
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி அன்று... மரபணு மாற்று விதைகளுக்கு எதிரான விழிப்பு உணர்வு தொடர் பிரசாரத்தைத் தொடங்க இருக்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இப்பிரசாரம் மூலம் விதை உரிமை குறித்த விஷயங்களை குக்கிராமங்களிலும் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளனர்.
இப்பிரசார இயக்கம் குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம், “மரபணு மாற்றுக் கடுகு விதைகளைக் கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட வேலைகளில் இறங்கியுள்ளது, மத்திய அரசு. விவசாயத்துக்கு சம்பந்தம் இல்லாத டில்லிப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறைதான், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு அதை வெளியிட உள்ளது.
இணையதளத்தில், மரபணு மாற்றுக் கடுகு குறித்த 133 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டு... அது குறித்து மக்கள் கருத்துக்கணிப்பையும் நடத்தி வருகிறது, அப்பல்கலைக்கழகம். இக்கருத்துக்கணிப்பின் முடிவை வைத்துதான்... மரபணு மாற்று தொழில்நுட்ப அங்கீகாரக்குழு, கடுகு குறித்தான தனது முடிவை அறிவிக்கும். மத்திய அரசு, மரபணு மாற்றுக் கடுகைக் கொண்டு வருவதில் காட்டும் ஆர்வத்தை, டில்லிப் பல்கலைக்கழகமும், அங்கீகாரக்குழுவும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன.
இந்தியாவைச் சேர்ந்த ‘ஃபேயர் இந்தியா’ நிறுவனம், மரபணு மாற்றுக் கடுகு விதைத் தயாரிப்பு உரிமை


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. மற்ற பயிர்களில் களைக்கொல்லியைத் தெளித்து களைச்செடிகளை அழித்த பிறகுதான் நடவு செய்வார்கள். ஆனால், இந்த மரபணு மாற்று கடுகு விதைகளை விதைத்த பிறகுகூட களைக்கொல்லியைத் தெளிக்கலாம். ‘அந்த கொடிய விஷத்தைக்கூட தாங்கி வளரும் தன்மை கொண்டது, இந்தக் கடுகு’ என்று பிரசாரம் செய்யப்படுகிறது” என்ற செல்வம் தொடர்ந்தார்.
‘‘மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிரான உணர்வுஉள்ள அனைவரும் இணைந்து அக்டோபர் 2-ம் தேதியில் இருந்து விழிப்பு உணர்வு பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறோம். இது சத்தியாகிரகம் போல அறவழிப் போராட்டம். குக்கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை தனித்தனிக்குழுக்களாக நின்று விதை உரிமைக்கான போராட்டத்தை நடத்த இருக்கிறோம். துண்டுப் பிரசுரம் வழங்குதல், தெருமுனைக் கூட்டம், விழிப்பு உணர்வு கலை நிகழ்ச்சி நடத்துதல், உண்ணாவிரதம், ஊர்வலம், கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு யுக்தியில் இந்த அமைதிப்போராட்டம் நடக்கப் போகிறது. அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதும் நடக்கும் கிராம சபைக்கூட்டங்களில் ‘மரபணு மாற்று விதைகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றும்படி அனைத்து பஞ்சாயத்து பிரதிநிதிகளிடமும் வேண்டுகோள் வைத்திருக்கிறோம்” என்ற செல்வம் நிறைவாக,
“கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், ‘மரபணு மாற்றுக் கடுகு விதைக்கு அனுமதி இல்லை’ என்று தீர்மானம் போடப்பட்டுள்ளது. அதனால், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்தும் உரிய முறையில் கேட்க இருக்கிறோம். மரபணு மாற்றுக் கடுகுக்குத் தடை விதிக்கப்படும் வரை இப்பிரசார இயக்கம் தொடரும்” என்றார்.
சென்னையில்... விதைச் சத்தியாகிரகம்!
சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் அக்டோபர்-2 ம் தேதி, ‘விதை சத்தியாகிரகம்’ விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இயற்கை விவசாயம், பாரம்பர்ய விதைகள், வீட்டுத் தோட்டம் உள்ளிட்டவை குறித்து வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர். பாரம்பர்ய விதைகள், சிறுதானிய உணவுகள், மண் பாண்டங்கள் போன்றவை விற்பனை செய்யப்படவுள்ளன.