Published:Updated:

ஏரியில் தண்ணீர்... உயர்ந்தது நிலத்தடி நீர்மட்டம்!

ஏரியில் தண்ணீர்... உயர்ந்தது நிலத்தடி நீர்மட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ஏரியில் தண்ணீர்... உயர்ந்தது நிலத்தடி நீர்மட்டம்!

கடன் வாங்கி ஏரி வெட்டிய விவசாயி! எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: க.தனசேகரன்

ஏரியில் தண்ணீர்... உயர்ந்தது நிலத்தடி நீர்மட்டம்!

கடன் வாங்கி ஏரி வெட்டிய விவசாயி! எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: க.தனசேகரன்

Published:Updated:
ஏரியில் தண்ணீர்... உயர்ந்தது நிலத்தடி நீர்மட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ஏரியில் தண்ணீர்... உயர்ந்தது நிலத்தடி நீர்மட்டம்!
ஏரியில் தண்ணீர்... உயர்ந்தது நிலத்தடி நீர்மட்டம்!

வ்வொரு விஷயத்துக்கும் அரசாங்கத்தை நம்பினால் காலம்தான், விரையமாகும் என்பது கண்கூடான உண்மை. அதனால், அரசிடம் கோரிக்கை வைத்துப் போராடிக்கொண்டிருக்காமல், தாங்களே களமிறங்கி ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்திச் சாதனை செய்திருக்கிறார்கள், தருமபுரி மாவட்ட விவசாயிகள்.

விவசாயிகள் கூட்டாக இணைந்து, ஆற்றின் அருகே உள்ள கிணற்றிலிருந்து ஏரிக்குத் தண்ணீர் கொண்டு வந்து பாசனம் செய்கிறார்கள். அதற்கான பணிகளை முன்னெடுத்தவர், பாப்பிரெட்டிபட்டியை அடுத்த பி.துரிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த தமிழ்வாணன். இவரின் முயற்சியால் பல ஏக்கர் நிலங்கள் தற்போது பயனடைந்துள்ளன.

பருவமழை சிறப்பிதழுக்காகத் தமிழ்வாணனைச் சந்தித்தோம். “என்னோட 25 வருஷ கனவுங்க இது. இன்னும் சொல்லப்போனா 25 வருஷ முயற்சினு கூடச் சொல்லலாம். இந்தப் பகுதில விவசாய நிலமெல்லாம் தண்ணி இல்லாம காஞ்சு கிடந்தது. அதைப் பார்த்து மனசு தாங்கல. அதனால எப்படியாவது எங்க ஊர்ல இருக்குற கிருஷ்ணசெட்டி ஏரிக்குத் தண்ணி கொண்டு வந்தே ஆகணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு நிறைய செலவாகும்னு வீட்டுலயே பயங்கர எதிர்ப்பு. ஆனாலும் என் கொள்கையில இருந்து விலகலை. இப்போ என் சக்திக்கும் மீறி நான் கடன்பட்டிருந்தாலும், ஏரிக்கு தண்ணி கொண்டு வந்தாச்சு. அதனால சுத்துவட்டாரத்துல நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கு” என்று சந்தோஷப்பட்ட தமிழ்வாணன் தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏரியில் தண்ணீர்... உயர்ந்தது நிலத்தடி நீர்மட்டம்!

“நான் இதே ஊர்ல கூட்டுறவு வங்கியில கிளர்க்கா வேலை செய்றேன். என் மனைவியும் அதே வங்கியிலதான் வேலை பாக்குறாங்க. விவசாயமும் உண்டு. இந்தக் கிருஷ்ணசெட்டி ஏரியில எவ்வளவு மழை கிடைச்சாலும் தண்ணி நிக்காது. அதனால, ஏரியைச் சுத்தி கிட்டத்தட்ட 450 ஏக்கர் நிலம் தண்ணி இல்லாம தரிசா கெடந்தது. சேர்வராயன் மலையிலிருந்து ஏரிக்குத் தண்ணீர் வரக்கூடிய பாதைகள் எல்லாமே ஆக்கிரமிப்புல இருக்கு. ஊர்க்காரங்க எல்லாம் சேர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி எவ்வளவோ போராடியும் முடியல. அது ஆகாதுங்கிற சூழ்நிலையிலதான், ஆத்துத் தண்ணியைப் பயன்படுத்தலாம்கிற யோசனைக்கு வந்தேன்.

மழைக் காலங்கள்ல சேர்வராயன் மழையிலிருந்து உருவாகும் தண்ணீர், வேப்பாடி ஆத்துல பெருக்கெடுத்து ஓடும். அந்த ஆத்துக்கும் கிருஷ்ணசெட்டி ஏரிக்கும் 2 கிலோமீட்டர் தொலைவு. வேப்பாடி ஆத்துல இருந்து வாய்க்கால் மூலமா ஏரிக்குத் தண்ணீர் கொண்டுவந்துடலாம்னு ஊர்ல பேசி முடிவு செஞ்சோம். அதுக்காகப் பொதுப்பணித்துறையில அனுமதியும் வாங்கிட்டோம். ஆத்து மட்டத்தைவிட ஏரி 42 அடி உயரத்துல இருந்தது. அதனால வாய்க்கால் வெட்ட முடியலை. ஆத்துக்குப் பக்கத்துல பஞ்சாயத்துக்குச் சொந்தமான ஒரு கிணறு இருக்கு. அதை யாரும் பயன்படுத்த மாட்டாங்க. ஆத்துல தண்ணி ஓடுறப்போ இந்தக் கிணத்துல தண்ணி நிறைஞ்சுடும். அந்தத் தண்ணியைக் குழாய் மூலமா கொண்டு வந்து ஏரியில விடலாம்னு முடிவு செஞ்சோம். அதுக்கு எவ்வளவு செலவாகும்னு பார்க்கிறப்போ ஒரு கோடி ரூபாய் ஆகும்னு சொன்னாங்க. ஆனாலும் மனம் தளரலை.

ஏரியில் தண்ணீர்... உயர்ந்தது நிலத்தடி நீர்மட்டம்!

40 விவசாயிகள் ஒன்று சேர்ந்து ‘விடியல் நீரேற்றுப் பாசனம் மற்றும் நிலத்தடி நீர்வளப் பாதுகாப்புச் சங்கம்’னு ஆரம்பிச்சோம். 40 பேரும் சேர்ந்து, கூட்டுறவு வங்கியில் 40 லட்ச ரூபாய் கடன் வாங்கினோம். எனக்குப் பழக்கமானவர்கள், நண்பர்கள்ட்ட 50 லட்ச ரூபாயை வட்டிக்குக் கடன் வாங்கினேன். அந்தப் பணத்துல சிமென்ட் குழாய்களைப் பதித்து ஏரியுடன் இணைச்சுட்டோம். இப்போ, எங்க பகுதியில நிலத்தடி நீர்மட்டம் அதிகரிச்சுடுச்சு. ஆனா, ஏரியில இருந்து யாருக்கும் நேரடிப் பாசனம் கிடையாது” என்றார்.

தமிழ்வாணனுக்குப் பக்கபலமாக இருக்கும் மணி எனும் விவசாயி, “ஏரியில இருந்து ரொம்பத் தூரத்துல என் நிலம் இருக்கு. இருந்தாலும் நானும் பணம் கொடுத்திருக்கேன். இந்தப் பகுதிக்குத் தண்ணீர் வந்ததால, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கு. கலெக்டர் உட்பட பல அதிகாரிகளும் வந்து பாராட்டிட்டுப் போறாங்க. நிறைய பேர் விவசாயத்தைத் தொடங்கிட்டாங்க” என்றார்.

ஏரியில் தண்ணீர்... உயர்ந்தது நிலத்தடி நீர்மட்டம்!

நிறைவாகப் பேசிய தமிழ்வாணன், “இவ்ளோ கடன் வாங்குறதுக்கு வீட்ல ரொம்பச் சங்கடப்பட்டாங்க. இருந்தாலும், ‘வருங்காலச் சந்ததிகள் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யணுங்கிறதுதான் என்னோட ஆசை’னு உறுதியா சொல்லிட்டேன். பணம் நிறையச் செலவு ஆகும்னு தெரிஞ்சதும், என் கூடவே இருந்த பலர் விலகினாலும், சிலர் மட்டும் எனக்குப் பக்கபலமா நின்னாங்க. அதனாலதான் இதைச் சாதிக்க முடிஞ்சது. இன்னும் சில வருஷங்கள்ல எங்க பகுதியில நிலத்தடி நீர்மட்டம் பெரியளவில் உயர்ந்திடும். அதுக்குப் பிறகு விவசாயத்துக்குத் தண்ணீர்ப் பிரச்னையே இருக்காது” என்று நம்பிக்கை கலந்த குரலில் சொன்னார், தமிழ்வாணன்.

அரசாங்கம் செய்ய வேண்டியதை விவசாயிகள் சாதித்திருக்கிறார்கள். இவர்களின் கடன் சுமையைத் தீர்க்க அரசு உதவி செய்ய வேண்டும் என்பதுதான் இவர்களின் ஆசை. நிறைவேற்றுமா அரசு?

தொடர்புக்கு: தமிழ்வாணன், செல்போன்: 94878-08654

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism