Published:Updated:

‘‘இயற்கை விவசாயம்தான் நிலைத்து நிற்கும்..!’’

‘‘இயற்கை விவசாயம்தான் நிலைத்து நிற்கும்..!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘இயற்கை விவசாயம்தான் நிலைத்து நிற்கும்..!’’

துரை.நாகராஜன், படங்கள்: அ.குருஸ்தனம், தே.அசோக்குமார்

‘‘இயற்கை விவசாயம்தான் நிலைத்து நிற்கும்..!’’

துரை.நாகராஜன், படங்கள்: அ.குருஸ்தனம், தே.அசோக்குமார்

Published:Updated:
‘‘இயற்கை விவசாயம்தான் நிலைத்து நிற்கும்..!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘இயற்கை விவசாயம்தான் நிலைத்து நிற்கும்..!’’
‘‘இயற்கை விவசாயம்தான் நிலைத்து நிற்கும்..!’’

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் விரிவாக்கத் துறை இயக்குநராக இருந்தவர் பேராசிரியர் ஜி.பெருமாள். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் உள்ள சித்திரைவாடி என்ற சிறிய கிராமத்தில் ஏழ்மைச் சூழ்நிலையில் பிறந்தாலும், பல தடைகளைத் தாண்டி படித்து, அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் உயர் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு உயர்ந்தவர். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, தனது கிராமத்திலுள்ள ஏழைக் குழந்தைகளுக்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட குறைவான கட்டணத்தில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். பள்ளிப் பணிகளுக்கிடையே இயற்கை விவசாயமும் செய்கிறார் பெருமாள். ஆனால், பண்ணையில் விளையும் எந்தப் பொருளையும் விற்பனை செய்வதில்லை. பள்ளிக்கூடப் பணியாளர்கள், பண்ணைப் பணியாளர்கள், மாணவர்களுக்கே கொடுத்துவிடுகிறார்.
 
பள்ளியில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். மகிழ்ச்சியோடு தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பேராசிரியர் பெருமாள். ‘‘என்னோட அப்பா, அம்மா பள்ளிக்கூட வாசலைக்கூட மிதிச்சதில்லை. அப்பா விவசாயம்தான் பார்த்திட்டு இருந்தார்.
நான் பிறக்கிறப்போ எங்க ஊர்ல பள்ளிக்கூடம் இல்லை. வீட்டுல இருக்கிற மாடுகளை மேய்க்கிறதுதான் என்னோட வேலை. ஊர்ல இருந்த கணக்குப் பிள்ளை வீட்டுத் திண்ணைப் பள்ளிக்கூடத்துல கொஞ்சகாலம் படிச்சேன். ஒன்பது வயசுக்கு அப்புறம்தான், மதுராந்தகத்துல ஒண்ணாம் வகுப்புல சேர்த்தாங்க. ரொம்ப கஷ்டமான சூழ்நிலையிலதான் படிச்சேன். கல்லூரிப் படிப்பை முடிச்சதும், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. ஆனா, கோயம்புத்தூர் வேளாண் கல்லூரியில்தான் இடம் கிடைச்சது. 1959-ம் வருஷம் பி.எஸ்சி அக்ரி படிச்சு முடிச்சதும் வேலை கிடைச்சது. பல்கலைக்கழக வேலையில இருந்துகிட்டே பி.ஹெச்டி முடிச்சேன். 1990-ம் வருஷம் ஃபோர்டு பவுண்டேஷன் உதவியோட அமெரிக்காவில இருக்கிற ஃபுளோரிடா பல்கலைக்கழகத்துல போஸ்ட் டாக்டர் படிப்பு, படிக்க வாய்ப்பு கிடைச்சது. ஆய்வுப் படிப்பை முடிச்சதும், வேளாண் பல்கலைக்கழகத்துல வேலைக்கு வந்துட்டேன்.

‘‘இயற்கை விவசாயம்தான் நிலைத்து நிற்கும்..!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓய்வுக்குப் பிறகு, நான் பிறந்த கிராமத்துக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். ஊர் மக்களோட விருப்பத்துக்கு ஏற்ப, 1995-ம் வருஷத்துல இருந்து தொடக்கப்பள்ளியை நடத்திகிட்டு வர்றேன். என்னோட பென்ஷன் பணம் மொத்தத்தையும் இந்தப் பள்ளிக்குத்தான் செலவழிக்கிறேன். எனக்கு 83 வயசாச்சு, இந்தப் பள்ளிக்கூடத்திலேயே என்னோட பெரும்பாலான காலத்தைச் செலவழிக்கிறேன்.

வேளாண் பல்கலைக்கழகத்துல, என்கிட்ட படிச்ச மாணவர்கள் பலர், இப்போ ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நபார்டு வங்கி மேலாளர்...னு நாடு முழுக்க பெரிய பதவியில இருக்காங்க. என் மேல உள்ள அன்பால, இந்த முன்னாள் மாணவர்கள் இங்கே வந்து போறதை வழக்கமா வெச்சிருக்காங்க. பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் ஒத்துழைப்போட இங்க ‘நயா திருப்பதி’ங்கிற கோயிலையும் கட்டியிருக்கேன்’’ என்று முன்கதை சொன்ன, பெருமாள் விவசாயம் பற்றிய தனது அனுபவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘எனக்கு பனிரெண்டு ஏக்கர் நிலமிருக்கு. அதுல பத்து ஏக்கர்ல முழுமையா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன்.

‘‘இயற்கை விவசாயம்தான் நிலைத்து நிற்கும்..!’’

கிணத்துத் தண்ணியை வாய்க்கால் மூலமா பாசனம் செய்றேன். நாம் சாப்பிடுற பொருள், நாம உற்பத்தி பண்றதா இருக்கணும்னு நினைப்பேன். பள்ளிக்கூடத்துக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பால்னு எல்லாமே எங்க பண்ணையிலயே கிடைச்சிடுது. என்கிட்ட நாலு மாடுங்க இருக்குது. அதுங்க தினமும் கொடுக்கிற பாலை பள்ளிக்கூடத்துக்கும், பண்ணையில வேலை செய்யுற ஆட்களுக்கும் கொடுத்துடுவேன்.

இங்க படிக்கிற குழந்தைகள் எல்லோருமே ஏழை பிள்ளைங்கதான். அதனால மதிய உணவுல சத்துள்ள பொருளா கொடுக்கணும்ங்கிறதால இயற்கையில விளைந்த பொருட்களையே கொடுக்கிறேன். இங்க அறுவடையாகிற ஒரு பொருள்கூட வெளியில போகாது. எல்லாத்தையும் பள்ளிக்கூடத்துக்கே செலவு செய்றேன். இயற்கை விவசாயத்துல முக்கியமான விஷயம், வெளியில இருந்து இயற்கை உரங்களை வாங்கக் கூடாது, நம்ம தோட்டத்துலயே உரம் உற்பத்தியாகணும்’’ என்றவர் காய்கறிகள் சாகுபடி பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

சீசனுக்கு ஏற்ற பழங்கள்!


‘‘10 சென்ட்டுல கத்திரி பயிரிட்டிருக்கேன். இன்னொரு 10 சென்ட்ல புடலை, பாகற்காய், பீர்க்கன்காய், வெண்டை, மிளகாய்னு பள்ளிக்கூடத்துக்குத் தேவையான காய்கறிங்களை சாகுபடி செஞ்சிருக்கோம். எல்லா காய்கறிச் செடியும், விளைச்சல் கொடுக்கிறது முடிஞ்ச பிறகு, அப்படியே அதை நிலத்தோட சேர்த்து உழுதுட்டு, மாட்டு எரு 200 கிலோவையும் சேர்த்துத் தூவிவிட்டு, உழுதுடுவோம். இவ்வளவுதான் நிலத்துக்கு நாங்க போடுற உரம். ஏழு ஏக்கர்ல மா மரங்க இருக்கு. எட்டு வருஷத்துக்கு முன்னால வெச்சது. இன்னைக்கு நல்ல பலன் கொடுக்குது. மா வைக்கும்போதே ஊடுபயிரா கொய்யா, தேக்கு, செம்மரம், சப்போட்டா, தென்னைனு எல்லா வகை மரங்களையும் கலந்து வெச்சிட்டேன். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சீசன்ல பலன் கொடுக்குது.

ஆறு மாசத்துக்கு ஒருமுறை தோட்டத்தைச் சுத்தப்படுத்தி, அதுல கிடைக்கிற இலைகளை மூடாக்கா மரத்தோட அடிப்பகுதியில போட்டுடுவோம். வருஷம் ஒரு முறை தொழுவுரம் கொடுப்போம் அவ்வளவுதான் பராமரிப்பு. ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு பழவகைகள் கிடைக்கிறதால, குழந்தைகளுக்கு பழங்கள் கிடைச்சிக்கிட்டே இருக்கும். 

‘‘இயற்கை விவசாயம்தான் நிலைத்து நிற்கும்..!’’

எண்ணெய் தேவைக்காக 25 சென்ட்ல இறவையில நிலக்கடலையும், 50 சென்ட்ல மானாவாரியா எள்ளும் விதைச்சிருக்கோம். விளையுறதை ஆட்டி எண்ணெய் எடுத்து சமையலுக்கு வெச்சுக்குவோம். இது எல்லாமே இயற்கை முறையிலதான் விளையுது. இதுபோக கொஞ்ச இடத்துல மானாவாரியில கம்பு, குதிரைவாலி, சோளம், தினை, கேழ்வரகு, சாமைனு சிறுதானியங்களை விதைச்சிருக்கேன். இந்த சிறுதானியங்கள் மக்களோட கவனத்தை ஈர்க்கத்தான் செய்யுது. இதைப் பார்த்து, சுத்துப்பட்டு விவசாயிங்க சிறுதானிய சாகுபடி செய்ய ஆர்வமாக இருந்தா விதைகளைக் கொடுக்க தயாரா இருக்கேன்’’ என்றவர் நிறைவாக,

‘‘பல்கலைக்கழகத்துல பேராசிரியரா இருந்தப்ப, ரசாயனம்தான், உலகத்துக்கே சோறு போடும்னு நம்பினேன். ஆனா, விவசாயம் செய்ய ஆரம்பிச்ச பிறகு, இயற்கை விவசாயம்தான் சரியான பாதைனு புரிஞ்சிக்கிட்டேன். மண்ணுக்கும், மனுஷனுக்கும் பாதிப்புக் கொடுக்காத இயற்கை விவசாயம்தான், காலத்துக்கும் நிற்கும். ரசாயன விவசாயத்தில விளைச்சல் அதிகம் கிடைச்சாலும், அது விஷம்தான். அந்த விளைச்சல் நிலைக்காது’’ என்றபடி  கைக்கூப்பி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
 பேராசிரியர் பெருமாள்,
தொலைபேசி: 044-27540073.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism