு விளைவிக்கப்படுகிறது. கொண்டைக்கடலையில் முக்கிய புரதங்கள் அதிகமாக உள்ளன. கொண்டைக்கடலை ‘ரபி’ பருவத்தில் பயிரிடப்படும் முக்கிய பயிர். பொதுவாக, செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை விதைக்கப்படுகிறது.

இந்தியாவில் 2014-2015-ம் ஆண்டில், 85.91 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் கொண்டைக்கடலை பயிரிடப்பட்டு, 71.70 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2014-2015-ம் ஆண்டில் இந்தியாவில் மொத்த பருப்பு வகை ஏற்றுமதியில் கொண்டைக்கடலை 85.64 சதவிகித அளவு பங்கு வகித்துள்ளது. பாகிஸ்தான், அல்ஜீரியா, இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஏற்றுமதிக்கு ஏற்ற கொண்டைக்கடலை!

தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொண்டைக்கடலை அதிகமாக பயிரிடப்படுகிறது. 2015-2016-ம் ஆண்டு ரபி பருவத்தில் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் அளவு நிலத்தில் கொண்டைக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட குறைவான பரப்பு ஆகும். தற்போது ஒரு குவிண்டால் கொண்டைக்கடலை 4 ஆயிரத்து 800 ரூபாய் அளவில் உடுமலைப்பேட்டை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் விற்பனையாகிறது” என்றனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுஆய்வு மையத்தில் இயங்கும் வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின் பின்புல அலுவலகம்... உடுமலைப்பேட்டை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நிலவிய கொண்டைக்கடலை விலை விவரங்கள் பற்றிய ஆய்வுகளின்படி, ஒரு குவிண்டாலின் பண்ணை விலை 4 ஆயிரத்து 300 ரூபாய் முதல் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை இருக்கும் எனக் கணித்துள்ளது.

ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் மற்றும் பயறு வகை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் மற்றும் விவசாயிகளின் ஆலோசனைகள் அடுத்த இதழில்...

-லாபம் பெருகும்

கொண்டைக்கடலை ரகங்கள்!

கோ-1: கோயம்புத்தூரிலிருந்து தனிவழித்தேர்வு மூலம் உருவாக்கப்பட்ட ரகம். இதன் வயது 100 நாட்கள். ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு 700 கிலோ மகசூல் கிடைக்கும். மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற ரகம்.

கோ-2: ஜி 62-404 ஆகியவற்றிலிருந்து தனிவழித்தேர்வு மூலம் உருவாக்கப்பட்ட ரகம். இதன் வயது 90 நாட்கள். மானாவாரி சாகுபடியில் ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு 980 கிலோ மகசூல் கிடைக்கும். கோ-1 ரகத்தைக் காட்டிலும் கூடுதல் மகசூல் கிடைக்கும். வாடல் நோய் மற்றும் பூங்கொத்து நோய்களைத் தாங்கி வளரக்கூடியது. தனிப்பயிராக பயிரிட ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு 45 கிலோ விதை தேவைப்படும்.

கோ-3: மகாராஷ்டிரா மாநில ரகங்களிலிருந்து தனிவழித்தேர்வு மூலம் உருவாக்கப்பட்ட ரகம். இதன் வயது 85 நாட்கள். ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு 1,000 கிலோ மகசூல் கிடைக்கும். வேரழுகல் மற்றும் வாடல்நோயைத் தாங்கும் தன்மையுடையது. தனிப்பயிராக பயிரிட ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு 90 கிலோ தேவைப்படும்.

கோ-4: ஐ.சி.சி-42 மற்றும் ஐ.சி.சி-12237  ஆகிய ரகங்களிலிருந்து உருவாக்கப்பட்ட ரகம். இதன் வயது 80-85 நாட்கள். பருமனான ‘தேசி’ வகை விதைகள். 100 விதைகளின் எடை 30 கிராம் முதல் 32 கிராம் வரை இருக்கும். ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு 1000-1150 கிலோ மகசூல் கொடுக்கும். வேரழுகல் நோயைத் தாங்கும் தன்மையுடையது. தனிப்பயிராகப் பயிரிட ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு 75 கிலோ விதை தேவைப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism