நாட்டு நடப்பு
Published:Updated:

பஞ்சகவ்யா - 10

பஞ்சகவ்யா - 10
பிரீமியம் ஸ்டோரி
News
பஞ்சகவ்யா - 10

வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்வெளிநாடு அழைத்துச் சென்ற பஞ்சகவ்யா..!ஜி.பழனிச்சாமி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி, க.சத்தியமூர்த்தி

பஞ்சகவ்யா - 10

ரம்ப காலத்தில் பஞ்சகவ்யா பயன்படுத்தியவர்கள் அதை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தவர்கள் பற்றிய பதிவுகள் இடம்பெறும் தொடர் இது. அந்தவரிசையில் பஞ்சகவ்யா தனது வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை இங்கே விவரிக்கிறார், ஈரோடு மாவட்டம், நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி மோகனசுந்தரம்.

பள்ளிப்படிப்பு முடித்துள்ள இவருக்கு கல்லூரிக் கல்வி எட்டவில்லை. ஆனால், இன்று பல கல்லூரிகளில் மாணவர்களுக்கு ‘இயற்கை வேளாண்மை’ குறித்து பாடங்களை நடத்திவருகிறார். ‘‘உள்ளூர் பொண்ணும் ஊரடித்தோட்டமும் அமைஞ்சவன் பாக்கியசாலி’ம்பாங்க. எனக்கு ரெண்டும் சரியா அமைஞ்சிருக்கு’’ என்றபடி தனது பெரிய மீசையைத் தடவியபடியே பேசத் தொடங்கினார் மோகனசுந்தரம்.

‘‘நசியனூர்தான் என்னோட பூர்வீகம். ஒண்ணரை ஏக்கர் சொந்த நிலம், ஒண்ணரை ஏக்கர் குத்தகை நிலம்னு மொத்தம் மூணு ஏக்கர் நிலத்துல விவசாயம் செய்றேன். ரெண்டு வருஷத்துக்கு ஒருவாட்டிதான் கால்வாய் தண்ணி கெடைக்கும். பெரும்பாலும் நெல்லுதான் நடுவோம். தண்ணி இல்லாத மத்த மாசங்கள்ல கிணத்துத் தண்ணிதான் கைகொடுத்துட்டு வருது.

பஞ்சகவ்யா - 10

கடிதம் காட்டிய வழி!

எங்க அப்பா பேரு கிட்டுசாமி. விவசாயத்துல புதுசு புதுசா ஏதாச்சும் செய்யணும்னு விரும்புற மனுஷன். 1986-87-ம் வருஷம் நடந்த பயிர் விளைச்சல் போட்டியில மாநில அளவுல முதல் பரிசு வாங்குனவர். மஞ்சள், நெல், கரும்புனு நஞ்சை விவசாயம் மட்டுமே பிரதானமா இருக்கும் எங்க பகுதியில, காய்கறி விவசாயத்துல தீவிரம் காட்டியவரு. ஆனா, ரசாயன விவசாயம் செஞ்சதால சாகுபடிச் செலவு அதிகரிச்சு பல முறை இழப்புக்களை சந்திச்சாரு.

எங்க தோட்டத்துக்கு பக்கத்து தோட்டத்துக்காரர் பேரு ஆர்.எம்.வாசகம். எங்க குடும்ப நண்பரும் கூட. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துல துணைவேந்தரா இருந்தாரு. அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய்வரக்கூடியவர்.

எப்பவாச்சும் சொந்த ஊருப்பக்கம் வந்தா பல விஷயங்களை அப்பாக்கிட்ட பேசுவாரு. அப்படி ஒரு தடவை பேசும்போது, காய்கறி விலையில அடிக்கடி ஏற்படுற ஏற்ற இறக்கங்களைப் பத்தி கவலைப்பட்டிருக்கார் அப்பா. அதை மனசில் வெச்சிருந்த துணைவேந்தர், அடுத்த முறை பிரான்ஸ் போனபோது, அங்குள்ள காய்கறிக் கடைக்குப் போயிருக்கார்.

பஞ்சகவ்யா - 10

அங்க, கத்திரி, மிளகாய், வெண்டை, தக்காளினு விற்பனைக்கு வெச்சிருந்த எல்லா காய்களுமே ரெண்டு ரெண்டு கூறா அடுக்கி வெச்சிருப்பதைப் பார்த்திருக்கார். அங்க வேலைபார்க்கிற ஒருத்தரைக் கூப்பிட்டு விவரம் கேட்டதும், ‘‘இதுல விலை குறைவாக இருக்கும் குவியல் ரசாயனத்தில் விளைஞ்சது. இன்னொன்னு இயற்கை விவசாயத்தில் விளைஞ்சது. ரசாயன காய்கறிகளைவிட இயற்கைக் காய் பத்து மடங்கு விலை அதிகம்’னு சொல்லியிருக்கார் அந்தப் பணியாள். இதைக் கேட்டு ஆச்சர்யமான துணைவேந்தர், அதைப் பத்தி எங்கப்பாவுக்கு விரிவான லெட்டர் எழுதிட்டாரு. அதைப் படிச்ச அப்பா, ‘நம்ம தோட்டத்துலயும் இயற்கை விவசாயத்துல காய்கறிகளை பயிர்பண்ணி பார்க்கலாம், நல்ல வருமானமும் கிடைக்கும்’னு எங்கிட்ட சொன்னார்.

பஞ்சகவ்யா - 10

ஈரோடு விவசாய ஆபீஸ்ல போயி, ‘இயற்கை விவசாயம் எப்படி செய்யணும்’னு கேட்டேன். அவங்க, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியானு உயிர் உர பாக்கெட்டுகளைக் கொடுத்தாங்க. அவங்க சொன்னபடி, காய்கறிகளுக்குக் கொடுத்ததுல மகசூல் அதிகமாச்சு. ஆனாலும் அப்பாவுக்கு அதுல முழு திருப்தி இல்லை. அடியுரத்துல இருந்து அறுவடைவரைக்கும் இயற்கையில செய்ற வழியைப் பாருன்னு ஆலோசனை சொன்னதோட, விவசாயத்தையும் என்கிட்ட ஒப்படைச்சுட்டு ஒதுங்கிட்டாரு.

அறிமுகம் கொடுத்த அறச்சலூர்!

1998-ம் வருஷம் ஈரோடு பக்கத்துல இருக்கிற அறச்சலூர் கிராமத்தில இயற்கை விவசாயக் கருத்தரங்கு நடக்கிற தகவல் கேள்விப்பட்டு நானும், என் மனைவியும் அதுல கலந்துகிட்டோம். அங்கதான் நாம்மாழ்வார் அய்யா, கொடுமுடி டாக்டர் நடராஜன், அறச்சலுர் செல்வம் எல்லோரையும் முதன்முதலா சந்திச்சேன். நம்மாழ்வார் அய்யா பஞ்சகவ்யா பத்தி சிலாகிச்சு பேசினாரு. டாக்டர் நடராஜன், பஞ்சகவ்யா தயாரிக்கிற முறைகளைச் சொல்லிக் கொடுத்தாரு.

பஞ்சகவ்யா - 10

பரிசோதனையில் பஞ்சகவ்யா!

கூட்டம் முடிஞ்சு வந்த மறுநாளே பஞ்சகவ்யா தயாரிப்பை ஆரம்பிச்சு, பயிர்களுக்குத் தெளிக்க ஆரம்பிச்சோம். 10 லிட்டர் தண்ணியில 300 மில்லி கலந்து, 15 நாளைக்கு ஒருதடவை தெளிச்சோம். டாக்டர் சொன்னது போலவே பயிர் தளதளனு வளர்ந்துச்சு பஞ்சகவ்யாவை நாங்களே தயாரிச்சு பயிர்களுக்குக் கொடுத்துட்டு வந்த சமயத்துல, ஒரு சிக்கல் ஏற்பட்டுச்சு. பனி, மழைக் காலங்கள்ல, மண்தாழியில் இருப்பு வைச்சிருக்கிற பஞ்சகவ்யா உறைஞ்சு போயிடும். இதுபத்தி அய்யாகிட்ட கேட்டேன். நெய் சேர்க்கிறதால உறையுது... அதனால நெய்க்கு பதிலா கடலைப் பிண்ணாக்கைப் பயன்படுத்த ஆலோசனைக் கொடுத்தாரு. கடலைப் பிண்ணாக்கு 3 கிலோவை 3 லிட்டர் தண்ணியில ஊறவெச்சு, பிண்ணாக்கு முழுவதும் கரைஞ்சதும் அதை எடுத்து பஞ்சகவ்யாவுடன் சேர்த்தோம். பனி, மழைக் காலங்களில் பஞ்சகவ்யா உறையவே இல்லை. இப்பவும்கூட அதேமுறையைத்தான் கடைப்பிடிக்கிறோம்’’ என்றார் மகிழ்ச்சியாக.

-மணம் பரப்பும்

தொடர்புக்கு,
கே.மோகனசுந்தரம்,
செல்போன்: 94880-20646.

மோகனசுந்தரம் பயன்படுத்தும் பஞ்சகவ்யா !

பசுஞ்சாணம்    -    5 லிட்டர்
பசுமாட்டுச் சிறுநீர்    - 5 லிட்டர்
பசும்பால்    -    2 லிட்டர்
கரும்புப் பால்    -    2 லிட்டர்
இளநீர்    -    2 லிட்டர்

மேற்சொன்ன ஐந்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து மண்பானையில் ஊற்றி கொசுவலை கொண்டு மூடி கட்டிவிட வேண்டும். தினமும் காலை மாலை இருவேளை கொசுவலையை நீக்கி விட்டு கலக்கி விடவேண்டும். தென்னங்கள் கிடைக்காதவர்கள் கம்பஞ்சோற்று நீராகாரம்
2 லிட்டரைச் சேர்த்துக் கொள்ளலாம்.

16-ம் நாள் மண்பானையில் உள்ள கரைசலைத் திறந்து கொசுவலையில் வடிகட்டி வேறு பாத்திரத்தில் ஊற்றவேண்டும். கூடவே புளித்த தயிரைக் கடைந்து வடித்த கரைசலுடன் சேர்க்கவேண்டும். தொடர்ந்து 12 கனிந்த வாழைப்பழங்களைக் கூழாக்கி உள்ளே சேர்க்கவேண்டும். அதைத் தொடர்ந்து ஒரு கிலோ பனங்கருப்பட்டியைத் தூள் செய்து கரைசலுக்குள் போடவேண்டும். கடலைப் பிண்ணாக்கு ஒரு கிலோவை 3 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கரைந்த பிறகு உள்ளே ஊற்றவேண்டும். அதைத் தொடர்ந்து 7 நாட்கள் பாத்திரத்தில் உள்ள கரைசலை காலை மாலை இருவேளை கலக்கி விடவேண்டும். 23-ம் நாள் பஞ்சகவ்யா ரெடி.

பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஒரு லிட்டர் தண்ணிருக்கு 30 மில்லி பஞ்சகவ்யா அளவில் கொடுத்து வந்தால், பயிரும் உயிரும் செழித்து வளரும். தரமான பஞ்சகவ்யா கரைசலை 3 மாதங்கள் வரை இருப்பு வைத்து பயன்படுத்தலாம்.

பலவித நன்மை கொடுக்கும் பஞ்சகவ்யா!

பஞ்சகவ்யா - 10

நெல்லுக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தும் விதம் குறித்து சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார் டாக்டர் நடராஜன்,

‘‘10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்கிற விதத்தில் கலந்து விதைநேர்த்தி, நாற்றங்கால், நடவு, என ஒவ்வொரு பருவத்திலும் மற்ற இயற்கை இடுபொருட்களுடன் சேர்த்து 15 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா தெளித்து வரவேண்டும். கதிர் பிடித்தவுடன், பஞ்சகவ்யா தெளிக்கக் கூடாது. அப்படி தெளித்தால், சன்ன ரக நெல், மோட்டா ரக நெல்லாக கடினமாகிவிடும்.  பஞ்சகவ்யா பயன்படுத்துவதால், அதிக தூர்கள், அதிக கிளைகள், அதிக கதிர்கள் கிடைக்கும். ஒவ்வொரு கதிரிலும் அதிக நெல்மணிகள் பிடிப்பதுடன் நோயத்தாக்குதலும் குறையும் பயிர் பராமரிப்புச் செலவும் குறைவு. வழக்கத்தைவிட, 15 நாட்களுக்கு முன்னரே அறுவடை செய்யலாம். நெல்லின் எடையும் அரைத்தபிறகு கிடைக்கும் அரிசியின் அளவும் அதிகம். சமைத்த சாதம் இரண்டுநாள்வரை கெட்டுப்போகாமல் அதிக ருசியுடன் இருக்கும். நஞ்சில்லா உணவு, மருத்துவச் செலவு குறைவு. பஞ்சகவ்யா தெளிப்பதால் எத்தனை நன்மைகள் பார்த்தீர்களா?!’’

மலேசியாவில் பஞ்சகவ்யா!

‘‘மலேசியா நாட்டுல இருக்கிற பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சார்பா 2003-ம் வருஷம், நம்மாழ்வார் அய்யாவையும், என்னையும் இயற்கை விவசாயத்தை அங்க இருக்கிற விவசாயிகளுக்கு கத்துக் கொடுக்க அழைச்சிருந்தாங்க. எல்லாவிதமான இயற்கை விவசாயம் சம்பந்தமான பயிற்சிகளையும் அந்த விவசாயிகளுக்குக் கத்துக்கொடுத்தோம்.

மலேசியாவில் வசிக்கிற சீனா நாட்டு விவசாயிங்க, கீரை சாகுபடியில தீவிரமாக இருப்பாங்க. வழக்கமா ரசாயன விவசாயத்துல 40 நாள்ல கீரை அறுவடை செஞ்சவங்க, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தியதால 30 நாள்ல அறுவடை செய்றதாகவும், சந்தையில பஞ்சகவ்யா கீரைக்குக் கூடுதல் விலை கிடைக்கிறதாகவும் சீன விவசாயிகள் பெருமையா சொன்னதைக் கேட்டப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது’’ என்கிறார் மோகனசுந்தரம்.