Published:Updated:

சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி!

60 சென்ட் நிலத்தில் ஆண்டுக்கு 2,50,000 ஆர்.குமரேசன் படங்கள்: வீ. சிவக்குமார்

சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி!

60 சென்ட் நிலத்தில் ஆண்டுக்கு 2,50,000 ஆர்.குமரேசன் படங்கள்: வீ. சிவக்குமார்

Published:Updated:

 பளிச்... பளிச்...

வேலையாட்கள் குறைவு.
பூச்சித்தாக்குதல் குறைவு.
தினசரி வருமானம்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பல வருஷமா விவசாயம் பாத்தாலும், நிறையபேரு 'நஷ்டம், நஷ்டம்’னுதான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதுக்கு முக்கியமான காரணமே... வர்ற வருமானத்தையெல்லாம் கொண்டுபோய் உரக்கடையில கொட்டிக் கொடுக்கறதுதான். முறையா திட்டம் போட்டு இயற்கை முறையில விவசாயம் செஞ்சா, விவசாயத்தை மாதிரி வருமானம் கொடுக்கக் கூடிய தொழில் எதுவுமே இல்லீங்க'' என்று சொல்லும் திண்டுக்கல் மாவட்டம், தவசிமடை கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து-வாசுகி தம்பதியர்,

''இதை சும்மா சொல்லல... இதுக்கு நாங்களேதான் நடமாடும் உதாரணம். 60 சென்ட் நிலத்துல சம்பங்கி மூலமா வருஷத்துக்கு ரெண்டரை லட்ச ரூபாய்க்கு குறையாம வருமானம் எடுக்குறோம்'' என்று நம்பிக்கையூட்டுகிறார்கள்.

தோட்டத்தில் பூப்பறிக்கும் வேலையில் மும்முரமாக இருந்த நேரத்தில்தான் தம்பதியைச் சந்தித்தோம்.

''எங்க பண்ணையை 'பசுமை விகடன் பண்ணை’னு தான் சொல்லணும். ஏன்னா... நாங்க பசுமை விகடனைப் பாத்துத்தான் ஒவ்வொரு விஷயத்தையும் செய்றோம்'' என்றபடியே வரவேற்பு கொடுத்துவிட்டு பேச்சை ஆரம்பித்தனர். இன்னுமொரு ஆச்சரியம் என்ன தெரியுமோ... முதல் நாள் வரை, மாநகரத்தில் பேன்ட்-சட்டை, கம்ப்யூட்டர் என்று அலைந்தவர்கள், அடுத்த நாளே விவசாயத்தில் இறங்கி, இந்த அளவுக்கு வந்திருப்பதுதான்! இனி, உங்களுடன் மருதமுத்து பேசுவார்...

கணினியிலிருந்து கழனிக்கு !

சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி!

''நான் சென்னையில் 'அக்கவுண்டிங் சாஃப்ட்வேர்’ தயார் பண்ற கம்பெனி நடத்திக்கிட்டு இருந்தேன். முன்னணியில இருந்த பெரிய கம்பெனிகள், பள்ளிகளெல்லாம் என்னோட சாஃப்ட்வேரைத்தான் பயன்படுத்திக்கிட்டுருக்காங்க. அதனால வருமானத்துக்கு குறைவேயில்லாம நல்லாதான் வாழ்க்கை போயிட்டிருந்தது. ஆனா, 'எதையோ தொலைச்சுட்டு இங்க வாழ்ந்துக்கிட்டிருக்கோம்’கிற உணர்வு... நகரவே முடியாத நகர வாழ்க்கையில அடிக்கடி எனக்கு வரும். அப்பப்போ பேப்பர்ல வருகிற 'விவசாயி தற்கொலை’ன்ற செய்தியைப் படிக்கறப்பவும் எனக்கு மனசு வலிக்கும். 'உலகத்துக்கே சோறு போடுற விவசாயியோட வாழ்க்கை... ஏன் தற்கொலையில முடியுது?’னு அடிக்கடி என்கிட்டயே கேட்டுக்குவேன். அப்பல்லாம்... 'நாமளும் விவசாயம் செஞ்சு பார்த்தா என்ன?’ என்று எனக்குத் தோணும்.

சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி!

இப்படி மனசுல கிடந்து நான் அல்லாடிக்கிட்டிருந்த சமயத்துலதான் 'பசுமை விகடன்’ வெளிவந்துச்சு. தொடர்ந்து அதை படிக்க, படிக்க... மனசுக்குள்ள சொல்ல முடியாத உணர்வுகள். உடனே ஊருக்குப் போய் விவசாயத்தை ஆரம்பிக்கணும்னு மனசு பரபரக்க ஆரம்பிச்சுது. என் மனைவியும் பசுமை விகடனுக்கு தீவிர வாசகி. அவங்களே ஒரு கட்டத்துல கிராமத்துக்குப் போய் விவசாயம் பார்க்கலாம்னு என்கிட்ட சொன்னதும்... எனக்கு சந்தோஷம் தாங்கல. எதைப் பத்தியும் யோசிக்காம, உடனே ஊருக்கு வந்துட்டோம்.

எங்களுக்கு இருந்த எட்டு ஏக்கர் நிலத்தை சரி பண்ணி விவசாயத்தை ஆரம்பிச்சோம். ரொம்ப வருஷமா கவனிக்காம விட்டுட்டதால நிலமெல்லாம் மேடு, பள்ளமா புதர் மண்டிக் கிடந்துச்சு. முதல் வேலையா நிலத்தை சரி பண்ணிட்டு, 5 ஏக்கர்ல தென்னங்கன்னு நட்டோம். கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் ஓடிடுச்சு... தோட்டத்துக்குள்ள இதுவரை துளிகூட ரசாயனம் பயன்படுத்தல. தென்னைக்கு இயற்கை இடுபொருட்களைக்கூடப் பயன்படுத்தல. ஆனா, மரம் எப்படி செழிச்சு நிக்குது பாருங்க' என்றபடியே தென்னை மரங்களைச் சுட்டிக்காட்டிய மருதமுத்து,  

மழை நீரை சேர்த்து வைக்கும் மணல் !

''இடுபொருட்களே இல்லாம இப்படி வளர்ந்து நிக்கறதுக்குக் காரணம்... நாங்க நடவு செஞ்ச முறைதான். 5 அடி ஆழம், 4 அடி அகலத்துக்கு குழியெடுத்தோம். குழியில முக்கால் பாகம் மணலும், கால் பாகம் தொழுவுரமும் போட்டு நிரப்பி அதுக்கப்பறம் தென்னங்கன்னை நடவு செஞ்சிருக்கோம். கீழ மணல் இருக்குறதால மழை பெய்றப்ப கிடைக்குற தண்ணியைப் பிடிச்சு வெச்சிக்குது. அதுனால மரம் வாடுறதே இல்லை. அப்பப்போ பெய்ற மழைதான் இதுக்குப் பாசனமே. ஒரு வருஷத்துக்கு முன்னயே தண்ணி பாய்ச்சுறதை நிறுத்திட்டோம். முதல் அறுவடைக்கு, மரம் இப்போ தயாராயிடுச்சு, அஞ்சு வருஷத்துலயே தூர் எவ்வளவு திடமா இருக்குனு பாருங்க'' என்றபடி தென்னையைத் தடவிக் கொடுத்தார்.

அவரைத் தொடர்ந்த வாசுகி, ''தென்னையை நட்டு முடிச்சதும் 35 சென்ட் நிலத்துல சீரகச் சம்பா நெல்லை இயற்கை முறையில சாகுபடி செஞ்சோம். அதுல 576 கிலோ மகசூல் கிடைச்சது. வீட்டுப் பயன்பாட்டுக்கே அதையெல்லாம் வெச்சுக்கிட்டோம். பிறகு, 37 மாடுகளை வெச்சு பால் பண்ணை ஆரம்பிச்சோம். ஆள் தட்டுப்பாடு வந்ததால... அதை விட்டுட்டோம்.

சொந்த உழைப்பே சுகம் !

சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி!

வேலையாளுங்கள எதிர்பார்க்காம, நாமளே ஏதாவது செய்யலாம்னு யோசிச்சப்பதான்... 'பசுமை விகடன்'ல சம்பங்கி பத்தி ஒரு கட்டுரை வந்துச்சு. உடனே அதைப் பத்தி விசாரிச்சுட்டு, சில இடங்கள்ல போய்ப் பாத்துட்டு, 'பிரஜ்வல்’ங்கிற வீரிய ரக சம்பங்கியை நட்டோம். நாங்க விவசாயத்துக்குப் புதுசுங்கறதால ஆரம்பத்துல சின்னச் சின்னத் தவறுகள் நடந்துச்சு. இந்த ஒரு வருஷத்துல எங்க சொந்த அனுபவத்துல நிறைய தெரிஞ்சுக்கிட்டு, அதையெல்லாம் சரிப்படுத்திட்டோம்.

தண்ணி பாய்ச்சுறது, களையெடுக்கறது, அமுதக்கரைசல் தயாரிக்குறதுனு எல்லா வேலைகளையும் நானும் அவரும்தான் பாத்துக்கிறோம். பூ அதிகமா வர்றதால அறுவடைக்கு மட்டும் ரெண்டு பேர் வேலைக்கு வருவாங்க. அவங்க வரலைன்னாலும் நாங்களே எடுத்துடுவோம். இப்ப யாரையும் நம்பாம எங்க உழைப்பை மட்டுமே நம்பி வாழறதை... வார்த்தையில சொல்ல முடியாது.

சென்னையில வாரக் கடைசி நாள்ல... ஸ்டார் ஹோட்டல்களுக்கு சாப்பிடப் போவோம். ஆனா, அங்கயெல்லாம் கிடைக்காத திருப்தி, சுகம் எங்களுக்கு எங்க நிலத்துல கிடைக்குது. இதுக்குக் காரணமான பசுமை விகடனுக்கு நாங்க வாழ்நாள் முழுக்க  நன்றி சொல்லிக்கிட்டே இருப்போம்'' நெகிழ்வுடன் வாசுகி நிறுத்த, 60 சென்ட் நிலத்தில் சம்பங்கி சாகுபடி செய்யும் முறைகளைச் சொல்லத் தொடங்கினார், மருதமுத்து. அதைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

ஆழமாக நடவு !

'சம்பங்கி அனைத்து வகை மண்ணிலும் வளரும்.என்றாலும், சரளை கலந்த செம்மண் பூமியில் அபரிமிதமான மகசூல் கிடைக்கும். பனிக்காலத்தைத் தவிர, மற்ற மாதங்களில் நடவு செய்யலாம். தேர்வு செய்த நிலத்தில் 12 டிராக்டர் தொழுவுரத்தை இறைத்துவிட்டு இரண்டு உழவு ஓட்ட வேண்டும். பிறகு, 150 கிலோ வேப்பம் பிண்ணாக்கை நிலம் முழுவதும் தூவி, இரண்டு உழவு செய்ய வேண்டும். பிறகு, 3 அடி அகலம், முக்கால் அடி உயரத்தில் தேவைக்கேற்ற நீளம் கொண்டதாக... ஒன்றரை அடி இடைவெளியில் பார்களை அமைத்துக் கொள்ள வேண்டும். பாரின் இருபக்க ஓரங்களிலும் மண்ணைக் கொஞ்சம் ஆழமாகத் தோண்டி சம்பங்கிக் கிழங்கை நடவு செய்து, லேசாக மண்ணால் மூடிவிட வேண்டும். இப்படியே பார் முழுக்க இரண்டரை அடி இடைவெளிவிட்டு நடவு செய்யவேண்டும். 60 சென்ட் நிலத்துக்கு 150 கிலோ விதைக்கிழங்குகள் தேவைப்படும்.

சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி!
சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி!

தண்ணீர்... கவனம் !

சம்பங்கி வயலில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது. அதனால் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து, தேவைக்கேற்ப பாசனம் செய்தால் போதுமானது. ஒவ்வொரு பாசனத்தின் போதும் 150 லிட்டர் அமுதக்கரைசலைக் கலந்து விட வேண்டும். நடவு செய்த 3-ம் மாதம் ஒவ்வொரு செடியின் அருகிலும் மண்வெட்டியால் பறித்து, செடிக்கு ஒரு கிலோ என்கிற கணக்கில் ஆட்டு எருவை வைத்து, மண்ணால் மூடி விட வேண்டும். ஒவ்வொரு முறை தண்ணீர் பாய்ச்சும்போதும் தென்படும் களைகளை அகற்றி விட்டால்... களைத் தொந்தரவு இருக்காது. சொட்டுநீர் மூலம் பாசனம் செய்தாலும், 15 நாட்களுக்கு ஒரு முறை களைகளை அகற்றுவதற்காகவும் அமுதக்கரைசலைக் கலந்து விடுவதற்காகவும் வாய்க்கால் மூலமும் பாசனம் செய்வது நல்லது.

சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி!

தொடர்ந்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை 10 சென்ட்டுக்கு ஒரு வண்டி என்கிற கணக்கில் தொழுவுரம் இட வேண்டும். மாதம் ஒரு முறை 25 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, 50 கிலோ கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். பெரும்பாலும் பூச்சித்தாக்குதல் இருக்காது. அப்படியே இருந்தாலும், பூச்சிவிரட்டி மூலம் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

நடவு செய்த 4-ம் மாதம் பூக்கள் அறுவடைக்கு வரும். ஆரம்பத்தில் தினமும் 2 கிலோ முதல் 5 கிலோ அளவுக்குத்தான் மகசூல் கிடைக்கும். போகப்போக மகசூல் அதிகரித்து 6-ம் மாதத்துக்கு மேல்... தினமும் 25 கிலோ முதல் 50 கிலோ வரை மகசூல் கிடைக்கும். முறையாகப் பராமரித்தால் இன்னும் கூடுதலாகக் கிடைக்கும். ஆண்டுக்கு... கிட்டத்தட்ட 6,000 கிலோவுக்குக் குறையாமல் மகசூல் எடுக்கலாம். பொதுவாக சம்பங்கியை ஒரு முறை நடவு செய்தால், 25 ஆண்டுகள் வரை மகசூல் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆனால், 8 ஆண்டுகள் வரைதான் நல்ல மகசூல் கிடைக்கும். எனவே 8 ஆண்டுகள் முடிந்தவுடன் புதிய விதைக் கிழங்கை நடவு செய்ய வேண்டும். சம்பங்கி மலர் தினமும் மலர்ந்து கொண்டே இருக்கும். ஆக 8 ஆண்டுகளும் தினமும் விளைச்சல் வந்து கொண்டே இருக்கும்'' என்றவர், வருமானம் பற்றிப் பேசத் தொடங்கினார்.

கணக்குப் பார்த்தால் கவலையில்லை !

சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி!

''ஒரு செடியில இருந்து வருஷத்துக்கு 30 தண்டுக வரைக்கும் வருது. ஒரு தண்டுல 60 பூக்கள் வரை பூக்கும். 60 சென்ட் நிலத்துல இருந்து அதிகபட்சமா ஒரே நாள்ல 102 கிலோகூட மகசூல் கிடைச்சிருக்கு. இயற்கை விவசாயம்றதால பூக்கள் ரெண்டு நாளைக்குக்கூட வாடாம இருக்கு. அதனால திண்டுக்கல் பூ மார்க்கெட்ல எங்க பூவுக்கு தனி கிராக்கி. மத்தவங்க பூவைவிட கிலோவுக்கு ரெண்டு ரூபா அதிகமா கொடுத்து வாங்கறாங்க. சராசரியா கிலோவுக்கு 68 ரூபாய் கிடைக்கும்.அதனால விற்பனைக்குப் பிரச்னையே இல்லை. வருமானத்துக்கும் குறைவேயில்லை. தினமும் மார்க்கெட்ல கொடுக்குற பில்லை சேர்த்து வெச்சு, ஒவ்வொரு மாசமும் வரவு-செலவு கணக்கு பார்த்துடுவேன். ஏதோ பூ அறுத்தோம்... வித்தோம்னு இல்லாம, எப்போ அறுவடை குறைஞ்சிருக்கு? ஏன் குறைஞ்சிருக்குனு அதையெல்லாம் பாத்து சரி பண்ணினா... நஷ்டத்துக்கு வாய்ப்பே இல்லை.

ஆண்டுக்கு 5 லட்சம் !

சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி!

போன வருஷம் ஆகஸ்ட் மாசம் நடவு செஞ்சேன். ஜனவரி மாசத்துல முதல் அறுவடை. அதுல ஆரம்பிச்சு, ஒரு வருஷத்துல 60 சென்ட் நிலத்துல 6,303 கிலோ பூ விளைஞ்சுது. அதை 4 லட்சத்து 33 ஆயிரத்து 611 ரூபாய்க்கு மார்க்கெட்ல வித்துருக்கேன்'' என்றபடி மார்க்கெட் ரசீதுகளைக் காட்டிய மருதமுத்து,

''இதுல 1 லட்சத்து 66 ஆயிரத்து 861 ரூபாய் செலவு போக, 2 லட்சத்து 66 ஆயிரத்து 750 ரூபாய் லாபமா கிடைச்சுருக்கு. இந்த லாபம் கொடுத்த உற்சாகத்துல இப்ப இன்னொரு 35 சென்ட் நிலத்துலயும் சம்பங்கியை நட்டு தெளிப்பு நீர்ப்பாசனமும் அமைச்சிருக்கேன். அடுத்த மாசத்துல இருந்து அதுலயும் மகசூல் எடுக்க ஆரம்பிச்சுடுவேன். இப்போ தென்னையும் மகசூலுக்கு வந்துட்டதால, 5 ஏக்கர்ல இருக்க தென்னை மூலம் கிடைக்குற பணம் முழுக்க பராமரிப்புச் செலவுக்குனு வெச்சுக்கிட்டாலும் 95 சென்ட்ல இருக்கற சம்பங்கி மூலமா... எப்படியும் வருஷத்துக்கு 5 லட்ச ரூபாய்க்கு குறையாம லாபம் கிடைச்சுடும்'' என்றார் மருதமுத்து.

தொடர்புக்கு
மருதமுத்து, செல்போன்: 97876-42613.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism