Published:Updated:

வளமான வருமானம் தரும் வெண்டை

வளமான வருமானம் தரும் வெண்டை

75 சென்ட் ... 140 நாட்கள்... 70 ஆயிரம் ரூபாய் லாபம்! இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

வளமான வருமானம் தரும் வெண்டை

75 சென்ட் ... 140 நாட்கள்... 70 ஆயிரம் ரூபாய் லாபம்! இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
வளமான வருமானம் தரும் வெண்டை
வளமான வருமானம்  தரும் வெண்டை

மிளகாய், தக்காளி, கத்திரி... போன்ற அதிகத் தேவையுள்ள காய்கறிகளில் வெண்டைக்காயும் ஒன்று. சாம்பார், பச்சடி, புளிக்கறி, புளிக்குழம்பு, பொரியல், வதக்கல்... எனப் பலவிதப் பண்டங்களை வெண்டைக்காய் கொண்டு சமைக்க முடியும் என்பதோடு, இது சத்து மிகுந்த காய் என்பதால், இதற்குச் சந்தையில் எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கும். இந்தச் சந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பல காய்கறி விவசாயிகள், வெண்டைக்காயைத் தனிப்பயிராகச் சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வீரவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேஷ்.

நெல், மரவள்ளிக் கிழங்கு, வெண்டை ஆகிய பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார், முருகேஷ். தோட்டத்தில் காய் பறிப்புப் பணியில் இருந்த முருகேஷை சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

“நான் இயற்கை விவசாயம் செய்றதுக்கு ‘பசுமை விகடன்’தான் முழுக்காரணம். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடிதான் கேள்விப்பட்டு அதைப் படிக்க ஆரம்பிச்சேன். பரம்பரை விவசாயக்குடும்பமா இருந்தாலும், இயற்கை விவசாயம்னு ஒரு விஷயத்தையே பசுமை விகடன் மூலமாத்தான் தெரிஞ்சுகிட்டேன்” என்று சொன்ன முருகேஷ் தொடர்ந்தார்.

“அப்பா, நெல் விவசாயம்தான் செய்துட்டு இருந்தார். அது முழுக்க ரசாயன விவசாயம்தான். நான், டிப்ளமோ பார்மஸி முடிச்சுட்டு வீரவநல்லூர்ல மெடிக்கல் ஷாப் வெச்சிருக்கேன். சொந்தமா தொழில் இருந்தாலும், எனக்கு விவசாயத்துலதான் விருப்பம். பசுமை விகடன் மூலமா, நம்மாழ்வார் அய்யாவோட வானகம் பண்ணையில் இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துகிட்டேன். அங்கதான், இயற்கை விவசாயத்தால கிடைக்கிற நன்மை, இயற்கை முறை பூச்சி விரட்டி, பயிர் வளர்ச்சி ஊக்கி எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன். உடனே இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சுட்டேன்.

இந்த இடத்துல 6 ஏக்கர் நிலம் இருக்கு. கொஞ்சம் தள்ளி 12 ஏக்கர் நிலம் இருக்கு. 12 ஏக்கர் நிலத்துலதான் நெல் சாகுபடி பண்ணுவோம். அந்த வயலைத்தான் முதல்ல இயற்கைக்கு மாத்தினேன். கருத்தக்கார், மிளகுச்சம்பா, அம்பை 16 என்று மூணு ரகங்களையும் இயற்கை முறையில் சாகுபடி செஞ்சதுல... நல்ல மகசூல் கிடைச்சுது. அதனால தொடர்ந்து இயற்கை முறையிலதான் நெல் சாகுபடி செய்துட்டு இருக்கேன்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, இந்த 6 ஏக்கர் நிலத்துல ஒரு ஏக்கர்ல மட்டும் இயற்கை முறையில மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்தேன். அதுல நல்ல மகசூல் கிடைச்சது. இந்த வருஷம், 75 சென்ட்ல மட்டும் வெண்டை போட்டிருக்கேன். இந்த நிலம் சரள் கலந்த செம்மண். நான் மெடிக்கல் ஷாப்புல இருக்குறதைவிடத் தோட்டத்துல அதிக நேரம் செலவிடுவேன். அந்தளவுக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வம் வந்துடுச்சு. அப்பப்போ, அப்பாவும் தோட்டத்தைக் கவனிச்சுக்குவார். வெண்டை நல்லா விளைஞ்சு வந்துகிட்டிருக்கு. திருநெல்வேலியில் உள்ள இயற்கை அங்காடிகள், நண்பர்களோட வீடுகள்னு வெண்டைக்காய் விற்பனையாயிடுது. இயற்கை முறையில விளைய வெச்ச வெண்டைங்குறதுனால, கூடுதல் விலையெல்லாம் வாங்கறதில்லை. ஆனா, நஞ்சில்லாத காய்கறியை உற்பத்தி செய்து கொடுக்கிறோம்னு சந்தோஷமும் திருப்தியும் இருக்கு” என்ற முருகேஷ் நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வளமான வருமானம்  தரும் வெண்டை

“வைகாசி மாசக் கடைசியில் நடவு செஞ்சேன். 45 நாள் கழிஞ்சு ஆடி மாச முதல் வாரத்துல வெண்டை அறுவடைக்கு வந்துச்சு. ரெண்டு நாளுக்கு ஒருமுறை காய் பறிச்சிட்டு இருக்கேன். ஆரம்பத்துல ஒரு பறிப்புக்கு 50, 60 கிலோதான் கிடைச்சது. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா விளைச்சல் கூடிடுச்சு. இப்போ ஒரு பறிப்புக்கு 80 கிலோவுல இருந்து 100 கிலோ வரை கிடைக்குது. இதுவரை (16.09.16 வரை) மொத்தமா 27 முறை காய் பறிச்சிருக்கேன். அதுல 2 ஆயிரத்து 570 கிலோ வெண்டை மகசூல் ஆகியிருக்கு. ஆடி மாசத்துல சரியா விலை கிடைக்கலை. ஆவணி மாசத்துல நல்ல விலை கிடைச்சது. புரட்டாசி மாசத்துலயும் நல்ல விலை கிடைக்கும். எனக்கு, அதிகப்பட்ச விலையா கிலோவுக்கு 20 ரூபாய் கிடைச்சிருக்கு. அந்த வகையில ஒரு கிலோவுக்கு சராசரியா 15 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், 2 ஆயிரத்து 570 கிலோ காய் விற்பனை செஞ்சதுல, 38 ஆயிரத்து 550 ரூபாய் இதுவரைக்கும் வருமானமா கிடைச்சிருக்கு.

இன்னும் கிட்டத்தட்ட 20 பறிப்புகள் இருக்கும்னு எதிர்பார்க்குறேன். அதுல 2 ஆயிரம் கிலோ காய் கிடைக்கும். போகப் போக வெண்டைக்கு நல்ல விலை கிடைக்கும்கிறதால ஒரு கிலோ வெண்டைக்கு சராசரியா 20 ரூபாய் விலை கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அந்த வகையில இன்னும் 2 ஆயிரம் கிலோ காய்க்கு 40 ஆயிரம் ரூபாய் நிச்சயமா வருமானம் கிடைச்சுடும். ஆக மொத்தம் 75 சென்ட் நிலத்துல இருந்து வெண்டை மூலமா 78 ஆயிரத்து 550 ரூபாய் வருமானம் எடுத்துட முடியும். இதுல மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் செலவு ஆனாலும் 68 ஆயிரத்து 550 ரூபாய் லாபமா நிக்கும்.

சொட்டுநீர்ப் பாசனம், மல்ச்சிங் ஷீட் (மூடாக்கு போட பயன்படும் பாலிதீன் காகிதம்), பாத்தி, உழவுனு மொத்தம் 68 ஆயிரம் ரூபாய் செலவாச்சு. ஆனா, இதுலேயே திரும்பவும் வெண்டை நட்டு ரெண்டு, மூணு வருஷத்துக்கு மகசூல் எடுப்பேன். அது நிரந்தரச் செலவுங்கிறதால கணக்குல சேர்க்கல” என்று சொல்லிவிட்டு, காய் பறிப்பில் மும்முரமானார்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்...

75 சென்ட் நிலத்தில் வெண்டை சாகுபடி செய்வது குறித்து

முருகேஷ் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...


களைகளைக் கட்டுப்படுத்தும் ‘மல்ச்சிங் ஷீட்’!


வெண்டைக்கு வைகாசி, ஆனி, ஆடி ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த 75 சென்ட் நிலத்தைச் சட்டிக்கலப்பையால் உழுது, இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் ஓர் உழவு செய்து 150 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரம் என்ற அளவில் பாத்தி எடுக்க வேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்து நீளத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

15 டன் தொழுவுரம், 400 கிலோ மண்புழு உரம், 400 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, தலா 1 கிலோ பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பைரில்லம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பாத்திகளின் மீது பரப்ப வேண்டும். பாத்திகளில் சொட்டுநீர்க் குழாய்களைப் பொருத்தி, பாத்திகளின் மீது ‘பாலிதீன் மல்ச்சிங் ஷீட்’டை விரிக்க வேண்டும். மல்ச்சிங் ஷீட் விரிப்பதால் நிலத்தில் களைகள் வராது. நீர் ஆவியாவது தடுக்கப்படும். இவற்றை இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் சாகுபடி முடிந்தவுடன் சுருட்டி எடுத்து வைத்துவிடலாம்.

மல்ச்சிங் ஷீட்டின் இரு ஓரங்களிலும் ஓர் அடி இடைவெளியில் துளை ஏற்படுத்தி 4 அங்குல ஆழத்துக்குக் குழி எடுக்க வேண்டும். துளைகள் ‘ஜிக்ஜாக்’காக முக்கோண நடவு முறையில் இருக்க வேண்டும். இரண்டு நாட்கள் தொடர்ந்து பாசனம் செய்து பாத்திகள் நன்கு ஈரமானவுடன், குழிக்கு ஒரு விதை வீதம் ஊன்றித் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சினால் போதும்.

விதைத்த 5-ம் நாளில் முளைப்பு எடுக்கும். 15-ம் நாளில் அரை அடி உயரம் வளர்ந்துவிடும். அந்த நேரத்தில் செடிகளைச் சுற்றி எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். இவை, இலைகள், தண்டுகளில் துளைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. எறும்புகள் வந்தால், 150 கிலோ வேப்பம் பிண்ணாக்கில் 6 லிட்டர் வேப்பெண்ணெய் கலந்து பிசைந்து, ஒவ்வொரு செடிக்கருகிலும் கைப்பிடி அளவு தூவினால் எறும்புகள் ஓடிவிடும். செடிகள் 35-ம் நாளில் பூத்து 40-ம் நாளுக்கு மேல் காய்க்கத் தொடங்கும்.
45-ம் நாளில் இருந்து 140-ம் நாள் வரை காய்களைப் பறிக்கலாம்.

இயற்கை வழி மூடாக்கு!

வளமான வருமானம்  தரும் வெண்டைகளைகளைக் கட்டுப்படுத்த ‘மல்ச்சிங் ஷீட்’ கொண்டு மூடாக்கு அமைப்பதற்கு மாற்று வழியான ‘பசுந்தாள் மூடாக்கு’க் குறித்துச் சொல்கிறார், திருநெல்வேலி மாவட்டம், தென்கலம் கிராமத்தில் இயற்கை முறையில் நெல், காய்கறி சாகுபடி செய்து வரும் அப்துல் ஷேக் முகமது.

“ரெண்டரை ஏக்கர் நிலத்தில் கத்திரி, தக்காளி, வெண்டை சாகுபடி செய்துட்டுருக்கேன். தனியா ஒரு ஏக்கர் நிலத்துல தக்கைப்பூண்டு விதைச்சிருக்கேன். காய்கறி சாகுபடி நிலத்துல முதல்முறை களை எடுத்ததும்... தக்கைப்பூண்டுச் செடியை அறுத்து மூடாக்காகப் பரப்பிடுவேன்.

தகைப்பூண்டுதான்னு இல்லாம இலைதழைகள் எல்லாத்தையும் இப்படி மூடாக்காகப் போடலாம். இப்படிச் செய்றதால, சூரிய ஒளி மண்ணுல படுறது குறையும். அதனால செடியைச் சுத்தி எப்பவும் ஈரப்பதம் இருந்துட்டே இருக்கும். களைகளும் கட்டுப்படும். பசுந்தாள் மூடாக்கு போடுறதால மண்புழுக்கள் நிறைய பெருகுது. இந்த மூடாக்கும் மட்கி நுண்ணுயிரிகளும் நிறைய பெருகுது. மூடாக்கு மட்கி மண்ணுல கலக்குறதால மண் பொலபொலப்பா இருக்கும். நீர் மேலாண்மைக்கும், களை கட்டுப்பாட்டுக்கும் பசுந்தாள் மூடாக்கு சிறந்த வழி’’ என்றார்.

தொடர்புக்கு: அப்துல் ஷேக் முகமது, செல்போன்: 94421 17376

10 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா!

விதை நடவு செய்த 15-ம் நாளில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். 20-ம் நாளிலிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் தண்ணீருக்கு 6 லிட்டர் பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். பஞ்சகவ்யா, செடி வளர சிறந்த பயிர் ஊக்கியாகச் செயல்படும். வேறு எந்த இடுபொருளும் தேவையில்லை.

மாவுப்பூச்சிக்கு இஞ்சி-பூண்டு கரைசல்!

வளமான வருமானம்  தரும் வெண்டை

வெண்டையில் மாவுப்பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க வருமுன் காப்போம் முறையில் நடவு செய்த 25-ம் நாளில் இருந்தே, வாரம் ஒரு முறை பூச்சி விரட்டியைத் தெளித்து வர வேண்டும்.

இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றில் தலா அரைக் கிலோ எடுத்து அவற்றை உரலில் இடித்து வெள்ளைத் துணியில் கட்டி, 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் ஊற வைக்க வேண்டும். 5 நாட்கள் ஊறிய பிறகு கரைசலை எடுத்து வடிகட்டினால் இஞ்சி-பூண்டு கரைசல் தயார். இதை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற அளவில் கலந்து பயன்படுத்த வேண்டும்.

2 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் காதி சோப்பைத் தூளாக்கிப் போட்டுக் கலக்க வேண்டும். அதனுடன், 200 கிராம் கல் உப்பைச் சேர்த்துக் கலக்கி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இக்கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற கணக்கில் கலந்து பயன்படுத்த வேண்டும்.

இந்த இரண்டு கரைசல்களையும் சுழற்சி முறையில் வாரம் ஒருமுறை கைத்தெளிப்பானால் தெளித்து வந்தால் பூச்சித்தாக்குதல் இருக்காது. அதோடு சோலார் விளக்குப் பொறிகளையும் அமைத்துவிட்டால் அனைத்து வகையான தீமை செய்யும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தி விட முடியும்.

தவிர, வரப்பில் தட்டைப்பயறு, செண்டுமல்லி, காராமணி ஆகிய செடிகளை நடவு செய்துவிட்டால்... பயிரைத் தாக்க வரும் மாவுப்பூச்சி, அசுவினி, வெள்ளை ஈ, இலைத் துளைப்பான் ஆகியவை வரப்போரப் பயிரில் அமர்ந்துவிடும். இதனால் முதன்மைப் பயிரான வெண்டையை பூச்சிகளில் இருந்து காப்பாற்றி விடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism