Published:Updated:

பருவமழைக்காலம் பூச்சி, நோய்கள்... உஷார்!

பருவமழைக்காலம் பூச்சி, நோய்கள்... உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
பருவமழைக்காலம் பூச்சி, நோய்கள்... உஷார்!

இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

பருவமழைக்காலம் பூச்சி, நோய்கள்... உஷார்!

இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:
பருவமழைக்காலம் பூச்சி, நோய்கள்... உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
பருவமழைக்காலம் பூச்சி, நோய்கள்... உஷார்!
பருவமழைக்காலம் பூச்சி, நோய்கள்... உஷார்!

ழைக்காலம் தொடங்கினாலே பயிர்களில் பூஞ்சணத்தாக்குதல், நோய்கள் ஆகியவை தாக்க ஆரம்பித்துவிடும். பருவமழை சிறப்பிதழுக்காக நோய்களைத் தடுக்கும் முறைகள் குறித்துப் பூச்சியியல் வல்லுநர் நீ. செல்வத்திடம் பேசினோம். அவர் சொன்ன தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

“மழைக்காலங்களில் பயிர்களில் தோன்றும் பிரச்னைகள் பூச்சிகளால் உண்டாகிறதா அல்லது நோயினால் உண்டாகிறதா என்பதைத் தெரிந்து கொள்ளும் முறையை விவசாயிகள் அறிந்து வைத்திருக்க வேண்டும். பூச்சித்தாக்குதலில் முட்டை, புழு, கூட்டுப்புழு, தாய்ப்பூச்சி ஆகிய நான்கு வித உருமாற்றங்களைக் காண முடியும். இலை, பூ, வேரில் உள்ள துளை போன்றவற்றின் மூலம் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளை அறியலாம். ஆனால், நோய் வந்திருப்பதைக் கண்டுஉணர முடியாது. பயிர்களில் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சணம், நூற்புழுக்களால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றைக் கண்ணால் பார்க்க முடியாது. இந்த வைரஸ், பாக்டீரியாக்கள் தாக்குதலால், பயிர் வாடிவிடும். பூச்சித்தாக்குதலுக்கும் நோய்த்தாக்குதலுக்கும் அதிகச் சம்பந்தம் உண்டு. ஆனால், அவற்றை இனங்கண்டு அதற்கான பராமரிப்பு முறையை மேற்கொள்ள வேண்டும்.

பொத்தாம்பொதுவாகக் கடைகளில் விற்கும் இரண்டு மூன்று பூச்சிக்கொல்லிகளை வாங்கி வந்து தெளிப்பதில் ஒரு பயனும் இல்லை. இதனால் தீமைகள்தான் அதிகம்.

பெரும்பாலும் தொடர்ச்சியாக மழை பெய்தால், பூச்சி, நோய்த்தாக்குதல் இருக்காது. விட்டு விட்டுப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பருவமழைக்காலம் பூச்சி, நோய்கள்... உஷார்!

பெய்யும்போதும், வானம் மேகமூட்டத்துடன் தொடர்ந்து காணப்படும்போதும்தான் நோய்க்காரணிகள் அதிகரிக்கும். மழைக்காலத்திலும், பயிரின் ஆரம்பக் கட்டத்திலும் சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, வெள்ளை ஈ, பச்சை தத்துப் பூச்சி ஆகியவை தாக்க வாய்ப்புண்டு. பொதுவாக அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகம் இருக்கும். நெல்லில் இலைச் சுருட்டுப்புழு மற்றும் குறுத்துப்பூச்சி ஆகியவை தாக்குவதும், காய்கறிப் பயிர்களைச் சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, தத்துப்பூச்சி, இலைப்பேன், வெள்ளை ஈ ஆகியவை தாக்குவதும் இம்மாதங்களில்தான். உளுந்து, பாசிப்பயறில் மஞ்சள் தேமல் நோயும் இந்த நேரத்தில்தான் வரும். வெள்ளை ஈத்தாக்குதலால்தான் மஞ்சள்தேமல் நோய் பரவுகிறது. இந்த நோய் பரவக் காரணம் பருவமழையின் ஆரம்பம்தான். அதனால், பருவ மழை துவங்கும் சமயத்தில்... முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கையாக வேப்பங்கொட்டை-பூண்டுக்கரைசலும், ஐந்து வகை இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பூச்சிவிரட்டியையும் தெளித்தால் மேற்சொன்ன அத்தனை பூச்சிகளையும் வராமல் தடுத்துவிடலாம். இந்த இரண்டு கரைசல்களையும் பத்து நாட்கள் இடைவெளியில் சுழற்சி முறையில் மாற்றி மாற்றித் தெளித்து வர வேண்டும்” என்ற செல்வம், நோய்கள் குறித்தும் தடுக்கும் முறைகளையும் சொன்னார்.

பருவமழைக்காலம் பூச்சி, நோய்கள்... உஷார்!

வேர் அழுகல்.. நாற்று அழுகல்…

“மழை நீர் தேங்கி நிற்பதால் பயிர்களில் வேர் அழுகல், நாற்று அழுகல் நோய் மற்றும் வாடல்நோய் ஏற்படும். இதைத் தவிர்க்க நிலத்தில் உள்ள தண்ணீரை முதலில் முழுமையாக வடித்துவிட வேண்டும். பூஞ்சணம் வராமல் தடுக்க அதற்கு எதிர் உயிரி பூஞ்சணத்தைப் பயன்படுத்தலாம். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 1 கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் எனக் கலந்து விதைநேர்த்தி செய்து விதைத்தாலே போதுமானது. வயலில் நீர் தேங்கினால் அதை வடித்துவிட்டு... 20 கிலோ மட்கிய சாணம், 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, 1கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து இரண்டு நாட்கள் வைத்திருந்து வயலில் பரவலாகத் தூவ வேண்டும். இது ஒரு ஏக்கருக்கான அளவு. 10 நாள் இடைவெளியில் இயற்கைப் பூஞ்சணக்கரைசலைத் தெளிக்க வேண்டும். இவற்றைக் கடைப்பிடித்தால்... வாடல்நோய், வேர் அழுகல், நாற்று அழுகல் நோய்களை அனைத்துப் பயிர்களிலும் கட்டுப்படுத்தலாம்” என்றார், செல்வம்.  

வேப்பங்கொட்டை– பூண்டுக்கரைசல்!

5 கிலோ வேப்பங்கொட்டை, அரைக் கிலோ வெள்ளைப்பூண்டு (நாட்டுப் பூண்டு) ஆகிய இரண்டையும் உரலில் இடித்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக மிக்ஸியில் அரைக்கக் கூடாது. இடித்த பிறகு கிடைக்கும் கலவையைப் பழைய துணியில் பொட்டலம் போலக் கட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு 10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரை ஊற்ற வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து இக்கரைசலில் 100 கிராம் காதி சோப் கலந்து... 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் தெளிக்க வேண்டும்.

இயற்கை பூஞ்சணக்கரைசல்!

சோற்றுக்கற்றாழை-3 கிலோ, பப்பாளிப் பூ மற்றும் இலை இரண்டும் சேர்த்து-3 கிலோ, காகிதப்பூ மற்றும் இலை இரண்டும் சேர்த்து - 3 கிலோ ஆகியவற்றை எடுத்துக் கொண்டு உரலில் இடித்து ஒரு பாத்திரத்தில் இட வேண்டும். அதனுடன், மஞ்சள் தூள் - 50 கிராம் சேர்த்து 25 லிட்டர் தண்ணீர் கலந்து அடுப்பிலேற்றி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். பிறகு ஆற வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு அந்தக் கரைசலை மீண்டும் 25 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். இரண்டு கரைசல்களையும் ஒன்றாகக் கலந்து பயன்படுத்தலாம். இக்கரைசலுடன் தண்ணீர் சேர்க்காமல் அப்படியே தெளிக்க வேண்டும்.

ஐந்து இலைக்கரைசல்!

பால் வடியும் இலைகளான பப்பாளி, கள்ளி, அம்மான் பச்சரிசி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் 1 கிலோ; கால்நடைகள் மேயாத இலைகளான ஆடுதொடா, காட்டாமணக்கு, அரிவாள்மணைப்பூண்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் 1 கிலோ; மணமுள்ள இலைகளான துளசி, உன்னிச்செடி, திருநீற்றுப்பச்சிலை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் 1 கிலோ; கசப்பு இலைகளான வேப்பிலை, நொச்சி, புங்கன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் 1 கிலோ; பூச்சிகள் தாக்காத இலைகளான மஞ்சணத்தி, அத்தி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் 1 கிலோ என எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த இலைகளைத் துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு 10 லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் ஆகியவற்றை ஊற்றி கைப்பிடி அளவு பசுஞ்சாணத்தைச் சேர்த்துக் கலக்க வேண்டும். பிறகு பாத்திரத்தின் வாய்ப்பகுதியைத் துணியால் மூடி வைக்க வேண்டும். தினமும் காலை, மாலை குச்சியால் கலக்கி வந்தால் 10 நாட்களில் கரைசல் தயாராகிவிடும். இதை வடிகட்டி... 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து கைத் தெளிப்பனால் தெளிக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism