Published:Updated:

பஞ்சகவ்யா - 15

வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்ஜி.பழனிச்சாமி, படங்கள்: த.ஸ்ரீநிவாசன்அஞ்சு விரல் மந்திரம்... அது பஞ்சகவ்யா தந்திரம்!

பிரீமியம் ஸ்டோரி
பஞ்சகவ்யா - 15

ரம்பகாலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. அந்த வரிசையில், இந்த இதழில் இடம் பெறுகிறார், ‘முன்னோடி இயற்கை விவசாயி’ மது.ராமகிருஷ்ணன்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், மலையாண்டிபட்டணம் அருகில் உள்ள நரிக்கல்பதி என்கிற இடத்தில் உள்ளது, மது.ராமகிருஷ்ணனின் இயற்கை எழில் கொஞ்சும் ‘சந்தோஷ் பண்ணை’. ஓங்கி உயர்ந்து நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலை ஒட்டி 40 ஏக்கர் பரப்பில் விரிந்துகிடக்கும் இப்பண்ணையில் தென்னை, பாக்கு, தேக்கு, பலா உள்ளிட்ட பலவகை மரங்கள் நிறைந்துள்ளன.

பண்ணையின் முகப்பில் வைத்திருந்த வருகைப்பதிவேட்டில், நம் முகவரியைப் பதிவு செய்துவிட்டு உள்ளே நுழைந்தோம். ஓரிடத்தில் பீப்பாயில் இருந்த பஞ்சகவ்யா கரைசலை மும்முரமாகக் கலக்கிக்கொண்டிருந்தார், ராமகிருஷ்ணன். நம்மை வரவேற்றவர், மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார்.

“மலையாண்டிபட்டணம்தான் எனக்குச் சொந்த ஊரு. எம்.இ. படிச்சுட்டு கொஞ்சநாள் அரசாங்க வேலை பார்த்தேன். அப்புறமா குடும்பச் சூழ்நிலை காரணமா விவசாயம் பார்க்க வந்திட்டேன். அப்போ, தென்மேற்குப் பருவமழைக்குப் பஞ்சம் இல்லாத பகுதி இது. போட்டது வெளையக்கூடிய வளமான மண்ணு. நிலக்கடலையும், கேழ்வரகும் மானாவாரியா வௌஞ்சு தள்ளும். ரசாயன உரம்னா என்னான்னு தெரியாத வெள்ளந்தி விவசாயிங்க இருந்த காலம். நிலக்கடலை அறுவடை முடிஞ்சதும் அதுல கிடைக்கிற கொடிகளை எடுத்து அடுக்கி வெச்சு மாடுகளுக்குத் தீவனமா கொடுப்போம். தொடர்ந்து தொழுவுரம், ஆட்டு எருனு வண்டி வண்டியா கொட்டி இறைச்சு ஏர் உழவு செஞ்சு... கேழ்வரகு நடுவோம். கிடைக்கிற மழையில ஜம்முனு பயிர் வளர்ந்து நிற்கும்.

இப்படிக் கைப்பிடி உரம்கூட மண்ணுல கொட்டாம இருந்த எங்க 40 ஏக்கர் நெலத்துல 1967-ம் வருஷத்துக்குப் பிறகு ரசாயன உரத்த கொட்டத்தொடங்கினோம். பருத்தி, கரும்புனு பணப்பயிர் வெள்ளாமை வந்துச்சு. அதோட ரசாயனமும் உள்ளே நுழைஞ்சிடுச்சு. என்னோட தகப்பனார் வரவு செலவு கணக்கு எழுதும் வழக்கம் உள்ளவர். அடியுரம் முதல் அறுவடை வரை உள்ள கணக்குகளைத் துல்லியமா எழுதி வெச்சிருந்தார். அந்தக் கணக்கு நோட்டை எதேச்சையா ஒருநாள் எடுத்துப் பார்த்தேன். அதுல நஷ்டக் கணக்குத்தான் இருந்துச்சு. ரசாயன உரச்செலவு அதிகமாகவும், விளைச்சல் வருமானம் குறைச்சலாகவும் எழுதி வெச்சிருந்தார் அப்பா.

பஞ்சகவ்யா - 15

ஆனா, மானாவாரியா விவசாயம் செஞ்சபோது அவர் எழுதி வெச்சிருந்த பழைய கணக்கு நோட்டையும் எடுத்துப்பார்த்தேன். அதுல உற்பத்திச் செலவு குறைஞ்சும் லாபம் அதிகமாகவும் இருந்துச்சு. அந்த ரெண்டு கணக்கு நோட்டுகளும்தான் என்னை ரொம்பவே யோசிக்க வெச்சுது. ரசாயன விவசாயம்தான் விவசாயிகளைக் கடனாளியாக்குதுனு தெரிஞ்சிட்டேன். அதுக்கான மாற்று, நம்ம பாட்டன் பூட்டன் செஞ்ச பாரம்பர்ய விவசாயம் மட்டும்தான்னு புரிஞ்சுகிட்டேன். அதை நோக்கிய தேடலில் இறங்கினேன். அப்போதுதான், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யாவை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. அவரது பேச்சு என்னைக் கவர்ந்துச்சு.

என்னோட பண்ணைக்கு அவரை அழைச்சுட்டு வந்து சுத்திக்காட்டினேன். ஒரு இடம் பாக்கி இல்லாமல் சுத்தி வந்தவர், ‘இது பல்லுயிர் பெருக்கத்துக்கு ஏத்த பண்ணை. அதைச் செயல்படுத்துங்க’னு ஊக்கம் கொடுத்தார். அதுக்குப் பிறகு பல்வேறு சந்தர்ப்பங்கள்ல, ஒன்பது தடவை என்னோட பண்ணைக்கு வந்து ஆலோசனை சொல்லியிருக்கார்.

2002-ம் வருஷம், டேராடூன்ல நடந்த ‘இயற்கை எனும் ஆசான்’கிற 15 நாள் பயிற்சிப்பட்டறையில் கலந்துகிட்டேன். பயிற்சிக்கு ஏற்பாடு செய்தவங்க, சமூக சேவகி வந்தனா சிவா. அவங்களோட ‘நவதான்யா பண்ணை’யில் நடந்த அந்தப் பயிற்சியை நடத்தினவர், ஜப்பான் நாட்டு இயற்கை விஞ்ஞானி, மசானபு ஃபுகோகா. 75 நாடுகள்ல இருந்து 150 பேர் அந்தப் பயிற்சியில் கலந்துகிட்டாங்க. அந்தச் சமயத்துல ஃபுகோகாவுடன் நெருங்கிப் பழகுறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. ‘இயற்கைக்குத் திரும்புங்கள், இல்லையேல் திருப்பப்படுவீர்கள்’ என்கிற அவரது கோட்பாடு என்னை ஈர்த்துச்சு. ஊர் திரும்பியதும் தீவிரமாக இயற்கை விவசாயத்தில் இறங்கிட்டேன். அப்போ, மண்புழு உரம்தான் இயற்கை விவசாயத்தின் முக்கிய இடுபொருளா இருந்துச்சு” என்ற ராமகிருஷ்ணன், தனக்குப் பஞ்சகவ்யா அறிமுகமான விஷயம் குறித்துச் சொல்லத் தொடங்கினார்.

“தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர், டாக்டர் வடிவேல். அவரோட பண்ணை, கொடுமுடி பக்கத்துல இருக்கு. விவசாயம் சம்பந்தமான ஒரு ஆலோசனை கேட்க அங்கு போனேன். அவரோடு பேசும்போது இயற்கை இடுபொருட்களைப் பத்தின பேச்சு வந்துச்சு. அப்போதான், ‘கொடுமுடி டாக்டர்’ நடராஜன் குறித்தும், பஞ்சகவ்யா குறித்தும் விரிவாகச் சொன்னார். அது என்னோட இயற்கை விவசாயத் தேடலுக்கு உந்து சக்தியா இருந்துச்சு. உடனே, டாக்டர் நடராஜனைச் சந்திச்சேன். என்னோட ஆர்வத்தைப் பார்த்தவர், பஞ்சகவ்யா தயாரிப்பை விவரமாகச் சொல்லிக் கொடுத்தார். பஞ்சகவ்யா தயாரிப்பு முறையை மறக்காம இருக்கறதுக்காக ஒரு மந்திரத்தையும் கத்துக்கொடுத்தார். அதுதான் ‘அஞ்சு விரல் மந்திரம்” என்றவர் தன்னுடைய தோட்டத்தில் இருக்கும் பயிர்களைப் பற்றியும் சொன்னார். 

பஞ்சகவ்யா - 15

“எங்க தொழுவத்தில் இருந்த 23 நாட்டு மாடுகள் மூலமா பஞ்சகவ்யா தயாரிக்க ஆரம்பிச்சேன். அதை 28 ஏக்கர் தென்னை, 6 ஏக்கர் மா, ஊடுபயிரான கொக்கோ பயிர்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன். பஞ்சகவ்யா கொடுக்க ஆரம்பிச்ச சில மாசங்கள்லயே மரங்கள்ல மாற்றம் தெரிய ஆரம்பிச்சுச்சு. அதனால தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு தடவை பஞ்சகவ்யா கொடுக்க ஆரம்பிச்சுட்டேன்.

‘பசுமை விகடன்’ சார்பா, நம்மாழ்வார் அய்யா தலைமையில் என்னோட பண்ணையில் ‘இனியெல்லாம் இயற்கையே’ களப்பயிற்சி நடந்துச்சு. அப்போ, அஞ்சு பொருட்கள் மட்டுமே மூலப்பொருளா இருந்த பஞ்சகவ்யாவில் கரும்பு, இளநீர், கள்ளு ஆகிய மூணு பொருட்களையும் சேர்த்துப் பஞ்சகவ்யா தயாரிக்கிறது குறித்து நம்மாழ்வார் அய்யா கத்துக்கொடுத்தார். அப்புறம் அந்த மாதிரி தயாரிக்க ஆரம்பிச்சுட்டேன்” என்ற ராமகிருஷ்ணன், நிறைவாக,

“இங்க மொத்தம் 1,650 தென்னை மரங்கள் காய்ப்புல இருக்கு. பஞ்சகவ்யா கொடுக்குறதுக்கு முன்னாடி தேங்காயோட சராசரி எடை 500 கிராம்தான் இருக்கும். அதுக்குப்பிறகு, சராசரி எடை 560 கிராமா அதிகரிச்சிருக்கு. அதாவது ஒரு மரத்துல 7 கிலோ அளவு அதிகமா காய் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. இது பஞ்சகவ்யாவால் கிடைச்ச பலன்தான்னு உறுதியா சொல்ல முடியும். பஞ்சகவ்யாவில் தொடங்கிய எனது இயற்கை விவசாயப் பயணம் இப்போ, பஞ்சகவ்யாவை மூலப்பொருளா வெச்சு தேங்காய் எண்ணெய், குளியல் சோப்னு தொடர்ந்துட்டு இருக்கு. எங்க பண்ணை பசுமைச் சுற்றுலாவுக்கான பண்ணையாகவும் மாறிட்டிருக்கு” என்று மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார்.

- மணம் பரப்பும்

தொடர்புக்கு,
மது.ராமகிருஷ்ணன்,
செல்போன்: 94424 16543.

‘அஞ்சு விரல் மந்திரம்’

பஞ்சகவ்யாவை எளிமையாகப் புரிந்து கொண்டு நினைவில் வைத்திருக்க, கொடுமுடி டாக்டர் நடராஜன் சொல்லிய மந்திரத்தை மது.ராமகிருஷ்ணன் பகிர்ந்துகொண்டார். “நமது ஒரு கை விரல்களை விரிச்சுக்கணும். கையில் உள்ள 5 விரல்கள், 5 கிலோ சாணத்துக்கான அளவு. ஒரு விரலை மடக்கினா உள்ள 4 விரல்கள், 4 லிட்டர் சிறுநீருக்கான அளவு. அடுத்து 3 விரல்கள், 3 லிட்டர் பாலுக்கான அளவு. 2 விரல்கள், 2 லிட்டர் தயிருக்கான அளவு. 1 விரல் 1 கிலோ நெய்க்கான அளவு. இதுதான் அஞ்சு விரல் மந்திரம்”.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு