Published:Updated:

புத்துயிர் பெற்றுள்ள கல்செக்கு... பாரம்பர்யம் மாறாமல் எண்ணெய் உற்பத்தி!

புத்துயிர் பெற்றுள்ள கல்செக்கு...  பாரம்பர்யம் மாறாமல் எண்ணெய் உற்பத்தி!
பிரீமியம் ஸ்டோரி
புத்துயிர் பெற்றுள்ள கல்செக்கு... பாரம்பர்யம் மாறாமல் எண்ணெய் உற்பத்தி!

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

புத்துயிர் பெற்றுள்ள கல்செக்கு... பாரம்பர்யம் மாறாமல் எண்ணெய் உற்பத்தி!

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
புத்துயிர் பெற்றுள்ள கல்செக்கு...  பாரம்பர்யம் மாறாமல் எண்ணெய் உற்பத்தி!
பிரீமியம் ஸ்டோரி
புத்துயிர் பெற்றுள்ள கல்செக்கு... பாரம்பர்யம் மாறாமல் எண்ணெய் உற்பத்தி!
புத்துயிர் பெற்றுள்ள கல்செக்கு...  பாரம்பர்யம் மாறாமல் எண்ணெய் உற்பத்தி!

யற்கை வாழ்வியல், இயற்கை உணவுகள் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், பாரம்பர்ய இயற்கைப் பொருட்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. அவற்றில் முக்கியமானவை, அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள். மரச்செக்கு, கல்செக்கு போன்றவற்றில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகளுக்கு கிராக்கி அதிகரித்து வருவதன் காரணமாக, வழக்கொழிந்து போன மரச்செக்குகளும், கல்செக்குகளும் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன. அந்த வகையில், கல்செக்கு மூலம் எண்ணெய் ஆட்டி வருகிறார், திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்.

ஒரு காலை வேளையில், எண்ணெய் ஆட்டும் பணியில் பரபரப்பாக இருந்த சீனிவாசனைச் சந்தித்தோம்.

“எனக்குப் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்துல உள்ள பேட்டைங்கிற ஊர். எங்க ஊர்ல 40 வருஷத்துக்கு முன்னாடி மாடு பூட்டி ஓட்டுற 60 கல் செக்குகள் இருந்துச்சு. ஊருக்குள்ள காலையிலேயும் சாயங்காலமும் செக்கு ஓடுற சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். அந்தத் தெருவுக்குப் பெயரே ‘செக்கடித் தெரு’தான். எங்க குடும்பத்துல எல்லாருமே செக்குல எண்ணெய் ஆட்டுற தொழிலைத்தான் செஞ்சுட்டிருந்தாங்க. சின்ன வயசுல நானும் அந்த வேலைகளைச் செஞ்சுருக்கேன்.

1980-ம் வருஷத்துக்குப் பிறகுதான் கரண்ட்ல ஓடுற இயந்திர செக்குகள் வர ஆரம்பிச்சது. அதுல வேலை சுளுவானதால கல்செக்குத் தொழில் நலிவடைஞ்சிருச்சு. எங்க ஊர்லயே நிறைய பேர் செக்கை ஓரங்கட்டிட்டு கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க. செக்கு இருந்த இடமெல்லாம் இப்போ வீடுகளாயிடுச்சு. நான் பனிரெண்டாவது முடிச்சதுமே குலத்தொழிலான எண்ணெய் வியாபாரத்தை ஆரம்பிச்சுட்டேன். எள், கொப்பரை தேங்காய், நிலக்கடலை எல்லாத்தையும் விலைக்கு வாங்கி, அரவை மில்கள்ல கொடுத்து ஆட்டி எண்ணெயாக்கி விற்பனை செய்திட்டிருந்தேன்.

இப்போ மக்கள், கொஞ்சம் கொஞ்சமா இயந்திரத்துல ஆட்டுன எண்ணெயை ஓரங்கட்ட ஆரம்பிச்சிட்டாங்க. என்னோட வாடிக்கையாளர்கள் நிறைய பேர் ‘மரச்செக்கு எண்ணெய் அல்லது கல் செக்கு எண்ணெய் கொடுங்க’னு கேக்க ஆரம்பிச்சதால திரும்பவும் நான், கல்செக்கு போட்டு மாடுகள் மூலம் எண்ணெய் ஆட்ட ஆரம்பிச்சிட்டேன்” என்று முன்னுரை கொடுத்த சீனிவாசன் செக்கின் அருகே அழைத்துச் சென்று அது இயங்கும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புத்துயிர் பெற்றுள்ள கல்செக்கு...  பாரம்பர்யம் மாறாமல் எண்ணெய் உற்பத்தி!

உயிர்ச் சத்துக்கள் குறையாது!

“ஆட்டுரல் மாதிரி ஒரே கல்லுல செக்கு செஞ்சிருப்போம். அதுல வாகை மரத்துல செஞ்ச உலக்கையைப் பொருத்தியிருப்போம். ரெண்டு காளை மாடுகள் மூலமாத்தான் செக்கை சுத்த வைக்கிறோம். தினமும் காலையில 6 மணிக்கு ஒரு முறையும், சாயங்காலம் 3 மணிக்கு ஒருமுறையும் ஆட்டுவோம். ஒவ்வொரு முறையும் 4 மணி நேர வேலை இருக்கும். அதுக்கப்புறம் மாடுகளுக்கு ஓய்வு கொடுத்திடுவோம். இறவையில பாசனம் செஞ்சு எள், கடலை பயிர் செய்ற பெரும்பாலான விவசாயிகள் ரசாயனத்தைத்தான் பயன்படுத்துறாங்க. மானாவாரி விவசாயிகள் பெரும்பாலும் ரசாயனம் பயன்படுத்த மாட்டாங்க. அதனால மானாவாரி விவசாயிகள் கிட்டதான் எள், கடலையெல்லாம் வாங்குவோம்.

ஒரு முறைக்கு 30 கிலோ எள்!

ஒரு செக்கு 30 கிலோ எள் பிடிக்கும். செக்கில் மர உலக்கையை மாட்டி, கால் கிலோ உடைத்த பனங்கருப்பட்டி, 300 மில்லி தண்ணீர் விட்டு ரெண்டு, மூணு தடவை சுத்த விடுவோம். அப்போதான் உலக்கைக்கும், கல்லுக்கும் பிடிப்பு ஏற்படும். பிறகு, 30 கிலோ எள்ளைப் போட்டு சுத்த விடுவோம். 15 கிலோ கறுப்பு எள், 5 கிலோ வெள்ளை எள், 5 கிலோ பழுப்பு எள்னு மூன்று வகை எள்ளையும் கலந்து போட்டு ஆட்டுறதால நல்லெண்ணெய் அடர்த்தியாவும், அதிக உயிர்ச் சத்துக்களோடவும் கிடைக்கும். எள் நசுங்க ஆரம்பிக்கிற சமயத்துல ஒண்ணே கால் கிலோ பனங்கருப்பட்டியும் 700 மில்லி தண்ணீரையும் போட்டு ஆட்ட விடுவோம். ஒன்றரை மணி நேரத்தில் முதல் எண்ணெய் கிடைக்கும். அடுத்த ரெண்டு மணி நேரத்தில் ரெண்டாவது எண்ணெய் கிடைக்கும். இதே மாதிரிதான் நிலக்கடலையையும் ஆட்டி கடலெண்ணெய் எடுப்போம்.

எண்ணெய் சூடாகாது!

தேங்காய் எண்ணெய் ஆட்டுறது கொஞ்சம் மாறுபடும். உடைத்த தேங்காயை சின்னச் சின்னச் சில்லுகளாகக் கீறி களத்தில் 15 நாட்கள் காய வெச்சுதான் ஆட்டணும். செக்கில் கால் கிலோ கருப்பட்டித் தூளைப் போட்டு, 2 முழு எலுமிச்சைப் பழங்களைப் போட்டு இரண்டு, மூன்று முறை சுத்திட்டு 30 கிலோ தேங்காய்ச் சில்லுகளையும் 4 முழு எலுமிச்சைப் பழங்களையும் போட்டு ஆட்டணும். இயந்திரங்கள்ல ஆட்டுற எண்ணெய் சூடாகி, அதுல இருக்குற உயிர்ச்சத்துக்கள் போயிடும். நிறமும் மாறிடும். அதைச் சில ரசாயனங்கள் சேர்த்து நிறம் கொடுப்பாங்க. ஆனா, கல் செக்குல ஆட்டுற எண்ணெய் குளிர்ச்சியா இருக்குறதால உயிர்ச்சத்துக்கள் அப்படியே இருக்குறதோட நிறம் மாறாது. வாசனையாவும் இருக்கும்.

நீண்ட நாள் தாங்கும்!

புத்துயிர் பெற்றுள்ள கல்செக்கு...  பாரம்பர்யம் மாறாமல் எண்ணெய் உற்பத்தி!



எண்ணெய் எடுத்ததும் அதை வடிகட்ட மாட்டோம். சில்வர் அல்லது பித்தளைப்பாத்திரத்தில் இரண்டு நாள் அப்படியே வெச்சிருந்தா, பிண்ணாக்குத் துகள்கள் அப்படியே பாத்திரத்தின் அடியில் தங்கிடும். மேல இருக்குற தெளிஞ்ச எண்ணெயை மட்டும் எடுத்து டின்கள்ல அடைப்போம். இப்படி இயற்கை முறையில் பாரம்பர்யமாக கல் செக்குல ஆட்டி எடுக்கப்படுற எண்ணெயை ரொம்ப நாள் வெச்சிருந்து பயன்படுத்த முடியும்” என்ற சீனிவாசன் வருமானம் குறித்துச் சொன்னார்.

மாதம் 800 லிட்டர் எண்ணெய்!

“30 கிலோ எள் மூலம் சராசரியா 14 லிட்டர் நல்லெண்ணெயும், 14 கிலோ பிண்ணாக்கும் கிடைக்கும். 30 கிலோ தேங்காய் மூலம் சராசரியா 18 லிட்டர் தேங்காய் எண்ணெயும், 10 கிலோ பிண்ணாக்கும் கிடைக்கும். 30 கிலோ நிலக்கடலை மூலம் சராசரியா 14 லிட்டர் கடலை எண்ணெயும், 14 கிலோ பிண்ணாக்கும் கிடைக்கும். ஒரு மாசத்துல 500 லிட்டர் நல்லெண்ணெய், 200 லிட்டர் தேங்காய் எண்ணெய், 100 லிட்டர் கடலை எண்ணெய் ஆட்டுறோம். நல்லெண்ணெய்க்குத்தான் அதிக அளவுல தேவை இருக்கு. மூன்று எண்ணெயுமே 1 லிட்டர் 300 ரூபாய்னு விற்பனை செய்றோம். அந்த வகையில எண்ணெய் விற்பனை மூலமா 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

மாடுகளுக்குத் தீவனத்துக்காக எடுத்து வெச்சது போக மீதியிருக்குற பிண்ணாக்கை விற்பனை செஞ்சுடுவோம். அந்த வகையில கிலோ 32 ரூபாய்னு ஒரு மாசத்துக்கு 350 கிலோ எள்ளுப்பிண்ணாக்கை விற்பனை செய்றோம். இதுமூலமா 11 ஆயிரத்து 200 ரூபாய் கிடைக்கும். கிலோ 32 ரூபாய்னு 100 கிலோ தேங்காய்ப்பிண்ணாக்கை விற்பனை செய்றது மூலமா 3 ஆயிரத்து 200 ரூபாய் கிடைக்கும். கிலோ 45 ரூபாய்னு 65 கிலோ கடலைப்பிண்ணாக்கை விற்பனை செய்றது மூலமா 2,925 ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம் பிண்ணாக்கு விற்பனை மூலமா 17 ஆயிரத்து 325 ரூபாய் கிடைக்கும். இதோட எண்ணெய் மூலமா கிடைக்கிற வருமானத்தையும் சேர்த்தா 2 லட்சத்து 57 ஆயிரத்து 325 ரூபாய் வருமானம். எப்படிப் பார்த்தாலும் மாசத்துக்கு ரெண்டரை லட்ச ரூபாய்க்குக் குறையாம வருமானம் வந்துடும். அதுல, மூலப்பொருள், வேலையாள் கூலி, மாடுகளுக்குத் தீவனம், பராமரிப்புச் செலவு எல்லாம் சேர்த்து 2 லட்ச ரூபாய் செலவாகிடும். அதைக் கழிச்சா மாசம் 50 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்” என்று சொல்லி, புன்னகையுடன் விடைகொடுத்தார் சீனிவாசன்.

தொடர்புக்கு,
சீனிவாசன்,
செல்போன்: 94432 84469.

அடர்த்தி, நிறம், இயற்கையான மணம்...

கல்செக்கு எண்ணெயின் பயன்கள் குறித்து, திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுவிடம் பேசினோம்.

“முன்னாடி கல்செக்குல எண்ணெய் ஆட்டி எடுத்துட்டு வந்து ஊர் ஊராக வந்து விற்பனை செய்வார்கள். இப்போது கல் செக்குகள் வழக்கொழிந்து விட்டன. ஆனாலும், சமீப காலமாக ஆங்காங்கு மரச்செக்கு மூலம் எண்ணெய் ஆட்டுவது ஆறுதலாக உள்ளது. மரச்செக்கு எண்ணையை விடக் கல்செக்கு எண்ணெய் சிறந்தது.

நம் முன்னோர், கல்செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்ப் போன்றவற்றைத்தான் பயன்படுத்தினர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறம் மாறாமலும், இயற்கையான மணமுடையதாகவும் இருக்கும். கல்செக்கு எண்ணெயில் வைட்டமின்கள், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், தாது உப்புக்கள், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அப்படியே கிடைக்கும். இத்தாதுப் பொருட்கள் மூலம் உருவாகும் மெழுகு போன்ற பொருள், மூட்டுகளுக்கு வலுச் சேர்க்கும்.

இயந்திரம் மூலம் ஆட்டும்போது நிறத்துக்காகவும், மணத்துக்காகவும் சில வகை ரசாயனங்களைக் கலக்கிறார்கள். இப்படிப்பட்ட எண்ணெயைச் சூடுபடுத்தும்போது, எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால்தான் கொழுப்புச்சத்து, உடல் பருமன், இன்சுலின் சுரப்பு குறைபாடு, முடி உதிர்தல் போன்றவை ஏற்படுகின்றன. ஆனால், இயற்கை முறையில் செக்குகள் மூலம் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெயைச் சூடுபடுத்தினாலும் தாதுப்பொடுட்கள் உருக்குலைவதில்லை. செக்கு எண்ணெய்தான் குளியலுக்கும் உகந்தது. அதனால் உடல் உஷ்ணம் குறைவதுடன், சரும நோய்களும் வராது” என்றார்.

தொடர்புக்கு : சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு, செல்போன்: 98421 66097

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism