Published:Updated:

25 ஏக்கர்... மாதம் ரூ 11 லட்சம் லாபம்!

25 ஏக்கர்... மாதம் ரூ 11 லட்சம் லாபம்!

அள்ளிக் கொடுக்கும் அசத்தல் பண்ணை!இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

25 ஏக்கர்... மாதம் ரூ 11 லட்சம் லாபம்!

அள்ளிக் கொடுக்கும் அசத்தல் பண்ணை!இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:
25 ஏக்கர்... மாதம் ரூ 11 லட்சம் லாபம்!
25 ஏக்கர்... மாதம்  ரூ 11 லட்சம் லாபம்!

தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களில் பெரும்பாலானோர் வருமான வரியில் விலக்கு வாங்குவதற்காகத்தான் விவசாயத்தையும் செய்து வருவார்கள். ஆனால், அவர்களுக்கு மத்தியில் விவசாயத்தின் மீது காதல் கொண்டு விவசாயத்தில் ஈடுபடுபவர்களும் உண்டு. அத்தகையோரில் ஒருவர்தான், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (அ.தி.மு.க.) மார்கண்டேயன். அடிப்படையில் வழக்கறிஞர் என்றாலும், முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருவதோடு சிறந்த விவசாயியாகவும் செயல்பட்டு வருகிறார், இவர். ‘அம்பாள் கோசாலை இயற்கை வேளாண் பண்ணை’ என்ற பெயரில் பண்ணை அமைத்து இயற்கை விவசாயத்தோடு மாட்டுப்பண்ணையும் அமைத்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.

ஒரு காலைவேளையில் பண்ணைப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த மார்கண்டேயனைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் மகிழ்ச்சியுடன் பேசத் துவங்கினார்.

“எனக்குச் சொந்த ஊர் ராமச்சந்திராபுரம் கிராமம். நான் விவசாயக் குடும்பத்துல இருந்து வந்தவன்தான். எங்க பகுதியில கருவேல மரங்கள் அதிகம் நிறைஞ்ச மானாவாரி நிலங்கள்தான் அதிகம். மிளகாய் வத்தல், மல்லி, கம்பு, உளுந்து, பாசிப்பயறுனு மானாவாரி விவசாயம்தான் செய்வோம். ஆட்டுக்கிடை மட்டும்தான் அடியுரம். ரசாயன உரத்தை இதுவரைக்கும் போட்டதேயில்லை. பூச்சிக்கொல்லியையும் தெளிச்சதேயில்லை. நான் ஸ்கூல்ல படிக்கறப்ப இருந்தே விவசாய வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சுட்டேன். முன்னாடி விளாத்திகுளம் தாலூகாவில் இருக்கிற, புதூர் பஞ்சாயத்து யூனியனுக்குப் பத்து வருஷம் தலைவரா இருந்தேன். எங்க ராமச்சந்திராபுரம் கிராமம் இந்த யூனியன்லதான் இருக்கு. எங்க கிராமத்துல குளத்துக்குப் பக்கத்துல ஊராட்சிக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலம் இருந்தது. நான் தலைவரா இருந்த சமயத்துல, அந்த 5 ஏக்கர் நிலத்துலயும் இருந்த வேலிக்கருவை மரங்களைச் சுத்தமா எடுத்துட்டு நிலத்தைச் சமப்படுத்தி சவுக்கு, எலுமிச்சை, கொய்யா, நாவல், சப்போட்டானு நடவு செஞ்சோம். இயற்கை முறையில சாணம், மண்புழு உரம் மட்டும்தான் கொடுத்தோம். அதுல நல்லா விளைஞ்சது. இப்போ அந்த 5 ஏக்கர்ல இருந்து வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் லாபம் கிடைக்குது. அதை ஊர்ப் பணமா வெச்சுக்கிட்டு, ஊருக்குத் தேவையான காரியங்களைச் செஞ்சுட்டு இருக்காங்க.

அடுத்து 2011-ம் வருஷம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில போட்டியிட வாய்ப்பு கிடைச்சது. மக்கள் ஆதரவுல ஜெயிச்சுட்டேன். அதுல கிடைச்ச தொடர்புகளைப் பயன்படுத்திக்கிட்டு நிறைய இயற்கை வேளாண் பண்ணைகளுக்குப் போய், நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். விளாத்திகுளத்துல எங்களுக்குச் சொந்தமா 25 ஏக்கர் நிலம் இருந்தது. அதுல இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்கலாம்னுதான் பண்ணைகளைப் பாத்துட்டு வந்தேன். அப்படிப் போறப்போ நிறைய இயற்கை விவசாயிகள், ‘நீங்க ‘பசுமை விகட’னைப் படிச்சாலே எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாமே’னு சொன்னாங்க. அப்படித்தான் எனக்குப் பசுமை விகடன் அறிமுகமாச்சு. இப்போ வரைக்கும் தொடர்ந்து படிச்சுட்டு இருக்கேன். அதைப்படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் கால்நடை வளர்ப்புல ஆசை அதிகமாச்சு. என் மகனும் மாட்டுப்பண்ணை வைக்கிறதுல ஆர்வமா இருந்தான். அதனாலதான், 2012-ம் வருஷம் இந்த ‘அம்பாள் கோசாலை இயற்கைப் பண்ணை’யை ஆரம்பிச்சேன்” என்று முன்கதை சொன்ன மார்கண்டேயன், பண்ணையைச் சுற்றிக்காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

இடுபொருள் தயாரிப்புக்கு நாட்டு மாடுகள்!

“ஆரம்பத்தில் நாலு மாடுகளை வெச்சுத்தான் ஆரம்பிச்சேன். இப்போ 130 கலப்பிப்ன பசு மாடுகளும், 50 கன்றுக்குட்டிகளும் இருக்கு. இதோட 20 நாட்டு மாடுகளும் இருக்கு. கூடவே ஆடு, கோழிகளும் இருக்கு. பசுமைக் குடில்ல வெள்ளரியும் கீரைகளையும் சாகுபடி செஞ்சுட்டிருக்கேன். ஒருமுறை, கொடுமுடி டாக்டர்.நடராஜனை சந்திச்சுப் பேசுனப்போ பஞ்சகவ்யா குறித்து நிறைய சொன்னாரு. அதுல இருந்து பஞ்சகவ்யாவையும் உற்பத்தி செய்ய ஆரம்பிச்சேன். பஞ்சகவ்யா தயாரிக்கிறதுக்காவே உம்பளச்சேரி, ஓங்கோல், காங்கேயம், தென்பாண்டிக்குட்டைனு நாட்டு மாடுகள் வெச்சுருக்கேன். இந்த மாடுகள்ட்ட இருந்து கிடைக்கிற பால், சாணம்னு பயன்படுத்திதான் பஞ்சகவ்யா தயாரிக்கிறோம். நாட்டு மாடுகளுக்குப் பசுந்தீவனம், அடர்தீவனம் கொடுத்தாலும் மேய்ச்சலுக்கு அனுப்பினாத்தான் நல்லா இருக்கும். அதனால நாட்டு மாடுகளுக்கு மட்டும் மேய்ச்சலுக்குத் தனி இடம் ஒதுக்கியிருக்கேன். தினமும் 400 லிட்டர் பஞ்சகவ்யா இங்கே தயாரிக்கிறோம்.

சாணத்திலிருந்து மின்சாரம், எரிவாயு!

கலப்பின மாடுகள்ல எப்பவுமே 100 மாடுகள் கறவையில் இருக்கும். மாட்டுக்கொட்டகையில் ஓடு வேய்ஞ்சு ‘வாட்டர் ஸ்ப்ரேயர் சிஸ்டம்’ அமைச்சுருக்கேன். அதனால மாடுகளை வெப்பம் தாக்காது. தரையில ‘ரப்பர் மேட்’ படுக்கை போட்டிருக்கேன். அதனால மாடுகள் காலை ஊணி எழுந்திருக்கும்போது அடிபடாது. தளம் சரிவா இருக்குறதால சிறுநீர் அப்படியே கீழ ஓடிடும். அப்பப்போ சாணியை அள்ளி, கொட்டகையைச் சுத்தமா பராமரிச்சுக்குவோம். கொட்டகையைக் காய வெக்கிறதுக்கு மின்விசிறிவசதியும் இருக்கு. அதிகாலை 1.30 மணிக்கும், மதியம் 1.30 மணிக்கும் பால் கறக்க ஆரம்பிப்போம். கறவைக்கு ‘மிஷின்’களைத்தான் பயன்படுத்துறோம். கறவை முடிஞ்சவுடனே, ஒவ்வொரு கறவை மாட்டுக்கும் 15 லிட்டர் தண்ணியில 50 மில்லி பஞ்சகவ்யா, 4 கிலோ அடர்தீவனம் கலந்து கொடுத்துடுவோம். கன்றுகளுக்கு 10 லிட்டர் தண்ணியில 20 மில்லி பஞ்சகவ்யா, 2 கிலோ அடர்தீவனம் கொடுப்போம். தினமும் காலையிலேயும், சாயங்காலமும் மாடுகளைக் குளிப்பாட்டி கொஞ்ச நேரம் உலவ விடுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

25 ஏக்கர்... மாதம்  ரூ 11 லட்சம் லாபம்!

தினமும் ஆறு முறை பசுந்தீவனத்தை நறுக்கி மாடுகளுக்குக் கொடுப்போம். ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு முப்பது கிலோ அளவுக்கு வேலிமசால், அகத்தி, கோ-4, சோளத்தட்டைனு கலந்து கொடுப்போம். சாணம், சிறுநீர்ல இருந்து பயோ- கேஸூம், மின்சாரமும் தயாரிக்கிறோம். பண்ணையில் வேலை செய்ற 60 பேருக்கும் பயோ கேஸ்லதான் சமையல் செய்றோம். தினமும் 15 கிலோ வாட் மின்சாரம் கிடைக்குது. இது தொடர்ச்சியா எட்டு மணி நேரத்துக்கு விளக்குகளை எரிக்கப் பயன்படுது. அதனால, மின் கட்டணத்துல கணிசமான தொகை மிச்சமாகுது. எரிவாயு, மின்சாரத் தயாரிப்பு போக மீதியுள்ள சாணத்துல 60 ‘பெட்டு’கள் போட்டு மண்புழு உரம் தயாரிக்கிறோம். 60 பெட்டுகள்ல இருந்து தினமும் 2 டன் அளவுக்கு மண்புழு உரம் கிடைக்குது. இதுல பண்ணைத்தேவைக்குப் போக மீதியை விற்பனை செஞ்சுடுவோம்” என்ற மார்க்கண்டேயன் ஆடு வளர்ப்புக் கொட்டகைக்கு அழைத்துச் சென்றார்.

பரண் முறையில் ஆடுகள்!

“தரையிலிருந்து 5 அடி உயரத்தில் 160 சதுர அடியில பரண் அமைச்சிருக்கேன். அதுல குட்டி ஆடுகள், கிடா, பெட்டைனு மொத்தம் 60 நாட்டு ரக கொடி ஆடுகள் இருக்கு. கொட்டகைக்குக் கீழ சேகரமாகுற கழிவுகளை உரமாகப் பயன்படுத்திக்குவோம். தினமும் 5 வேளை ஆடுகளுக்குப் பசுந்தீவனம் கொடுப்போம். ஒரு வேளைக்கு ஒரு ஆட்டுக்கு 2 கிலோ பசுந்தீவனம் கொடுத்திடுவோம். மதியம் ஒவ்வொரு ஆட்டுக்கும் 5 லிட்டர் தண்ணியில 25 மில்லி பஞ்சகவ்யா, கால் கிலோ அடர் தீவனம் கலந்து கொடுத்திடுவோம். 20 பெட்டை ஆடுகள் மூலம் வருஷத்துக்குச் சராசரியா 50 குட்டிகள் கிடைச்சுட்டிருக்கு. கூண்டுகள்ல 50 நாட்டுக்கோழிகள் இருக்கு. அதுமூலமா கிடைக்கிற முட்டைகளைப் பொரிக்க வெச்சுக்குவோம். மீதி முட்டைகள், கோழிகள் எல்லாமே பணியாளர்களின் உணவுக்காகத்தான். வாரம் ஒருமுறை நாட்டுக்கோழி அடிச்சு சாப்பிட்டுக்குவாங்க. அதனால், கோழி விற்பனைக்குக் கிடையாது” என்றவர் பசுமைக்குடிலுக்கு அழைத்துச் சென்றார்.

பசுமைக்குடிலில் வெள்ளரி!

“25 சென்ட் அளவுல 3 பசுமைக்குடில் இருக்கு. ஒரு பசுமைக் குடில்ல கீரை சாகுபடி பண்ணி அறுவடை செய்துட்டோம்.. அடுத்து கீரைகள்தான் போடப்போறோம். மீதி ரெண்டு பசுமைக் குடில்ல வெள்ளரி இருக்கு. அதுல ஒரு குடில்ல இப்போதான் கொடி வீசியிருக்கு. இன்னொன்னுல மகசூல் எடுத்துட்டு இருக்கோம். ரெண்டு  பசுமைக் குடில் இருக்குறதால வருஷம் முழுக்கக் காய் கிடைச்சுட்டே இருக்கும். மண்புழு உரம், கடலைப்பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, அடுப்புச் சாம்பல், பஞ்சகவ்யானு இயற்கை முறையில்தான் வெள்ளரியை விளைவிக்கிறோம். விதைக்கிறதுக்கு முன்னாடி பஞ்சகவ்யாவில்தான் வெள்ளரி விதைகளை விதைநேர்த்தி செய்வோம். ரெண்டு நாட்களுக்கு ஒருமுறை காய் பறிப்போம். சராசரியாக ஒரு பறிப்புக்கு 300 கிலோ வெள்ளரி கிடைக்கும். கிலோ 25 ரூபாய்னு விற்பனை செய்றோம்.

இதுபோக, எங்க கிராமத்துல இயற்கை விவசாயத்துல விளையுற மிளகாய் வத்தல், மல்லி, தானியங்களை வாங்கி, மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, இட்லிப்பொடி, பருப்புசாதப்பொடி, கறிக்குழம்புப்பொடி, புளிக்குழம்புப்பொடினு தயாரிச்சும் விற்பனை செய்றோம். பருப்பு வகைகளை அப்படியே பாக்கெட் பண்ணியும் விற்பனை செய்றோம். இந்தப் பொருட்களை விற்பனை செய்றதுக்காகத் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் என்று மூணு ஊர்கள்லயும் கடைகள் வெச்சுருக்கோம். அந்தக் கடைகள்ல பஞ்சகவ்யா, பால், தயிர், நெய்,  இனிப்புப் பால் , வெள்ளரி, கீரை எல்லாத்தையும் விற்பனை செய்றோம். நேரடி விற்பனைங்கிறதால விற்பனைக்குப் பிரச்னையில்லை” என்ற மார்கண்டேயன், நிறைவாக வருமானம் குறித்துச் சொன்னார்.

“வருஷத்துக்கு 50 ஆடுகள் விற்பனை மூலமா 3 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்குது. இதில் பாதிச் செலவு போக வருஷத்துக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்குது. பருப்புப் பொடி, தானியங்கள் விற்பனை மூலமா மாதம் 5 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல செலவு போக மாதம் 1 லட்ச ரூபாய் லாபம் கிடைக்குது. பால், நெய், தயிர், இனிப்பு, பஞ்சகவ்யா, மண்புழு உரம், வெள்ளரி மூலம் மாத வருமானமா 35 லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்குது. அதுல 25 லட்ச ரூபாய் செலவு போக மாசம் 10 லட்ச ரூபாய் லாபமா கிடைக்குது. மொத்தம் 25 ஏக்கர்ல எல்லாம் சேர்த்து மாசத்துக்கு 11 லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சுட்டு இருக்கு” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
மார்கண்டேயன்,
செல்போன்: 98429 05111.

பலனைக் கூட்டும் பஞ்சகவ்யா!

25 ஏக்கர்... மாதம்  ரூ 11 லட்சம் லாபம்!

பஞ்சகவ்யா தயாரிப்புக் குறித்துப் பேசிய மார்கண்டேயனின் மனைவி ரெபேகா அனிதா, “நாங்க, பஞ்சகவ்யாவை 48 நாட்கள்ல தயாரிக்கிறோம். பஞ்சகவ்யா தயாரிப்புக்காக இரண்டு கொட்டகை இருக்கு. 200 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிக்க, நாட்டு மாட்டுச் சாணம்-35 கிலோ, நெய்-6 லிட்டர், நாட்டு மாட்டுச் சிறுநீர்-30 லிட்டர், பால்-25 லிட்டர், தயிர்-25 லிட்டர், வாழைப்பழம்-10 கிலோ, இளநீர்-40 எண்ணம், நாட்டுச்சர்க்கரை-15 கிலோ பயன்படுத்துறோம்.

சாணத்துடன் நெய் சேர்த்து பிசைஞ்சு 3 நாள் வெச்சுடுவோம். இதைத் தினமும் கிளறிவிடுவோம். பிறகு, மாட்டுச் சிறுநீர், 50 லிட்டர் தண்ணீர் கலந்து கிளறி 10 நாள் அப்படியே வெச்சுடுவோம். பிறகு நாட்டுச்சர்க்கரையைக் கலந்துவிடுவோம். அதுக்கப்புறம் 8 நாள் கழிச்சு மத்த பொருட்களைக் கலந்து பிளாஸ்டிக் டிரம்மின் வாய்ப் பகுதியைத் துணியால கட்டி வெச்சுடுவோம். அதுல இருந்து 27 நாட்கள் வரை தினமும் வேப்பங்குச்சியால காலையிலும் சாயங்காலமும் கலக்கி விட்டா பஞ்சகவ்யா தயாராகிடும். மொத்தம் 48 நாட்கள் ஆகும். இந்த முறையில தயாரிக்கும்போது, பஞ்சகவ்யாவோட பலன் அதிகரிக்குது” என்றார்.

தீவனப் பயிர்கள், மூலிகைகள்!

25 ஏக்கர்... மாதம்  ரூ 11 லட்சம் லாபம்!

ஆடு மாடுகளின் பசுந்தீவனத் தேவைக்காக 10 ஏக்கர் நிலத்தில் கோ-4 தீவனத்தையும் 3 ஏக்கர் நிலத்தில், அகத்தி, 2 ஏக்கர் நிலத்தில் வேலிமசால் ஆகியவற்றைப் பயிரிட்டிருக்கிறார், மார்கண்டேயன். இவை தவிர கால்நடைகளுக்கு மூலிகை வைத்தியத்துக்காக ஒரு ஏக்கர் பரப்பில் கற்றாழை, பிரண்டை, சீந்தில், ஆடுதொடா, கண்டங்கத்தரி என வளர்த்து வருகிறார்.

தினமும் 1,000 லிட்டர் பால்!

“100 மாடுகள் மூலம் தினமும் சராசரியா 1,000 லிட்டர் பால் கிடைக்குது. இதில் 700 லிட்டர் பாலை அப்படியே பாக்கெட்டுகள்ல அடைச்சு விற்பனை செய்றோம். 200 லிட்டர் பால் மூலமா 15 லிட்டர் நெய் தயாரிக்கிறோம். 70 லிட்டர் பால் மூலம் 17 கிலோ இனிப்பு தயாரிக்கிறோம். 30 லிட்டர் பால் மூலம் 60 லிட்டர் தயிர் உற்பத்தி பண்றோம்” என்றார், மார்கண்டேயன்.

25 ஏக்கர்... மாதம்  ரூ 11 லட்சம் லாபம்!

எரிபொருளாகும் அகத்திக் குச்சிகள்!

“பாலை பாக்கெட்டுகளில் அடைச்சுதான் விற்பனை செய்றோம். பாக்கெட்டில் அடைக்கிறதுக்கு முன்னாடி நீராவியால பாலை சூடாக்கணும். அதுக்கான பாய்லர்ல காய்ந்த அகத்திக்குச்சிகளையே எரிபொருளாகப் பயன்படுத்திக்கிறோம். இதனால எரிபொருள் செலவும் மிச்சமாகுது. அதுல கிடைக்கிற சாம்பலை உரமாகப் பயன்படுத்திக்கிறோம்” என்கிறார், மார்கண்டேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism