பிரீமியம் ஸ்டோரி

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

அனுதினமும் பின்பற்ற வேண்டிய அதிமுக்கியமான விஷயங்கள் எல்லாம், ஒருநாள் கூத்து என்பதாகவே தற்போது மாறிவிட்டன. இதோ, ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமும் இப்படித்தான் சம்பிரதாயமாக நடந்து முடிந்துள்ளது.

அன்றைய தினத்தில் மட்டும், மரக்கன்றுகள் நடுவது, மாரத்தான் ஓடுவது... என சுற்றுச்சூழல் அக்கறையை அத்துடன் முடித்துக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. அனுதினமும் கடைப்பிடிக்கும்போது மட்டுமே நச்சுஇல்லா சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல முடியும் என்பது ஊரறிந்த உண்மை! ஆம், ஒவ்வொரு தனிமனிதனுமே தன்னால் முடிந்தவரை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் செயல்களை தினம் தினம் மேற்கொள்ள முடியும்!

இயற்கை விவசாயம் செய்வது, மரங்களை வளர்ப்பது மட்டுமல்ல, ரசாயன உரம், பூச்சிக்கொல்லி துளியும் தெளிக்காமல் மானாவாரியாக விளைச்சலைத் தரும் சிறுதானிய சாகுபடியும்கூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணிதான்.

கூடுமானவரையில் பொதுவாகனங்களைப் பயன்படுத்துவது, அருகிலிருக்கும் இடங்களுக்கு சைக்கிளில் செல்வது, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது என்று நாம் ஒவ்வொருவரும் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியுமே சூழல் மேம்பாட்டை நோக்கி எடுத்துவைக்கும் அடிதான்! 
ஏரி, குளங்களில் மட்டுமல்ல, நம் நிலத்தில் விழும், ஒவ்வொரு சொட்டு மழைநீரையும், பக்குவாமாய் சேமிப்பதும்கூட சூழலுக்கு நாம் சூட்டும் மகுடம்தான்.

மண்புழுக்கள் தொடங்கி, கடலில் வாழும் மீன்கள் வரை கழிவுகளை மறுசுழற்சி செய்து, தாங்கள் வாழும் சூழ்நிலையை உயிர்ப்புடன் வைத்துக் கொள்கின்றன. நாம்தான் பாதைமாறி, பல்லுயிர்ச் சூழலுக்கு பங்கம் செய்து வருகிறோம். இனியாவது சூழல் பாதுகாப்பு என்பது வெற்றுப் பிரசாரமாக இல்லாமல், வெற்றிகரமான வாழ்க்கைக்கு நாம் விதைக்கும் நல்விதையாக இருக்கட்டும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு