Published:Updated:

சிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை!

சிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை!
பிரீமியம் ஸ்டோரி
சிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை!

க.சரவணன், படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார்புதிய தொடர்

சிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை!

க.சரவணன், படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார்புதிய தொடர்

Published:Updated:
சிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை!
பிரீமியம் ஸ்டோரி
சிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை!
சிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை!

ல்வராயன் மலைத்தொடருக்கும் சித்தேரி மலைத்தொடருக்கும் இடையில், அமைதியான சூழலில் அமைந்திருக்கும் பகுதி, சிட்லிங்கி பள்ளத்தாக்கு. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இப்பள்ளத்தாக்கு, தர்மபுரி நகரத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சேலத்தில் இருந்தும் 75 கிலோமீட்டர் தூரம் பயணித்து இப்பள்ளத்தாக்கை அடைய முடியும். பல நூற்றாண்டுகளாக, இங்கு இயற்கையுடன் இயைந்த வாழ்வை வாழ்கிறார்கள், ‘மலையாளி’ பழங்குடியின மக்கள்.

‘ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்போடும் பணி செய்தால், மண்ணையும் சூழலையும் வளப்படுத்துவதுடன், பொருளாதார ரீதியாகவும் வெற்றி பெறமுடியும்’ என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்கள், இந்தப் பள்ளத்தாக்கின் பழங்குடி இயற்கை விவசாயிகள்.
21 கிராமங்கள், 300 இயற்கை விவசாயிகள்!

இந்த விவசாயிகளுக்குப் பல விதங்களிலும் உதவி புரிந்து வருகிறது, ‘சிட்லிங்கி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு’. இப்பள்ளத்தாக்கில் உள்ள 21 கிராமங்களைச் சேர்ந்த 300 இயற்கை விவசாயிகள் இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த விவசாயிகள், 25 குழுக்களாகச் செயல்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், 1 ஏக்கர் முதல் 3 ஏக்கர் வரை மட்டுமே நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகள்தான். விதைப் பரிமாற்றம், சாகுபடி, மதிப்புக் கூட்டல், விற்பனை செய்தல் என அனைத்துப் பணிகளிலும் ஒரே குடையின் கீழ், ஒற்றுமையுடன் செயல்படுகிறது, இக் கூட்டமைப்பு. அதுதான் இவர்களின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமும்கூட.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான்கே பேருடன் பயணத்தைத் தொடங்கிய இக்கூட்டமைப்பு, இன்று 300 விவசாயிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 1,000 ஏக்கர் நிலம் இயற்கை வேளாண்மைக்கு மாறியுள்ளது.

இயற்கை விவசாயத்துக்கு பயிற்சிகள் வழங்கிய கூட்டமைப்பு!


இயற்கை வேளாண்மைப் பயிற்சிகள், இடுபொருட்கள் தயாரிப்புப் பயிற்சிகள், பட்டறிவுப் பயணங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குதல் போன்ற பணிகளை முன்னெடுத்துச் செல்கிறது, இக்கூட்டமைப்பு. இவற்றோடு, அனைத்து எந்திரங்களையும் கொண்டுள்ள பதப்படுத்தும் மையத்தை அமைத்துள்ளது. சிறுதானிய பிஸ்கெட் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்துச் சந்தைப்படுத்தி வருகிறது.

தென்னிந்தியாவில் நாற்பதுக்கும் மேலான பெரிய இயற்கை அங்காடிகளுடன் வர்த்தகத் தொடர்பில் உள்ளது, இக்கூட்டமைப்பு. காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை எடுத்துச்செல்ல சொந்தமாக வாகன வசதியையும் வைத்துள்ளது. இக்கூட்டமைப்பில் உள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குதல், பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல், விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ உதவி போன்ற பல்வேறு பணிகளையும் செய்து வருகிறது. இந்தக் கூட்டமைப்பு உருவாவதற்கு மூல காரணமாக இருந்தது, ‘ட்ரைபல் ஹெல்த் இனிஷியேட்டிவ்’ எனும் தொண்டு நிறுவனம்.

மாற்றத்தை உருவாக்கிய மருத்துவர்கள்!


கூட்டமைப்பின் சாதனைகளைப் பார்ப்பதற்கு முன் ட்ரைபல் ஹெல்த் இனிஷியேட்டிவ் ஆரம்பிக்கப்பட்ட கதையைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர்கள், ரெஜி ஜார்ஜ், லலிதா ரெஜி ஆகிய மருத்துவத் தம்பதி. காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இத்தம்பதி, மருத்துவச் சேவை கிடைக்காத மக்களுக்கு மருத்துவப் பணியாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில், உள்ளடங்கிக் கிடந்த சிட்லிங்கி கிராமத்துக்கு வந்திருக்கிறார்கள். 23 ஆண்டுகள் இங்கேயே தங்கிவிட்டதில் சிட்லிங்கி கிராமம் இவர்களுக்குச் சொந்த ஊராக மாறிவிட்டது. இங்குள்ள பழங்குடி மக்கள்தான் இவர்களுக்கு உறவுக்காரர்களாய் இருக்கிறார்கள்.

சிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிந்தனையை மாற்றிய காந்திகிராம் பல்கலைக்கழகம்!

ட்ரைபல் ஹெல்த் இனிஷியேட்டிவ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான லலிதா ரெஜி, சிட்லிங்கிக்கு வந்த கதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். “நானும், ரெஜியும் (டாக்டர் ரெஜி ஜார்ஜ்) எம்.பி.பி.எஸ் முடிச்சவுடனே, திண்டுக்கல் காந்திகிராம மருத்துவமனையில வேலைக்குச் சேர்ந்தோம். அதுக்கப்புறம் 1993-ம் வருஷம் வரைக்கும் காந்தி கிராமத்திலேயேதான் மருத்துவப் பணிகள்ல இருந்தோம். அந்தச் சமயத்துல நிறைய நல்ல மனிதர்களை நாங்க சந்திச்சோம். அப்போ அங்க இருந்த டாக்டர் கௌசல்யாதான் எங்க மானசீக முன்மாதிரி, வழிகாட்டி எல்லாமே. விளிம்பு நிலை மனிதர்களுக்காகப் பணி செய்யணும்கிற காந்தியக் கொள்கையில ஈர்க்கப்பட்டதால தான் காந்தி கிராமத்துக்கே போனோம். அங்க வேலை செஞ்சுகிட்டிருக்கிறப்போதான்... மருத்துவச் சேவைகள் கிடைக்காத மக்களுக்கு சேவை அளிக்கணும்னு முடிவு பண்ணினோம். ஆனா, எந்தப் பகுதிக்குப் போறதுனு எந்த யோசனையும் எங்ககிட்ட இல்லை.

1990-ம் வருஷம் எங்க மகன் ஹர்ஷ் பொறந்தான். அந்தச் சமயத்துலதான், ‘சம்வதா’ என்கிற அமைப்பு மூலமா, ரெஜிக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. இந்தியா முழுக்க ஒரு வருஷம் பயணம் பண்ணி... சமூகப் பணிகள்ல ஈடுபடற அமைப்புகளைப் பார்வையிடவும், வளர்ச்சி எட்டிப் பார்க்காத ஊர்களுக்குப் போறதுக்குமா வாய்ப்புதான் அது. அப்போ ஹர்ஷ் குழந்தைங்கிறதால, என்னால அதிகளவு பயணிக்க முடியல. அவர் மட்டும்தான், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்னு பல இடங்களுக்கு 1991-ம் வருஷம் முழுக்க பயணம் செஞ்சார்.

சத்தீஸ்கர்ல தொழிலாளர் சங்கத் தலைவர் நியோகி கொலை செய்யப்பட்ட சமயத்துல, ஒரு மாசம் அங்கே தங்கியிருந்து தொழிலாளர்களுக்குச் சிகிச்சை கொடுத்தார். மருத்துவப் பணிகள் தவிர்த்து அந்த மக்கள்கிட்ட நெருங்கிப் பேசுனதுல, அவங்களோட பிரச்னைகளையும் அவரால நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சது. அதுக்கப்புறம், மகாராஷ்டிரா பழங்குடி கிராமங்கள்ல ரெஜி கொஞ்ச நாள் இருந்து பழங்குடி மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை கொடுத்துட்டு இருந்தார். அந்தச் சமயத்துல கரடி கடிச்சதுல, கால்ல புண்ணாகி உணர்வில்லாத நிலையில் ஒருத்தர் சிகிச்சைக்கு வந்திருக்கார். வாகன வசதி இல்லாத பகுதிங்கிறதால, அந்த நிலைமையிலயும் கிட்டத்தட்ட 22 கிலோ மீட்டர் தூரம் நடந்தே அந்த நோயாளி வந்திருக்கார்.

அவருக்குச் சிகிச்சை அளிக்கிறப்போ, அவர் பட்ட கஷ்டங்களைத் தெரிஞ்சுக்கிட்டதுல ரெஜி ரொம்பவும் பாதிக்கப்பட்டுட்டார். அந்த நிகழ்ச்சிக்கப்புறம்தான், எங்களோட பாதை மாறிடுச்சு. அரசாங்கம், தொண்டு நிறுவனங்களோட மருத்துவ வசதிகள் கிடைக்காத உள்ளடங்கி இருக்கிற பகுதிகள்ல சேவை செய்யலாம்னு தேட ஆரம்பிச்சோம். அப்போதான் சிட்லிங்கி, பழனி ரெண்டு இடங்கள்ல ஏதாவது ஒரு இடத்துல சேவையை ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணினோம். காந்திகிராமத்துல இருந்த சமயத்திலேயே நண்பர் அருண் மூலமா சிட்லிங்கி பகுதிக்கு 92-ம் வருஷம் வந்தோம். எங்க நண்பர்கள் டாக்டர் ரவீந்திரன், டாக்டர் கமலம்மாள் ரெண்டு பேரையும் சேர்த்துக்கிட்டு சிட்லிங்கியில் ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சோம்” என்ற லலிதா ரெஜி சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.

“நாங்க இங்க வந்தது அக்டோபர் மாசம். நல்ல மழைக் காலம். தார் ரோடெல்லாம் கிடையாது. அதிக மழையால சிட்லிங்கிக்கு பஸ் போகாதுனு சொல்லிட்டாங்க. அப்போதான் ஆத்துக்குக் குறுக்க பாலம் கட்டிக்கிட்டு இருந்தாங்க. நாங்க நடந்தே ஆத்தைக் கடந்து வந்தோம். அப்போலாம், இந்த மக்களுக்கு உடம்பு சரியில்லன்னா கோட்டப்பட்டி ஆரம்பச் சுகாதார நிலையம் போகணும். இல்லைன்னா அரூருக்குப் போகணும். ரெண்டுமே ரொம்ப தூரம். அப்போ தும்பல் வழியா சிட்லிங்கிக்கு ரோடு கிடையாது. பஸ் வசதியும் ரொம்பக் குறைவு. அறுவை சிகிச்சை தேவைப்பட்டா தர்மபுரி, இல்லைன்னா சேலம்தான் போகணும். மருத்துவ வசதி கிடைக்காம மக்கள் நிறையவே சிரமப்பட்டாங்க.

நாங்க, 1993-ம் வருஷம் சிட்லிங்கியில புறநோயாளிகள் பிரிவை ஆரம்பிச்சோம். கோட்டப்பட்டியிலதான் தங்கியிருந்தோம். வாரத்துக்கு 3 நாள் சிட்லிங்கி வந்துட்டுப் போவோம். டாக்டர் ரவீந்திரனும் இங்கேயே வந்து தங்கிட்டார். அவர், பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜம்மாங்கிற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டார். இப்போ அவர் இல்லை, இறந்துட்டார். ராஜம்மாதான் இப்ப எங்க ஃபார்மசியை நிர்வாகம் பண்றாங்க.

ஆரம்பத்துல அஞ்சு வருஷம் நிறையவே சிரமப்பட்டோம். எட்டாவது வரைக்கும் படிச்ச பெண்களைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு அடிப்படை மருத்துவப் பணிகளைச் சொல்லிக் கொடுத்தோம். ஆனா, நாங்க சொல்லிக் கொடுக்கறதை புரிஞ்சுக்கறதுக்கு அவங்க ரொம்பச் சிரமப்பட்டாங்க. அந்தப் பெண்கள்கிட்டயும், ஊர் மக்கள்கிட்டயும் நாங்க ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருப்போம். அதுக்கப்புறம்தான் அவங்கள்கிட்ட மாற்றம் வர ஆரம்பிச்சது. அடிப்படை மருத்துவப்பணிகள் தெரிஞ்சுகிட்ட 40 பெண்களோட சேர்ந்து 21 கிராமங்கள்ல அடிப்படைச் சிகிச்சைகள் கொடுக்கறது, உடல்நலன் தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்துறது மாதிரியான வேலைகளை ஆரம்பிச்சோம்.

நாங்க இங்க வந்த சமயத்துல இளங்குழந்தைகள் இறப்பு, ஆயிரத்துக்கு 147-ங்கிற விகிதத்துல இருந்துச்சு. தொடர்ந்து விழிப்பு உணர்வு கொடுத்து வயிற்றுப் போக்கால குழந்தைகள் இறக்கிறதைத் தடுத்தோம். இப்போ இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 20 தான். அதேபோல தாய்மார்கள் இறக்கிறதை முற்றிலுமா தடுத்துட்டோம்” என்றார்.

முழுநேர மருத்துவப் பணியிலிருந்த மருத்துவத் தம்பதிக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் வந்த கதை, சிட்லிங்கியில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பை உருவாக்கிய விதம் குறித்து அடுத்த இதழில்...

- சொல்வோம்

சமூகச் செயற்பாட்டாளர் க. சரவணன்

சிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை!இவரின் சொந்த ஊர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு. விகடன் குழும இதழ்களில், 2001-2002 ஆண்டுகளில் மாணவப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். வேதிப்பொறியியலில் பட்டப் படிப்பும், ஆட்சியியலில் முதுகலைப் பட்டயப் படிப்பும் பெற்றுள்ள இவர், நீர் மற்றும் உணவு உரிமைகள் தொடர்பாகச் செயல்பட்டு வருகிறார்.

அகில இந்திய மனித உரிமைகள் அமைப்பான மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (PUCL) மாநில இணைச் செயலாளராக உள்ளார். மேலும், பாமரர் ஆட்சியியல் கூடத்தின் (Barefoot Academy of Governance) சார்பாக, பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் இயற்கை விவசாயம் மற்றும் சிறுதானியங்களை மையப்படுத்தி விவசாயிகள் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியிலும், வெள்ளாறு-சின்னாறு இடையிலான 10 பாசன ஏரிகளில் விவசாயிகள் தலைமையிலான நீர் மேலாண்மையை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

சிட்லிங்கியும் சிக்கிமும்..!

சிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை!

தமிழ்நாட்டில், சிட்டிலிங்கி பள்ளத்தாக்கில் உள்ள 21 கிராமங்களைச் சேர்ந்த 300 விவசாயிகள் இயற்கை விவசாயப் பாதையில் வெற்றிநடை போட்டுவருகிறார்கள். இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது, மலைப் பகுதியான சிக்கிம் மாநிலம். 2003-ம் ஆண்டு சிக்கிம் மாநிலத்தை ‘ஆர்கானிக் ஸ்டேட்’ எனச் சட்டப்பேரவையில் பிரகடனம் செய்யப்பட்டது. மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டது.  பிரதமர் மோடி நாட்டின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிமை அங்கு நடைபெற்ற விழாவில் அறிவித்தார்.

பொதுவாக மலைப் பகுதிகளில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது பல்லுயிரினப் பெருக்கத்தையும், மண்ணையும் பாதிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோன்று சிட்லிங்கியில் அரசால் நடவடிக்கை எடுத்து சாதிக்க முடியாததை விவசாயிகள் கூட்டாக இணைந்து சாதித்துள்ளார்கள். 75 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை இயற்கை விவசாயத்துக்கு மாற்றியுள்ளது சிக்கிம். சிட்லிங்கியில் 1,000 ஏக்கர் இயற்கை விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டும் மலைப் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism