Published:Updated:

உயிர்களோடு உறவாடும் புளூ கிராஸ்!

உயிர்களோடு உறவாடும் புளூ கிராஸ்!
பிரீமியம் ஸ்டோரி
உயிர்களோடு உறவாடும் புளூ கிராஸ்!

துரை.நாகராஜன், படங்கள்: மீ.நிவேதன்

உயிர்களோடு உறவாடும் புளூ கிராஸ்!

துரை.நாகராஜன், படங்கள்: மீ.நிவேதன்

Published:Updated:
உயிர்களோடு உறவாடும் புளூ கிராஸ்!
பிரீமியம் ஸ்டோரி
உயிர்களோடு உறவாடும் புளூ கிராஸ்!
உயிர்களோடு உறவாடும் புளூ கிராஸ்!

விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகள், அநீதிகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுப்பதோடு, பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளித்து பாதுகாத்து வரும் விலங்குகள் நல அமைப்பு, ‘புளூ கிராஸ்’. சென்னை, வேளச்சேரி செக்போஸ்ட் அருகே செயல்பட்டு வரும் இவ்வமைப்பை, 1959-ம் ஆண்டு ‘கேப்டன்’ சுந்தரம் என்பவர் ஆரம்பித்தார். 1964-ம் ஆண்டு முழுமையான பொது நல அமைப்புக்கான அங்கீகாரத்தைப் பெற்ற புளுகிராஸ் அமைப்பு, அப்போதிருந்தே விலங்குகள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது.

இவ்வமைப்பின் செயல்பாடுகள் குறித்து, புளூ கிராஸின் முதன்மை செயல் அதிகாரி சங்கர்ராஜனிடம் பேசினோம். “தற்போது, 53-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது, புளூ கிராஸ். விலங்குகளை துன்புறுத்துவது, அடிபட்ட வீட்டுப் பிராணிகளை சாலைகளில் விட்டு விடுவது போன்ற இரக்கமற்ற செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் ்தொகை அதிகரிப்பதைப்போல வீட்டு விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது வழக்கம்தான். அதற்காக அவற்றை கொலை செய்வது, விரட்டி விடுவது போன்ற செயல்கள் கண்டனத்துக்குரியவை” என்ற சங்கர்ராஜன் அங்குள்ள விலங்குகள் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

உயிர்களோடு உறவாடும் புளூ கிராஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வளர்ப்பதற்கு பிராணிகள் கிடைக்கும்!

“இங்கு எட்டு குதிரைகளைக் கொண்ட குதிரை லாயம் உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் துன்புறுத்தலுக்கு உள்ளானவைதான் இவை. இப்படிப்பட்ட குதிரைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை அளித்து நோய்வாய்ப்பட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்கிறோம். காயம்பட்ட நிலையில் கொண்டு வரப்படும் பறவைகள், விலங்குகள், கால்நடைகள் என அனைத்துக்கும் நாங்கள் சிகிச்சையும் அளிக்கிறோம். சிலர் பிராணிகளை, குறிப்பாக நாய்களை முடிந்தவரை பயன்படுத்திவிட்டு காயம்பட்டவுடனோ, வயதாகி நோய்கள் தாக்கியவுடனோ சாலையில் விட்டு விடுகிறார்கள். அப்படி சாலையில் இருப்பது குறித்த தகவல் கிடைத்தால், உடனடியாக அப்படிப்பட்ட பிராணிகளைக் காப்பாற்றி சிகிச்சை அளித்து பாதுகாக்கிறோம். அவற்றைக் கேட்டு வருபவர்களுக்கு வளர்க்கவும் கொடுக்கிறோம்.

நாய்களுக்கு அறுவை சிகிச்சைக் கூடம்!


எங்களிடம் 500 நாய்களுக்கு மேல் உள்ளன. இவற்றில் நோய்வாய்ப்பட்ட நாய்கள், இறக்கும் தருவாயில் உள்ள நாய்கள் மற்றும் குட்டிகளும் அடக்கம். வெளியில் இருந்து கொண்டுவரப்படும் நாய்கள் மற்றும் பிராணிகளுக்கு முதலில் வயிற்றில் உள்ள அசுத்தங்களை வெளியேற்ற மருந்து கொடுப்போம். பிறகே, மருத்துவ சிகிச்சையை அளிப்போம். இங்கே இருக்கும் நாய்களில் பெரும்பாலானவை இரக்கமில்லாமல் கைவிடப்பட்டவைதான். நோய் முற்றிய நிலையில் உள்ள நாய்களைத் தனியாகவும், ஆரம்பகட்டத்தில் நோய் உள்ள நாய்களைத் தனியாகவும் பிரித்து வைத்துள்ளோம்.  நாய்களுக்காக ஒரு அறுவைசிகிச்சைக் கூடமும் இங்கு உள்ளது. இங்கு உள்ள நாய்களுக்கு சைவ உணவுகள்தான் கொடுக்கப்படுகிறது.

உயிர்களோடு உறவாடும் புளூ கிராஸ்!

பூனைகளுக்கென தனியாக ஒரு பிரிவு உள்ளது. சில பூனைகளுக்கு மூன்று கால்கள் மட்டுமே இருக்கும். ஒரு கால் அடிபட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருக்கும். அனைத்து வீட்டு விலங்குகள் அனைத்துமே, மனிதர்களைக் கண்டவுடன் நேசத்துடன் விளையாடத்தான் ஆசைப்படும்” என்ற சங்கர்ராஜன், ஒரு பூனையைக் காட்டி கையசைக்க... அது அவரிடம் வந்து நின்று விளையாடியது. நம்மைச் சுற்றியும் ஏராளமான பூனைகள் கொஞ்சுவதற்காக  நின்றிருந்தன. அந்தக் காட்சி நம்மை நெகிழ வைத்தது.

உயிர்களோடு உறவாடும் புளூ கிராஸ்!

உணவளித்தால் நண்பன்... விரட்டி விட்டால், பகைவன்!

தொடர்ந்து பேசிய சங்கர்ராஜன், “காலி இடங்களில் வீடுகளைக் கட்டி அத்தனை நாட்கள் பூர்விகமாக அங்கு தங்கியிருந்த நாய்கள், கால்நடைகளை விரட்டி விட்டால் அவை என்ன செய்யும்? எங்கு போகும்? நம் வீட்டுக்கு உணவு தேடி வரும் நாய்களுக்கு உணவளித்தால், அது நம் தலைமுறையையே காக்கும். அவற்றை அடித்து துரத்தும்போதுதான் வன்மம் உருவாகி, அவை நம்மை கடிக்கத் தொடங்குகின்றன. உணர்வுள்ள பிராணிகளிடமும் அன்பு செலுத்தினால் நம்மிடம் அவை அன்பு செலுத்தும் என்று சொன்னவர்”.

உயிர்களோடு உறவாடும் புளூ கிராஸ்!

தகவல் கொடுத்தால் உடனடி மீட்பு!

“நன்கொடையாளர்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டுதான் பிராணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். மாடுகள், ஆடுகள், கோழிகள், பன்றிகள், முயல்கள், எலிகள் மற்றும் பறவைகள் என விதவிதமான பிராணிகளை மீட்டு வந்து வளர்க்கிறோம். சிகிச்சைக்காக வெளியிலிருந்து பிராணிகள் அழைத்து வரப்பட்டால் மிகக்குறைந்த கட்டணத்தைத்தான் வாங்குகிறோம். 24 மணி நேரம் எங்களைத் தொடர்புகொள்ளும்வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளோம். அடிபட்டு கிடக்கும் பிராணிகள் குறித்த தகவல்களை எந்த நேரமும் எங்களிடம் சொல்லலாம். உடனடியாக எங்கள் மீட்புக்குழு வேலையில் இறங்கி விடும். இந்த சேவைக்காக பல விருதுகளை எங்கள் அமைப்புப் பெற்றுள்ளது” என்றார்.

உயிர்களோடு உறவாடும் புளூ கிராஸ்!

நாய்களுக்கு கருத்தடை!

தொடர்ந்துபேசிய புளுகிராஸின் பொது மேலாளர் டான் வில்லியம்ஸ், “எல்லா உயிர்களுக்கும் உலகில் வாழ சம உரிமை உண்டு. அதனால் அவற்றை கொல்வது மிகவும் தவறு. ரேபிஸ் நோய்த் தாக்குதலைத் தடுக்கும் வகையில்... 1964-ம் ஆண்டு முதல், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வருகிறோம். சாலையில் அடிபட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளித்து அவற்றின் இடத்திலேயே விட்டு விடுவோம். கிணறு மற்றும் குழிக்குள் விழுந்த விலங்குகளை மீட்க பயிற்சி எடுத்த ஆட்களும் எங்களிடம் உண்டு. முழுக்க சேவை மனப்பான்மையோடுதான் இப்பணிகளைச் செய்து வருகிறோம்.  வனவிலங்குகள் அடிபட்ட நிலையில் கொண்டு வரப்பட்டால், அவற்றுக்கு சிகிச்சை அளித்து வனத்துறையிடம் ஒப்படைத்து விடுவோம்” என்று சொன்னார்.

தொடர்புக்கு,
புளூ கிராஸ்,
தொலைப்பேசி: 044-22354959.

‘பிளாஸ்டிக்’ எமன்!

“நகர எல்லைக்குள் மாடுகள் வளர்க்கக் கூடாது என்பது சட்டம். ஆனால், மாடுகளை வளர்ப்பவர்கள் வீட்டில் கட்டி வைக்காமல், சாலைகளில் விட்டு விடுகின்றனர். அவை, பிளாஸ்டிக்குகள் மற்றும் பேப்பர்களை தின்று பாதிப்படைகின்றன. சாலையில் அலைந்து திரியும் மாடுகளை, நாங்கள் பிடித்து வந்து வயிற்றில் உள்ள பிளாஸ்டிக் பேப்பர்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடுகிறோம். நாங்கள் மீட்டுக் கொண்டு வரும் மாடுகளில் பத்தில் நான்கு மாடுகள் இறந்து விடுகின்றன. அவற்றை பரிசோதனை செய்தால், பிளாஸ்டிக்  குப்பைகள் கட்டியாக இரைப்பையை அடைத்து இருக்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டை பெருமளவு குறைப்பதோடு, அதன் பயன்பாட்டையும் ஒழுங்குப்படுத்த வேண்டும். அப்போதுதான், சுற்றுசூழல் மேம்படும். மாடுகளும் காக்கப்படும்.

அதே போல, இறைச்சிக்காக மாடுகளை லாரிகளில் கொண்டு செல்லும்போது ஒரு லாரியில் 5 மாடுகளைத்தான் ஏற்ற வேண்டும். ஆனால், 40 மாடுகளுக்கு மேல் ஏற்றிச் செல்கிறார்கள். காவல்துறையினர் அப்படிப்பட்ட மாடுகளையும் கைப்பற்றி நீதிமன்றம் மூலமாக எங்களிடம் ஒப்படைப்பார்கள். அவற்றையும் நாங்கள் பராமரித்து வருகிறோம்” என்கிறார், டான் வில்லியம்ஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism