Published:Updated:

ஒரு ஏக்கர்... ரூ 3 லட்சம்! கொட்டிக் கொடுக்கும் கொய்யா!

ஒரு ஏக்கர்... ரூ 3 லட்சம்! கொட்டிக் கொடுக்கும் கொய்யா!
ஒரு ஏக்கர்... ரூ 3 லட்சம்! கொட்டிக் கொடுக்கும் கொய்யா!

ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.சத்தியமூர்த்தி

ஒரு ஏக்கர்... ரூ 3 லட்சம்! கொட்டிக் கொடுக்கும் கொய்யா!

*அனைத்து மண் வகைகளிலும் நடவு செய்யலாம்

*குறைந்த பராமரிப்பு... அதிக மகசூல்

*18 மாதங்களில் அறுவடை

*வில்லங்கமில்லாத விற்பனை வாய்ப்பு

குறைந்த தண்ணீர், குறைந்த பராமரிப்பு, அதிக வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களில் பழப்பயிர்களுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில், இயற்கை முறையில் பழப்பயிர் சாகுபடி செய்து இனிக்கும் வருமானம் பார்த்து வருகிறார் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள மானுப்பட்டி விவசாயி எஸ்.இளங்கோவன்.

மேகங்கள் சடுகுடு விளையாடும் மேற்குத்தொடர்ச்சி மலைக்காற்று சிலுசிலுத்த ஓர் இளங்காலைப் பொழுதில் மனைவி மலர்க்கொடி சகிதம் கொய்யா தோட்டத்தில் பழம் பறித்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

கூட்டத்தில் கிடைத்த கொய்யா யோசனை!


‘‘அடிப்படையில் நான் ஒரு சிவில் இன்ஜினீயர். தொழில் நிமித்தமா உடுமலைப்பேட்டையில குடியிருக்கேன். என்னதான் கைநிறைய வருமானம் பார்த்தாலும், பரம்பரைத் தொழிலான விவசாயத்தைவிட மனசில்லை. புதுசா ஏதாச்சும் வெள்ளாமை வைக்கணும்னு யோசனையில இருந்தப்ப, அதுக்கான தீர்வு ‘பசுமை விகடன்’ மூலமா கிடைச்சுது. நான் பசுமை விகடனோட தீவிர வாசகன். இதுவரை வெளியான எல்லா புத்தகங்களையும் படிச்சு சேகரிச்சு வெச்சிருக்கேன். பசுமை விகடன் மூலமா கரூர்ல நம்மாழ்வார் அய்யாவோட இயற்கை விவசாயக் கருத்தரங்கு நடக்கிற தகவலைத் தெரிஞ்சுகிட்டு அதுல போய் கலந்துகிட்டேன். அங்கதான் ஸ்ரீவில்லிபுத்துரைச் சேர்ந்த கொய்யா விவசாயி ஒருத்தரை சந்திக்குற வாய்ப்பு கிடைச்சது. இயற்கை முறையில கொய்யா சாகுபடி செஞ்சா நல்ல லாபம் கிடைக்கும்னு அவர் சொன்னாரு. அவரோட ஆலோசனைப்படி கொய்யாவைத் தேர்வு செஞ்சேன். எங்க பகுதியில கொய்யா விவசாயம் அதிகமா இல்லை. அதனால சந்தை வாய்ப்பும் நல்லா இருக்கும்னு தோணுச்சு, ஒண்ணே முக்கால் ஏக்கர்ல கொய்யா நாத்துக்களை நடவு செஞ்சேன். நடவு தொடங்கி பறிப்புவரைக்கும் இயற்கை இடுபொருட்களைத்தான் பயன்படுத்தணும்னு தெளிவா இருந்தேன்.

ஒரு ஏக்கர்... ரூ 3 லட்சம்! கொட்டிக் கொடுக்கும் கொய்யா!

ஏக்கருக்கு 650 நாத்து!

செடி ஒண்ணு 30 ரூபாய் விலையில, ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருக்கிற ஒரு பண்ணையில போய் வாங்கிட்டு வந்து நடவு செஞ்சேன். அதிகபட்சம் ஆறு மாச வயசுள்ள செடிகளைத்தான் நடணும். நான், லக்னோ-49 ரகத்தை நடவு செஞ்சிருக்கேன். இந்த ரகத்தைப் பொறுத்தவரைக்கும், நர்சரியில இருந்து செடியை வாங்கும்போதே பூ இருக்கும். நடவு செஞ்ச பிறகும் பூக்கும். செடியோட தண்டு, நம்ம கை தடிமனுக்கு வர்றவரைக்கும் பூக்களை உதிர்த்து விட்டுடணும். அப்பத்தான் அடித்தண்டு பலமாகும். முதல் மூணு மாசம் பாசனம் மட்டும் போதும்... வேற எந்தப் பராமரிப்பும் தேவைப்படாது. நாலாவது மாசத்துல இருந்து, மாசத்துக்கு ரெண்டு ஊட்டம் கொடுக்கணும்... ஒண்ணு வேர் வழியா, இன்னொன்னு இலை வழியா கொடுக்கணும்.

ஒரு ஏக்கர்... ரூ 3 லட்சம்! கொட்டிக் கொடுக்கும் கொய்யா!

18-ம் மாதத்தில் அறுவடை!

முறையா பராமரிச்சா 18-ம் மாசத்துல இருந்து பழம் பறிக்கலாம். நான் நடவு செஞ்சு மூணு வருஷம் ஆச்சு. இப்ப ரெண்டாவது முறையா பழம் பறிக்குறேன். பொதுவா, ஆடி, தை ரெண்டு பட்டத்துலயும் பழத்தை அறுவடை செய்யலாம். தினமும் பறிக்காம, வாரம் ரெண்டு முறை பறிக்கலாம். ரெண்டு பட்டத்துலயும் சேர்த்து ஒரு ஏக்கருக்கு ஒரு வருஷத்துக்கு சராசரியா 15 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். சராசரியா கிலோ 20 ரூபாய்க்குப் போகுது. இந்தக் கணக்குப்படி, ஒரு ஏக்கர்ல இருந்து வருஷத்துக்கு 3 லட்ச ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்குது. இதுல நாத்து, குழி, சொட்டுநீர், பராமரிப்பு, பறிப்புச் செலவு முதல் போகத்துல மட்டும் ஏக்கருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். அடுத்த போகத்துல இருந்து இடுபொருள்செலவு மட்டும்தான்.

ஒரு ஏக்கர்... ரூ 3 லட்சம்! கொட்டிக் கொடுக்கும் கொய்யா!

விற்பனையைப் பொறுத்தவரைக்கும் எந்த வில்லங்கமும் இல்லை. என் தோட்டத்துக்கே வியாபாரிகள் வந்து பழத்தைப் பறிச்சுகிட்டு, எடை போட்டு பணம் கொடுத்துட்டுப் போயிடுறாங்க. அதுனால, இது அலைச்சல் இல்லாத விவசாயமா இருக்கு” என்ற இளங்கோவன் நிறைவாக, நல்ல வருமானம் கொடுக்கிற என்ஜீனியர் வேலை பார்த்தாலும், பசுமை விகடன், நம்மாழ்வார் அய்யா மற்றும் பல விவசாயிகளோட தொடர்பு, என்னை இயற்கை விவசாயியா மாத்தியிருக்கு. ‘எக்கோ-டூரிஸம்’ங்கிற சுற்றுச்சூழல் சுற்றுலா வேணும்னு அய்யா அடிக்கடி சொல்லுவாரு... அதுக்கான சூழல் நெறைய இருக்கிற உடுமலைப்பேட்டைப் பகுதியில அதை முதல்கட்டமா அமைச்சிருக்கேன். அதில் முதல் விருந்தாளியா நம்மாழ்வாரை அழைச்சு வந்து தங்க வைக்கணும்னு நெனைச்சேன். அந்த ஆசை நிறைவேறாம போனாலும், அவரது ஆசீர்வாதம் நிச்சயம் இருக்குனு நம்புறேன்’’ என்றார் நெகிழ்வுடன்.

தொடர்புக்கு,
எஸ்.இளங்கோவன்,
செல்போன்: 93622-20919. 

 மூங்கில் வீடு, மூலிகை உணவு!

தனது பண்ணையில் இயற்கை வாழ்வியல் தங்கும் விடுதி ஒன்றை நீச்சல்குளத்துடன் அமைத்துள்ளார். அதில் மூங்கிலால் ஆன, காட்டுப்புல் வேயப்பட்ட உணவு விடுதி, இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. வழக்கமான உணவு வகைகளுடன் சிறுதானிய உணவு, மூலிகைத் துவையல், அவியல், ஆவாரம்பூ டீ போன்றவற்றை இவரது குடும்பத்தினரே தயாரித்து குறைந்த விலைக்கு வழங்குகிறார்கள்.

ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தில், கொய்யா சாகுபடி செய்யும் முறை குறித்து, இளங்கோவன் சொன்ன சாகுபடிப் பாடம் இங்கே...

ஒரு ஏக்கர்... ரூ 3 லட்சம்! கொட்டிக் கொடுக்கும் கொய்யா!

கொய்யா வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் வளர்ந்து மகசூல் கொடுக்கும். நடவு செய்வதற்கு ஜூன், ஜூலை மாதங்கள் ஏற்றவை. நடவுவயலில், செடிக்குச் செடி 6 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி இடைவெளியில், 2 அடி ஆழ, அகலமுள்ள குழிகளை எடுக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு 650 குழிகள் வரை எடுக்கலாம். குழிகளில் அடியுரமாக தலா 500 கிராம் மணல், வேப்பம் பிண்ணாக்கு மற்றும் 2 கிலோ தொழுவுரம், 5 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து கொட்டி, குழிக்கு ஒரு நாத்து வீதம் நடவு செய்து, மேல் மண்ணைக்கொண்டு குழியை மூடவேண்டும்.

இளம் செடிகளுக்குத் தேவையான வளர்சத்துக்களை வேர்கள் மூலம் கொடுக்கவும், வேர் சம்பந்தமான நோய் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி, செடிகளின் சேதாரத்தைக் காக்கவும் இந்த அடியுரம் அவசியம். தொடர்ந்து உயிர்த்தண்ணீர் கொடுப்பதுடன், மழை இல்லாத காலங்களில் வாரம் இரண்டு முறை பாசனம் செய்ய வேண்டும்.

பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், தேமோர்க்கரைசல்!

நடவு செய்த 4-ம் மாதத்தில் இருந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை வேர்வழி, இலைவழிச் சத்துக்களைக் கொடுக்க வேண்டும். ஒரு முறை பஞ்சகவ்யா (10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி) தெளித்தால், அடுத்த முறை மீன் அமினோ அமிலம் (10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி), அடுத்த முறை தேமோர்க் கரைசல் (10 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி) என மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும். சுழற்சி முறையில், இவை அனைத்தையும் 15 நாட்களுக்கு ஒருமுறை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செடிகளைச் சுற்றிலும் குறிப்பிட்ட இடைவெளியில் கடப்பாரை மூலம் ஆழமாக குத்தி, அந்தக் குழிக்குள் 500 மில்லி தண்ணீரில் 15 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து ஊற்றி, மண்ணைக் கொண்டு மூடி விடவேண்டும். இப்படிச் செய்வதால், செடிகளின் இலைகள் தளதளப்புடனும், நல்ல நிறமுடனும் அடர்த்தியாகவும் வளர்ந்து செடிகளுக்குத் தேவையான உணவை பற்றாகுறையின்றி கொடுக்கும், இதனால் காய்கள் உருண்டு திரண்டு, ஒரே சீராகவும் விளைந்து நிற்கும்.

மாவுப்பூச்சிக்கு காதி சோப்!

கொய்யாவைப் பொறுத்தவரை மாவுப்பூச்சித் தாக்குதல் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த, காதி சோப், புகையிலைக் கரைசலைப் பயன்படுத்தலாம். 10 லிட்டர் தண்ணீரில் ஒரு பார் காதிசோப் கரைசல் என்கிற அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைகளின் அடிப்பகுதி வரை சொட்ட சொட்ட நனையும்படி நின்று நிதானமாகத் தெளிக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு இதே முறையில் 40 டேங்க் வரை தெளிக்கவேண்டும். இப்படி செய்வதன் மூலம் இலைகளின் அடிப்பகுதியில் தங்கியிருக்கும் மாவுப்பூச்சியின் கூடுகள் முழுமையாக கழுவப்பட்டு செடிகள் சுத்தமாகும். அதைத் தொடர்ந்து அடுத்தநாள் 100 கிராம் மைதா மாவை கஞ்சியாக்கி ஆறவைத்து, அதனுடன் ஒரு லிட்டர் அக்னி அஸ்திரம், 50 கிராம் புகையிலைத்தூள் சேர்த்துக் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் செடிகள் மீது தெளிக்க மாவுப்பூச்சித்தாக்குதல் அறவே இருக்காது. மாவுப்பூச்சித்தாக்குதல் தென்படும் அறிகுறி தெரியும்போது இதைப் பயன்படுத்தலாம்.’’

ஊதக்காற்றைத் தடுக்க உயிர்வேலி!

ஆடி மாதம் பலமாக காற்று வீசும் காலம். இந்த சமயத்தில் பூக்கும் பூக்கள், காற்றில் உதிர்ந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. இதைத் தடுக்கவும், கூடுதல் வருமானம் பெறவும், தனது கொய்யா தோட்டத்தைச் சுற்றிலும் பல வகை மரங்களை நட்டு உயிர்வேலி அமைத்துள்ள இளங்கோவன், “300 முருங்கை, 580 மலைவேம்பு, 220 மகோகனி, 100 குமிழ் என அமைக்கப்பட்ட உயிர்வேலி ‘காற்று தடுப்பானாக இருப்பதுடன் எதிர்காலத்தில் நல்ல லாபம் கொடுப்பதாகவும் இருக்கும்” என்கிறார்.

மிகை மகசூல்... மீன் அமினோ அமிலம்!

ஒரு ஏக்கர்... ரூ 3 லட்சம்! கொட்டிக் கொடுக்கும் கொய்யா!

எந்தப் பயிரும் கடைசிவரை ஒரே சீரான தொடர் மகசூல் கொடுக்கும்போதுதான் முழுமையான விவசாயமாக அது விளங்கும். அந்த வகையில் செடிகளுக்கு ‘வளர்ச்சி ஊக்கி’ கொடுக்கவேண்டியது அவசியம். மீன் அமினோ அமிலம் அதற்கான வேலையைச் செய்கிறது. ஒரு கிலோ மீன் கழிவு, ஒரு கிலோ வெல்லம் இரண்டையும் ஒன்றாகக் கலக்கி பிளாஸ்டிக் வாளி ஒன்றில் சேர்த்து நிழலான பகுதியில் மூடி வைத்து விட வேண்டும். 24 நாட்கள் கழித்துப் பார்த்தால் சர்க்கரைப் பாகு போல காட்சி தரும். இதுதான் மீன் அமினோ அமிலம். 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மீன் அமினோ அமிலம் என்கிற விகிதத்தில் கலந்து செடிகள் மீது தெளித்தால் வளர்ச்சி சீராக இருக்கும். அதோடு காய்களைத் தாக்கும் அம்மை நோய் நுனிக்கருகல் நோய் எல்லாம் போய் பழங்கள் பங்கமின்றி மினுமினுப்புடன் காய்த்துக் குலுங்கும்.

கையில் எட்டி பறிக்க... கவாத்து!

வளரும் செடிகளை, 6 மாதங்களுக்கு ஒரு முறை கவாத்து செய்து, அதிக உயரம் போகாமல் கட்டுப்படுத்த வேண்டும். செடிகளில் தொங்கும் பழங்களை, கையில் எட்டிப்பறிக்கும் அளவில் அதன் உயரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். காய்கள் கனியும் முன்பு பறித்துக்கொண்டால், பழ ஈக்கள் மற்றும் பறவைகள் செய்யும் சேதாரங்களைத் தவிர்த்து முழுமையான மகசூலைப் பெறமுடியும்.

களை எடுக்கும் செம்மறி!

‘‘கொய்யா செடிகளின் இடைவெளி எல்லாம் புல் முளைச்சுடும். இந்தக் களையைக் கட்டுப்படுத்த நான் களைக்கொல்லி பயன்படுத்துறதில்லை. தோட்டத்துல சுத்தி வர்ற பத்து செம்மறி ஆடுகளே களை எடுக்குற வேலையை செஞ்சிடுது. புல்லை தின்னு அழிக்குறது மட்டுமில்லாம, நிலம் முழுக்க அதுங்க போடுற புழுக்கையும், சிறுநீரும் நிலத்தை வளமாக்குது. இப்படி ரெண்டு லாபங்களைக் கொடுக்குற செம்மறி ஆடுகள் ஒவ்வொரு பண்ணையிலும் அவசியம் இருக்கணும்.

குட்டிகளா வாங்கி விட்டா, தன்னால வளர்ந்து அடுத்த ஆறு மாசத்துல, வாங்குன விலையை விட ரெண்டு மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யலாம். இது மூலமாவும் வருஷத்துக்கு ஒரு தடவை ஒரு வருமானம் பாக்க முடியும்’’ என்கிறார் இளங்கோவன்.

மழைக்காலத்துக்கு முன்னர் மண்புழு உரம்!

மழைக்காலத்துக்கு முன்னதாக மண்புழு உரத்தை வைக்க வேண்டும். ஒரு செடிக்கு 3 கிலோ வீதம் ஆண்டுக்கு மூன்று முறை கொடுக்க வேண்டும். மண்ணின் வளத்தைப் பெருக்கும்போதுதான் செடிகளுக்குத் தேவையான சத்துக்கள் சுணக்கமில்லாமல் சென்றடையும்.

அடுத்த கட்டுரைக்கு