நாட்டு நடப்பு
Published:Updated:

பலன் கொடுக்குமா... குறுவைத் தொகுப்புத் திட்டம்?

பலன் கொடுக்குமா...  குறுவைத் தொகுப்புத் திட்டம்?
பிரீமியம் ஸ்டோரி
News
பலன் கொடுக்குமா... குறுவைத் தொகுப்புத் திட்டம்?

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: சு.குமரேசன், க.தனசேகரன், ம.அரவிந்த்

பலன் கொடுக்குமா...  குறுவைத் தொகுப்புத் திட்டம்?

மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால்... இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க முடியாத அவல நிலையே தொடர்கிறது. இதனால், நிலத்தடி நீரைக் கொண்டு குறுவை சாகுபடி செய்வதற்காக... 54.65 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ‘குறுவை தொகுப்புத் திட்டம்’ அறிவித்துள்ளார், தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இந்தத் திட்டத்தின் கீழ் 12 மணிநேரம் மும்முனை மின்சாரம்; இயந்திர நடவு செய்ய ஒரு ஏக்கர் நிலத்துக்கு 4 ஆயிரம் ரூபாய் மானியம்; 90 மில்லி மீட்டர் விட்டமும் 6 மீட்டர் நீளமும் கொண்ட குழாய்; நுண்ணூட்டச் சத்துக்களுக்காக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 170 ரூபாய் மானியம்; நிலத்தின் உவர்த்தன்மையைப் போக்க 100 சதவிகித மானியத்தில் துத்தநாக-சல்பேட்; போர்வெல் வசதி இல்லாதவர்களுக்கு மானாவாரியாக பயறு சாகுபடி மேற்கொள்ள ஒரு ஏக்கருக்கு 1,400 ரூபாய் விதை மானியம்; வெண்ணாறு பகுதியில் பசுந்தாள் பயிரிட்டு மண்ணை வளப்படுத்த 100 சதவிகித மானியத்தில் விதை ஆகியவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்திட்டம் விவசாயிகளுக்கு பலன் அளிக்குமா என்பது குறித்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சொன்ன கருத்துக்கள் இங்கே... டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம்: “நிலத்தடி நீர் மூலம் 3 லட்சம் ஏக்கர் நிலத்தில் குறுவை நெல் சாகுபடி செய்ய இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சொல்வது தவறான தகவல். போதிய அளவுக்கு நிலத்தடி நீர் இல்லை என்பதுதான் உண்மை. அதில்லாமல், பெரும்பாலான போர்வெல் விவசாயிகள் ஏற்கெனவே கரும்பு, வாழை சாகுபடி என சாகுபடியை ஆரம்பித்து விட்டனர். அதனால், இரண்டேகால் லட்சம் ஏக்கர் நிலத்துக்கும் குறைவான அளவில்தான் தற்போது குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள முடியும்.

பலன் கொடுக்குமா...  குறுவைத் தொகுப்புத் திட்டம்?

வேளாண் துறை அதிகாரிகள், தமிழக முதல்வருக்கு தவறான தகவல்களை அளித்துள்ளார்கள். நிலத்தடி நீரைப் பயன்படுத்த குழாய் வழங்கப்படும் என தற்போது சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட குழாய்கள் தரமில்லாமல் இருந்தன.

மாவட்ட அளவில் விவசாயிகள், அதிகாரிகள் அடங்கிய குழுவை உருவாக்கி, ஆலோசித்து விவசாயிகளின் தேவைக்கேற்ப, குழாய்கள் வழங்க வேண்டும். இல்லையென்றால், விவசாயிகளே நேரடியாக கடைகளில் தங்களுடைய தேவைக்கேற்ப குழாய்கள் வாங்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதை உறுதி செய்துவிட்டு, அதற்குரிய மானியத்தை விவசாயியின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கலாம்.

நுண்ணூட்டச்சத்துக் குறைபாடு உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு மட்டும் மானியம் வழங்கப்படும் என்றும்; உவர்த்தன்மையைப் போக்க, 1 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு மட்டும் மானியம் என்றும்; போர்வெல் இல்லாத 15 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு மட்டும் மானியம் என்றும்; ஒவ்வொரு சலுகைகளுக்கும்  குறிப்பிட்ட வரம்பு நிர்ணயித்திருக்கிறார்கள். இது, ஏற்புடையதல்ல. விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இந்தப் பலன்களை வழங்க வேண்டும். அதேபோல ஏற்கெனவே சாகுபடியை ஆரம்பித்துவிட்ட விவசாயிகளுக்கும் பலன் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். முதல்வர் அறிவித்ததற்குப் பிறகு சாகுபடியை ஆரம்பிப்பவர்களுக்கு மட்டும்தான் மானியம் என்று சொல்லிவிடக்கூடாது.

பலன் கொடுக்குமா...  குறுவைத் தொகுப்புத் திட்டம்?

கடந்த ஆண்டு அரசியல் தலையீட்டின் காரணமாக, குழாய்கள், மானியம் உள்ளிட்டவை விவசாயம் செய்யாதவர்களுக்கும் கொடுக்கப்பட்டன. இந்த ஆண்டாவது, தகுதியுள்ள விவசாயிகளுக்கு முழுமையாக இந்தப் பலன்கள் கிடைக்கவேண்டும். அதிகாரிகள் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும். அதேபோல, மின்சாரமும் தடையின்றி கிடைக்குமாறு, தொடர் பராமரிப்புகளை மேற்கொள்ளவேண்டும். கடந்த ஆண்டு மின்வழங்கலில் பல பிரச்னைகள் ஏற்பட்டன.”

காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.என்.எஸ். தனபாலன்: ஆறுகளில் தண்ணீர் இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமான நிலையில் உள்ளது. அதிக ஆழத்தில் மிகவும் குறைவாக உள்ள நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி மேற்கொள்வதென்பது இயற்கைக்குப் புறம்பான செயல். புதிய உப்புகள் உருவாகி மண்வளத்தை சீரழித்துவிடும். விளைச்சல் இருக்காது. பயிர்களில் தூர் கட்டாது. இந்தப் பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு... காவிரி நீர்தான். காவிரிநீரைப் பெற தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும். இடர்பாடு காலங்களில் காவிரிப் பங்கீட்டுக் குழு இருந்தால்தான் தண்ணீரைப் பகிர்ந்து கொடுக்கமுடியும். ஆனால், பங்கீட்டுக் குழுவே இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் பங்கீட்டுக்குழு அமைக்க, தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும். கடந்த ஆண்டு கர்நாடகா மாநிலம், தமிழகத்துக்குத் தரவேண்டிய 36 டி.எம்.சி நீர் பாக்கியுள்ளது. அதனைப்பெற தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். இவற்றை விட்டுவிட்டு, குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிப்பது என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பே.”