Published:Updated:

ஒரு ஏக்கரில் ரூ.3,20,000... பட்டையை கிளப்பும் பந்தல் காய்கறிகள்!

ஒரு ஏக்கரில் ரூ.3,20,000... பட்டையை கிளப்பும் பந்தல் காய்கறிகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு ஏக்கரில் ரூ.3,20,000... பட்டையை கிளப்பும் பந்தல் காய்கறிகள்!

மகசூல் ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

ஒரு ஏக்கரில் ரூ.3,20,000... பட்டையை கிளப்பும் பந்தல் காய்கறிகள்!

மகசூல் ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
ஒரு ஏக்கரில் ரூ.3,20,000... பட்டையை கிளப்பும் பந்தல் காய்கறிகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு ஏக்கரில் ரூ.3,20,000... பட்டையை கிளப்பும் பந்தல் காய்கறிகள்!
ஒரு ஏக்கரில் ரூ.3,20,000... பட்டையை கிளப்பும் பந்தல் காய்கறிகள்!

* செலவு குறைந்த மூங்கில் பந்தல்
* சுழற்சி முறையில் தினமும் அறுவடை
* நஷ்டமில்லாத விவசாயம்

க்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் பல நேரங்களில் வருமானத்தை வாரிக்கொடுத்தாலும், சில நேரங்களில் காலையும் வாரி விட்டுவிடும். ஆனால், எந்த நிலையிலும் நஷ்டத்தைக் கொடுப்பதில்லை என்பதால் பெரும்பாலான விவசாயிகளின் விருப்பத் தேர்வாக இருக்கிறது பந்தல் காய்கறி சாகுபடி. இதில் பல நன்மைகள் இருந்தாலும், ஆரம்பகட்ட பந்தல் அமைக்கும் செலவு காரணமாக, பந்தல் சாகுபடியில் விருப்பம் இருந்தாலும், தயங்கி நிற்கிறார்கள் பெரும்பாலான விவசாயிகள். அதே நேரம், தங்கள் அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு குறைந்த செலவில் பந்தல் அமைத்து வெற்றிகரமாக சாகுபடி செய்யும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வரிசையில், திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார், குறைந்த செலவில் பந்தல் அமைத்து, பீர்க்கன், புடலை சாகுபடி செய்து வருகிறார்.

திண்டுக்கல்-நத்தம் சாலையில் 22-வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது கோபால்பட்டி. ஊருக்குள் நுழையும் இடத்தில் வலது பக்கம் பிரியும் பாதையில் பயணித்தால் செந்தில்குமாரின் தோட்டத்தில் முடிகிறது பாதை. பந்தலுக்குள் பாம்புகளை தோரணம் கட்டி தொங்கவிட்டதைப் போல, நீள  நீளமாகத் தொங்கிக்கொண்டிருந்தன புடலங்காய்கள். அவற்றுக்குப் போட்டியாக, தொங்கிக்கொண்டிருந்தது பீர்க்கன். மகசூல் முடிந்த நிலையில் தக்காளி கொடிகள் ஆங்காங்கே தென்பட்டன. அறுவடை பணியில் முனைப்பாக இருந்த செந்தில்குமாரை சந்தித்தோம்.

‘‘இது எங்க பூர்வீக நிலம்... நாங்க பரம்பரையா விவசாயக் குடும்பம். சின்ன பிள்ளையில இருந்தே தோட்ட வேலை செய்றேன். இடையில மேல்படிப்பு படிக்கும்போது, அப்பாவும், அண்ணணும்தான் விவசாயத்தை பாத்துக்கிட்டாங்க. நானும், அப்பப்ப வந்து பாத்துக்கிட்டாலும், அண்ணன் அளவுக்கு எனக்கு விவசாயத்துல நுணுக்கம் தெரியாது. ஒருவழியா படிச்சு முடிச்சதும், அரசு பள்ளியில தொழில்கல்வி ஆசிரியரா வேலை கிடைச்சது. வேலைக்குப் போனாலும் விவசாயத்தை என்னால விடமுடியலை. ஒரு கட்டத்துல சொத்துக்களை வாய்மொழியா பிரிச்சுகிட்டு, அண்ணனும் நானும் தனித்தனியா விவசாயம் பாக்க ஆரம்பிச்சோம். என் பங்குக்கு பத்து ஏக்கர் நிலம் கிடைச்சது. அதுல மூணு ஏக்கர் வயக்காடு.. அதுல வருஷத்துக்கு ஒரு போகம் நெல் சாகுபடி செய்வோம். குளத்துல தண்ணி இருக்கும்போது மட்டும்தான் சாகுபடி செய்ய முடியும். அதுபோக, மூன்றரை ஏக்கர் தென்னந்தோப்பு, ரெண்டு ஏக்கர் மாந்தோப்பு இருக்கு. ஒன்றரை ஏக்கர் நிலத்துல, பந்தல் காய்கறி இருக்கு” என்று தன்னையும், தனது விவசாயத்தையும் அறிமுகம் செய்து கொண்டவர், பந்தலுக்குள் நம்மை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டியபடியே தொடர்ந்து பேசினார்.

ஒரு ஏக்கரில் ரூ.3,20,000... பட்டையை கிளப்பும் பந்தல் காய்கறிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செலவு குறைந்த மூங்கில் பந்தல்!

‘‘நான் ஆரம்பத்துல, தென்னை, மா ரெண்டையும் குத்தகைக்கு விட்டுட்டு மேம்போக்காத்தான் விவசாயம் பாத்துட்டு இருந்தேன். ஒருநாள் எதேச்சையா பசுமை விகடன் படிக்குற வாய்ப்பு கிடைச்சது. அதுல சொல்லி இருந்த விவசாய நுணுக்கங்களைப் படிக்கப் படிக்க, எனக்குள்ளயும் ஒரு ஆர்வம் எட்டிப்பாத்துச்சு. காலியா இருந்த ஒன்றரை ஏக்கர் இடத்துல காய்கறி விவசாயம் பண்ணலாம்னு முடிவு செஞ்சேன். அந்த நேரத்துல, பந்தல் சாகுபடியில, தேனி மாவட்டத்துல ஒருத்தர் கோவக்காய் சாகுபடி செய்றது பத்தின செய்தியை பசுமை விகடன்ல படிச்சேன். அது எனக்குப் பிடிச்சு இருந்தது. அதனால பந்தல் அமைக்குற வேலையில இறங்குனேன். வழக்கமா கல் பந்தல் அமைச்சா ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல செலவாகும். என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப தோணுனது தான் மூங்கில் பந்தல் ஐடியா. எங்க பக்கத்துல மூங்கில் மரங்கள் அதிகமா இருக்கு. அதுனால, ஒருத்தர்கிட்ட மூங்கிலை மொத்தமா விலை பேசி வாங்குனேன். ரெண்டு தூர் எட்டாயிரம் ரூபாய்க்கு கிடைச்சது. அதுல சின்னதும் பெருசுமா 300 தடிக வரைக்கும் கிடைச்சது. ஒவ்வொரு தடியிலயும் 8 அடி நீளத்துல நாலு துண்டுகள் போட்டோம். வெட்டுக்கூலி, போக்குவரத்துனு 13 ஆயிரம் செலவாச்சு. 21 ஆயிரம் ரூபாய்ல ஒன்றரை ஏக்கருக்குத் தேவையான மூங்கில் கிடைச்சிடுச்சு. கம்பி, ஆள்கூலினு 50 ஆயிரம் செலவாச்சு. ஆக மொத்தம் 71 ஆயிரம் ரூபாய்ல ஒன்றரை ஏக்கருக்கு பந்தல் அமைச்சுட்டேன். ஒரு ஏக்கர்னு பார்த்தா 50 ஆயிரம் ரூபாய்தான் செலவாச்சு. இது வழக்காம அமைக்குற கல் பந்தலைவிட, மூணுல ஒரு மடங்கு செலவுதான். ஆனா, கல் பந்தலுக்கு ஆயுசு அதிகம். மூங்கில் பந்தல் 5 வருஷத்துக்கு வரும்” என்றவர், தான் பந்தல் காய்கறி விவசாயத்துக்குள் வந்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.
‘‘கோவக்காய் சாகுபடி செய்யலாம்னு ஆர்வமா பந்தல் அமைச்சுட்டு, நாத்து வாங்கப் போனா, நாத்து கிடைக்கலை. அலைஞ்சு பாத்து வெறுத்துப் போய், கடைசியா பீர்க்கன், புடலை சாகுபடி செய்யலாம்னு முடிவுக்கு வந்தேன். பெரும்புடலை, குறும்புடலை, பீர்க்கன்னு முதல்ல ஒரு ஏக்கர்ல மட்டும் தான் ஆரம்பிச்சேன். அதுல கிடைச்ச மகசூல் என்னை ஆச்சர்யப்பட வெச்சது.. உடனே அடுத்த அரை ஏக்கர்லயும் அதே விவசாயத்தை ஆரம்பிச்சுட்டேன். முதல்ல நடவு செஞ்ச ஒரு ஏக்கர், இப்ப மகசூல் கொடுத்துட்டு இருக்கு. புதுசா நடவு செஞ்ச அரை ஏக்கர் இன்னும் இருபது நாள்ல மகசூலுக்கு வந்துடும்.

நான், இன்னமும் முழுக்க இயற்கை விவசாயத்துக்கு மாறல. காரணம், நான் வேலையில இருக்கறதால முழுமையா செய்ய நேரமில்லை. அதுனால பாதி இயற்கை, பாதி ரசாயனம்னு கலந்து செஞ்சிட்டு இருக்கேன். இப்பத்தான் மூர்த்தினு ஒரு நண்பர் கிடைச்சிருக்காரு. அவர் கொஞ்சம் கொஞ்சமா இயற்கை முறைக்கு மாத்திட்டு இருக்காரு. அடுத்த போகம் நிச்சயம் முழுமையா இயற்கை முறையிலதான் சாகுபடி செய்யப் போறோம்” என்றவர் ஒரு ஏக்கர் பந்தல் காய்கறிகளில் இருந்து கிடைக்கும் வருமானம் பற்றி பேசத் தொடங்கினார்.

160 நாட்கள்...! ரூ.3 லட்சத்து 20 ஆயிரம்!


‘‘புடலை 45 முதல் 60 நாளைக்குள்ள அறுவடைக்கு வரும். அதுல இருந்து மொத்தம் 120 நாள் மகசூல்ல இருக்கும். ரெண்டு நாளைக்கு ஒரு முறை குறும்புடலை அறுவடை செய்யலாம். சராசரியா 40 அறுப்பு அறுக்கலாம். ஒரு அறுப்புக்கு 300 கிலோவுல இருந்து 700 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்கும். சராசரியா 500 கிலோ கிடைக்கும். நாப்பது அறுப்புக்கும் சேர்த்து 20 ஆயிரம் கிலோ காய் கிடைக்கும். சராசரி விலையா கிலோவுக்கு பத்து ரூபாய் கிடைக்குது. இதுவரைக்கும் பத்து ரூபாய்க்கு குறைவா நான் கொடுத்ததே இல்லை. அந்த கணக்குப்படி ரெண்டு லட்ச ரூபாய் வருமானமா கிடைக்கும்.

பெரும்புடலங்காயை மூணு நாளைக்கு ஒருமுறை அறுக்கலாம். அது மொத்தம் 25 அறுப்பு வரைக்கும் வரும். ஒரு அறுப்புக்கு 150 முதல் 250 கிலோ வரைக்கும் கிடைக்கும். சராசரியா 200 கிலோ கிடைக்கும். 25 அறுப்புக்கு 5 ஆயிரம் கிலோ கிடைக்கும். கிலோவுக்கு 10 ரூபாயில இருந்து 15 ரூபாய் விலை கிடைக்கும். சராசரியா 12 ரூபாய்னு வெச்சுகிட்டாலும், 5 ஆயிரம் கிலோவுக்கு 60 ஆயிரம் வருமானமா கிடைக்கும்.

பீர்க்கன் அறுவடைக்கு வர 80 நாள் வரைக்கும் ஆகுது. அதுல இருந்து அடுத்த 80 நாள் மகசூல்ல இருக்கும். ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்யலாம். மொத்தம் 40 அறுவடை கிடைக்கும். ஒரு அறுப்புக்கு 75 கிலோவுல இருந்து 150 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்கும். சராசரியா 100 கிலோ கிடைக்குது. 40 அறுப்பு மூலமா 4 ஆயிரம் கிலோ கிடைக்கும். கிலோவுக்கு பத்து ரூபாய்ல இருந்து 25 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்குது. சராசரியா 15 ரூபாய்னு வெச்சுகிட்டாலும், மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆக, மொத்தம் ஒரு ஏக்கர் நிலத்துல இருந்து 160 நாள்ல 3 லட்சத்து 20 ஆயிரம் வருமானமா கிடைச்சிருக்கு. இதுல, ஒரு லட்சத்து 20 ஆயிரம் செலவு போனாலும் 2 லட்ச ரூபாய் நிகர லாபமா நிக்குது” என்ற செந்தில்குமார்,

‘‘பந்தல் காய்கறிகள் என்னிக்கும் வருமானத்தை வாரிக்கொடுக்குமே தவிர, காலை வாரிவிடாதுங்கிறதுக்கு நானே நடமாடும் சாட்சி. இதுல முக்கியமான விஷயம் பந்தல் காய்களுக்கு எப்பவும் கிலோ பத்து ரூபாய்க்கு குறையாம விலை கிடைக்கும். இதை சுழற்சி முறையில செஞ்சா, வருஷம் முழுக்க வருமானம் கிடைச்சிட்டே இருக்கும். பாசன வசதியும், கொஞ்சம் பணவசதியும் இருக்குற விவசாயிகளுக்கு ஏற்றது பந்தல் சாகுபடி. அடுத்த முறை நீங்க வரும்போது இது முழுமையான இயற்கை விவசாய பண்ணையா இருக்கும்” என்றபடியே அறுவடை பணியை தொடர்ந்தார்.

தொடர்புக்கு,
செந்தில்குமார்,
செல்போன்: 97501-77150.

புடலை, பீர்க்கன் சாகுபடி நுட்பங்கள்!

ரு ஏக்கர் நிலத்தில் புடலை, பீர்க்கன் சாகுபடி செய்யும் விதம் குறித்து செந்தில்குமார் சொன்ன தகவல்கள் இங்கே இடம் பிடிக்கின்றன.

புடலை, வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும். வீரிய ரக புடலைக்கு பட்டம் தேவையில்லை. புடலை வயது 160 நாட்கள், பீர்க்கன் வயது 180 நாட்கள். இவற்றை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். தொழுவுரம் கொட்டி, உழவு செய்து தயாராக உள்ள பந்தலில், 6 அடி இடைவெளியில் ஓர் அடி அகலத்தில் நீளமான பார் எடுத்துக்கொள்ள வேண்டும். பாரின் மத்தியில் ஓர் அடிக்கு ஒரு விதை வீதம் குட்டை புடலை விதையை ஊன்ற வேண்டும். விதையை ஊன்றுவதற்கு முன்பாக சாணிப்பால் கரைசலில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரே பாரில், முதலில் ஒரு குறும்புடலை விதை, ஓர் அடி விட்டு மீண்டும் ஒரு குறும்புடலை விதை, மூன்றாவது அடியில் பெரும்புடலை விதையை ஊன்ற வேண்டும். இதே முறையில் மாற்றி மாற்றி இரண்டு பாத்திகள் புடலை நடவு செய்த பிறகு, மூன்றாவது பாத்தியில் செடிக்கு செடி ஓர் அடி இடைவெளியில் பீர்க்கன் விதைகளை நடவு செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கரில் ரூ.3,20,000... பட்டையை கிளப்பும் பந்தல் காய்கறிகள்!

நடவு செய்த பிறகு, மூன்றாவது நாள் புடலையும், ஐந்தாவது நாள் பீர்க்கனும் முளைக்கும். செடிகளில் நான்கு இலை வந்தவுடன், ஒரு பிரி சணல் கயிறு மூலம் செடியையும் பந்தலையும் இணைக்க வேண்டும். கயிற்றின் ஒருமுனையை செடியின் அடி இலையிலும், அடுத்த முனையை பந்தலிலும் கட்டிவிட வேண்டும். மூன்று நாளைக்கு ஒருமுறை கொடிகளை சணலில் சுற்றிவிட வேண்டும். பக்க சிம்புகள் இருந்தால் கிள்ளி எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் கொடி வேகமாக பந்தலை அடையும். கொடி பந்தலைத் தொட்டதும், வாழை நார் மூலமாக, கொடிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கம்பிகளில் கட்டி விடவேண்டும். 25 முதல் 30 நாளைக்குள் கொடி பந்தலில் படர்ந்து விடும். அந்த நேரத்தில் வளர்ச்சி ஊக்கியாக பயோ உரங்களை ஏக்கருக்கு 50 கிலோ வரை கொடுக்கலாம்.

இந்த உரத்தை செடியின் தூருக்கு அருகில், கையால் கொஞ்சம் பள்ளம் பறித்து, அதில் வைத்து மண் அணைத்துவிட வேண்டும். நிலத்தின் ஈரம் காயாமல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். மூன்று பாசனத்துக்கு ஒருமுறை 10 கிலோ கடலைப் பிண்ணாக்கை கரைத்து பாசன நீருடன் கலந்துவிட்டால், செடிகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அதேசமயம், அதிக பாசனமும் கூடாது.

30-ம் நாளுக்கு மேல் பூவெடுக்கும். அந்த நேரத்தில் சில பயோ டானிக்குகளை தெளித்தால் பூக்கள் உதிராமல் பிஞ்சாக மாறும். குறும்புடலை, நீளபுடலை இரண்டும் 45 நாட்களுக்கு மேல் காய் அறுவடைக்கு தயாராக இருக்கும்.

பீர்க்கன் மகசூலுக்கு வர 65 முதல் 80 நாட்கள் வரை ஆகும். அதுவரை, குறும்புடலை இரண்டு தினங்களுக்கு ஒருமுறையும், பெரும்புடலை மூன்று நாட்களுக்கு ஒருமுறையும் அறுவடை செய்யலாம். 80 நாட்களுக்கு மேல் ஒருநாள் விட்டு ஒருநாள் பீர்க்கனை அறுவடை செய்யலாம். ஆக, சுழற்சி முறையில் தினமும் ஏதாவது ஒரு காய் அறுவடை நடந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு அறுவடை முடிந்த பிறகும், அதிகப்படியான இலைகளை கைகளால் கிள்ள வேண்டும். அப்போதுதான் புதுக்கிளைகள் தோன்றி அதிக பூக்கள் வைக்கும்.

பூச்சி, நோய் தாக்குதலைப் பொறுத்தவரை, அசுவிணி தாக்குதல் அதிகமாக இருக்கும். அதற்கு பயோ மருந்தை தெளித்துக் கட்டுப்படுத்தலாம். அடுத்ததாக வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதற்கும் பயோ மருந்து கடைகளில்  மருந்து கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தலாம். சாறு உறிஞ்சும்பூச்சி, தத்துப்பூச்சி, வெள்ளைக்கொசு தாக்குதலும் அதிகளவு இருக்கும். அதற்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தெளிக்கலாம். (இவர் ரசாயன மருந்துகளை தெளிக்கிறார்) மற்றபடி பீர்க்கன், புடலை இரண்டுக்கும் ஒரே பராமரிப்பு முறைதான்.

பந்தல் அமைக்கும் முறை!

ஒரு ஏக்கரில் ரூ.3,20,000... பட்டையை கிளப்பும் பந்தல் காய்கறிகள்!

8 அடிக்கு 8 அடி இடைவெளியில் 2 அடி ஆழத்தில் கம்பு ஊன்றும் அகலத்தில் குழியெடுத்துக்கொள்ள வேண்டும். அதில், 8 அடி உயர மூங்கில் கம்புகளை ஊன்றி, பலமாக இருக்கிவிடவேண்டும். ஓரங்களில் பெரிய பலமான கம்புகளை ஊன்றி, அதற்கு மற்றொரு கம்பை முட்டுக் கொடுக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 680 முதல் 700 கம்புகள் வரை தேவைப்படும். டெலிபோன் கம்பி அளவுக்கு உள்ள கம்பிகளை வாங்கி, கம்புகளின் மேல் பகுதியில் ஒரு அடி இடைவெளியில் குறுக்கும், நெடுக்குமாக இழுத்துக் கட்ட வேண்டும்.

இயற்கை முறை பந்தல் சாகுபடி!

ஒரு ஏக்கரில் ரூ.3,20,000... பட்டையை கிளப்பும் பந்தல் காய்கறிகள்!

இயற்கை முறையில் பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விதம் குறித்து பந்தல் சாகுபடியில் நெடிய அனுபவம் வாய்ந்த கேத்தனூர் பழனிச்சாமியிடம் கேட்டோம்.

செந்தில்குமார் சாகுபடி செய்துள்ள முறைகளை முழுமையாக கேட்டு தெரிந்துக்கொண்டவர், ‘‘புடலையில பீர்க்கனை சேர்த்து சாகுபடி செய்றது சரியான முறையில்லை. பீர்க்கனுக்கு அடி சாம்பல், மேல் சாம்பல், வைரஸ்னு பல பிரச்னை வரும். அது பக்கத்து பயிரையும் பாதிச்சுடும். அதனால பந்தல்ல தனியா ஒரு மூலையில பீர்க்கனை சாகுபடி செய்றதுதான் சரியான முறை.

வைரஸ் நோய்க்கு 250 மில்லி புளிச்ச மோர், 100 கிராம் சூடோமோனஸ், 50 கிராம் கரும்பு சர்க்கரை கலந்து கலக்கி,10 லிட்டர் தண்ணியில கலந்து மூணு நாள் இடைவெளியில மூணு முறை தெளிச்சா வைரஸ் கட்டுப்படும். அதோட, பூக்க ஆரம்பிச்ச பிறகு, 15 நாளைக்கொரு முறை தொடர்ந்து மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிச்சாலே பெரும்பாலான பூச்சித் தாக்குதல்கள் இருக்காது” என்றார்.

சாணிப்பால் விதை நேர்த்தி!

தூசி, மண் இல்லாத பசும் சாணத்தை தேவையான தண்ணீர் ஊற்றி பால் பதத்துக்கு கரைத்துக்கொள்ள வேண்டும். அதில் விதைகளைக் கொட்டி, 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, விதைகளை எடுத்து பருத்தி துணியில் கொட்டி, நீரை வடிகட்ட வேண்டும். அதை துணியில் முடிச்சாக கட்டி, லேசாக தண்ணீரில் நனைத்து 6 மணி நேரம் நிழலில் வைத்துவிட வேண்டும். அதன் பிறகு விதைகளை எடுத்து நடவு செய்தால் முளைப்புத் திறன் நன்றாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism