Published:Updated:

2 ஏக்கர், ரூ. 3,74,000... ‘நச்’ லாபம் கொடுத்த நாட்டுப் பப்பாளி, யாழ்ப்பாணம் முருங்கை!

2 ஏக்கர்,  ரூ. 3,74,000... ‘நச்’ லாபம் கொடுத்த நாட்டுப் பப்பாளி, யாழ்ப்பாணம் முருங்கை!
பிரீமியம் ஸ்டோரி
2 ஏக்கர், ரூ. 3,74,000... ‘நச்’ லாபம் கொடுத்த நாட்டுப் பப்பாளி, யாழ்ப்பாணம் முருங்கை!

மகசூல் இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

2 ஏக்கர், ரூ. 3,74,000... ‘நச்’ லாபம் கொடுத்த நாட்டுப் பப்பாளி, யாழ்ப்பாணம் முருங்கை!

மகசூல் இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:
2 ஏக்கர்,  ரூ. 3,74,000... ‘நச்’ லாபம் கொடுத்த நாட்டுப் பப்பாளி, யாழ்ப்பாணம் முருங்கை!
பிரீமியம் ஸ்டோரி
2 ஏக்கர், ரூ. 3,74,000... ‘நச்’ லாபம் கொடுத்த நாட்டுப் பப்பாளி, யாழ்ப்பாணம் முருங்கை!
2 ஏக்கர்,  ரூ. 3,74,000... ‘நச்’ லாபம் கொடுத்த நாட்டுப் பப்பாளி, யாழ்ப்பாணம் முருங்கை!

பட்டம் கிடையாது... ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம்.
களிமண் தவிர மற்ற எல்லா மண்ணுக்கும் ஏற்றது
குறைவான தண்ணீர் செலவு
குறைவான வேலையாட்கள்,
வில்லங்கமில்லாத விற்பனை

ருவத்துக்கேற்ற பயிர் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட நம்மிடம் உள்ள தண்ணீர் வசதிக்கேற்ற பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்வதும் முக்கியமானது. இதைச் சரியாக புரிந்துகொண்டு, குறைந்தளவு நீர் வளத்தைத் கொண்டே பப்பாளி, முருங்கை சாகுபடி செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார்... தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலூகா, புதியம்புத்தூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி மரியராஜ்.

‘‘நெல், கரும்பு, வாழை மாதிரியான பயிர்களைப் பயிரிட அதிக தண்ணி தேவை. ஆனா பப்பாளி, முருங்கை சாகுபடி செய்ய குறைஞ்ச அளவு தண்ணியே போதும். அது மட்டுமில்லாம இந்த ரெண்டுக்குமே சந்தையில் தேவையும், விற்பனை வாய்ப்பும் இருக்கிறதுனால நாட்டு பப்பாளியையும், யாழ்ப்பாணம் முருங்கையையும் சாகுபடி செஞ்சிருக்கேன்’’ என்று அலைபேசியில் அழகாக விவரித்த மரியராஜை அவரது தோட்டத்தில் சந்தித்தோம். விற்பனைக்குக் கொண்டு செல்வதற்காக சாக்குப் பைகளில் முருங்கைக்காய்களையும், கூடையில் பப்பாளியையும் அடுக்கிக் கொண்டே நம்மிடம் பேசினார். 

மண்ணைக் கெடுத்த ரசாயனம்!


‘‘பாரம்பர்யமாவே விவசாயம்தான் தொழில். ஆடு, கோழி, மாடுனு வீட்டைச் சுற்றி எப்பவும் கால்நடைங்க இருக்கும். அப்பா காலத்துல பருத்தி, சோளம், கேழ்வரகு, குதிரைவாலி, மிளகாய் மாதிரியான பயிர்களை மானாவாரியிலயும், இறவையில பாசிப்பயறு, உளுந்தையும் சாகுபடி செஞ்சாங்க. பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சதுமே, அப்பாவுக்கு உதவியா விவசாயத்துக்கு வந்துட்டேன்.  தின வருமானம் எடுக்குற மாதிரி செண்டுமல்லி, செவ்வந்தி, கனகாம்பரம், சம்பங்கி, அரளினு பூ வகைகளை ரசாயன உரத்தைப் போட்டு சாகுபடி செஞ்சோம். ஒரு கட்டத்துல நீர்மட்டம் குறையக் குறைய, கறிவேப்பிலை சாகுபடிக்கு மாறுனோம். கறிவேப்பிலையில அதிகமான பூச்சித்தாக்குதல் இருந்தது. கையில கிடைச்ச ரசாயன உரத்தையும், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தையும் பயன்படுத்த ஆரம்பிச்சோம். அதனால கறிவேப்பிலை போட்ட அடுத்த வருசமே மண் இறுகிப் போனதால, கறிவேப்பிலை சரியா வளர்ச்சி இல்லாமப் போச்சு. அதனால விவசாயத்தை மட்டும் நம்பாம ஜவுளி வியாபாரமும் செய்ய ஆரம்பிச்சேன்.

 இந்த நிலையில, 2011-ம் வருஷம் எங்க ஊரு நூலகத்துலதான் எனக்கு ‘பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. தொடர்ந்து படிக்கப் படிக்க இயற்கை விவசாயத்து மேல ஒரு ஈடுபாடு உண்டாகிடுச்சு. அந்த வருஷமே வானகத்துக்குப் போயி நம்மாழ்வார் ஐயாகிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டேன். ஊருக்கு வந்ததும் பல தானியங்களை விதைச்சு, மட்கிய தொழுவுரத்தைப் போட்டு மண்ணைக் கொஞ்சம் கொஞ்சமா வளப்படுத்துனேன். பிறகு, சக்கை ரக வாழையை ஒரு ஏக்கர்ல சாகுபடி செஞ்சேன். நல்ல மகசூல் கிடைச்சுது. வாழையை சந்தைப்படுத்தும் போதுதான், ‘உங்கிட்ட பப்பாளி இருக்குதா..? நாட்டு பப்பாளிக்கு அதிக தேவை இருக்கு’னு கடைக்காரர் கேட்டார். ‘பெரும்பாலும் ‘ரெட்லேடி’ ஒட்டுரகத்தை சாகுபடி செய்றதால, நாட்டு பப்பாளி சாகுபடி குறைஞ்சுப் போச்சு. ஆனா, அதுக்கு அதிக தேவை இருக்கு’ன்னும் சொன்னாரு. நாட்டு பப்பாளிக்கு அதிக தேவை இருக்குறதை தெரிஞ்சுக்கிட்டதும், உடனே பப்பாளி சாகுபடியை ஆரம்பிச்சேன். அதே போல, சாத்தான்குளத்துக்கு ஒரு விசேஷ வீட்டுக்குப் போயிருந்த போது யாழ்ப்பாணம் முருங்கை மரத்துல இருந்து சில போத்துகளை வெட்டிட்டு வந்து நட்டு வெச்சேன். அப்புறம் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வெட்டி நடவு செஞ்சு பெருக்குனேன். இப்போ என்கிட்ட மொத்தம் நாலு ஏக்கர் நிலம் இருக்கு. இது கரிசல் கலந்த மணல். ஒரு ஏக்கர் நிலத்துல நாட்டு பப்பாளி, ஒரு ஏக்கர்ல யாழ்ப்பாணம் முருங்கை, மீதமுள்ள ரெண்டு ஏக்கர் நிலத்துல காய்கறிகளை நடவு செய்யலாம்னு உழவு போட்டு வெச்சிருக்கேன். பப்பாளிக்கும், முருங்கைக்கும் பட்டம் ஏதும் கிடையாது. வருசம் முழுக்க சாகுபடி செய்யலாம்’’ என்றவர், நிறைவாக வருமானம் பற்றி பேசத் தொடங்கினார்...

2 ஏக்கர்,  ரூ. 3,74,000... ‘நச்’ லாபம் கொடுத்த நாட்டுப் பப்பாளி, யாழ்ப்பாணம் முருங்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

130 பறிப்புகள்... 19,500 கிலோ!

‘‘தூத்துக்குடி, பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல என்னோட தம்பி இயற்கை அங்காடி வெச்சிருக்கார். பப்பாளி, முருங்கைகளை தம்பியோட இயற்கை அங்காடியிலயும், புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கற பண்ணைப் பசுமை நுகர்வோர் அங்காடியிலயும் விற்பனை செய்யுறேன். நாட்டுப் பப்பாளி, முருங்கை ரெண்டுக்கும் நல்ல தேவை இருக்குறதுனால விற்பனையைப் பற்றிய கவலை எனக்கு இல்ல. இந்த ரெண்டு கடைகளிலயுமே பப்பாளி, முருங்கை நல்ல விற்பனையாகுது.

பப்பாளியை நாலு மாசம் தொடர்ச்சியா தினமும் பறிக்கலாம். அஞ்சாவது மாசத்துல இருந்து மூணு நாளைக்கு ஒரு தடவைன்னு மொத்தம் 130 பறி பறிப்பு. 400 மரங்கள்ல இருந்து ஒரு பறிப்புக்கு சராசரியா 150 கிலோ பப்பாளி கிடைக்குது. அந்த கணக்குப்படி, 130 பறிப்புக்கு 19 ஆயிரத்து 500 கிலோ பப்பாளி கிடைக்கும். ஒரு கிலோ 15 ரூபாயில இருந்து 30 ரூபாய் வரை விற்பனையாகுது. சராசரியா 20 ரூபாய்னு வெச்சுகிட்டாலும், 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுவரைக்கும், 98 பறிப்பு முடிந்திருக்கு. 14 ஆயிரத்து 700 கிலோ கிடைச்சிருக்கு. அதுமூலமா 2 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இதுல உழவு, விதை, நாத்து நடவு, இடுபொருள், தெளிப்பு செலவுனு 42 ஆயிரம் போக 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைச்சிருக்கு. இன்னும் மீதம் உள்ள 32 பறி மூலம் 4 ஆயிரத்து 800 கிலோவுக்கு 96 ஆயிரம் ரூபாய் வருமானம் எதிர்பாக்குறேன்.

40 பறிப்புகள்! 6,400 கிலோ மகசூல்!

தை, மாசி, சித்திரை, ஆடினு வருஷத்துல நாலு மாசம் மட்டும் முருங்கை காய்க்கும். மூணு நாளைக்கு ஒரு பறிப்புங்கிற கணக்குல வருஷம், 40 பறிப்பு. ஒரு பறிப்புக்கு சராசரியா 160 கிலோ காய் வீதம் மொத்தம் 40 பறிப்புக்கு 6 ஆயிரத்து 400 கிலோ முருங்கைக்காய் கிடைக்கும். அதிகபட்சமா ஒரு கிலோ 40 ரூபாய் வரை விற்பனையாகுது.

30 ரூபாய்னு வெச்சுகிட்டாலும், மொத்தம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். முருங்கையில இதுவரைக்கும் 32 பறிப்பு முடிஞ்சிருக்கு. மொத்தம் 5 ஆயிரத்து 120 கிலோ கிடைச்சிருக்கு. அது மூலமா ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இதுல செலவு 31 ஆயிரம் ரூபாய் போக ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 600 ரூபாய் லாபமா கிடைச்சிருக்கு. இன்னும் மீதமுள்ள எட்டு பறிப்பு மூலம் 1,280 கிலோ கிடைக்கும். இதன்மூலம் 38 ஆயிரத்து 400 ரூபாய் வருமானம் எதிர்பாக்குறேன். ஆக, மொத்தம் இதுவரையிலும் 3 லட்சத்து 74 ஆயிரம் லாபம் கிடைச்சிருக்கு’’ என்றார் நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு,
மரியராஜ்,
செல்போன்: 89402 56706.

இப்படித்தான் செய்யணும் பப்பாளி சாகுபடி!

ஒரு ஏக்கர் நிலத்தில் நாட்டு ரக பப்பாளி சாகுபடி செய்யும் விதம் குறித்து மரியராஜ் சொன்ன தகவல்கள் இங்கே பாடமாக....

பப்பாளிக்கு பட்டம் இல்லை. களிமண் தவிர அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம். சாகுபடி நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, 15 நாட்கள் நிலத்தை காயவிட வேண்டும். பிறகு, டிரில்லரால் (சாதாரண கலப்பை) ஒரு சால் உழவு செய்துவிட்டு.. அடுத்த நாள் அரை அடி ஆழத்தில், செடிக்குச் செடி 10 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி இடைவெளி விட்டு அரையடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 436 குழிகள் வரை எடுக்கலாம். (நிலத்தின் அமைப்பைப் பொறுத்து, இவர், 400 குழிகள் மட்டுமே எடுத்துள்ளார்). குழி எடுத்த மறுநாள் ஒரு குழிக்கு அரை கிலோ தொழுவுரம் போட்டு, நடுவிரல் அளவு குழி எடுத்து, பப்பாளி கன்றை வைத்து, மேல் மண் கொண்டு குழியை மூடிவிட வேண்டும். நடவு செய்த உடனே பாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.

2 ஏக்கர்,  ரூ. 3,74,000... ‘நச்’ லாபம் கொடுத்த நாட்டுப் பப்பாளி, யாழ்ப்பாணம் முருங்கை!

ஏக்கருக்கு அரை கிலோ விதை!

பப்பாளியை கன்றாக வாங்காமல், விதையை வாங்கி நாமே நாற்று உற்பத்தி செய்து நடவு செய்வதுதான் சிறந்தது. 20 அடி நீளம், 20 அடி அகலத்தில் நாற்றங்கால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான அரை கிலோ விதையை எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் பஞ்சகவ்யா ஊற்றி அதில் விதையைப் போட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு,  ஓலைப்பாய் விரித்து, அதில் விதையை கொட்டி, அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். விதையை நாற்றாங்காலில் தூவிவிட்டு 50 கிலோ மட்கிய தொழுவுரத்தைத் தூவிவிட்டு ஒரு முறை கிளறிவிட்டால் விதையும், தொழுவுரமும் கலந்துவிடும். தண்ணீர் பாய்வதற்கு வசதியாக 4 அடிக்கு ஒரு பாத்தி வீதம் 5 பாத்திகள் எடுத்துக் கொள்ளலாம். விதைத்ததில் இருந்து, 8 முதல் 10 நாட்களில் முளைப்பு தெரியும். 30 நாளில் அரை அடி உயரமும், 60 நாளில் ஓர் அடி உயரமும் வரும். 30-ம் நாளிலேயே எடுத்து நடவு செய்யலாம். ஆனால், ஓர் அடி உயரம் வந்தால் நடவு செய்ய வசதியாக இருக்கும்.

15 நாள் இடைவெளியில் பஞ்சகவ்யா!

பப்பாளியை நடவு செய்ததில் இருந்து, 20-ம் நாள் மட்டும் ஒரு களை எடுத்துவிட்டு, 10 லிட்டருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் இதே அளவில் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். 40 நாளுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும்.

பூ பூக்கும் நேரத்தில் பிண்ணாக்குக் கரைசல்!

6-ம் மாதம் பூ பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் 5 கிலோ பாசிப்பயறு, 5 கிலோ தட்டைப்பயறு, 5 கிலோ கொள்ளுப்பயறு, 5 கிலோ கொண்டைக்கடலை, ஆகியவற்றை மாவாக திரித்து இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளவுள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி இரண்டு நாள் வைத்திருக்க வேண்டும். பிறகு, அந்தக் கரைசலை ஒவ்வொரு தூரிலும் 500 மில்லி ஊற்றி, மண் அணைக்க வேண்டும். இதனால் பூக்கும் பூக்கள் உதிராமல், காய் பிடித்து நன்கு வளரும்.

பூ பூக்கும் நேரத்தில்தான், பப்பாளியில் ஆண் பெண் அடையாளம் காணமுடியும். கிளைகளுக்கும் தண்டுக்கும் இடையே ஒரே பூ மட்டும் பூத்தால் அது பெண் பப்பாளி எனவும், கொத்தாக பூ காணப்பட்டால் அது ஆண் பப்பாளி எனவும் அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.

400 பப்பாளி மரங்களில் குறைந்தது 20 ஆண் பப்பாளியாவது இருந்தால் காய்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். சில விவசாயிகள் ஆண் பப்பாளி மரங்களை மொத்தமாக பிடுங்கிவிடுவார்கள். இதனால் அயல்மகரந்தச்சேர்க்கை நடைபெறாமல் காய்ப்புத்திறன் குறைய வாய்ப்புள்ளது.

7-ம் மாதம் காய் காய்க்கத் தொடங்கும். 8-ம் மாதம் காய் பறிக்கலாம். 9-ம் மாதத்தில் இருந்து மகசூல் அதிகரிக்கும். 12-ம் மாதம் வரை நல்ல மகசூல் கிடைக்கும். 13-ம் மாதத்தில் இருந்து மகசூல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பிறகு, மரம் உயரமாக வளர்ந்து விடும். காய்களும் தரமில்லாமல் இருக்கும்.

இப்படித்தான் செய்யணும் முருங்கை சாகுபடி!

ஒரு ஏக்கர் பரப்பில் நாட்டு முருங்கை சாகுபடி செய்ய மரியராஜ் சொல்லும் தகவல்கள் இங்கே இடம்பிடிக்கின்றன...

“நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்து, 15 நாள் காயவிட வேண்டும். பிறகு, டிரில்லரால் (சாதாரண கலப்பை) ஒரு உழவு செய்து அடுத்த நாள் செடிக்கு செடி 20 அடி, வரிசைக்கு வரிசை 20 அடி இடைவெளியில், ஓர் அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 100 குழிகள் வரை எடுக்கலாம். முருங்கையை போத்தாக நடவு செய்தால் விரைவாக மகசூலுக்கு வரும்.

நன்றாக வளர்ந்த முருங்கை மரத்தில் இருந்து, ஒன்றரை அடி உயரத்தில் போத்துகளை (குச்சிகளை) வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 100 லிட்டர் தண்ணீர், 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து கொள்ள வேண்டும். போத்துகளில், எந்த முனையை மண்ணுக்குள் நடவு செய்யப்போகிறோமோ, அந்த முனையை  அரை அடி அளவுக்கு பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து எடுத்து பத்து நிமிடம் நிழலில் வைத்து பிறகு,  குழிக்குள் நடவு செய்ய வேண்டும். இதனால் வேர் வளர்ச்சி தடைபடாமலும், வேர்ப்பகுதி அழுகாமலும் இருக்கும். நடவுக் குழிக்குள் அரை கிலோ அளவு மட்கிய சாணத்தைப் போட்டு, அதன் மேல் சிறிது மேல்மண் போட்டு, அதில் போத்து, பாதியளவு குழிக்குள் மூழ்குமாறு நடவு செய்து மண் அணைத்து முதல் நீர் விட வேண்டும். பின், மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.

நடவு செய்த அடுத்த நாள் பசுஞ்சாணத்தை மருதாணி வைப்பது போல் போத்துகளின் நுனியில் ஒரு இஞ்ச் அளவுக்கு சுற்றிலும் வைக்க வேண்டும். 10 முதல் 15-ம் நாளில் தளிர் தெரியும். 30-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் இதே அளவில் பஞ்சகவ்யாவை தெளிக்க வேண்டும்.   

2 ஏக்கர்,  ரூ. 3,74,000... ‘நச்’ லாபம் கொடுத்த நாட்டுப் பப்பாளி, யாழ்ப்பாணம் முருங்கை!

பூக்கும் நேரத்தில் பிண்ணாக்கு கரைசல்!

6-ம் மாதத்தில் பூ பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பாசிப்பயறு 5 கிலோ, தட்டைப்பயறு 5 கிலோ, கொள்ளுப்பயறு 5 கிலோ, கொண்டைக்கடலை ஆகியவற்றை மாவாக திரித்து இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கிவிட்டு, டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் இதை  இரண்டு நாள் வரை வைத்திருந்து,  ஒரு குழிக்கு 2 லிட்டர் அளவு தூரில் ஊற்றி மண் அணைக்க வேண்டும். இதனால் பூ உதிராமல் காய் பிடித்து நன்கு வளரும்.

கம்பளிப் பூச்சி தாக்குதலுக்கு வசம்புபொடி கரைசல்!

குளிர் காலத்தில் கம்பளிப்பூச்சி தாக்குதல் இருக்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி வேப்ப எண்ணெய், 200 கிராம் வசம்புப் பொடி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். வருடம் ஒருமுறை மழை நேரத்தில், மரத்தில் இருப்பதிலேயே உயரமான கம்பை வெட்ட வேண்டும். அதில் கட்டை காய்கள்தான் வரும். காய்கள் உச்சிக்குப் போனால் பறிக்க முடியாது. தவிர அதிக காற்று வீசும்போது மரம் முறிய வாய்ப்பு உள்ளது. எனவே, உயரமான கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இதனால், கிளைகள் வளர்ந்து அதிக பூ பூத்து காய்பிடிக்கும். நல்ல முறையில் பராமரித்தால் 8 ஆண்டுகள் வரை கூட நல்ல மகசூல் பார்க்கலாம்.

மாவுப்பூச்சி தாக்குதலுக்கு மூன்று எண்ணெய் கரைசல்!

2 ஏக்கர்,  ரூ. 3,74,000... ‘நச்’ லாபம் கொடுத்த நாட்டுப் பப்பாளி, யாழ்ப்பாணம் முருங்கை!

பப்பாளி சாகுபடியில் இரண்டாவது மாதத்தில் இருந்தே உற்று கவனிக்க வேண்டும். இலைக்கு மேல்புறம், இலைக்கு பின்புறம் என வெள்ளை நிறத்தில் மாவுப்பூச்சி தென்படும். மாவுப்பூச்சி எப்போது தென்பட்டாலும் தண்ணீரை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். தண்ணீர் தெளித்த இரண்டு மணி நேரத்துக்குள், 10 லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் 50 மில்லி, புங்கன் எண்ணெய் 50 மில்லி, இலுப்பை எண்ணெய் 50 மில்லி ஆகியவற்றைக் கலந்து, இதோடு சிறிதளவு காதி சோப் சேர்த்து கைத்தெளிப்பானால் தெளித்துவிட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism