Published:Updated:

பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பாகல்!

பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பாகல்!
பிரீமியம் ஸ்டோரி
பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பாகல்!

10 சென்ட்... 5 மாதங்கள்... 77 ஆயிரம் ரூபாய் லாபம்!கு.ராமகிருஷ்ணன், படங்கள்: , ம.அரவிந்த்

பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பாகல்!

10 சென்ட்... 5 மாதங்கள்... 77 ஆயிரம் ரூபாய் லாபம்!கு.ராமகிருஷ்ணன், படங்கள்: , ம.அரவிந்த்

Published:Updated:
பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பாகல்!
பிரீமியம் ஸ்டோரி
பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பாகல்!
பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பாகல்!

*150 நாள் பயிர்

*10 சென்டுக்கு 50 கிராம் விதை

*கிலோ 30 ரூபாய்

இயற்கை முறையில் கூடுதல் மகசூல்

நீர்மேலாண்மை, இடுபொருள் மேலாண்மை, நோய் மற்றும் பூச்சிமேலாண்மை இவை மூன்றையும் சரியாகக் கடைபிடித்தால்... கண்டிப்பாக விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்யமுடியும். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு அருகே உள்ள ஆலத்தன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த ஆதிநாரயணன்.

தென்னை, நெல் என அதிகப்பரப்பில் விவசாயம் செய்தாலும், 10 சென்ட் பரப்பில் இயற்கை முறையில் பாகல் சாகுபடியும் செய்து வருகிறார்,  ஆதிநாராயணன். இவர் உற்பத்தி செய்யும் இயற்கைப் பாகலுக்கு சந்தையில் தனி கிராக்கி இருக்கிறது. ஒரு பகல்பொழுதில் அறுவடை செய்த பாகற்காய்களை மூட்டை பிடித்துக் கொண்டிருந்த ஆதிநாராயணனைச் சந்தித்தோம். நம்மை வரவேற்றவர் மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.

படித்தது பொறியியல்... செய்வது உழவியல்!

“விவசாயம் குடும்பத்தொழில். எனக்கும் சின்னவயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம். அதனாலதான், பி.இ படிச்சாலும், அது சம்பந்தமான வேலை தேடாம விவசாயத்துலயே முழுமையா இறங்கிட்டேன். விவசாய ஆசையில, இளங்கலை ‘பண்ணைத் தொழில்நுட்பவிய’லும் படிச்சிருக்கேன்.

பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பாகல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோதனை அடிப்படையில் பாகல்!

எங்களுக்கு மொத்தம் 30 ஏக்கர் நிலம் இருக்கு. செம்மண்ணும் மணலும் கலந்த பூமி. 25 ஏக்கர் நிலத்துல நெல் சாகுபடி பண்றேன். நெல்லுக்கு மட்டும் கொஞ்சமா ரசாயன உரம் பயன்படுத்துறேன். ரெண்டரை ஏக்கர் நிலத்துல தென்னை இருக்கு. தென்னைக்கு ரசாயன உரங்கள் கொடுக்கிறதில்லை. மீதி ரெண்டரை ஏக்கர் நிலத்துல பசுந்தீவனம், மல்பெரி, தர்பூசணினு பயிர் பண்ணிட்டு இருந்தேன். இப்போ அதையெல்லாம் அழிச்சிட்டு காய்கறி சாகுபடி பண்ணலாம்னு முடிவு எடுத்திருக்கேன். அதுக்காக சோதனை அடிப்படையில 10 சென்ட் நிலத்துல வீரிய ரக பாகலை (பாலி எஃப்-1) சாகுபடி செஞ்சிருக்கேன். இதுக்கு முழுமையா இயற்கை இடுபொருட்கள் மட்டும்தான் கொடுக்குறேன். இயற்கை முறையில பாகல் நல்லா விளையுது” என்ற ஆதிநாராயணன் அறுவடை செய்த பாகற்காய்களை எடுத்துக்காட்டினார்.

அதிக சதைபற்று... அதிக எடை!

“ஒவ்வொரு காயும் முக்கால் அடி நீளத்துக்கு நல்லா சதை பத்தா, திரட்சியா இருக்கு. இதனால, அதிகமான எடை நிக்குது.  மூணு நாள் ஆனாலும், காய் வதங்காம பசுமையாவே இருக்கு. காய்கள்ல முள்ளு எடுப்பா இருக்கிறதால பார்க்குறதுக்கு வசீகரமா இருக்கு. அதோட  சுவையாவும் வாசனையாவும் இருக்கிறதால இதுக்கு அதிக வரவேற்பு இருக்கு. வியாபாரிகள் விரும்பி வாங்குறாங்க. இயற்கை முறை சாகுபடியில காய் நல்ல எடை நிக்கிறதால 10 சென்ட் பரப்புல வாரத்துக்கு 330 கிலோ மகசூல் கிடைக்குது. பக்கத்து விவசாயிகள்கூட ஆச்சர்யப்படுறாங்க. வீரிய ரக பாகலா இருந்தாலும், இது அதிகமான மகசூல்தான்.

பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பாகல்!

2 நாளில் பலன் கொடுக்கும் பிண்ணாக்கு!

எங்கிட்ட மாடுகள் இல்லேங்கிறதால, பக்கத்துத்தோட்ட விவசாயிகள்கிட்ட இருந்துதான் சாணம், மாட்டுச் சிறுநீரை இலவசமா வாங்கி பயன்படுத்துறேன். அதுபோக, கடலைப் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, நிலக்கரிச் சாம்பல், கடல் பாசி, பொன்னீம், பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் எல்லாத்தையும் பயன்படுத்துறேன். கடலைப் புண்ணாக்குல தழைச்சத்து, மணிச்சத்து ரெண்டும் அதிகமா இருக்கு. அதைக் கொடுத்த 48 மணிநேரத்துல பாகல் கொடியில ஒரு ஜான் நீளத்துக்கு துளிர் விட்டிருக்கிறதை கண்கூடா பார்க்க முடியுது. காய் புடிப்புத் திறனும் அதிகமாகுது. நிலக்கரிச் சாம்பல், பயிருக்கு அபரிமிதமான வளர்ச்சியைக் கொடுக்குது.  பூ பூக்குற தருணத்துல கடல்பாசி திரவத்தைக் கொடுக்கிறப்போ, பிஞ்சுகள் நல்லா பெருக்குது. காய்களும் சதைப்பத்தா இருக்குது” என்ற ஆதிநாராயணன், வருமானம் குறித்துச் சொன்னார்.

பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பாகல்!

2 நாளைக்கு ஒரு பறிப்பு

“பாகல் விதைச்சு 120 நாள் ஆகுது. 60-ம் நாள்ல இருந்து காய் பறிச்சிட்டு இருக்கேன். ரெண்டு நாளைக்கு ஒரு தடவைனு இதுவரைக்கும் 75 நாள் காய் பறிச்சாச்சு. இதுவரை 3 ஆயிரத்து 300 கிலோ மகசூல் கிடைச்சிருக்கு. அதை கிலோ 30 ரூபாய்னு விற்பனை செய்ததுல... வீதம் 99 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இதுவரை 37 ஆயிரத்து 750 ரூபாய் செலவாகியிருக்கு. அதைக்கழிச்சு 61 ஆயிரத்து 250 ரூபாய் லாபமா கையில கிடைச்சிருக்கு. செடிகள் செழிப்பா இருக்கிறதைப் பார்த்தா இன்னும் ஒரு மாசத்துக்கு காய் பறிக்கலாம்னு எதிர்பார்க்கிறேன். அதுல 700 கிலோ வரை மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். அப்படி கிடைச்சு சராசரி விலையா 30 ரூபாய் கிடைச்சா, இன்னும் 21 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அதுல 5 ஆயிரம் ரூபாய் செலவு பண்ண வேண்டியிருக்கும். அதைக்கழிச்சா 16 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். அப்படிக் கிடைச்சதுனா மொத்தத்துல 10 சென்ட் நிலத்துல 77 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சுடும்” என்று பூரிப்புடன் சொன்ன ஆதிநாராயணன், காய்களை மூட்டை பிடிப்பதில் மும்முரமானார்.

தொடர்புக்கு,
ஆதிநாரயணன்,
செல்போன்: 98656-13616.

பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பாகல்!

ந்தல் அமைக்கும் முறை குறித்துப் பேசிய ஆதிநாராயணன், “நான் பழைய இருமடி மீன் வலைகளை மலிவான விலைக்கு வாங்கிட்டு வந்துதான் பந்தலுக்குப் பயன்படுத்தியிருக்கேன். இதை சுலபமா பந்தல்ல இழுத்துக் கட்ட முடியும். இதனால ஆட்களும் குறைவாதான் தேவைப்படும். அதேமாதிரி, தேக்கு மரத்துல கவாத்து செஞ்ச சின்ன கிளைகளையும், சூபாபுல் மரக் கிளைகளையும்தான் பந்தல் கால்களா பயன்படுத்தியிருக்கேன்” என்கிறார்.

சாகுபடி செய்யும் முறை!

10 சென்ட் நிலத்தில் பாகல் சாகுபடி செய்யும் முறை குறித்து ஆதிநாராயணன் சொன்ன தகவல்கள் இங்கே...

நான்கடி பார்!

தேர்வு செய்த 10 சென்ட் நிலத்தில் 2 சால் உழவு ஓட்டி, ஆறரையடி உயரத்தில் பந்தல் அமைக்கவேண்டும். 4 அடி அகலம், முக்கால் அடி உயரத்தில் பார்கள் அமைக்க வேண்டும். பார்களுக்கு இடையே 3 அடி அகலத்தில் வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். பாரின் ஒரு விளிம்பில் மட்டும் இரண்டரையடி இடைவெளியில், அரையடி ஆழத்தில் குழிகள் எடுத்து, குழிகளில் வாய்க்கால் மண்ணை நிரப்பவேண்டும். குழியின் மையத்தில் அரை அங்குல ஆழம் குழிபறித்து அதில் குழிக்கு ஒரு விதை என விதைக்கவேண்டும். 10 சென்ட் நிலத்துக்கு 50 கிராம் விதை தேவைப்படும் (எண்ணிக்கையில் 240 முதல் 250 விதைகள்). விதைத்த 2-ம் நாளில் இருந்து 10-ம் நாள் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விதைத்த இடத்தில் மட்டும் குவளை மூலம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.  பிறகு மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப, வாய்க்கால் வழியாக தண்ணீர் பாய்ச்சலாம். களைகள் முளைப்பதைப் பொறுத்து அவ்வப்போது களைகளை அகற்றி வரவேண்டும்.

பூச்சிகளை விரட்ட பொன்னீம்!

விதைத்த 15-ம் நாள் ஒவ்வொரு செடியின் தூரிலும், அரை லிட்டர் அமுதக்கரைசல் ஊற்றவேண்டும். அதற்கு மேல் கொடிகள் படரத்தொடங்கும். அந்த சமயத்தில், ஒவ்வொரு கொடியின் அருகிலும் அரை அடி உயர குச்சியை நட்டு, அதில் சணல் கயிறைக் கட்டி பந்தலில் இணைக்கவேண்டும். இந்த சமயத்தில் இலைப்பேன் தாக்க வாய்ப்புள்ளதால்... 13 லிட்டர் தண்ணீரில் 250 மில்லி பொன்னீம் கலந்து தெளிக்கவேண்டும். ஒரு வார இடைவெளியில் 4 முறை இக்கரைசலைத் தெளிக்கவேண்டும்.

ஊட்டத்துக்கு பஞ்சகவ்யா!

20-ம் நாளில் இருந்து பூ பூக்கும் வரை... வாரம் ஒரு முறை 33 லிட்டர் தண்ணீரில் 250 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். 25-ம் நாளில் இருந்து பூ பூக்கும் வரை... வாரம் ஒரு முறை 60 லிட்டர் தண்ணீரில் 60 கிராம் நிலக்கரிச் சாம்பல் கலந்து தெளிக்கவேண்டும்.

50 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ சாணம், 2 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 10 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைச் சேர்த்து கலக்கி, ஒரு நாள் இரவு முழுக்க ஊறவைத்து... 20-ம் நாளன்று இந்தக் கரைசலை  ஒவ்வொரு தூரிலும் 200 மில்லி அளவுக்கு ஊற்றவேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறை இதே அளவில் இக்கரைசலைக் கொடுத்து வரவேண்டும். 25-ம் நாளிலிருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீரில் 50 கிலோ சாணத்தைக் கலந்துவிடவேண்டும்.

அதிக பிஞ்சுகளுக்கு கடல்பாசி!

பூக்கள் பூத்து பிஞ்சு பிடிக்கும் தருணத்தில் இருந்து 3 நாட்களுக்கு ஒரு முறை... 60 லிட்டர் தண்ணீரில் 120 மில்லி கடல்பாசி திரவத்தைக் கலந்து தெளிக்கவேண்டும். 60-ம் நாளில் இருந்து காய்களைப் பறிக்க ஆரம்பிக்கலாம். தொடர்ந்து 3 மாதங்கள் காய் பறிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism