Published:Updated:

கிராமத்துக்கு ஒரு இயற்கை விவசாயி...!

பீகார் முதலமைச்சரின் அதிரடி சபதம்! ஆர்.ஷஃபி முன்னா படங்கள்: சஞ்சய்குமார் கனோரி

கிராமத்துக்கு ஒரு இயற்கை விவசாயி...!

பீகார் முதலமைச்சரின் அதிரடி சபதம்! ஆர்.ஷஃபி முன்னா படங்கள்: சஞ்சய்குமார் கனோரி

Published:Updated:

 இயற்கை

##~##

சோஹ்தி... பீகார் மாநிலத்தின், நாளந்தா மாவட்டத்திலிருக்கும் குட்டி கிராமம். இந்திய வரைபடத்தில் ஒரு புள்ளியாகக்கூட தென்படாத இந்த கிராமம்... இன்றைக்கு உலக அளவில் மாறியிருக்கிறது. இதற்குக் காரணம்... இங்கே நடைபெறும் இயற்கை விவசாயம்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பச்சைக் காய்கறிகள் பயிர் செய்யப்படும் பகுதி’ என்கிற பலகை வரவேற்பு தர... ஊருக்குள் நுழைந்த நம் கண்களில் பட்ட இடங்களிலெல்லாம் பசுமை பளீரிட... விளைந்து கிடந்தன காய்கறிகள். இங்கு மட்டும் சுமார் 500 ஏக்கர் அளவில் இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது. பீகார் அரசின் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை அமைப்பு ஆகியவை இதற்கு உதவி வருகின்றன!

நாம் அங்கே சென்றிருந்த நேரத்தில், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியபடி வயல்வெளியில் நின்றிருந்தார் நாளந்தா வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை அமைப்பின் துணை அதிகாரி தனஞ்செய்குமார். அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, ஆர்வத்தோடு நம்மிடம் பேசினார்.

கிராமத்துக்கு ஒரு இயற்கை விவசாயி...!

''ரசாயன உரங்களால் நமக்குப் பல வகைகளில் நஷ்டமே ஒழிய, லாபம் எதுவுமில்லை. அதை இந்த கிராம மக்களிடம் எடுத்துச் சொல்லி, இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தினோம். தொடக்கத்தில் தயங்கியவர்கள், கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொண்டு இயற்கை விவசாயத்தை ஆரம்பித்தனர். அதன் பலன்களை அனுபவப்பூர்வமாக உணர்ந்த பிறகு, ரசாயனங்களை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டனர். தற்போது தொழுவுரம் மற்றும் கடைகளில் கிடைக்கும் இயற்கை இடுபொருட்கள் ஆகியவற்றை மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள்.

இயற்கை விவசாயத்தில் விளையும் காய்கறிகளுக்கு சான்றிதழ் வாங்குவதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'ஈகோசர்ட்’ எனும் நிறுவனத்தின் இந்தியக் கிளையை அணுகினோம். அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், நேரில் வந்து, இங்குள்ள நிலங்களையும் பயிர்களையும் ஒரு வருடம் முழுவதும் ஆய்வு செய்து, முதல் கட்டமாக 'சி-1’ சான்றிதழ் வழங்கியிருக்கின்றனர்.

அடுத்தடுத்து 'சி-2’, 'சி-3’ சான்றிதழ்களையும் பெற்றுவிட்டால்... உலகம் முழுவதும் இங்கு விளையும் காய்கறிகளை ஏற்றுமதி செய்ய முடியும். அதோடு, அந்த நிறுவனத்தினரே ஜி.பி.எஸ், வரைபடத்தில் இந்த கிராமத்தைக் குறித்து விட்டனர். இதன் மூலம், உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சேட்டிலைட் மூலமாக, இங்கு இயற்கை விவசாயம் நடப்பதை நேரடியாகப் பார்த்து உறுதி செய்து கொள்ள முடியும்'' என்று பெருமை பொங்கச் சொன்னார்.

கிராமத்துக்கு ஒரு இயற்கை விவசாயி...!
கிராமத்துக்கு ஒரு இயற்கை விவசாயி...!

கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் பிஹாரி, ''வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குதான் இங்கு முக்கியப் பயிர். வெங்காயத்தில் ஊடுபயிராக மிளகாயை நடுவோம். தவிர, சுரைக்காய், முள்ளங்கி, கத்திரி மற்றும் காலிஃபிளவர் போன்றவற்றையும் பயிர் செய்வோம். ஏக்கருக்கு 8 டன் தொழுவுரத்தையும், கூட்டுறவு சொசைட்டியில் கிடைக்கும் இயற்கை உரங்களையும்தான் பயன்படுத்துகிறோம்.

இயற்கைக்கு மாறிய பிறகு, காய்கறிகளின் எடை அதிகமாக இருப்பதோடு, மகசூலும் அதிகரித்திருக்கிறது. மூன்று நாட்களுக்கு ஒரு சுரைக்காய் பறிக்க முடிகிறது. இதுவரை இல்லாத வகையில் செடிக்கு அறுபது வெண்டைக்காய்கள் கிடைக்கின்றன. முன்பு நாங்கள் அலைந்து காய்கறிகளை விற்போம். இப்போது வியாபாரிகளே தேடி வந்து கிலோவுக்கு இரண்டு ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள்'' என்றார் மகிழ்ச்சியாக.

''ஆரம்பத்தில் கொஞ்சம் பயம் இருந்தது. ஆனால், முழு இயற்கைக்கு மாறிய பிறகு எதிர்பார்த்ததைவிட நல்ல மகசூல் கிடைக்கிறது. கூட்டுறவு சொசைட்டி மூலமாக வாங்கும் இயற்கை உரங்களுக்கு, மானியம் தருகிறது மத்திய அரசு. அதாவது ஒரு ஹெக்டர் நிலத்தில் பசுமைக் குடில் முறையில் காய்கறி சாகுபடி செய்தால், ரூ.33,700 மானியமும், திறந்த வெளியில் சாகுபடி செய்தால் ரூ.25,500 மானியமும் வழங்குகிறார்கள். இதனுடன் மாநில அரசு ஹெக்டருக்கு ரூ.10,000 மானியமாக வழங்குகிறது.

முன்பு கால்நடைகளின் சாணங்களையே உரமாக போட்டு நம் முன்னோர்கள், இயற்கை விவசாயம் செய்தனர். பிறகு, மெள்ள நம்மை ஆக்கிரமித்துவிட்ட செயற்கை உரங்களால், நாம் பழையதை மறந்து விட்டோம். இப்போது நம் முன்னோர்கள் செய்ததைவிட சிறந்தது எதுவுமில்லை என்பது நிரூபணமாகி விட்டது. எனவே, செயற்கை உரங்களை நாம் நிரந்தரமாக மறந்து விடுவதே நல்லது'' என்று தான் இயற்கை பாடம் கற்றுக் கொண்டதை விவரித்தார் அதே ஊரைச் சேர்ந்த நந்துகுமார்.

கிராமத்துக்கு ஒரு இயற்கை விவசாயி...!

சோஹ்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த இயற்கை எழுச்சியைப் பார்த்துவிட்டு, அருகிலுள்ள கிராமங்களும் இயற்கையை நோக்கி திரும்பி வருகின்றன. ஜார்கண்ட், மேற்கு வங்காளம் என்று அண்டை மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் சோஹ்திக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர்.

இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தைப் புரிந்துக் கொண்ட பீகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமார், ''மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு கிராமத்திலாவது இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்'’ என உத்தரவிட்டுள்ளார்.

பீகாரில் போடப்பட்டுள்ள இந்தக்கோடு இந்தியா முழுவதற்கும் ரோடு போடட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism