நாட்டு நடப்பு
Published:Updated:

பஞ்சகவ்யா - 13

பஞ்சகவ்யா - 13
பிரீமியம் ஸ்டோரி
News
பஞ்சகவ்யா - 13

வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்இயற்கை, ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

பல்கலைக்கழகத்தில்  பஞ்சகவ்யா

ரம்பகாலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதை விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. பாமர மக்களிடம் புழக்கத்தில் இருந்த பஞ்சகவ்யாவை பல்கலைக்கழகம் வரை கொண்டு சேர்த்தவர்கள் சிலர். அந்த வரிசையில் மிகவும் முக்கியமானவர்  கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், வளம்குன்றா அங்கக வேளாண்மைத்துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர்.சோமசுந்தரம். தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியின் ஒரு அங்கமாக பஞ்சகவ்யா கரைசலைத் தேர்வு செய்து, அதில் உள்ள மூலக்கூறுகளைக் கண்டறிந்து அதற்கு அறிவியல் வடிவம் கொடுத்தவர்.

‘‘எனக்கு சொந்த ஊர், கும்பகோணம் பக்கத்துல இருக்கும் திருபுவனம். சிறுவயதில் இருந்தே விவசாயத்தின் மீது தீவிர ஈடுபாடு. அதனால்தான் மருத்துவக் கல்லூரியில் ஸீட் கிடைத்தும், அதை புறக்கணிச்சுட்டு, விவசாய கல்லூரியில் சேர்ந்தேன். படித்து, பட்டம் வாங்கியதும் நான் படிச்ச கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியர்் வேலையும் கிடைச்சது. கடந்த 25 ஆண்டுகளா பணிபுரிஞ்சிட்டு வர்றேன். 

பஞ்சகவ்யா - 13

பஞ்சகவ்யாவைத் தேடி!

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில பேராசிரியர் வேலையில இருந்த நான், எனது, முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தேர்வு செய்தேன். அதுகுறித்த தகவல்களைத் தேடி களப்பணியில இருந்த சமயத்துல, இதே பல்கலைக்கழகத்துல தோட்டக்கலைத்துறை பேராசிரியராக இருந்த, முனைவர். வடிவேல், ‘இயற்கை விவசாயம் பத்தி ஆராய்ச்சி செய்ற நீங்க, கண்டிப்பாக பஞ்சகவ்யா பத்தியும் ஆராய்ச்சியில ஈடுபடுங்க’னு ஆலோசனை சொன்னாரு. அதோடு, கொடுமுடி டாக்டர்.நடராஜனையும் அறிமுகப்படுத்தி வெச்சாரு. பஞ்சகவ்யா குறித்து விரிவாக எடுத்துச் சொன்ன டாக்டர், அதைப்  பயன்படுத்தி பலனடைந்து வரும் விவசாயிகள் சிலரது விலாசத்தையும் கொடுத்து உதவினாரு. அதை அடிப்படையா வெச்சு, பயிர்களுக்கு பஞ்சகவ்யாவோட பயன்பாடு சம்பந்தமா களஆய்வு செய்தேன். குறிப்பாக... மக்காச்சோளம், சூரியகாந்தி, தட்டைப்பயறு உள்ளிட்ட பயிர்கள்ல, பஞ்சகவ்யாவோட வேதியியல் வினைமாற்றங்கள் சம்பந்தமா ஆராய்ச்சி செய்தேன்’’ என்றவர், தனது ஆராய்ச்சி முடிவுகள் சிலவற்றை பற்றியும் சொன்னார்.

‘‘இலைவழி ஊட்டமா 3 சதவிகித பஞ்சகவ்யாவை பயிருக்குத் தகுந்தபடி தெளிக்கிறது மூலமா, பயிர் வளர்ச்சி அதிகரிச்சு, மகசூல் கூடுது. பாரம்பர்ய வேளாண் அறிவு அடிப்படையில தயாரிக்கிற பஞ்சகவ்யாவை, பசுவோட சாணம், சிறுநீர், பால், தயிர், நெய்னு ஆரம்பத்துல ஐந்து பொருட்களை வெச்சுதான் தயாரிச்சாங்க. ஆனா, காலப்போக்குல அது மேம்படுத்தப்பட்டு, இளநீர், கரும்புச் சாறு, கனிந்த பழங்கள்னு கலந்து செறிவூட்டமான பஞ்சகவ்யாவா பரிணாமம் அடைஞ்சிருக்கு.

1950-ம் வருஷம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் பிரான்சிஸ் மார்ட்டின்ங்கிற விஞ்ஞானி, ‘உயிர்நீர்’னு சொல்லப்படும் நிறமற்ற, மணமற்ற திரவத்தை கண்டுபிடிச்சாரு. பால் தரும் பசுவின் சாணம், கடல் நீர், ஈஸ்ட்னு எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்து புளிக்க வெச்சு, அதை தயாரிச்சாரு. இதை பயன்படுத்துவதன் மூலமா, மாசுபட்ட நீரையும், மண்ணையும் துரிதமாக சீர்திருத்த முடியும்னு, நாலாம் வகுப்புக்குமேல பள்ளிக்கூடம் போகாத மார்ட்டின் சொன்னதை ஐம்பது வருஷத்துக்கு முன்ன யாரும் ஏத்துக்கல. ஆனா, அவர் இறந்த பிறகு, அந்தக் கண்டுபிடிப்பை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுறாங்க. இதேபோல்தான், பஞ்சகவ்யாவோட பயன்பாடும் அதி அற்புதமானது. இப்போ, ஒரு சிலர் இதை ஏத்துகலைனாலும், பஞ்கவ்யா வரும் காலத்துல பெரிய அளவுக்குப் பேசப்படும்’’ என்று பஞ்சகவ்யாவைப் பற்றி பெருமிதமாக பேசிய சோமசுந்தரம், பிறகு அதன் அறிவியல் கூறுகளை பற்றி பேசத் தொடங்கினார்.

நீர்வழி ஊட்டம்!

‘‘என்னோட ஆய்வு முடிவின்படி, பஞ்சகவ்யாவுல பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துகள் இருப்பதும், வளர்ச்சி ஊக்கிகளான, ‘இண்டோல் அசிட்டிக் அமிலம்’ மற்றும் ‘ஜிப்ராலிக் அமிலம்’ இருக்கிறதையும் கண்டறிஞ்சேன். இலைவழி ஊட்டமா பஞ்சகவ்யாவை பயிர்களுக்குத் தெளிக்கும்போது, இலைகள் பெரிதாகி, செடியின் வளர்ச்சி அதிகமாகிறது. தண்டின் வளர்ச்சி கூடுவதோடு, பக்க கிளைகள் அதிகரிச்சும், அதிக பூக்கள் பிடிச்சு, பிஞ்சுகளும் அதிகமாக காய்க்க வழிவகுக்குது. பாசன நீர்வழி ஊட்டமா கொடுக்கும்போது, சீரான வேர் வளர்ச்சியும், நிலைப்புத்தன்மையும் கூடி பயிர்களோட வளர்ச்சி அருமையா இருக்கும்” என்றவர் தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பஞ்சகவ்யாவை அதி நவீன கருவியின் மூலம் (ஜி.சி.எம்.எஸ்) ஆராய்ச்சி செய்து கண்டறியப்பட்ட, அறிவியல் அடிப்படை மற்றும் உயிர் வேதியியல் பண்புகள் பற்றி விரிவாக சொன்னார். அது

அடுத்த இதழில்...

- மணம் பரப்பும்

தொடர்புக்கு,
முனைவர்.சோமசுந்தரம்
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வளம்குன்றா அங்கக வேளாண்துறை,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்.
தொலைபேசி: 0422-2455055, 0422-6611206.

மிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், வளம்குன்றா அங்கக வேளாண்மைத்துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர், முனைவர் சோமசுந்தரம், பஞ்சகவ்யாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் வேதிப்பண்புகளை பட்டியலிட்டார். இது குறித்து அவர் கூறும் தகவல்களின் தொகுப்பு...

பஞ்சகவ்யா - 13

பசுஞ்சாணம்!

கௌடில்யர், வராகமிகிரர், சுரபாலர், சோமேஸ்வரதேவர் ஆகியோரது காலங்களில் விவசாயத்தில் சாணம் உபயோகிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘கோமே’ என்று வடமொழியில் அழைக்கப்படும் பசுஞ்சாணத்தில், பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான தழை, மணி, சாம்பல் மற்றும் கந்தகம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றோடு பாக்டீரியா, பூஞ்சாணம் ஆகியவையும் உள்ளன. பசுஞ்சாணத்தில் 82 சதவிகிதம் நீரும், 18 சதவிகிதம் திடப்பொருளும் அடங்கியுள்ளன. சாணம் ஒரு சிறந்த கிருமி நாசினி மட்டுமின்றி விதை பாதுக்காப்புக்கான சிறந்த களம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாட்டு சிறுநீர்!


மாட்டு சிறுநீரில் 95 சதவிகிதம் நீரும், 2.5 சதவிகிதம் தழைச்சத்தும், 2.5 சதவிகிதம் தாது உப்புக்கள், பயிர்வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் நொதிப்பான்களும் உள்ளன. கசப்புதன்மையும் சற்றே கார நிலையும் கொண்ட சிறுநீரில் தூய்மையும், கிருமிநாசினி தன்மையும் விளங்க காரணமாக இருக்கிறது. ஓரளவு மணிச்சத்தும், சாம்பல் சத்தும், உயிர் சத்தும் உள்ளடக்கிய சிறுநீரில் ‘லேக்டோஸ்’ எனப்படும் மாவுச்சத்து அதிக அளவில் உள்ளது. பயிருக்கு மட்டுமல்ல எல்லா, உயிருக்கும் ஊக்கியாக விளங்குவது இதன் சிறப்பாகும்.

பசும்பால்!


விதை நேர்த்தி செய்யும் போதும், நாற்றுக்களைப் பிடுங்கி நடுமுன்பு பாலில் நனைத்து நடவு செய்யும்போதும், நெற்பயிர்கள் வாளிப்பாக வளர்ந்து மகசூல் கொடுக்கும் என்பது பாரம்பர்ய வேளாண்மை சூத்திரங்களில் ஒன்று. பயிர் வளர்ச்சிப் பருவத்தில் நீர்கலந்த பாலை, தெளித்து வந்தால், நிறைய பூக்களும், திரட்சியான விதைகளும் உருவாக வழி வகுக்கிறது. நுண்ணுயிரிகள் பல்கிப்பெருக பால் ஏற்றபொருளாகும். மேலும் நல்ல ஒட்டு பொருளாகவும், பரவும் பொருளாகவும் பாலில் உள்ள ‘கேசின்’ என்ற பொருள் அமைந்துள்ளது.

பசு நெய்!


பயிர்களை நோய்கிருமிகளில் இருந்து பாதுகாக்கவும், அதில் ஏற்படும் பூச்சி, பூஞ்சாண தாக்குதலை குறைத்திடவும், நெய் பெரிதும் துணைபுரிகிறது. விதைகளை நேர்த்தி செய்யும் போது, அதை சுத்தமான பசும்பாலில் நனைத்து எடுத்து நெய்யில் பிசைந்து நிழலில் உலரவைத்து விதைப்பது நமது பாரம்பர்ய அறிவு சார்ந்த தொழில் நுட்பமாகும்.

பசுந்தயிர்!

நொதித்தலுக்கு காரணமான ஏராளமான நுண்ணுயிரிகள் குறிப்பாக ‘லேக்டோ பேசில்லஸ்’ பாக்டீரியா அதிகம் உள்ளது.

கரும்புச் சாறு!

நுண்ணுயிரிகள் பல்கிப்பெருகிட இது ஒரு உணவுக்கிடங்காக செயல்படக் கூடியது. நொதித்தலுக்கு உறுதுணை புரியக்கூடியது.

இளநீர்!

‘கைனடின்’ எனும் பயிர்வளர்ச்சி ஊக்கிக்கு விலை மலிவான மாற்றுப்பொருள் இது. பஞ்சகவ்யாவின் நொதித்தலை துரிதப்படுத்துவதுடன், இளந்தளிர் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது.