Published:Updated:

காலை வாரிய மோடி இனி காவிரி வருமா ஓடி?!

காலை வாரிய மோடி  இனி காவிரி வருமா ஓடி?!
பிரீமியம் ஸ்டோரி
காலை வாரிய மோடி இனி காவிரி வருமா ஓடி?!

ஜூனியர் கோவணாண்டி, ஓவியம்: ஹரன்

காலை வாரிய மோடி இனி காவிரி வருமா ஓடி?!

ஜூனியர் கோவணாண்டி, ஓவியம்: ஹரன்

Published:Updated:
காலை வாரிய மோடி  இனி காவிரி வருமா ஓடி?!
பிரீமியம் ஸ்டோரி
காலை வாரிய மோடி இனி காவிரி வருமா ஓடி?!
காலை வாரிய மோடி  இனி காவிரி வருமா ஓடி?!

ய்யா மாவீரன் நரேந்திர மோடி அவர்களே...

உங்க வீரம், தீரம், பராக்கிரமம் எல்லாம் தெரிஞ்சிருந்தும், இந்தப் பாகிஸ்தான்காரன் வாலாட்டுனா சும்மாவா விடமுடியும். ‘‘தண்ணீரும் ரத்தமும் ஒரேநேரத்தில் சிந்து நதியில் ஓடமுடியாது’’னு சொல்லி, பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை நிமிஷத்துல தூக்கி எறிஞ்சு, உலகத்தையே திரும்பிப் பார்க்க வெச்சுட்டீங்க. பின்னே, காஷ்மீர்ல இந்திய ராணுவத்து மேல குண்டுபோட்டு பத்து, இருபது வீரர்களை ஒருபக்கம் கொன்னுபோட்டுக்கிட்டே... மறுபக்கம் தண்ணிக்காக... வெண்ணெய்க்காகப் பேச்சுவார்த்தைனு வந்தா, கொஞ்சிக் குலாவிக்கிட்டா இருக்க முடியும்? சும்மா நெத்தியடி அடிச்சுட்டீங்க மோடிஜி. இதுக்காக உங்கள உச்சி மோந்து பாராட்டிக் குவிக்கலாம்னு கிடையா கிடந்தேன். ஆனா, காவிரி விஷயத்துல நீங்க போட்டுக்கிட்டிருக்கிற போங்கு ஆட்டம்... மொத்தமா கவுத்துடுச்சே!

காவிரித் தண்ணிக்காகக் கர்நாடக அரசுகிட்ட கத்தாத நாளில்ல. சுப்ரீம் கோர்ட்டே சொல்லியும் காதுல போட்டுக்கல கர்நாடகா. உங்க பாஷையில சொன்னா, காவிரியில ரத்தத்தையே ஓடவிட்டாங்க. பஸ்ஸுகளைக் கொளுத்துனாங்க. தமிழக லாரிக்காரங்கள அடிச்சு உதைச்சாங்க. இது எதுக்குமே நீங்க வாயைத் தொறக்கலையே. ஏன், அப்ப மட்டும் உங்க வாய் வடை சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சோ. ஒட்டுமொத்த இந்தியாவோட பிரதமரா... பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்த நீங்க, அதே ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரதமரா செயல்படாம, கர்நாடகாவுக்குக் கையாள் கணக்கா செயல்பட ஆரம்பிச்சுட்டீங்களே... இது என்னங்க நியாயம்? அடிபட்டுக் கிடக்கிறவனையும்... அடிச்சி உதைச்சவனையும் ஒண்ணுபோலப் பாவிச்ச உங்க உயர்ந்த மனசு உலகத்துல வேற யாருக்குமே வராதுங்கய்யா.

‘கதர்ச்சட்டை போட்ட பிரதமருங்க பலபேர் தொடர்ந்து தமிழ்நாட்டுக்குத் துரோகம் பண்ணினாங்க. இவரு காவி உடை தரிச்ச பிரதமர்... ராமராஜ்யத்தைக் கனவு காணுற பிரதமர்... நிச்சயமா, நேர்மையா நடந்துப்பார்’னு என்னைப் போலவே பலரும் உங்கள ரொம்பவே நம்பிக்கிட்டிருந்தோம். ஆனா, அதுல லாரி லாரியா மண் அள்ளிப் போட்டுட்டீங்களே மோடிஜி.

நீதிமன்றங்கள நம்புறதுதான் ஒரே தீர்வுனு மக்கள் முடிவெடுத்துப் பல வருஷங்களாயிடுச்சே. அந்த நம்பிக்கையிலதான் உச்ச நீதிமன்றத்துக்கு ஓடினோம். ‘நடுவர்மன்றத் தீர்ப்புப்படி பற்றாக்குறை காலத்துக்கான தண்ணீரை காவிரியில கர்நாடகா திறந்தே ஆகணும். நாலே நாள்ல காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைச்சே ஆகணும்’னு நெத்தியடியா உத்தரவு போட்டுச்சு உச்ச நீதிமன்றம். அடுத்தடுத்த நாள்லயே காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாநிலங்கள் சார்பா உறுப்பினர்களை நியமிக்கச் சொல்லி கடுதாசி வேற போட்டீங்க. சட்டுபுட்டுனு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மூணு மாநிலங்களும் உறுப்பினர்களை அறிவிச்சாங்க. ஆனா, கர்நாடகா மட்டும் அறிவிக்க முடியாதுனு பிடிவாதமா சொல்லுச்சு. அதேபோல தண்ணியைத் திறந்துவிட முடியாதுனும் சட்டசபையைக் கூட்டி தீர்மானமே போட்டுச்சு. இந்தியக் கூட்டாட்சி தத்துவத்துக்கே வேட்டு வைக்கிற அளவுக்கு நடந்துகிட்டிருக்கிற கர்நாடாகவுக்கு எதிரா ஒரு வார்த்தையைக்கூட நீங்க எடுத்து விடல.

சரி போகட்டும்னு பார்த்தா... ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது; அமைக்கச் சொல்றதுக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது; ஏன், நடுவர் மன்றத்துக்கேகூட அதிகாரம் கிடையாது; நடுவர் மன்றம் பரிந்துரைதான் செய்யலாம். மேலாண்மை வாரியம் அமைக்கணும்னு உத்தரவு போட முடியாது. அப்படியே பரிந்துரைச்சாலும் அதை நிறைவேத்தறதும் நிறைவேத்தாததும் மத்திய அரசோட இஷ்டம்’னு உச்ச நீதிமன்றத்துல சொல்லி, காவிரிப் பிரச்னையைத் தொடங்கின இடத்துக்கே துரத்தி அடிச்சிட்டீங்களே... மோடிஜி!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாதுனு நீங்க சொன்னதுமே... தமிழ்நாட்டுல பல பேர் கொதிச்செழுந்து கண்ணீர் வடிச்சிக்கிட்டிருக்கோம். ஆனா, தமிழ்நாட்டுல பி.ஜே.பி-யை முளைக்க வைக்கறதுக்காக ரிடையர்மென்ட் காலத்துலயும் ஓயாம உழைக்கிற இல.கணேசன்; அரும்பெரும் கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்காரு. அதாவது, ‘நீதிமன்றம் சொல்லி மேலாண்மை வாரியத்தை அமைச்சா, அதுக்கு அதிகாரம் இருக்காது. அதனால நாடாளுமன்றத்துல சட்டமியற்றி அதை அமைக்கப்போறார் மோடி. அவர் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்றதுக்குத்தான் வாரியத்தை அமைக்க முடியாதுனு கோர்ட்ல சொல்லியிருக்காரு. அதுக்குள்ள எதுக்காக அவரைத் திட்டித்தீக்கிறீங்க’னு சும்மா பின்னி எடுத்திருக்காரு.

தமிழ்நாட்டுல எந்தத் தொகுதியில நின்னாலும் நூறு வாக்குகூட வாங்க ஓட்டு இல்லாததாலதான் மத்தியப் பிரதேசத்துல இருந்து நாடாளுமன்றத்துக்கு உங்கள தேர்ந்தெடுத்திருக்காங்க கணேசன். அந்த நன்றிக் கடனுக்காக வேற எதைவேணும்னாலும் வாந்தியா எடுத்துத் தொலைச்சுட்டுப் போங்க. ஆனா, காவிரி பாயுற தஞ்சாவூர் மண்ணுல பொறந்து வளர்ந்துட்டு இப்படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ற வேலையை மட்டும் செய்யவேணாம்.

அட தமிழ்நாட்டு பி.ஜே.பி மங்குனிகளே... மோடிக்கும் கர்நாடகாவுக்கும் உள்ள கனெக்ஷன் என்னான்னு, உங்க கட்சியைச் சேர்ந்த அந்த மாநில முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டரே புட்டு வெச்சுட்டாரே! ‘காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பா நமக்குக் கொடுத்த வாக்கை பிரதமர் நரேந்திர மோடி காப்பாத்திட்டார். அதனால அவருக்கு நன்றி’னு கர்நாடக சட்டசபையிலயே பகிரங்கமா அறிவிச்சிருக்கார். இதுக்காக மோடியைப் பாராட்டித் தீர்மானமே போட்டிருக்காங்க.

‘ஒரே தேசம்... ஒரே சட்டம்’னு கூப்பாடு போடுற கட்சியின் பிரதிநிதியான உங்களோட சுயரூபம் இப்ப நல்லாவே புரியுது மோடிஜி! ஆனா, நாங்களும் எங்க சுயரூபத்தைக் காட்ட ஒரு சந்தர்ப்பம் வராமலா போயிடும். காத்திருக்கோம் மோடிஜி!

இப்படிக்கு

-ஜூனியர் கோவணாண்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism