Published:Updated:

கதிர் இருக்கு... ஆனா, மணி இல்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கதிர் இருக்கு... ஆனா, மணி இல்லை!
கதிர் இருக்கு... ஆனா, மணி இல்லை!

பெரம்பலூர் விவசாயிகளின் சோகம்!கு.ராமகிருஷ்ணன், படங்கள்: தே.தீட்சித்

பிரீமியம் ஸ்டோரி
கதிர் இருக்கு... ஆனா, மணி இல்லை!

‘வெண்ணெய் திரள்ற நேரத்துல பானை உடைஞ்ச கதையாகிப் போச்சு’ என்று கிராமங்களில் பழமொழி சொல்வார்கள். அது, தற்போது பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு சரியாகப் பொருந்தியிருக்கிறது.

இம்மாவட்டத்தில் உள்ள எசனை, பாப்பாங்கரை, வேப்பந்தட்டை, லாடபுரம், செங்குன்னம், அனுக்கூர், பசும்பலூர் உள்ளிட்ட பல கிராமங்களில் மக்காச்சோள சாகுபடியில் பலர் ஈடுபட்டுள்ளனர். தற்போது, அறுவடைக்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் கதிரில் மணியே இல்லாமல் சக்கையாக இருப்பதால், அதிர்ச்சியில் இருக்கிறார்கள், விவசாயிகள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாப்பாங்கரை கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து, “நான் 4 ஏக்கர்ல மக்காச்சோளம் சாகுபடி செஞ்சிருந்தேன். பயிர் நல்லா செழிப்பா ‘தளதள’னு வளர்ந்து கதிர்களும் திரண்டு இருந்துச்சு. ரொம்ப சந்தோசப்பட்டோம். இப்ப அறுவடையை நெருங்கின சமயத்துல தோகையை உரிச்சுப் பார்த்தா உள்ளார வெறும் சக்கை மட்டும்தான் இருக்கு. கதிர்கள்ல மணியே இல்லை. 30 மூட்டை கிடைக்கவேண்டிய இடத்துல ஒரு மூட்டை கூட தேறாது போல இருக்கு. எனக்கு கிட்டத்தட்ட 45 ஆயிரம் ரூபாய்க்கு மேல நஷ்டம்” என்றார், வேதனையுடன்.

“நான் 2 ஏக்கர்ல மக்காச்சோளம் பயிர் பண்ணியிருக்கேன். ‘ஜிண்ஜிண்டா கம்பெனி’யின் எஸ்-6668 ரகம்தான் விதைச்சது. ஏற்கெனவே எங்க பகுதியில இந்த ரகம் சாகுபடி செஞ்சதுல, ஏக்கருக்கு 40 மூட்டை வரைக்கும் மகசூல் கிடைச்சிருக்கு. அதனால்தான் இந்தத் தடவை எங்க பகுதியில நிறைய விவசாயிகள் இந்த விதையை விதைச்சாங்க. விதைக்கு மட்டுமே ஒரு ஏக்கருக்கு 1,800 ரூபாய் செலவு. இதைத் தவிர உழவு, அடியுரம், விதைப்பு, மேலுரம்னு இதுவரைக்கும் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவு செஞ்சிட்டோம். வழக்கமா 60-ம் நாள் கதிர் புடிச்சு, 75 நாள்ல மணி ஏறிடும். இப்போ 110 நாளாகியும் மணி ஏறலை. அதில்லாம ஒரே செடியில நாலஞ்சு கதிர் வந்திருக்கு. அதனால விதையிலதான் ஏதோ கோளாறு இருக்கணும்” என்கிறார், எசனை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார்.

கதிர் இருக்கு... ஆனா, மணி இல்லை!

இது குறித்து, ஜிண்ஜிண்டா விதை நிறுவனத்தின் பெரம்பலூர், அரியலூர் சரக மேலாளர் சவுந்தரராஜனிடம் கேட்டபோது, “பிப்ரவரி 15-ம் தேதிக்கு முன்னாடி விதைச்ச விவசாயிகளுக்கு நல்லா விளைஞ்சு, கதிர்ல மணி ஏறியிருக்கு. அதுக்குப் பிறகு சாகுபடி செஞ்ச மக்காச்சோளத்துலதான் மணி புடிக்கலை. மகரந்தச் சேர்க்கை நடக்கும்போது 40 டிகிரி வெப்பநிலைக்கும் மேல கடுமையான வெயில் அடிச்சதாலதான் பிரச்னை. வழக்கமா ஏப்ரல் மாதத்துல இந்தப் பகுதியில 35, 36 டிகிரிதான் வெப்பநிலை இருக்கும். அதில்லாம ஒரு கோடை மழையாவது கட்டாயம் பேஞ்சிடும். ஆனா, இந்தத் தடவை கொஞ்சம் கூட மழை இல்லை. இது நாங்களே எதிர்பார்க்காதது. எங்க விதையில எந்தக் குறைபாடும் இல்லை. பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு விதைச்ச மற்ற நிறுவனங்களின் விதைகள்லயும் இதே பிரச்னை இருக்கு” என்றார்.

ஆனால் பாப்பாங்கரை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் வேறுவிதமாகச் சொல்கிறார். “நாங்க 2 ஏக்கர்ல பிப்ரவரி 3-ம் தேதியே ஜிண்ஜிண்டா கம்பெனியோட எஸ்-6668 ரக மக்காச்சோள விதையை விதைச்சுட்டோம். இன்னொரு 2 ஏக்கர்ல பிப்ரவரி 13-ம் தேதி விதைச்சோம். ஆனாலும் எங்களுக்கும் இதே பிரச்னை இருக்கு. அதனால விதையிலதான் கோளாறு” என்றார், ஆணித்தரமாக.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தக்குமாரிடம் இப்பிரச்னை குறித்து பேசியபோது, “ ஏற்கெனவே விவசாயிகள் சொன்ன புகாரை வெச்சு வேளாண் துறை அதிகாரிகள் மூலமா ஆய்வு நடத்தினோம். ‘மகரந்தச் சேர்க்கை நடக்கும்போது இருந்த கடுமையான வெயில்தான் காரணம்’னு சொல்றாங்க. ஆனாலும், சம்பந்தப்பட்ட விதை நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கோம்” என்றார்.

கதிர் இருக்கு... ஆனா, மணி இல்லை!

இப்பிரச்னையை கையில் எடுத்து விவசாயிகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராஜாசிதம்பரம், “கடும் வறட்சியால்தான் பாதிப்புனா, அந்த சீசன்ல விதையை விற்பனை செஞ்சிருக்கவே கூடாதே. விதையை வெளியிடுறதுக்கு முன்னாடி, ‘வறட்சியைத் தாங்குமா, மழை, வெள்ளத்தைத் தாங்குமா’னு ஆய்வுசெஞ்சு உறுதிப்படுத்தியிக்கணும். கார்ப்பரேட் கம்பெனிகளோட விதைகள்ங்கிறதாலதான் அந்த நிறுவனங்கள் மேல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குறாங்க. விவசாயிகளோட உழைப்பு, முதலீடு எல்லாமே இப்ப நாசமாயிடுச்சு. இந்த நிறுவனங்களின் விதைகளின் முளைப்புத்திறன், காய்ப்புத்திறன் எல்லாத்தையும் தமிழக வேளாண் துறை ஆய்வு செஞ்சுதான் விற்பனைக்கு அனுமதிச்சிருக்கணும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விதை நிறுவனமும், தமிழக அரசும் சேர்ந்து ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தரணும். இதுக்காக நீதிமன்றம் போறதுக்கும், தொடர் போராட்டங்களுக்கும் நாங்க தயாராகிட்டிருக்கோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு