நாட்டு நடப்பு
Published:Updated:

பஞ்சகவ்யா - 14

பஞ்சகவ்யா - 14
பிரீமியம் ஸ்டோரி
News
பஞ்சகவ்யா - 14

வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்பல்கலைக்கழகத்தின் பரிசோதனை முடிவு!ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

பஞ்சகவ்யா - 14

ரம்பகாலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதை விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. பாமர மக்களிடம் புழக்கத்தில் இருந்த பஞ்சகவ்யாவை பல்கலைக்கழகம் வரை கொண்டு சேர்த்தவர்களில் ஒருவரான கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வளம்குன்றா அங்கக வேளாண்மைத்துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். சோமசுந்தரத்தின் அனுபவங்களை கடந்த இதழில் பார்த்தோம். மேலும் பஞ்சகவ்யா குறித்து சோமசுந்தரம் சொன்ன தகவல்கள் இங்கே...

“ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தில் 5 வருஷம் வேளாண் அலுவலரா வேலை பார்த்தேன். அப்போ, நீர் மற்றும் நிலப்புலனாய்வு குறித்து ஆராய்ச்சி செஞ்சப்போ... மண், நீர் ரெண்டுமே வளமில்லாம இருக்குறது தெரிய வந்துச்சு. அதுக்குக் காரணத்தை ஆராயுறப்போ, ரசாயனம் பயன்பாடுகள்தான்கிறதும் தெளிவாச்சு. அதை நிவர்த்தி செய்ற மாதிரி, ஒவ்வொரு பகுதியோட மண் வளத்துக்கு ஏத்த அங்கக உர மேலாண்மை குறித்து ஒரு குறிப்புத் தயாரிச்சேன். பல பரிசோதனைகளுக்குப் பிறகு, அந்தக் குறிப்புகளை விவசாயிகளுக்குப் பரிந்துரை செஞ்சேன். அந்த அனுபவத்தில்தான், கொடுமுடி டாக்டர்.நடராஜன் பயிர்களுக்குத் தகுந்த மாதிரி உருவாக்கிக் கொடுத்த பஞ்சகவ்யாவையும் விவசாயிகள் மத்தியில் கொண்டு சேர்க்கணுங்கிற நோக்கத்தில்... தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைஞ்சு பல களப் பரிசோதனைகளைச் செஞ்சேன். அதுல ரொம்ப முக்கியமானது, புதுக்கோட்டை மாவட்டம் கொழுஞ்சி பண்ணையில் நான் மேற்கொண்ட வயல் பரிசோதனை. எள், பாசிப்பயறு, சூரிய காந்தி, நிலக்கடலைனு பல பயிர்களுக்குப் பஞ்சகவ்யாவை இலைவழி ஊட்டமாகக் கொடுத்து ஆய்வு செஞ்சேன். அதுல, பஞ்சகவ்யா நல்ல பலன் கொடுக்குறது உறுதியாச்சு.

அந்தச் சமயத்துல, புதுச்சேரியில் நடந்த ஒரு கருத்தரங்குல பஞ்சகவ்யாவுக்கு அங்கீகாரம் கொடுக்குறது சம்பந்தமா ஒரு விவாதம் நடந்துச்சு. அதுல நம்மாழ்வார் அய்யாவும் கலந்துகிட்டார். அந்த விவாதத்துல, ‘அறிவியல் பார்வையில் பஞ்சகவ்யா’ங்கிற தலைப்புல பஞ்சகவ்யாவின் வேதியியல் மூலக்கூறுகளைப் புள்ளிவிவரங்களோடு பேசினேன். அதைக் கேட்டு கைதட்டிப் பாராட்டினார், நம்மாழ்வார் அய்யா. ‘பல்கலைக்கழகமே பஞ்சகவ்யாவை ஏத்துக்கிட்டது, மனசுக்கு மகிழ்ச்சிய கொடுக்குது’னு அப்போ அய்யா சொன்னார். அவர் சொன்னது போலவே இன்னிக்கு பல்கலைக்கழகமே பஞ்சகவ்யாவை உற்பத்தி செஞ்சு விற்பனை செய்யுது” என்ற சோமசுந்தரம் தொடர்ந்தார்.

பஞ்சகவ்யா - 14

அதிநவீனக் கருவி மூலம் ஆராய்ச்சி!

“தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், அதிநவீனக் கருவியான ‘ஜி.சி.எம்.எஸ் கருவி’ மூலம், பஞ்சகவ்யாவின் அறிவியல் அடிப்படை கண்டறியப்பட்டிருக்கு. பஞ்சகவ்யாவின் உயிர் வேதியியல் பண்புகளுக்கும், தாவர வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றங்களுக்குமான தொடர்பு இதுமூலமா தெரிய வந்திருக்கு. மக்காச்சோளம், பாசிப்பயறு, சூரியகாந்திப் பயிர்கள்ல பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி ஆய்வு செஞ்சோம். அடியுரமா சாண எரிவாயுக் கழிவுகளைக் கொடுத்தோம். விதைத்த 15, 30, 45 மற்றும் 60-ம் நாட்கள்ல 3 சதவிகித இலைவழி ஊட்டமா பஞ்சகவ்யாவைத் தெளிச்சோம். அதுல, மக்காச்சோளக் கதிரின் நீளம், சுற்றளவு, விதைகளின் எண்ணிக்கை, எடை, உடைபடும் திறன் எல்லாமே அதிகரிச்சதோட, 12 சதவிகிதம் கூடுதல் மகசூலும் கிடைச்சது. தவிர, மாவுச்சத்து அளவு, கொழுப்புச்சத்து அளவு, சுவை, வாசனை எல்லாமே அதிகரிச்சது.

சூரியகாந்தி, பாசிப்பயறு ரெண்டுலயுமே... பஞ்சகவ்யாவ தெளிச்சதுல மகசூல் அதிகரிச்சது. பரிந்துரைக்கப்பட்ட ரசாயனத் தெளிப்புல கிடைக்கிற மகசூலைவிட அதிகமான விளைச்சல் கிடைச்சது. பஞ்சகவ்யா தெளித்த வயல்ல பூச்சிகள் தென்படலை. நோய்த்தாக்குதல் அறிகுறிகளும் இல்லை” என்ற சோமசுந்தரம் நிறைவாக,

“பாரம்பர்யமான பஞ்சகவ்யா இன்னிக்கு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற அங்கக இடுபொருளாக விளங்குது. பல்கலைக்கழகத்தில் இருந்துதான் கண்டுபிடிப்புகள் விவசாயிகளுக்குப் போய்ச் சேரும். ஆனால் பஞ்சகவ்யா விவசாயிகளிடம் இருந்து பல்கலைக்கழகத்துக்கு வந்திருக்கு. அதுல எனக்கும் சிறு பங்கு உண்டுங்கிறதுல நான் ரொம்பப் பெருமைப்படுறேன்” என்று சொல்லி விடைகொடுத்தார், பெருமிதத்துடன்.

- மணம் பரப்பும்

தொடர்புக்கு,
முனைவர்.சோமசுந்தரம்
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வளம்குன்றா அங்கக வேளாண்துறை,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்.
தொலைபேசி: 0422 2455055, 0422 6611206.

பஞ்சகவ்யா விற்பனைக்கு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை, ‘செறிவூட்டம் செய்யப்பட்ட டி.என்.ஏ.யூ. பஞ்சகவ்யா’ எனப் பெயரிட்டு, ஒரு லிட்டர் பஞ்சகவ்யா 100 ரூபாய் என விற்பனை செய்து வருகிறது. தேவைப்படுபவர்கள் அங்கு வாங்கிக்கொள்ளலாம்.

தொடர்புக்கு: சுற்றுச்சூழல் அறிவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

தொலைபேசி: 0422 6611252.

பஞ்சகவ்யாவில் உள்ள நன்மை செய்யும் மூலக்கூறுகள்

ஒரு கிராம் பஞ்சகவ்யாவில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசோஸ்பைரில்லம் 10,000 கோடி உள்ளது

தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசிட்டோஃபேக்டர் ஒரு கிராமுக்கு 9,000 கோடி உள்ளது

மணிச்சத்தைக் கரைத்துக்கொடுக்கும் பாஸ்போ பாக்டீரியா ஒரு கிராமுக்கு 7,000 கோடி

நோய் எதிர்ப்பாற்றலைத் தரும் சூடோமோனஸ் ஒரு கிராமுக்கு 6,000 கோடி என்ற அளவில் உள்ளன.

பஞ்சகவ்யா - 14

பல்கலைக்கழகப் பஞ்சகவ்யா தயாரிப்பு முறை!

தேவையான பொருட்கள்:


பசு மாட்டுச் சாணம் - 5 கிலோ

பசு மாட்டுச் சிறுநீர் - 3 லிட்டர்

பால் - 2 லிட்டர்

தயிர் - 2 லிட்டர்

நெய் - 1 கிலோ

கரும்புச் சாறு - 3 லிட்டர்

இளநீர் - 3 லிட்டர்

கனிந்த வாழைப்பழம் - 1 கிலோ

பஞ்சகவ்யா - 14

செய்முறை;

சாணத்துடன் நெய்யைச் சேர்த்துப் பிசைந்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில் மூன்று நாட்கள் வைக்க வேண்டும். தினம் ஒருமுறை அதைக் கிளறி விட வேண்டும். பிறகு, அதனுடன், மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கரைத்து பாத்திரத்தின் வாய்ப்புறத்தைத் துணியால் கட்டி நிழலில் வைக்க வேண்டும். தொடர்ந்து காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் கலக்கி வர வேண்டும். 15 நாட்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும்.

மாதம் தோறும் பயிற்சி!

பஞ்சகவ்யா - 14

ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதியன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் வளம் குன்றா அங்கக வேளாண்மைத் துறை சார்பில் பஞ்சகவ்யா உள்ளிட்ட இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மற்றும் பயிர் பாதுகாப்பு, இயற்கை வழி பூச்சிநோய் கட்டுப்பாடு, பயிர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்குக் கட்டணம் உண்டு. பயிற்சி முடிவில் இயற்கை இடுபொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

தொடர்புக்கு: தொலைபேசி: 0422 6611206.

இயற்கைக்கு விருது!

இந்தியாவில் சிறந்த அங்கக வேளாண்மை மையத்துக்கான விருது, கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ‘வளம் குன்றா அங்கக வேளாண்மைத் துறை’க்குக் கிடைத்திருக்கிறது. மத்தியப் பிரதேச வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு விழாவில் இந்த விருதைப் பெற்று வந்திருக்கிறார் சோமசுந்தரம். அதுகுறித்துப் பேசியவர்,

“அங்கக வேளாண்மை ஆராய்ச்சிக்காக  ‘முழு இயற்கை இடுபொருள் பயன்பாடு’, ‘முழு ரசாயன இடுபொருள் பயன்பாடு’, ‘இரண்டும் கலந்த இடுபொருள் பயன்பாடு’னு மூணு விதங்களையும் பயன்படுத்திப் பார்த்தேன். அதற்கான சோதனை வயலை பல்கலைக்கழகத்திலேயே அமைச்சோம். அடுத்ததா, ‘மலைவாழ் மக்கள் மேம்பாட்டில் அங்கக இடுபொருட்கள் பயன்பாடு’ங்கிற நோக்கத்தில்... சிறுவாணிக்கு அடுத்து இருக்குற சாடிவயல், சிங்கபதி மலைக்கிராமங்கள்ல இருக்கும் 25 குடும்பங்களுக்கு பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, மண்புழு உரத்தயாரிப்பு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தோம். இது மாதிரியான காரணங்களுக்காகத்தான் இந்த ஆண்டில் இந்திய அளவில் சிறந்த அங்கக வேளாண்மை மையமா எங்க மையத்தைத் தேர்ந்தெடுத்திருக்காங்க” என்றார்.