
நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம்... எனப் பல பணிகளுக்காக மரங்களை வெட்டுவது சாதாரண விஷயமாகிவிட்டது, நம் நாட்டில். முன்னோர்களால் நடப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்த மரங்களைக்கூட நொடிப்பொழுதில் எந்திரங்கள் மூலம் துண்டு துண்டாக்கி விடுகிறார்கள். தற்போது, மின்சாரக் கோபுரம் அமைப்பதற்காக ஒரு ஆலமரத்தை அரசு அதிகாரிகள் வெட்ட முனைய, அதைத் தடுப்பதற்காக ஒரு கிராமமே போராடிக்கொண்டிருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஈரோடு மாவட்டம், பவானி தாலூகா, செரையம்பாளையம் கிராம மக்கள்தான் ஆலமரத்துக்காகப் போராடிவருகிறார்கள். இதுகுறித்துப் பேசிய அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், “எங்களுக்கு மரங்கள்னா உசுருங்க. ஊர்க்காரங்க எல்லாம் சேர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை ஊருக்குள்ள நட்டு வெச்சு வளர்த்துட்டு இருக்கோம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, உயர் மின்னழுத்த கம்பிகளைக் கொண்டு போற மின்பாதையை அமைக்க, எங்க ஊர்ல இடத்தை அளந்து எடுத்தாங்க. அந்தப் பாதையில நூறு வயசான ஒரு ஆலமரம் இருக்குது. அந்த மரத்தையும், நாங்க வளர்த்துட்டு இருக்குறதுல சில மரங்களையும் வெட்டப்போறதா அதிகாரிகள் சொன்னாங்க. எங்க ஊர்ல இறந்தவங்களை அந்த ஆலமரத்துக்குப் பக்கத்துலதான் புதைப்போம். வருஷா வருஷம் ஆடி மாசத்துல ஊரே கூடி அந்த மரத்துக்குப் பக்கத்துலதான்... இறந்தவங்களை நினைச்சு வழிபாடு செய்வோம். அந்த மரத்தையே எங்க மூதாதையரா, குலதெய்வமாத்தான் பார்க்கிறோம்.

அப்படிப்பட்ட மரத்தை வெட்டப் போறதா சொன்னதும் ஊரே கொந்தளிச்சுருச்சு. உடனே, கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். அடுத்ததா, பவானி ஆத்துல இறங்கி போராட்டமும் செஞ்சோம். எங்க உசுரே போனாலும் நாங்க வெச்ச மரக்கன்னுகளையும், எங்க குலதெய்வமான ஆலமரத்தையும் வெட்ட விடமாட்டோம்” என்றார், ஆக்ரோஷமாக.
கிராம மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்துவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், “தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரத்தைக் கொண்டு செல்ல விவசாய நிலங்களையும், மரங்களையும் அழிப்பது தொடர்ந்துகொண்டிருக்கிறது. மர வளர்ப்பில் அரசு செய்யவேண்டிய வேலையை ஒரு கிராமமே முன்னின்று செய்திருக்கிறது. அவர்களுக்கு உதவி செய்யாவிட்டால்கூடப் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரிடம் பேசினோம். “ஆலமரத்தை வெட்ட ஒப்பந்ததாரர்கள், இதுவரை யாரும் அனுமதி கோரவில்லை. ஆனாலும், கிராம மக்களிடமிருந்து கோரிக்கை மனு வந்ததன் அடிப்படையில், அதிகாரிகளுக்குக் கடிதம் கொடுத்திருக்கிறேன். அந்த மரத்தை வெட்ட மாட்டார்கள்” என உறுதியளித்தார்.