Published:Updated:

25 சென்ட்... ரூ 85 ஆயிரம்...! செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை

25 சென்ட்... ரூ 85 ஆயிரம்...!  செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை
பிரீமியம் ஸ்டோரி
25 சென்ட்... ரூ 85 ஆயிரம்...! செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

25 சென்ட்... ரூ 85 ஆயிரம்...! செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

Published:Updated:
25 சென்ட்... ரூ 85 ஆயிரம்...!  செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை
பிரீமியம் ஸ்டோரி
25 சென்ட்... ரூ 85 ஆயிரம்...! செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை
25 சென்ட்... ரூ 85 ஆயிரம்...!  செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை

*எல்லா வகையான மண்ணிலும் செடிமுருங்கை சாகுபடி செய்யலாம்.

*ஆடி, கார்த்திகை, தை ஆகிய பட்டங்களில் விதைப்பு செய்யலாம்.

*பி.கே.எம்-1, 2 ஆகிய ரகங்கள் சிறப்பானவை.

*விதைப்பு செய்வதற்கான செடிமுருங்கை விதை, ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது.

“ரசாயன விவசாயம் மண்ணுக்கும் மனிதஉடலுக்கும் தீங்கானதுனு எங்களுக்கும் நல்லாவே தெரியுது. இயற்கை விவசாயம் செய்யணும்னு எங்களுக்கும் ஆசையாதான் இருக்கு. ஆனா, அதுக்கு மாடு வளர்த்தாகணும். ரொம்ப சிரமம். எனக்குள்ள சூழல் அதுக்கெல்லாம் ஒத்துவராது’’ இது போன்ற ஆதங்கக் குரல்கள் தற்போது அதிகமாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறன. இவர்களுக்கு நடுவே ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, மாடுகள் இல்லாவிட்டாலும், இயற்கை விவசாயம் வெற்றிகரமாக செய்யமுடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் திருச்சியைச் சேர்ந்த பொறியாளர் கோபாலன். இவர் வேளாண் பொறியியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அயோத்திப்பட்டியில் இருக்கும் தனது பூர்வீக நிலத்தில் இவர் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

25 சென்ட்... ரூ 85 ஆயிரம்...!  செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பச்சைப்பசேலென செழிப்பாக காட்சி அளிக்கிறது கோபாலனின் ஸ்ரீரங்கா இயற்கை விவசாயப் பண்ணை. செடிமுருங்கை, பப்பாளி, தென்னை, மாதுளை, எலுமிச்சை, தேக்கு, மகோகனி, ரோஸ்வுட் என விதவிதமான பயிர்கள்... கடும் கோடையிலும் பசுமை படர்ந்திருக்கிறது.

‘‘இந்தப் பண்ணையோட மொத்தப் பரப்பு ஒரு ஏக்கர்தான். இது எங்களோட பூர்வீக நிலம். 25 வருஷமா விவசாயம் செய்யாம சும்மாவேதான் கிடந்துச்சு. நான், வேளாண் பொறியியல் துறையில நீர்மேலாண்மைப் பிரிவில் வேலை பார்த்தப்ப, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கலந்துகிட்ட சில கருத்தரங்குகள்ல நீர் மேலாண்மை பத்தி பேசியிருக்கேன். அவரோட ஏற்பட்ட அறிமுகம், இயற்கை விவசாயத்து மேல ஒரு ஈடுபாட்டைக் கொடுத்துச்சு. ஆனாலும், வேலையில இருந்ததுனால விவசாயம் செய்ய நேரம் கிடைக்கலை. பணி ஒய்வுக்குப் பிறகும் சில வருஷமா சும்மாதான் இருந்தேன். இப்ப எனக்கு 72 வயசு. ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்சதும் ஆர்வம் அதிகமாகி, ரெண்டரை வருஷமாத்தான் இந்த நிலத்துல விவசாயம் செஞ்சிகிட்டு இருக்கேன். இதுக்காக, தினமும் திருச்சியில இருந்து வந்து போயிகிட்டு இருக்கேன். தலா 25 சென்ட்ல செடிமுருங்கை, பப்பாளி, 50 சென்ட்ல மாதுளை, மா, பலா, எலுமிச்சை, வேலியோரத்துல தென்னை, தேக்கு, மகோகனி, ரோஸ்வுட் சாகுபடி செஞ்சிருக்கேன். செடிமுருங்கை, பப்பாளி ரெண்டும் நடவுபண்ணி 20 மாசமாகுது. இதுல இருந்து வருமானம் வந்துகிட்டு இருக்கு. மத்த மரங்கள் இனிமேதான் பலன் கொடுக்கும். ஓட்டுமொத்த நிலத்துக்கும் சொட்டுநீர் அமைச்சி பாசனம் செஞ்சிகிட்டு இருக்கேன். இங்க நிரந்தரமா தங்கி இருக்க ஆள் கிடைக்காததால மாடுகளை வளர்க்க முடியலை. அதனால, வெளியில இருந்து ஆட்டு எரு, மண்புழு உரம், மாதிரியான உயிர் உரங்களை விலைக்கு வாங்கிக்கிட்டு வந்து இயற்கை விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன். செடிமுருங்கையில நான் எதிர்பார்த்ததைவிட நிறைவான லாபம் கிடைச்சிக்கிட்டு இருக்கு. மற்ற பயிர்களும் வெற்றிகரமாக விளைஞ்சிக்கிட்டு இருக்கு’’ என்று சொன்னவர் வரவு, செலவு கணக்கு பற்றி பேசத் தொடங்கினார்.

25 சென்ட்... ரூ 85 ஆயிரம்...!  செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை

ஒரு முறை விதைப்பு... மூன்று போகம் மகசூல்!

‘‘இது செம்மண் பூமி. செடிமுருங்கை சிறப்பா விளையுது. இதுல, பெரிய பிரச்னையா இருக்கக்கூடியது, புரூட்டோனியா புழு, கம்பளிப் பூச்சித்தாக்குதல்தான். ஆனா, என்னோட செடிகள்ல அதுங்களோட தாக்குதல் கொஞ்சம் கூட இல்லை. பொதுவாகவே செடிமுருங்கைக்கு தண்ணி அதிகம் தேவைப்படாது. இயற்கை உரங்கள் கொடுக்கிறதுனால மண்ல ஈரத்தன்மை இருந்துகிட்டே இருக்கு. வாரம் ஒரு முறை சொட்டுநீர்ப்பாசனம் மூலமா அரைமணி நேரம்தான் தண்ணி கொடுக்கிறோம். இயற்கை இடுபொருட்கள் மட்டுமே கொடுக்கிறதுனால, செடிகள் செழிப்பாகவே இருக்கு. காய்கள் நல்லா சதைப்பற்றோடு சுவையா இருக்கு. விதைப்பிலிருந்து 6-வது மாசத்துல செடிக காய்ப்புக்கு வந்து அடுத்த 6 மாசத்துக்கு மகசூல் கொடுக்குது. மொத்தம் 240 செடிக இருக்கு. செடிக்கு 10 கிலோ கணக்குல 2,400 கிலோ காய்கள் கிடைச்சுது. அதுல ஆயிரத்து 400 கிலோவை, காயா வித்தேன். ஒரு கிலோ சராசரியா 25 ரூபாய் வீதம் 35 ஆயிரம் ரூபாய் விலை கிடைச்சுது. ஆயிரம் கிலோ காயை, செடியிலயே நல்லா முத்தவிட்டு, அதுல இருந்து நல்ல தரமான முளைப்புத் திறன்மிக்க, செதில்களோடு இருக்கிற விதைகளை எடுத்தேன்.

25 சென்ட்... ரூ 85 ஆயிரம்...!  செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை

50 கிலோ கிடைச்சது. விதைப்பு செய்ற முருங்கை விதை, ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. அது மூலமா, 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுது. 25 சென்ட் செடிமுருங்கை சாகுபடியில முதல் போகத்துல மட்டும் மொத்தம் 85 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைச்சுது. இதுல செலவு போக, 65 ஆயிரம் ரூபாய் நிகர லாபமாக கையில நின்னது.

25 சென்ட்... ரூ 85 ஆயிரம்...!  செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை

முதல் போக காய்ப்பு முடிஞ்சதும் செடிகளைக் கவாத்து செஞ்சு, இயற்கை உரங்களைக் கொடுத்தோம். அடுத்த 6 மாசத்துல செடிகள் நல்லா வளர்ந்து இப்ப இரண்டாம் போகம் காய்ப்பு தொடங்கியிருக்கு’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு,
கோபாலன்,
செல்போன்: 99424-42993.

மண்... பருவம்... ரகம் ஏற்றது!

25 சென்ட்... ரூ 85 ஆயிரம்...!  செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கைசெடிமுருங்கை சாகுபடியில் அனுபவம் பெற்ற தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிப்பட்டியைச் சேர்ந்த ஆசைத்தம்பி சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ‘‘செடிமுருங்கைக்கு வடிகால் வசதியுடைய நிலமும், ஈரம் கோக்காத மண்ணும் இதற்கு அவசியம். ஆடி, கார்த்திகை, தை ஆகிய பட்டங்களில் விதைப்பு செய்யலாம். பி.கே.எம்-1, 2 ஆகிய ரகங்கள் சிறப்பானவை.

புரூட்டோனியா புழுத் தடுப்புமுறை!

செடிமுருங்கையில் புரூட்டோனியா புழுத் தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனைத் தடுக்க, 500 கிராம் பூண்டு, 20 கிராம் மிளகு, தலா அரை கிலோ நொச்சி, எருக்கன், வேம்பு, காட்டாமணக்கு இலைகளை உரலில் போட்டு இடித்து, இதனுடன் ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், 10 லிட்டர் தண்ணீர் கலந்து 3 நாட்களுக்கு ஊறவைக்கவேண்டும். இதனை வடிகட்டி, 200 லிட்டர் தண்ணீர் கலந்து இலைகளின் மீது தெளிக்க வேண்டும். இது ஒரு ஏக்கருக்கான அளவு. 

முருங்கை இலை பவுடர்! 


ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இலைகள் அதிகமாக இருக்கும். இதைப் பறித்து ஒரு வாரம் நிழலில் காய வைக்கவேண்டும். பூஞ்சணம் உருவாகாமல் இருக்க, காலை, மாலை இலைகளைப் புரட்டிவிட்டு காற்றோட்டம் ஏற்படுத்தவேண்டும். 9 சதவிகித ஈரப்பதத்துக்குக் காய்ந்ததும் (வாயில் போட்டால் மொறு மொறுப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும்) மிக்ஸியில் அரைத்து பவுடராக்கி, இரண்டு நாட்கள் நிழலில் உலர்த்தி, 6 மாதங்கள் வரை சமையலுக்குப் பயன்படுத்தலாம். கீரை பவுடருடன் பூண்டு, வெங்காயம், பெருஞ்சீரகம் சேர்த்து சூப்பு வைத்து குடிக்கலாம். முருங்கை இலை பவுடருடன் உப்பு, தண்ணீர் சேர்த்து துவையலாகவும் சாப்பிடலாம். புளிக்குழம்பு, வத்தக்குழம்பு, சாம்பாரில் இதைக் கலந்து சாப்பிட்டால், வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.

ஊதுபத்தி அளவுள்ள  பிஞ்சுகளைத் தேர்வு செய்து சுமார் ஒரு வாரம் நிழலில் காயவைத்து, மொறுமொறுப்புத் தன்மை வந்தவுடன் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம். தினமும் ஒருவேளை பசும்பாலில் இந்த பவுடர் 2 ஸ்பூன் அளவு கலந்து 5 மாதங்களுக்கு குடித்தால், சிறுநீரக நோய்கள் குணமாகும். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வெண்புள்ளி நோய் போன்றவை குணமாகும் என்கிறது சித்த மருத்துவம்.

விதைச் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு! 

முருங்கைச்செடியிலேயே காய்களை நன்கு முற்ற வைக்க வேண்டும். நன்கு முற்றிய நெற்றுகளைத் தேர்வு செய்து ஓடுகளை நீக்கிவிட்டு விதைகளை வெளியில் எடுக்கவேண்டும். பிஞ்சு விதைகளை நீக்கிவிட்டு, நன்கு முற்றிய விதைகளை மட்டும் 2 மணிநேரம் வெயிலில் காயவைக்கவேண்டும். 10 கே.ஜி தடிமன் கொண்ட பாலிதீன் பைகளில் போட்டு, ஒரு கிலோ விதைக்கு 15 கிராம் வசம்புத் தூள், தலா 20 கிராம் நன்கு காய்ந்த நொச்சி இலை, வேப்பிலை கலந்து நன்கு கிளறிவிட்டு, காற்றுப் புகாதவாறு கட்டிவைக்கவேண்டும். இதை ஒரு வருடம் வரை வைத்திருந்து விதைப்புக்குப் பயன்படுத்தலாம்.

விதைகள் செதிலுடன் இருந்தால், முளைப்புத்திறன் நன்றாக இருக்கும். எனவே, காய்களில் இருந்து விதை எடுக்கும்போதும், காய வைக்கும்போது செதில் உதிராத வகையில் மிகவும் கவனமாக கையாள வேண்டும். இதுபோன்ற முளைப்புத்திறன் மிக்க விதைகள் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும். சற்று தரம் குறைவான, செதில்கள் இல்லாத விதைகளை எண்ணெய் உள்ளிட்ட மருந்துப்பொருட்கள் பயன்பாட்டுக்காக வியாபாரிகள் வாங்கிக்கொள்கிறார்கள். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் வீதம் விலை கிடைக்கும்’’ என்கிறார் ஆசைத்தம்பி தொடர்புக்கு, ஆசைத்தம்பி செல்போன்: 96983-69927

செடிமுருங்கை சாகுபடி பாடம்!

25 சென்ட்நிலத்தில் செடிமுருங்கை சாகுபடி செய்யும் விதம் குறித்து கோபாலன் சொன்ன சாகுபடிப் பாடம் இங்கே...

6 ம் மாதம் முதல் அறுவடை!

‘‘25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து குழியில் இட வேண்டும். இதன் மீது கொஞ்சம் மண்ணைத் தள்ளி, ஒன்றரை அங்குலம் ஆழத்தில் ஒரு விதை ஊன்ற வேண்டும். 25 சென்ட் நிலத்தில் விதைக்க, 250 கிராம் விதை தேவைப்படும்.

விதை ஊன்றிய பிறகு பாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

9 முதல் 12 நாட்களில் முளைப்பு வரும். அதன் பிறகு,  வாரம் ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். 30 நாளில் செடிகள் ஒன்றேகால் அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கும். ஏற்கெனவே அடியுரம் போட்ட அதே விகிதத்தில்  30, 90, 180 ஆகிய நாட்களில் மண்புழு உரம், ஆட்டு எரு, வேப்பம் பிண்ணாக்கு, உயிர் உரங்கள் கலந்து செடியைச் சுற்றிலும் அரையடி இடைவெளியில், லேசாக பள்ளம் பறித்து இட வேண்டும். 40 முதல் 50 நாட்களில் செடிகள் 3 அடி உயரத்துக்்கு வளர்ந்திருக்கும். அப்போது கிளைகளின் நுனியைக் கையால் கிள்ளிவிட வேண்டும். இதனால் அதிக எண்ணிக்கையில் பக்கக் கிளைகள் உருவாகும். 180-ம் நாளிலிருந்து செடிகள் காய்ப்புக்கு வரும். அடுத்த 6 மாதங்களுக்கு மகசூல் கிடைக்கும். காய்ப்பு ஓய்ந்ததும், தரையில் இருந்து ஓர் அடி உயரத்துக்கு செடியை விட்டுவிட்டு மேற்பகுதியைக் கவாத்து செய்து, ஏற்கெனவே சொன்னதுபோல் உரமிட்டு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

6-ம் மாதம் மீண்டும் காய்ப்புக்கு வந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு மகசூல் கொடுக்கும். ஒரு முறை செடிமுருங்கை சாகுபடி செய்தால், தலா 6 மாத இடைவெளியில் 3 போகங்கள் வரை மகசூல் எடுக்கலாம்.

பலன் கொடுக்கும் பப்பாளி!

25 சென்ட் நிலத்தில தலா ஆறரையடி இடைவெளியில 2 அடி நீள, அகல, ஆழத்துல குழி எடுத்து, ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி எல்லாத்தையும் கலந்து போட்டு பப்பாளிக் கன்றுகளை நடவு செஞ்சோம். இதுல 200 கன்னுங்க நல்லா தேறி செழிப்பா வளர்ந்துச்சு. 6-ம் மாசம் காய்ப்புக்கு வந்தப்ப ஒரு மரத்துக்கு அரை கிலோ, கோழி எரு வெச்சோம். காய்கள் நல்லா திரட்சியா, பெரிய சைஸ்ல ரொம்ப சுவையா இருந்துச்சு. ஒவ்வொரு பழமும் ஒண்ணேகால் கிலோவுல இருந்து ரெண்டு கிலோ எடைவரை இருக்கும். இதுவரைக்கும் ஒன்றரை டன் மகசூல் கிடைச்சிருக்கு. சராசரியா கிலோவுக்கு 25 ரூபாய் விலை கிடைக்குது’’ என்றார் கோபாலன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism