Published:Updated:

மானாவாரியிலும் மகத்தான லாபம் கொடுக்கும் பாசிப்பயறு,உளுந்து!

மானாவாரியிலும் மகத்தான லாபம் கொடுக்கும் பாசிப்பயறு,உளுந்து!

4 ஏக்கர்... 90 நாட்கள்... ரூ1,29,000 லாபம்!இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

மானாவாரியிலும் மகத்தான லாபம் கொடுக்கும் பாசிப்பயறு,உளுந்து!

4 ஏக்கர்... 90 நாட்கள்... ரூ1,29,000 லாபம்!இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

Published:Updated:
மானாவாரியிலும் மகத்தான லாபம் கொடுக்கும் பாசிப்பயறு,உளுந்து!
மானாவாரியிலும் மகத்தான லாபம் கொடுக்கும் பாசிப்பயறு,உளுந்து!

*ஆடிப்பட்டத்துக்கு ஏற்றது

*விதைக்காக விற்பதில் கூடுதல் லாபம்

*ஏக்கருக்கு 6 கிலோ விதை

*70 நாட்களில் பாசிப்பயறு அறுவடை

*90 நாட்களில் உளுந்து அறுவடை

காய்கறிகள், மரப்பயிர்கள், பழப்பயிர்கள்... என அனைத்துப் பயிர்களையும் நடவுசெய்வதற்கு ஏற்ற பட்டமாக ஆடிப்பட்டம் இருந்தாலும், குறிப்பாக சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளுக்கு இது மிகச்சிறந்த பட்டமாக இருக்கிறது. பெரும்பாலான மானாவாரி விவசாயிகள் இப்பட்டத்தில்தான் விதைப்பைத் தொடங்குகிறார்கள். அந்தவகையில், ஆடிப்பட்டத்தில் தொடர்ந்து, பயறு வகைகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பெருமாள். இவர், அறுவடை செய்த தானியங்களை வியாபாரிகளிடம் விற்பனை செய்யாமல்... வேளாண் விரிவாக்க மையங்களுக்கு விதைக்காக விற்பனைசெய்து கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார். 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, கத்தாளம்பட்டி கிராமம். இங்குதான் உள்ளது, பெருமாளின் நிலம். ஆடிப்பட்ட விதைப்புக்காக நிலத்தைத் தயார் செய்துகொண்டிருந்த பெருமாளைச் சந்தித்தோம்.

மானாவாரியிலும் மகத்தான லாபம் கொடுக்கும் பாசிப்பயறு,உளுந்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வானம் பார்த்த பூமி!

“அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். இது வானம் பார்த்த பூமி. அதனால, மானாவாரி விவசாயம்தான். கம்பு, பருத்தி, உளுந்து, பாசி, கேழ்வரகு, குதிரைவாலினு மாத்தி மாத்தி சாகுபடி செய்வார். அவர், ரசாயன உரங்களையும் பயன்படுத்திதான் விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தார். குடும்ப சூழ்நிலை காரணமா என்னால பத்தாம் வகுப்புக்கு மேல படிக்க முடியலை. படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போயிட்டேன். பதினெட்டு வருஷம் வேலைக்காக வெளியூர்லயே இருந்தேன். அதுக்கப்பறம் ஊருக்குத் திரும்பி விவசாயம் பார்க்க  ஆரம்பிச்சேன். நிலத்துல இருந்த கிணறை கொஞ்சம் ஆழப்படுத்தி... மிளகாய், சின்னவெங்காயம் ரெண்டையும் சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தேன். அதுக்குதான் அந்த தண்ணீர் சரியா இருக்கும். அதுபோக, உளுந்து, பாசிப்பருப்பு, கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினைனு மானாவாரியாவும் சாகுபடி செஞ்சுட்டு இருந்தேன்.

நண்பர் கொடுத்த ஆலோசனை!

அடியுரத்துக்காக ஆட்டுக்கிடை போட்டு, விதைச்சு அதிகமா ரசாயன உரமும் போடுவோம். கூடுதலா உரம் போட்டாலும், எதிர்பார்த்த மகசூல் எனக்கு கிடைக்கலை. வந்தவரைக்கும் லாபம்னு அறுவடை செஞ்சு வித்துக்கிட்டு இருந்தேன். எங்க ஊரை சேர்ந்த பாக்கியராஜ் சாணத்தையும், மாட்டுச்சிறுநீரையும் டிரம்ல கலக்கி அதை பயிர்களுக்கு பயன்படுத்தி விவசாயம் செய்வார். அவருக்கு நல்ல மகசூல் கிடைச்சுகிட்டு இருந்துச்சு. அவரோட பயிர்கள் எப்பவும் செழிப்பா இருக்கும். எல்லாரையும் இயற்கை விவசாயம் செய்யச் சொல்வார். ஆனா, ஊர்ல யாரும் கேட்க மாட்டோம். எனக்கு மகசூல் குறைஞ்சுகிட்டே வரவும் அவர்கிட்ட யோசனை கேட்டுப் போனேன். அவர்தான் ‘ரசாயனத்தை விட்டுட்டு இயற்கை முறைக்கு மாறுங்க. மண் வளமாகி நல்ல மகசூல் கிடைக்கும்’னு சொல்லி கோவிலான்குளம் கே.வி.கேவில் நடந்த இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துக்க ஏற்பாடு செஞ்சு கொடுத்தார்.

மொத்த நிலத்தையும் இயற்கைக்கு உடனே மாத்த வேண்டாம். கொஞ்ச நிலத்துல மட்டும் செஞ்சு பாருங்க. திருப்தி இருந்தா முழு இயற்கைக்கு மாறுங்க’னு யோசனை சொன்னதோட ‘பசுமை விகடன்’ புத்தகத்தையும் கொடுத்து படிக்கச் சொன்னார் பாக்கியராஜ்.

மானாவாரியிலும் மகத்தான லாபம் கொடுக்கும் பாசிப்பயறு,உளுந்து!

நம்பிக்கை கொடுத்த இயற்கை!

அவர் சொன்ன மாதிரியே 50 சென்ட் நிலத்துல பாசிப்பயறையும், 50 சென்ட் நிலத்துல உளுந்தையும் இயற்கை முறையில மானாவாரியா விதைச்சுப் பார்த்தேன். அந்தப் பயிர்களோட வளர்ச்சியில நல்லாவே வித்தியாசம் தெரிஞ்சுது. பயிர் செழுமையா இருந்துச்சு. அதுக்கப்பறம்தான் எனக்கு இயற்கை விவசாயத்து மேல நம்பிக்கை வந்துச்சு. அதுல இருந்து முழு இயற்கை விவசாய முறைக்கு மாறிட்டேன். இப்போ நாலு வருஷம் ஆகிடுச்சு. தொடர்ந்து பசுமை விகடனையும் படிச்சு  நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டு இருக்கேன்” என்று இயற்கை விவசாயத்துக்கு, தான் மாறிய கதை சொன்ன பெருமாள், தொடர்ந்தார்.

அடியுரத்துக்கு ஆட்டுக்கிடை!

“மொத்தம் 12 ஏக்கர் நிலம் இருக்குது. கரிசல் கலந்த மணல்பாங்கான நிலம். மானாவாரி விவசாயம்தான் செஞ்சுகிட்டு இருக்கேன். வருஷா வருஷம் சித்திரையில கோடை உழவு போட்டு வெச்சுடுவேன். ஆடிப்பட்டத்துல ரெண்டு ரெண்டு ஏக்கரா பிரிச்சு பாசிப்பயறையும், உளுந்தையும் சாகுபடி செஞ்சிடுவேன். அடுத்து மழையைப் பொறுத்து புரட்டாசி, ஐப்பசி பட்டங்கள்ல கம்பு, கேழ்வரகு, சிவப்புச்சோளம், குதிரைவாலினு பயிர் பண்ணுவேன். வருஷம் தவறாம செம்மறி ஆட்டுக்கிடை போடுறதால அடியுரம் கிடைச்சுடுது. ஊட்டத்துக்கு பஞ்சகவ்யா மட்டும்தான் பயன்படுத்திகிட்டு இருக்கேன். மானாவாரியில இயற்கை முறை விவசாயம்கிறதால பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் வர்றதில்லை.  அப்படியே வந்தாலும் பஞ்சகவ்யா தெளிக்கிறதிலேயே அதெல்லாம் கட்டுப்பட்டுடுது. இருந்தாலும், வருமுன் காக்கும்கிறதுக்காக வேப்பெண்ணெய்க் கரைசலை மட்டும் தெளிச்சிடுவேன்.

நான் வேளாண் விரிவாக்க மையத்துல பதிஞ்சு வெச்சிருக்கிறதால ஆடிப்பட்டத்துல போடுற பாசிப்பயறையும், உளுந்தையும் விதைக்காக அந்த மையத்துக்கே விற்பனை செய்துடுவேன். பயறுக்கான விலைகளோட கிலோவுக்கு 15 ரூபாய் ஊக்கத்தொகையாவும் கொடுக்கிறாங்க. விதைக்காக விற்பனை செஞ்சுடுறதால எனக்கு லாபம் அதிகமா  கிடைக்குது” என்ற பெருமாள், தொடர்ந்து வருமானம் குறித்து சொல்ல ஆரம்பித்தார். 

மானாவாரியிலும் மகத்தான லாபம் கொடுக்கும் பாசிப்பயறு,உளுந்து!

806 கிலோ பாசிப்பயறு...

916 கிலோ உளுந்து!


“போன போக சாகுபடியில் ரெண்டு ஏக்கர் நிலத்துல 806 கிலோ பாசிப்பயறு கிடைச்சது. உளுந்து, ரெண்டு ஏக்கர் நிலத்துல 916 கிலோ கிடைச்சது. பாசிப்பயறுக்கு கிலோ 98 ரூபாய்னு விலை நிர்ணயம் செஞ்சு ஊக்கத்தொகை 15 ரூபாய் சேர்த்து மொத்தம் ஒரு கிலோவுக்கு 113 ரூபாய் கொடுத்து வாங்கிக்கிட்டாங்க. உளுந்து கிலோ 90 ரூபாய்னு விலை நிர்ணயம் செஞ்சு ஊக்கத்தொகை 15 ரூபாய் சேர்த்து மொத்தம் ஒரு கிலோவுக்கு 105 ரூபாய் கொடுத்து வாங்கிக்கிட்டாங்க. அந்த வகையில் 806 கிலோ பாசிப்பயறு மூலமா 91 ஆயிரத்து 78 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல 28 ஆயிரத்து 600 ரூபாய் செலவு போக, 62 ஆயிரத்து 478 ரூபாய் லாபமா நின்னது.  916 கிலோ உளுந்து மூலமா 96 ஆயிரத்து 180 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல 29 ஆயிரத்து 400 ரூபாய் செலவு போக 66 ஆயிரத்து 780 ரூபாய் லாபமா நின்னது. மொத்தமா நாலு ஏக்கர்ல பாசிப்பயறு, உளுந்து மூலமா ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 258 ரூபாய் லாபமா நின்னது” என்றார்.

மானாவாரியிலும் மகத்தான லாபம் கொடுக்கும் பாசிப்பயறு,உளுந்து!

இயற்கை முறையில் செலவு குறைவு!

நிறைவாகப் பேசிய பெருமாள், “மானாவாரி சாகுபடியில இவ்வளவு லாபம் கிடைக்கிறதுங்கிறது பெரிய விஷயம். அதுக்கு ரெண்டு காரணங்கள்தான். இயற்கை முறையில சாகுபடி செஞ்சதுல சாகுபடிச் செலவு குறைஞ்சது முதல் காரணம். அடுத்தது, விற்பனைக்காக வியாபாரிகளை நம்பாம விதையாவே வேளாண் விற்பனை மையத்துல விற்பனை செஞ்சது.

மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசல்லாம் பயன்படுத்துனா கூடுதல் மகசூல் எடுக்க முடியும்னு சொன்னாங்க. அதனால இந்த வருஷம் அதையெல்லாம் பயன்படுத்தப் போறேன். கட்டாயம் கூடுதல் மகசூல் கிடைக்கும்னு நம்பிக்கையிருக்கு” என்று கண்களில் நம்பிக்கை மிளிரச் சொன்னவர், விதைகளை சரி பார்க்கும் பணிகளைத் தொடங்கினார்.

தொடர்புக்கு,
பெருமாள்,
செல்போன்: 99439-65085.

பாசிப்பயறுக்கு இரண்டு முறை பஞ்சகவ்யா... உளுந்துக்கு மூன்று முறை பஞ்சகவ்யா!

பாசிப்பயறு மற்றும் உளுந்து சாகுபடி செய்யும் முறை குறித்து பெருமாள் சொன்ன விஷயங்கள் இங்கே... 

பாசிப்பயறு!

கோடை உழவு செய்து ஆட்டுக்கிடை போட்டு வைத்த ஒரு ஏக்கர் நிலத்தில், விதைநேர்த்தி செய்த 6 கிலோ பாசிப்பயறு விதையை விதைக்க வேண்டும். விதைத்த 5-ம் நாள் முளைப்பு எடுக்கும். 20 மற்றும் 35-ம் நாட்களில் களை எடுத்து, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து, கை தெளிப்பானால் தெளிக்கவேண்டும். 45-ம் நாளுக்கு மேல் பூ பூக்கத் தொடங்கும். அந்த நேரத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதிசோப் எனக் கலந்து தெளிக்கவேண்டும். 55-ம் நாளுக்கு மேல் காய்க்கத் தொடங்கி, 65-ம் நாளுக்கு மேல் முற்றி நெற்றாகும். 70-ம் நாளுக்கு மேல் காய்ந்த நெற்றுக்களை மட்டும் அறுவடை செய்யவேண்டும். செடியோடு பிடுங்கக் கூடாது. மீண்டும் 4 நாட்கள் கழித்து, எஞ்சிய நெற்றுக்களை அறுவடை செய்யலாம்.

உளுந்து!

கோடை உழவு செய்து ஆட்டுக்கிடை போட்டு வைத்த ஒரு ஏக்கர் நிலத்தில், விதைநேர்த்தி செய்த 6 கிலோ உளுந்து விதையை விதைக்கவேண்டும். விதைத்த 5-ம் நாள் முளைப்பு எடுக்கும். 20 மற்றும் 35-ம் நாட்களில் களை எடுக்கவேண்டும்.

30, 45 மற்றும் 70-ம் நாட்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கவேண்டும். 50-ம் நாளுக்கு மேல் பூ பூக்கத் தொடங்கும். அந்த நேரத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதிசோப் எனக் கலந்து தெளிக்கவேண்டும். 60-ம் நாளுக்கு மேல் காய்க்கத் தொடங்கி, 80-ம் நாளுக்கு மேல் முற்றும். 90-ம் நாளுக்கு மேல் உளுந்தை அறுவடை செய்ய வேண்டும். இதை செடியோடு பிடுங்கி நெற்றை தனியாகப் பிரிக்க வேண்டும்.

விதைநேர்த்தி அவசியம்!

“பாசிப்பயறு, உளுந்து இரண்டுக்குமே ஒரு ஏக்கர் நிலத்துக்கு 6 கிலோ விதை தேவைப்படும். விதைநேர்த்தி செய்து விதைக்கும்போது விதையின் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு, வேர்வழி நோய்கள் தடுக்கப்படுகின்றன. தேவைப்படும் பயிருக்கான 6 கிலோ விதையை ஒலைப்பெட்டி அல்லது மண்பானையில் போட்டு 30 கிராம் சூடோமோனஸைத் தூவி... அனைத்து விதைகளிலும் சூடோமோனஸ் படும்படி பெட்டியை நன்கு குலுக்க வேண்டும். பிறகு ஒரு கோணியை(சாக்கு) தரையில் விரித்து அதில் விதைகளைக் கொட்டி ஓர் இரவு உலர்த்த வேண்டும். விதைகளை கடைகளில் வாங்குவதை விட நாம் சாகுபடி செய்யும் செடிகளிலிருந்து தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது அடுத்தப் பட்டத்துக்கு நல்லது.

கோடை உழவும் ஆட்டுக்கிடையும்!

ஆடிப்பட்ட மானாவாரி சாகுபடிக்கு கோடை உழவு மிகவும் முக்கியமானது. சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வளர்பிறையில் சட்டிக்கலப்பையால் ஒரு முறை உழவு செய்து ஒரு வாரம் காய விட வேண்டும். பிறகு, 4 நாட்கள் செம்மறி ஆட்டுக்கிடை போட வேண்டும். பிறகு டில்லர் மூலம் இரண்டு முறை உழுது, 20 நாட்கள் நிலத்தை காய விட்டு ஒரு முறை டில்லர் மூலம் உழவு செய்ய வேண்டும். இப்படி கோடை உழவு செய்து வைப்பதால், மண் பொலபொலப்பாக மாறிவிடும். அதனால் மழைநீர் பிடித்து வைக்கப்பட்டு மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும். இது பெருமாளின் அனுபவப்பாடம்.

ஆடிப்பட்டம் தேடி விதை!

“ஆடி மாதம்  முதல் மழை பெய்தவுடன்  விதைத்து விடக்கூடாது. முதல் மழையின்போது, பூமியின் வெப்பம் வெளியேறும். அதனால் விதைகள் சரியாக முளைக்காது. இரண்டாவது மழை கிடைத்ததும், டில்லரால்  ஒரு முறை உழவு செய்து விட்டு விதையை நிலத்தில் ஊன்றி விதைக்க வேண்டும். தூவி விதைக்கக் கூடாது. தூவி விதைத்தால், இடைவெளி சீராக இருக்காது” என்கிறார், பெருமாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism